காந்தி ஜெயந்தியன்று என்ன செய்தீர்கள்…?

பீட்டர் துரைராஜ்

காந்தி ஜெயந்தியை வெறும் சடங்காக கடந்து போகிறது சமூகம்! ஒரு நாள் அரசு விடுமுறை அவ்வளவே! ஆனால், காந்தியப் பற்றாளர்களுக்கு அந்த நாள் மிக முக்கியமானதாகும்..உலகம் முழுவதும்  “உலக அமைதி நாளாக”  காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள் கொண்டாடப்பட்டது. ’இந்த நாளின்போது நீங்கள் என்ன செய்தீர்கள்’’ என்ற கேள்வியை காந்தியப் பற்றாளர்கள் ஒரு சிலரிடம் கேட்டோம்.

ஆசைத்தம்பி, பத்திரிகையாளர் :

(காந்தி பிறந்த 150ஆவது ஆண்டு விழாவின் போது வாரம்தோறும் தமிழ் இந்து நாளிதழில் தொடர்ந்து காந்தி குறித்த கட்டுரைகளை எழுதியவர்.’என்றும் காந்தி’ நூலாசிரியர்)

ஆசை : காந்தி குறித்த பதிவுகளை என் முகநூலில் பதிவிட்டேன்.காந்தி குறித்த ஒரு சிறப்பு கட்டுரை எழுதி என் வலைத்தளத்தில் வெளியிட்டேன்.ஒரு சமயம் நான் காந்தி ஜெயந்தி நாளன்று காலை ஆறு மணியிலிருந்து மாலை 6 மணி வரை ‘no technology day’ (தொழில்நுட்பங்கள் இல்லாத நாள்) என்று எனக்கு நானே முடிவு செய்துகொண்டு, அன்று அமைதியாக இருந்தேன். இது உங்களுக்கு மதச் சடங்கு போல தோன்றலாம்.(எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை).அந்தக் குறிப்பிட்ட நாளில் தொலைபேசி, மின்விளக்கு, மின்விசிறி என எதையும் பயன்படுத்தாமல் இருந்தேன். இப்போதைய சூழலில் ஒரு நாள் சிலமணி நேரம் செல்பேசி இல்லையென்றால்  நாம் பதட்டம் அடைகிறோம். இமெயில் வந்திருக்கிறதா என்று உடனுக்குடன்  பார்க்கிறோம்.முகநூலை நோண்டிக் கொண்டே இருக்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் காந்தி ஒரு வகையில் வேகத்தடை போல  இருந்தவர். அவர் ‘தனிநபர் சார்ந்த தற்சார்பு’ என்பதை நம்பியவர்.

காந்தியைப் போல நானும் என்  உடல் நலத்தையும் ஒழுங்காக கவனிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். காந்தியைப் போல அதிகாலையில் எழுந்து பணிகளை தொடங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதேபோல யாரையும் வெறுப்பில்லாமல் பார்க்கிற, யாரையும் புண்படுத்தாமல் பேசுகின்ற, பழக்கத்தை  கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

சித்ரா பாலசுப்பிரமணியன், மேனாள் தமிழ் பேராசிரியர்

(காந்தி பிறந்த நூற்று ஐம்பதாவது ஆண்டு, தினமும் 15 நிமிட காந்தி குறித்த காணொளிகளுக்கு எழுத்து வடிவமும்,குரலும் கொடுத்தவர். அவை பொதிகை தொலைக்காட்சியில் வெளியாயின.புகழ்பெற்ற தண்டி யாத்திரையை, மார்ச் 12 முதல் ஏப்ரல் 16 வரை காந்தி சென்ற கிராமங்கள் வழியாக அவருடனே பயணித்தது போல அன்றாடம் அப்போது நடந்த செய்திகளை தனது முகநூலில்  பதியவிட்டிருந்தார். “மண்ணில் உப்பானவர்கள்” என்ற பெயரில் அது  நூலாக காந்தி ஜெயந்தி அன்று வெளியானது)

சித்ரா : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல். திருமாவளவன் அவர்களை  காந்தியை மையப்படுத்தி, பொதிகை தொலைக்காட்சிக்காக சந்தித்தேன். அவரது அலுவலகத்தில் வைத்து எடுத்த நேர்காணல், காந்தி ஜெயந்தியன்று ஒளிப்பானது. அந்த 45 நிமிட நிகழ்ச்சியை எனது குடும்பத்தாரோடு சேர்ந்து பார்த்தேன். மிகவும் முதிர்ச்சியோடு, எதார்த்தமாக திருமாவளவன் பதில் அளித்து இருந்தார். எனக்கு நிறைவை அளித்த நேர்காணல் அது.வரவிருக்கும் ஆண்டு ‘காந்தியப் பெண்கள்’ குறிப்பு ஒரு சில கட்டுரைகள் எழுதலாம் நினைத்திருக்கிறேன்.

