தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை தொல்லியல் சான்றின் அடிப்படையில் பார்த்தால், நம்ப முடியாத ஒரு அதிர்ச்சி முகத்தில் அறைகிறது. புகழ்மிக்க மன்னர்கள் ஆட்சி செய்த எல்லா காலகட்டத்திலும் வடமொழியாகிய சமஸ்கிருத கல்வியே தழைத்தோங்கியது! தமிழ் கல்வி கற்பிக்கப்பட்டதற்கான சான்றுகளே இல்லை!
சமஸ்கிருத வேத கல்வியை கற்பிக்கும் நிறுவனங்களுக்கு அன்றைய அரசர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்துள்ளது. எண்ணிலடங்கா நிதியும், அரண்மனை அரவணைப்பும் சமஸ்கிருதத்திற்கு தரப் பெற்றதாகவே இது வரையிலான கல்வெட்டுகள் காட்டுகின்றன! இப்படியாக சமஸ்கிருதம் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்ததைப் போன்ற ஒரு நிலை தமிழுக்கு இருந்தது உண்டா ? எனத் தேடிப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது!
சமஸ்கிருத மொழியில் உள்ள வேதங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், இலக்கணங்கள்… போன்றவை பாடத்திட்டங்களாக வகுக்கப்பட்டு, அன்றைய மாணவர்களுக்கு கற்பித்து வந்த கல்லூரிகளைப் பற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டு சான்றுகள் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சோழர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழ் மொழியில் என்னென்னவெல்லாம் சொல்லித் தரப்பட்டன என்றும், அவற்றை எப்படி கற்பித்தனர் என்பது பற்றியும், அந்த வகையான கல்லுாரிகள் எவற்றைப் பற்றியாகினும் கல்வெட்டுக் குறிப்புகளைத் தேடினால், ஒன்று கூட இன்று வரைக் கிடைக்கவில்லை என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இருபதாம் நூற்றாண்டாகிய இந்தக் காலத்திற்கு முன்பு இப்படியாக வடமொழி கல்வி கற்பிப்பதற்கு இடம் இருந்தது போன்ற ஒரு கல்வெட்டையோ அல்லது ஒரு செப்பேட்டையோ யாராது ஒருவர் காட்ட முடியுமா ?
என்னென்ன வேத பாடங்கள்? எவ்வளவு மாணவர்கள்?
இதுபற்றி தமிழக வரலாற்றை முதல் முதலாக விஞ்ஞானபூர்வமாக எழுதிய பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் “சோழர்கள்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றேன்.
“முதலாவது இராஜேந்திரன் (இவர் இராஜராஜ சோழருடைய மகன் ) ஆணைப்படி அவன் காலத்தில் தென் ஆர்க்காடு மாவட்டம் ( எண்ணாயிரம் ) இராஜராஜ சதுர்வேதிமங்கலத்துச் சபையார், அந்த ஊர்க் கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்குச் சாப்பாடு போடுவது என்றும், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதென்றும், அரசாங்க அதிகாரி ஒருவர் முன்னிலையில் முடிவு செய்திருந்தார்கள்! அந்தக் கல்லூரியில் பயின்ற மாணவர்களைப் பற்றி எழுதவந்த பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் பிரம்மசாரிகளான இளநிலை மாணவர்கள் 270 பேரில் ரூபாவதார இலக்கணத்தை 40 பேர் படித்தார்கள். ஏனையோர் மூன்று பிரிவினராக பிரிக்கப்பட்டனர். அதில் ரிக் வேதத்தை 75 பேரூம். யஜீர் வேதத்தை 75 பேரும், வாஜசனேய சாமவேதத்தை 20 பேரும், தலவாகர சாம வேதத்தை 20 பேரும், அதர்வ வேதத்தை 10 பேரும், எஞ்சிய 10 பௌதாயன கிருகஹ்ய சூத்திரம், பௌதாயன கல்ப சூத்திரம், பௌதாயன ஞான சூத்திரம் ஆகியவற்றையும் படித்தார்கள். என்று சொல்லப்பட்டு உள்ளது.
