தன்னை பாதுகாத்துக் கொள்ளவும்,தன் அதிகாரத்தை செல்லுபடியாக்கிக் கொள்ளவும் தான் வழிகாட்டுக் குழுவைக் கேட்டார் ஒ.பி.எஸ். அது தற்போது அவருக்கு இருக்கின்ற அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டுள்ளது. எடப்பாடிக்கும் இது தான் நிலைமை!
ஐந்து பேரை தேர்ந்தெடுத்ததன் மூலம் அனைத்து ஆதரவாளர்களையும் தன்னளவில் எதிரியாக்கிக் கொண்டார் பன்னீர்.
அவரால் கைவிடப்பட்டவர்கள் அல்லது அவரை கைகழுவும் நிலைக்கு தங்களை தள்ளியதாக உணருபவர்களான அவரை நம்பி வந்த 11 பேரில் ஒருவருக்கு கூட அந்தக் குழுவில் இடமில்லை.
அவருக்கு அணுக்கமாக இருந்து பல்வேறு தருணங்களில் அவரை பாதுகாத்த கே.பி.முனுசாமிக்கு இடமில்லை.டெல்லியில் ’லாபி’ பண்ணிய மைத்ரேயனுக்கு இடமில்லை, நத்தம் விஸ்வநாதனுக்கு இடமில்லை,அமைச்சர் பாண்டியராஜனுக்கு இடமில்லை,அனுபவமிக்க தலைவர் பண்ரூட்டியாருக்கு இடமில்லை….இப்படி இல்லை,இல்லை பட்டியலில் உள்ள எல்லோருடைய குட்புக்கிலும் ஒ.பி.எஸுக்கும் இடமில்லை என்றாகிவிட்டது.
அதிகாரமிக்க ஒரு குழுவிற்கு ஆளுமைமிக்கவர்கள் தான் பொருந்திப் போவார்கள்! ஆளுமை பலமும் இல்லை,அனுபவபலமும் இல்லை என்பவர்கள் எப்படி மரியாதையை பெறமுடியும்? ஒ.பி.எஸ் என்ன ஜெயலலிதாவா? ஒரு சொல்லில் அனைவரையும் கட்டுப்படுத்த! இவரே அதிகாரமில்லாதவர் என்ற நிலையில் தான், காலி பெருங்காய டப்பாவாக முன்னாள் முதல்வர் என்ற தன்மைக்கு மதிக்கப்படுகிறார்.
# கட்சி ஆரம்பித்த காலத்தில் பிறந்தே இருக்காத மனோஜ் பாண்டியன் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் கட்சியை வழி நடத்தப் போகிறாரா?
# ப.மோகனுக்கு சொந்த ஊரில் உள்ள கட்சி அலுவலகத்திற்குள் கூட நுழைய முடியாத அவமானம் ஏற்பட்டுள்ளது. இதைவிட என்ன கேவலம் இருக்க முடியும்?
# த.மா.கவிற்கு தாவி, பின் மீண்டும் வந்த ஜே.சி.டி.பிரபாகரன் தனிப் பெரும் தலைவரா?
# சொந்த மாவட்டத்துக்காரன் கூட, ’’யாருப்பா இவரு…?’’ எனக் கேட்கும் கோபாலகிருஷ்ணன் யாரை வழி நடத்தமுடியும்.
# சோழவந்தானைத் தாண்டி மதுரைக்காரனுக்கே தெரியாத மாணிக்கம் என்ன செய்வார் பாவம்.
அதுவும் குறிப்பாக பன்னீர் ஆட்களுக்கு சொந்த மாவட்டத்து சீனியர்களே கடும் எதிரிகளாகியுள்ளனர். தன்னைவிட ஜுனியருக்கு மாநில தலைமை என்றால், உள்ளூரில் தனது மரியாதை ஆட்டம் கண்டுவிடுமே என்று அவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
தன்னால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும் அவமானங்கள் தற்போது பன்னீருக்கு பதற்றத்தைத் தந்துள்ளது. இதை அனைவரும் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர். அதுவும் பன்னீர் தங்களை புறக்கணித்ததாகவும்,தன் சுயநலமே குறிக்கோளாக இருக்கிறார் என்றும் கருவிக் கொண்டிருப்பவர்கள் பன்னீர் வீழ்வதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரிரு வாரங்களில் பன்னீர் ஆட்களெல்லாம் எடப்பாடி பக்கம் தாவினால் தான் அங்கீகாரம் பெறமுடியும் என்ற யாதார்தத்தை உணரும் போது பாண்டிராஜனும், கே.பி.முனுசாமியும் எடுத்த நிலைபாட்டை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை அவர்களுக்கு! ஆக,பதினொரு பேரையும் எடப்பாடிக்கு தானே தூக்கிக் கொடுத்துவிட்ட அவல நிலையைத் தான் பன்னீர் சந்திக்க உள்ளார்.
இதே போன்ற ஒரு நிலை தான் எடப்பாடிக்கு! செங்கோட்டையன், தம்பிதுரை,வளர்மதி, அன்வர் ராஜா,பொன்னையன்…என பலருக்கும் எடப்பாடியின் மீது தீரா வருத்தம்! ஆக,எப்போதும்,எதுவும் நடக்கலாம் என்ற நிலையே உள்ளது.
எந்த வகையில் பார்த்தாலும் வழிகாட்டுக் குழு கட்சியையும்,அமைப்பையும் பலவீனப்படுத்தி உள்ளதாகவே அனைவரும் உணருகின்றனர். இதில் மூத்தோருக்கு, இஸ்லாமியர்களுக்கு, பெண்களுக்கு முற்றிலும் பிரதிநிதித்துவம் இல்லை என்பது தலைமையின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஆக, வழிகாட்டுக்குழு அமைத்தது பெரும் பின்னடைவைத் தந்துள்ளது இருவருக்குமே! இதன் எதிர்வினைகள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டவண்ணம் இருக்கும்! இருவருமே தலைமைப் பண்பில்லாத காரணத்தாலும்,தங்கள் தாழ்வு மனப்பான்மையாலும் ஓட்டுமொத்த கட்சி அமைப்பையும் சிதைத்துக் கொண்டுள்ளனர்.தங்களை பாதுகாப்பது என்ற சுயநலத்தின் உச்சத்தில் கட்சியின் கட்டுக்கோப்பை கலகலக்கவைத்துக் கொண்டுள்ளனர். இது தேர்தலை எதிர் கொள்ளும் போது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டே தீரும்.
Leave a Reply