 

 

 

க. சரவணன் தலைவர்,  தன்னாட்சி இயக்கம்

(மழை மனிதர் ராஜேந்திர சிங்- இடம் பயிற்சி பெற்றவர்.கிராமங்களில்பணியாற்றுபவர்)

க.சரவணன் : காந்தி ஜெயந்தியன்று குறிப்பாக எதையும் செய்வதில்லை.காந்தியத்தை கடைபிடிப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு.அதைச் செய்ய முயற்சித்து வருகிறேன்.

அன்று கிராமசபை நடைபெறுவதாக இருந்தது. அப்படி நடந்திருந்தால் அதில் பங்கு பெற்று இருப்பேன்.கிராமங்களை  ‘குட்டிக் குடியரசு’ என்று காந்தி  கூறுகிறார். தற்சார்புடன்  ஆட்சி செய்யவும், முடிவு எடுக்கவும், செயல்படுத்தவும் வேண்டிய திறனை கிராமங்கள் பெற்றிருக்க வேண்டும். அதனால்தான் பஞ்சாயத்துராஜ் சட்டம் வந்தது. ஆரம்பக் கல்வி, மருத்துவமனை,  நூலகம், பூங்கா, நீர்நிலைகள் பாதுகாப்பு, ஆடுமாடு வளர்ப்பு  போன்ற 29 வகையான பணிகள் கிராமப் பஞ்சாயத்து வசம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கேரளாவில் கிராம சபைகள் நன்கு செயல்படுகின்றன. ஆனால் மாநில சுயாட்சி கோருகிற தமிழக அரசு,  போதுமான அதிகாரம், நிதி, அலுவலர்கள் எவையும் கிராம பஞ்சாயத்துகளுக்கு  வழங்குவது இல்லை.இதனை உறுதி செய்கின்ற பணியில் எங்களது தன்னாட்சி தொடர்ந்து செயல்படும்.

டாக்டர் பிரேமா, காந்தி கல்வி நிலையம்

(காந்திக்கும், கஸ்தூரிபாய் – க்கும் உள்ள நிலவிய உறவு குறித்து “Wife to Friend” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். காந்தியத்தை பரப்புவதற்காக கல்லூரிப் பணியைத் துறந்தவர். கல்லூரி,பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா, கட்டுரை போட்டி, காந்தி ஆவணப்படம் திரையிடல் நடத்தி வருகிறார். இந்த ஆண்டு 5000 மாணவர்கள் காந்தி கல்வி நிலையம் நடத்திய வினாடி வினா போட்டியில் பங்கு பெற்றனர். புதன்கிழமைதோறும் தி.நகரில் காந்தி குறித்த நூல்கள் பற்றிய உரைகளுக்கு நடத்தி வருகிறார்.

பிரேமா: காந்தி ஜெயந்தி அன்று நான் சார்ந்த காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் வலைதளத்தில் நடத்திய நிகழ்வில் பங்கு பெற்றேன். அந்த மாணவர்கள்  காந்தி மகானின் ’11மகாவிரதங்கள்’ ‘அகிம்சை ஆத்திசூடி’ ‘ஆடு ராட்டே’ நடனம் ஆகியவற்றை நிகழ்த்தினர்.

 

 

 

பேராசிரியர் கா. பழனித்துரை 

(காந்திகிராம  பல்கலைக்கழக மேனாள் புலத் தலைவரான கா.பழனித்துரை “தற்சார்பு கிராமம்” என்பதை வலியுறுத்தி பேசிவருகிறார்; பயிற்சி கொடுத்து வருகிறார்)

காந்தியம் தோற்றுவிட்டதா என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.யார் எளிமையாக வாழ்கிறார்களோ, இயற்கையைச் சார்ந்த வாழ்க்கையை நடத்துகிறார்களோ  அவர்களிடம் காந்தியம் இருக்கிறது.

தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்கும்போது, தங்களது தேவையை விட அதிகமாக நுகரும் போது மற்றவர்கள் உரிமையை பறிக்கிறார்கள். பர்கர்,பீசா, கென்டக்கி சிக்கன் போன்ற பொருட்களை வெளியிலிருந்து வரவழைத்து சாப்பிடுகிறார்கள். நடக்கவேண்டிய தூரத்திற்கு பதிலாக காரில் சென்று நோயை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

காந்தியே ஒரு “பல்கலைக்கழகம்”.மாணவராக, இருக்கும்போது என்ன செய்தார், இங்கிலாந்தில் படிக்கும் போது என்ன செய்தார், குடும்பத்தில் எப்படி இருந்தார்,  தென்னாப்பிரிக்காவில் எப்படி போராடினார் என்பதை ஒருவன் புரிந்து கொள்ளும் போதுதான் அவன் காந்தி என்கிற பல்கலைக்கழகத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

கல்விநிறுவனங்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கிராமத்தில் பணிபுரிய வேண்டும்.நக வெட்டியை கூட நாம் சீனாவிலிருந்தும், தாய்வானில் இருந்தும் இறக்குமதி செய்வது சரியா ?  இதை வலியுறுத்தித்தான் அக்டோபர் 1, 2, 3 தேதிகளில் நான் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசினேன்.

 

.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time