இந்த இளநிலை மாணவர் ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் ஆறு நாழி நெல் கொடுக்கப்பட்டது. சாத்ரா் அல்லது முதுநிலை மாணவரான 70 பேர் இருந்துள்ளனர். அவர்கள், ஒவ்வொருவருக்கும் பத்து நாழி நெல், தினசரி கொடுக்கப்பட்டது. உயர்ந்த (மேம்பட்ட) பாடங்களான வியாகரணத்தை அவர்களில் 25 பேரும், பிரபாகர மீமாம்சத்தை 35 பேரும், வேதாந்தத்தை 10 பேரும் படித்து வந்தனர். இந்தப் பாடத்திட்டத்தில் நான்கு வேதங்களும் இடம் பெற்றன.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அரசர்களால் தரப்பட்டவை;
ஆசிரியர்களுள் கூடுதலான ஊதியமாக, நாளொன்றுக்கு 16 மரக்கால் நெல், வேதாந்தப் பேராசிரியருக்குக் கொடுக்கப்பட்டது. மீமாம்சமும், வியாகரணமும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களான நம்பிகளுக்கு, இதற்கு அடுத்தபடியான ஊதியம் தினசரி 12 மரக்கால் நெல் கொடுக்கப்பட்டது. மற்ற ஆசிரியர்களுக்கு ஒரே அளவான ஊதியம் தினசரி 3 மரக்கால் அல்லது 3 குறுணி கொடுக்கப்பட்டது. தானியமாகக் கொடுக்கப்பட்ட இந்த ஊதியம் தவிர, ( வேதாந்தப் பேராசிரியர்கள் நீங்கலாக) எல்லா ஆசிரியர்களுக்கும் சாத்திரா் முதுநிலை மாணவர்களுக்குத் தங்கமும் கொடுக்கப்பட்டது. வியாகரண, மீமாம்ச ஆசிரியர்கள், தாங்கள் சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு மாணவனுக்கும் கழஞ்சு விகிதம் படிப்புக் காலம் முழுவதற்குமாக முறையே எட்டுக் கழஞ்சுகளும், 12 கழஞ்சுகளும், ஏனையோர் ஒரு வருடத்திற்குத் தலைக்கு அரை கழஞ்சு வீதமும் பெற்று வந்தனர்.
எண்ணாயிரத்தில் இருந்தது போன்று ஒரு சமஸ்கிருதக் கல்லூரி, புதுச்சேரிக்கு அருகேயுள்ள திருபுவனியிலும் நடத்தப்பட்டு வந்தது. இங்கு 260 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் இருந்தனர். எண்ணாயிரத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட அதே வேத பாடங்களே பெரும்பாலும் இங்கேயும் கற்பிக்கப்பட்டன…”
இதே போன்று பல வடமொழி கல்லூரிகளுக்கு சோழ பேரரசர்கள் ஆதரவு அளித்து வந்த கல்வெட்டுச் செய்திகள் பலவற்றை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் சோழர்கள் நூலில் ஆதாரங்களுடன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக தமிழ் மன்னர்களான சோழர்களே வட மொழிக் கல்விக்கு தான் ஆதரவு நல்கினர் எனத் தெரிய வரும் நிலையில், நாயக்க மன்னர்கள், மராத்திய மன்னர்கள் தமிழ் கல்விக்கு முக்கியத்துவம் தந்திருப்பர் எனச் சொல்வதற்கு வாய்ப்பில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை.
இப்படியாக மன்னர்கள் காலத்தின் தமிழ் கல்வியைப் பற்றிய சான்றுகள் எதுவும் கிடைக்காத நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் வந்த அமெரிக்க, ஐரோப்பிய பாதிரியார்கள் தான் முதல் முதலாக தமிழ் கல்விக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர் என்பது நமக்கு சான்றுகள் வழியாகத் தெரியும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது! இவர்களே, தாங்கள் உருவாக்கிய கல்விக் கூடங்களில் தமிழ் இலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் வைத்தனர். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 1852 இல் அமெரிக்கப் பாதிரியார்களால் தொடங்கப்பட்ட வட்டுக்கோட்டைக் கல்லூரி தான் ஆசியாவிலேயே முதல் முதலாகத் தொடங்கப்பட்ட நிறுவனரீதியான பல்கலைக் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது! இதில் தான் முதன் முதலாக தமிழ்மொழியில் பாடத்திட்டங்கள் உருவாக்கும் பணித் தொடங்கியது. அத்துடன் சங்க காலத்தை அடுத்து நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பெண்கள் கல்வி கற்க வந்தது இந்தக் காலத்தில் கட்டத்தில் தான்!
