‘இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளார்களா..?’ என நெகிழ வைக்கும் வரலாறு கொண்டவர் தோழர் முருகையன்! பொது வாழ்க்கைக்கோர் இலக்கணம்! தொண்டுள்ளத்திற்கு ஒரு சான்று! பள்ளி படிப்பையே முடிக்காத இந்த எளிய மனிதர் பார் போற்றும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்!
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் சித்தமல்லி கிராமத்தில் ஓர் எளிய விவசாய குடும்பத்தில் 1931 ஜூலை 15 -ல் மூத்த மகனாகப் பிறந்தவர் தோழர் எஸ்.ஜி.முருகையன்.
ஏழு கிலோமீட்டர் உள்ள முத்துப்பேட்டை பள்ளியில் கல்வி கற்றார். பள்ளி மாணவனாக இருக்கும் போதே சுதந்திரப் போராட்டத்திலும், பொது உடமை இயக்கத்திலும் தீவிர ஆர்வம் இருந்தது! வ .உ .சி கழகம் என்ற அமைப்பை கிராமத்தில் ஏற்படுத்தி, நண்பர்களை இணைத்துக் கொண்டு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். இவரது வகுப்பு தோழர்களில் ஒருவர் இயக்குனர் கே.பாலச்சந்தர்! ஜாம்பவானோடை சிவராமன் ரகசியமாக நடத்திவந்த கம்யூனிசப் பயிற்சிப் பாசறைகள் மாணவன் முருகையனின் கம்யூனிசத்தின் மீதான பற்றை இறுகச் செய்தன. நாளடைவில் அவரது தீவிர செயல்பாடுகளால் முருகையனை பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வை எழுத தகுதியற்றவர் என்று அறிவித்து, பள்ளியிலிருந்து வெளியேற்றினார் தலைமை ஆசிரியர்!
படிப்பைவிட்ட முருகையன் தொடர்ந்து சமூகப்பணிகளில் ஆர்வம் காட்டினார். 1955 ஆம் ஆண்டு தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்பொழுது போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து சுயேட்சையாளரான முருகையன் வெற்றி பெற்று நொச்சியூர் ஊராட்சி மன்றத்தின் தலைவரானார்!
சுயேட்சையாக வென்று ஊராட்சி மன்ற தலைவரான முருகையன் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சிறப்பாக செயலாற்றுகிறார். ஊராட்சிப்பகுதிகளில் சாலை ஓரங்களிலும், குளக்கரை ஓரங்களிலும் தென்னை மரங்களை நடுவதிலும்,. மீன் வளர்ப்பு -பாய்கால் வடிகால் வசதி -மின்சார வசதி – சாலை வசதி என்று எண்ணற்ற அடிப்படை வசதிகளை நிறைவாகச் செய்வதிலும் ஆர்வம் காட்டி, அனைத்து சமூக மக்களின் மனதிலும் இடம் பிடித்த தோழர் முருகையனை எதிர்த்துப் போட்டியிட, மறுமுறை நடந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் எந்தக் கட்சியைச் சார்ந்தவரும் முன்வரவில்லை. அந்த அளவுக்கு மக்கள் மனத்தைக் கொள்ளைக் கொண்டவராக மாறியிருந்தார் எஸ்ஜி.முருகையன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் முருகையனை ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு வேட்பாளராக களம் இறக்கியது. 47 அங்கத்தினர்களைக் கொண்ட கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் 28 வாக்குகள் பெற்று தோழர் முருகையன் வெற்றி பெற்றார். அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் – பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற முதல் பட்டியலினப் பெருந்தலைவர் என்கிற சிறப்பு முருகையனுக்கு வந்து சேர்கிறது.