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 1857 இல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட “சென்னைப் பல்கலைக் கழகம்” தான் தமிழ் இலக்கியங்கள், கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்த்து பாடப் பகுதியாக வைத்தது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வகுப்பில் தமிழ் இலக்கியங்களைப் படித்தவர்களான சி.வை.தாமோதரம் பிள்ளை, சேலம் இராமசாமி முதலியார் போன்றவர்கள் சங்க இலக்கியங்கள் அச்சு நூல்களாக வருவதற்கு அடித்தளம் இட்டவர்கள் என்பது குறி்ப்பிடத்தக்கது.

இந்த சேலம் இராமசாமி முதலியார் தான் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழின் ஆகச் சிறந்த தமிழ் இலக்கியங்களை உ.வே.சாமிநாத அய்யருக்கு அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்தே உ.வே.சா சங்க இலக்கியங்களைச் சிறப்பாகப் பதிப்பித்து “தமிழ்த் தாத்தா“ ஆனார் என்பது “என் சரித்திரம்” கூறும் செய்தியாகும்.

இது போல மற்றொரு முக்கிய செய்தி டாக்டர் கிறீன் என்ற அமெரிக்க மருத்துவர் தான் பல முக்கியமான மருத்துவ நூல்களை தமிழ்மொழியில் மொழி பெயர்த்தார். இவர் மொழிபெயர்த்த நூல்களை தமிழில் படித்தே அக்காலத்தில் இலங்கைச் சேர்ந்த பல மாணவர்கள் ஆங்கில மருத்துவர்களாக பல்லாண்டுகள் ஆண்டுகள் பணி் புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மொழிபெயர்த்த மருத்துவ நூல் இரண்டின் இணையதள இணைப்பை உங்கள் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.
அது மட்டுமல்லாமல், 1920 காலக் கட்டத்தில் தஞ்சையை அடுத்து திருவையாற்றில் அரசு ஆதரவுடன் நடைபெற்று வந்த வடமொழிக் கல்லூரியில் தமிழ் மொழியையும் கற்பிக்க வேண்டும் என்று அன்றைய ஜஸ்டிஸ் அரசாங்கத்திடம் கரந்தை உமா மகேஸ்வரன் பிள்ளையும் அன்றைய நிலையில் ஆங்கில அரசாங்கத்தில் மிக்க செல்வாக்குடன் திகழ்ந்த ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களும் நெருக்கடி கொடுத்தனர். இதன் விளைவாக நீண்டகால தமிழக வரலாற்றில் அரசு நிறுவன ஆதரவு பெற்று கற்பிக்கப்படும் மொழியாக தமிழ்மொழியும் முதல் முதலாக இடம் பெற்றது.
Also read
இந்த வகையில் ஆறாம் நூற்றாண்டு தொடங்கி 19 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ, பாண்டிய சேர, சோழ பேரரசர்கள், நாயக்க, மராத்திய மன்னர்கள் அனைவருமே சமஸ்கிருத வேத கல்வியைத் தான் வளர்த்தனர்! மன்னர்கள் ஆதரவுடன் தமிழ் மொழியைக் கற்பிக்கும் கல்லூரிகள் தமிழகத்தில் நடைபெற்று வந்ததாகவோ, அதில் இன்னின்ன தமிழ் பாடங்கள் தமிழுக்கானப் பாடத்திட்டமாக கற்பிக்கப்பட்டன என்றோ, அதனை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வடமொழி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற அரசாங்க ஊதியங்கள் தரப்பட்டதாகவோ, அத்தகைய தமிழ் கல்வி பயின்றவர்களுக்கு வடமொழி பயின்ற மாணவர்களைப் போன்று சலுகைகள் தரப்பட்டன என்றோ… இது வரை எந்த கல்வெட்டு, செப்பேட்டு வழி ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம் மன்னர்களை புகழ்ந்து பாடி பரிசில்கள் பெற்று, பிழைக்கும் நிலையில் தான் பல தமிழ் புலவர்கள் இருந்துள்ளனர்.
எனில், தமிழ் மன்னர்களால் மறுக்கப்பட்ட தமிழ் வழிக் கல்வி எப்படி தப்பி பிழைத்தது? அழிந்திடாமலும், மறைந்திடாமலும் தொடர்ந்து வாழ்ந்தது என்பதும், அது, எப்படித் தான் பிரிட்டிஷார் கண்களில் பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது என்பதும் ஆச்சரியமான வரலாற்று செய்திகளே!
இந்த கட்டுரைக்கு மாறாக, தமிழ் மன்னர்கள் யாரேனும் தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவு நல்கியதாக சான்றுகள் இருந்தால் தரலாம்!
# அங்காதிபாத சுகரணவாத உற்பாலன நூல் ( 1852 -ல் எழுதப்பட்ட ஆங்கில மருத்துவம் குறித்த தமிழ் நூல்!
உடற்கூறு – கிறீன்
இந்தக் கட்டுரையை உருவாவதற்கு உதவிய நூலாசிரியர்களுக்கு நன்றி
கட்டுரையாளர்; பொ.வேல்சாமி
கரந்தை தமிழ் கல்லூரி புலவர், வரலாற்று ஆய்வாளர், ‘கோவில், நிலம், சாதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும், சமகாலத்திற்கான மாற்று அரசியலை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கமாகும்.
இப்படிலாம் வளர்க்கப்பட்ட சமற்கிருதமெப்படி செத்தமொழி ஆனது? மன்னர்கள் காலத்தில் சமற்கிருதம் மட்டும் கற்றுக்கொடுத்தார்களாம் ,கல்வெட்டில் தமிழில் எழுதினார்களாம்! ஏதாவது லாஜிக் இருக்கா? நீலகண்ட ‘சாஸ்திரி’ தவிர வேறு யாரும் சோழர்கள் பற்றி எழுதவில்லையா?
இவை 1000 காலத்து கதை.திட்டமிட்டு ஆரியர்கள்,அரசர்களின் துணை கொண்டு அழித்தார்கள் என்பது உண்மை தான்.அதற்கு முந்தய 10000 ஆண்டுகளாக நிலைத்து இருந்த்து தமிழ் தான்.
இவை 1000 காலத்து கதை.திட்டமிட்டு ஆரியர்கள்,அரசர்களின் துணை கொண்டு அழித்தார்கள் என்பது உண்மை தான்.அதற்கு முந்தய 10000 ஆண்டுகளாக நிலைத்து இருந்த்து தமிழ் தான்.
மிகச் சிறப்பான கட்டுரை.
6 ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரை மன்னர்கள் வடமொழிக் கல்விக்கு பேராதரவு கொடுத்திருந்த நிலையில் எப்படித் தமிழ் தப்பிப் பிழைத்தது என்ற கேள்வியை கட்டுரையின் ஆசிரியர் கேட்டிருக்கிறார்.
அந்த காலகட்டத்தில் வடமொழி அறிஞர்களின் மொழியாக இருந்தது. தமிழ் மொழி வெகு மக்களின் மொழியாக இருந்தது. ஆகையினால் தான் நம் செம்மொழி அழியாமல் வளர்ந்து வந்தது.
வடமொழியோ, உருது மொழியோ, ஆங்கில மொழியோ 19ஆம் நூற்றாண்டு வரை செய்ய முடியாத அழிப்புச் செயலை இந்த நூற்றாண்டில் ஆங்கிலம் செய்து வருகிறது. உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மையமாதல் ஆகியவற்றின் வாயிலாக பொருள் ஈட்டுவதற்கான மொழியாக, வணிகத்திற்கான மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. ஆங்கிலம் இல்லையேல் வாழ முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டச் சமூகத்தில் சில வீடுகளே இருக்கும் சிற்றூர் வரை தினசரிப் பயன்பாட்டில் ஏராளமான ஆங்கிலச் சொற்கள் உட்புகுந்து விட்டன. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களும் கடன் வாங்கியாவது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி பெறுவதற்காக தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
இங்கு மட்டுமல்ல உலகெங்கிலும் இதே போன்ற சிக்கல் இருக்கின்றது. வணிக ரீதியாக வெற்றி பெற முடியாத எல்லா மொழிகளும் ஆங்கிலத்திடம் தோற்றுக் கொண்டிருக்கின்றன.