1961 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பட்டியலின ஒன்றியப் பெருந்தலைவர் என்ற பெருமையோடு பதவிஏற்கச் சென்ற தோழர் முருகையனுக்கு அலுவலகத்தில் அவமானமே காத்திருந்தது. சாதிய வன்மம் நிரம்பிவழிந்த சமூகத்தின் எதிர்ப்புகள், அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை ஆகியவற்றை பொருட்படுத்தாமல், தன் நலம்பாராது செயலாற்றினார்! இதனால், மீண்டும் அடுத்த முறை 1965இல் நடந்த பஞ்சாயத்து யூனியன் தேர்தலில் 48 வாக்குகளில் 42 வாக்குகள் பெற்று சாதனை படைத்தார்.
1953 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயிற்சி உறுப்பினராக இணைந்தவர் தோழர் முருகையன், மாநிலப் பொதுக்குழு, மாவட்ட செயற்குழு , மாவட்ட ஸ்தல ஸ்தாபனக் கமிட்டி , மாவட்ட விவசாய சங்கம், தமிழ்நாடு வாலிப சங்கம் ஆகிய அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றினார்!
கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 உயர்நிலைப் பள்ளிகளையும் 48 ஊராட்சிகளில் தொடக்க பள்ளிகளையும் தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு செயலாற்றினார். அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல .அதிகார வர்க்கமும் பண்ணையார்களும், ‘பள்ளிக்கூடங்கள் வந்து விட்டால், ஏழை எளியவனெல்லாம் படிக்கப் போய் விடுவான், கூலிக்கு வேலை செய்ய ஆள் கிடைக்க மாட்டான்’ என்ற அச்சத்துடன் மிகப் பெரிய தடைகளையும் சூழ்ச்சிகளையும் செய்து முருகையனின் முயற்சிகளுக்கு முட்டுக்காட்டை போட்டனர். .தடைகளை எல்லாம் படிக்ககல்லாக மாற்றி வெற்றி கண்டார் தோழர் முருகையன். ஒன்றியத்தில் பள்ளிகளே இல்லாத கிராமங்களே கிடையாது என்பது எஸ்ஜி.முருகையனின் சாதனையானது!
இன்னொரு நிகழ்ச்சி, மன்னார்குடி திருத்துறைப் பூண்டி முத்துப் பேட்டைக்கும்,இடைப்பட்ட கிராமங்களில் உள்ள 48 கிராம ஊராட்சிகளுக்கு சாலை வசதி இல்லாத நிலை இருந்தது! மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை வரை பாமினி ஆற்றின் கீழ்க் கரையை உயர்த்தி சாலை அமைத்து தாருங்கள் என்று பலமுறை கோரிக்கைகள் வைத்தார், தோழர் முருகையன் . மாவட்ட ஆட்சித் தலைவரோ, புதிய சாலை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் நிதி இல்லை என்று கூறி, சாத்தியமில்லை என கைவிரித்தார்.
முருகையன் அயரவில்லை. “நான் மக்களைத் திரட்டி ஆற்றங் கரையில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி சமன்படுத்தி, மண்சாலையாக அமைத்துத் தருகிறேன். நீங்கள் தார்ச் சாலை அமைத்து பஸ் வசதி செய்துகொடுத்தால் மட்டும் போதும், அதையாவது செய்வீர்களா?:” என்று ஆட்சித்தலைவரிடம் கேட்டார். நடக்கிற காரியமா என்று குழப்பத்தில் ஆழ்ந்த ஆட்சித் தலைவர் தலையாட்டி சம்மதம் தெரிவித்தார்.
உடனடியாகக் களத்தில் இறங்கினார் முருகையன். சைக்கிளில் பயணித்தும், நடந்து சென்றும், ஆறுகளில் நீந்திச்சென்றும், 48 ஊராட்சிகளைச்சார்ந்த ஊர்ப் பெரியவர்களை -பொது மக்களை – பண்ணையார்களை – அனைத்துக் கட்சி சார்ந்தவர்களையும் சந்தித்துப் பேசி, ஒரு குறிப்பிட்ட தேதியைக் குறிப்பிட்டு, வீட்டுக்கு ஒருவர் கூடை மண்வெட்டி அரிவாளுடன் பாமணி ஆற்றின் கீழ்க் கரைக்கு வந்து சேரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட அதிகாரிகளும், கிராம அலுவலர்களும், ஊர்ப்பொதுமக்களும் அன்று தங்கள் வாழ்நாளில் கண்டிராத ஓர் அதிசயம் தங்கள் கண்முன்னே நிகழ்வதை வாய்பிளந்து பார்த்தார்கள். ஆமாம், சாரிச்சாரியாகத் திரண்ட மக்களின் எண்ணிக்கை பல்லாயிரமாய்ப் பெருகி பாமினிக்கரையை ஆக்கிரமித்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு கூடை நிறைய மண்ணை வெட்டி முருகையனின் தலையில் வைக்க, அதை தூக்கிச் சுமந்த முருகையன், கரையை உயர்த்தும் பணியை முதல் ஆளாக முன்னெடுக்க, காலை6 மணிக்குத் தொடங்கிய இந்த வரலாற்று நிகழ்வு மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு – பாமினி ஆற்றங்கரை உயர எழும்பி நின்றது. அசந்து போன ஆட்சியரும், நிர்வாகமும் முதலில் மண்சாலை அமைத்துத்தர, பின் அது தார்ச்சாலையாக மாற்றப்பட்டு, மன்னார்குடி – முத்துப்பேட்டைக்குமிடையே பேருந்து வழித்தடமாக உருப்பெற்று இன்றளவும் முருகையனின் சாதனையாக கண்முன் உயிர்த்திருக்கிறது.
மக்களைத் திரட்டிய எஸ்.ஜி.முருகையனின் பேராற்றல் – நிகழ்த்தப்பட்ட உழைப்பின் பெருமை தஞ்சை முழுதும் மட்டுமல்ல, தேசியம் தழுவியும், சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது!
சோவியத் அரசின் விருந்தினராக அங்கு சென்ற முருகையன், அந்நாட்டுக் கட்டட பாணியில் தமது ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என விழைந்தார். விழுந்த பெருமாள் கோவில் நிலத்தில் ரஷ்யக் கட்டடக் கலையமைப்புடன் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கட்டி முடித்த முருகையன், அதை அன்றைய முதல்வர் பக்தவச்சலம் கையால் திறக்கச்செய்ததும், ஒன்றிய வளாகத்தில் கலையரங்கம் ஒன்று அமைத்து, அதில் ரஷ்ய கலாச்சார நடன இசை நிகழ்வை பிரம்மாண்ட முறையில் கோட்டூர் மண்ணில் நிகழ்த்திக் காட்டி சாதனை படைத்தார்!

# ஆதிச்சபுரம் வேதபுரம் சாலையை மக்களின் உழைப்புக் கொடையின் மூலம் உருவாக்கினார்!
# வீராக்கி விக்கிரபாண்டியம் சாலையை மக்களைத்திரட்டி உருவாக்கித் தந்தார்!
# கமலாபுரம் கண்கொடுத்தவணிதம் வெண்ணவாசல் சாலை புதிய சாலையை சிரமதான பணியின் மூலம் நிறுவினார்!
# கொரடாச்சேரி கப்பலுடையான் சாலையை மக்களின் உழைப்பு மூலம் உருவாக்கித் தந்தார்.
# பெருகவாழ்ந்தான், விக்ரபாண்டியம், திருக்களார் ஆகிய ஊர்களில் அவர் அமைத்துக் கொடுத்த சித்த மருத்துவமனைகள் அவர் பெயரை பறைசாற்றின.