6 ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை வெகு மக்களின் ஆதரவால் தமிழ் பிழைத்துக் கொண்டது. ஆனால் ஆங்கிலத்தின் தாக்குதலால் அதே மக்களால் தமிழ் வேகமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
21 ஆம் நூற்றாண்டு தமிழ் மொழிக்கான சவாலான நூற்றாண்டாக இருக்கும்.
எதிர் ஆதாங கள் இருந்தால் கட்டுரை ஆசிரியர். கோருகிறார்.. கொடுங்கள்! அதைவிடுத்து சமசுகிருதததுக்குமுட்டு கொடுக்காதீர்
இன்று உயர் கல்வி ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது. ஏனெனில் துறை சார்ந்த நூல்களும் ஆராய்ச்சி கட்டுரைகளும் அந்த மொழியில் தான் எழுதப்படுகின்றன. ஆனால் திரைத்துறை, பட்டிமன்றம் முதலியவற்றில் தமிழ்நாட்டில் தமிழ் தான் கோலோச்சுகிறது. இன்று ஆங்கிலம் இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் சமஸ்கிருதம் இருந்தது. சிற்ப சாஸ்திரம், நாட்டிய சாஸ்திரம், கணித சாஸ்திரம், வான சாஸ்திரம், தத்துவம், யுத்த சாஸ்திரம், ஆயுர்வேதம் ஆகிய துறை சார்ந்த நூல்கள் அந்த மொழியில் தான் எழுதப்பட்டு நாளந்தா, தட்சசீலம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு அறிஞா்களால் கற்பிக்கப்பட்டன. கற்பித்தவர்களும் கற்றவர்களும் பொதுவாக உயர்சாதியினர் என்பது தான் பிரச்சினை. தமிழ் மூவாயிரம் ஆண்டுகளாக வட்டார மொழியாகவும் மக்கள் மொழியாகவுமே இருந்து வருகிறது. சித்த மருத்துவம் முதலிய ஓரிரு துறைகள் விதிவிலக்கு. சங்க காலத்திலேயே சமஸ்கிருத தாக்கம் வலுவாக உண்டு. ஆங்கிலம் இன்று மற்ற மொழிகளில் இருந்து எடுத்து கொள்வதை போல் வடமொழியும் அந்த வேலையை செய்தது. அது அறிஞர்களின் மொழி. எப்போதும் அது வெகு மக்களின் மொழியாக இருந்தது இல்லை. கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களின் ஏதோ ஒரு வகை ஆதரவு இல்லாமல் தமிழ் இன்று வரை இருந்திருக்க முடியாது. தமிழின் வீழ்ச்சி கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட தமிழ் மன்னர்களின் வீழ்ச்சியோடு தொடர்புடையது, நீசபாஷை முதலிய சொற்கள் அப்போது தான் பயன்படுத்தப்பட்டன. வெள்ளையர் ஆட்சியில் பாதிரியார்களின் முயற்சியால் தமிழ் மீண்டும் தலை எடுத்தது. வெகு மக்கள் இடையே மதம் மற்றும் நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு உள்ளூர் மொழியே உகந்தது என்னும் ஐரோப்பிய அனுபவம் தமிழை மீண்டும் அரியணையில் ஏற்றியது. அந்த வகையில் காலனிய ஆட்சியும் கிருத்துவ பாதிரிகளும் தமிழ் உயர்வுக்கு பங்கு ஆற்றி இருக்கிறார்கள்.
மன்னர்கள் மறுத்த தமிழ் கல்வியை, ஆங்கிலேயர்கள் வளர்த்தனர்!
-பொ.வேல்சாமி