# கால்நடை மருத்துவமனைகளை கோட்டூரிலும் பெருகவாழ்ந்தானிலும் அமைத்துக் கொடுத்தார்.
# 48 ஊராட்சி கிராமங்களிலும் பள்ளிகள் இல்லாத கிராமங்களே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தி தந்தார்!
# இன்னும் பல ஊர்களில் கிராம உள் சாலைகளை மக்களை திரட்டி சிரமதான பணியின் மூலம் அமைத்து ஊரைப் பொலிவாக்கியவர் அவர்தான்.
எஸ்ஜி.முருகையனை 1977 ஆம் ஆண்டு நாகை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்து கொண்டாடினார்கள் மக்கள். நாகையின் முதல் பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்பும் தோழரை சேர்ந்து கொண்டது.

அன்றைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவிரட்டியை சந்தித்து முறையிட்டு, நாகையில் செயல்பாடாமல் முடக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் துறைமுகத்தை இயங்க வைத்து கப்பல் போக்குவரத்தைத் தொடங்க ஏற்பாடு செய்ததென்பது முருகையனின் காலத்தை வெல்லும் பணிகளுள் ஒன்று. நாடாளுமன்றத்தில் எளிய மக்களின் பிரச்சினைகளையும், தொழிலாளர்களின் பிரச்சினையும் வலுவாக வாதிட்டு பல முக்கிய உரிமைகளை பெற்று தந்துள்ளார்!
விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதன் முதலில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் தோழர் எஸ் ஜி முருகையன் என்பதும், அதன் அடிப்படையிலேயே பின்னாளில் தமிழ்நாடு நுகர்பொரு வாணிபக் கழகம் தொடங்கப்பட்டது என்பதும் பெருமைக்குரிய வரலாற்றுச் செய்தியாகும்!
ஊராட்சி மன்றத்தின் தலைவர், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர், பின்னாளில் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என பல்லாண்டுகள் செயல்பட்ட முருகையன் ஆரம்ப காலம் தொடங்கி கடைசி வரை ஒரே குடிசை வீட்டிலேயே எளிமையான முறையில் வாழ்ந்தார்! இந்தியாவின் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குடிசையில் வாழ்ந்த ஒரே எம்பி இவர் மட்டுமே! தன் சொந்த சேமிப்புக்கென ஒரு வங்கிக்கணக்கும் கூட இவர் வைத்துக் கொள்ளவில்லை!
1977 ஆம் ஆண்டு கடும் புயல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தைத் தலைகீழாகப் புரட்டி போட்டபோது, எம்பி.யாக இருந்த முருகையன், சித்தமல்லியில் இருந்து ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு நாகப்பட்டினம் வரை அந்த சைக்கிளிலேயே பயணித்து, நிவாரணப்பணிகளில் ஈடுபட்டார்!
நாகையில் புயலால் தாக்குண்ட அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதிகளில் மக்கள் பசியாலும் பட்டினியாலும் துடித்துக்கொண்டிருப்பதை கண்டார், அதிகாரிகள் யாரும் உதவ முன்வராத நிலையில், அரசின் உணவு தானியக் கிடங்கின் பூட்டை உடைத்து, கிடங்கில் இருந்த அனைத்து உணவு தானியங்களையும் பாதிக்கப்பட்ட எல்லா ஏழை எளிய மக்களின் இல்லங்களுக்கும் பகிர்ந்தளித்தார்!
இந்த சேதி தஞ்சை மாவட்டத்தில் காட்டுத்தீயைப்போலப் பரவியது. தோழரின் செயலால் தமிழக அரசும், முதல்வர் எம்ஜிஆரும் ஆடிப் போயிருந்தார்கள். ஆனால் ஏதும் செய்யமுடியாத இக்கட்டான சூழ்நிலைமை அரசின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டது. ஆனால், ஆட்சியாளரின் மௌனம் , நீறுபூத்த நெருப்புதான் என்பதை காலம் பின்னாளில் நிறுவியது,
புயல் நிவாரணப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு, ஒரு மாதம் கழித்து தன் வீட்டிற்குத் திரும்புகிறார் முருகையன். புயலால் பாதிக்கப்பட்டிருந்த தன் குடிசைக்கும் அதிகாரிகள் நிவாரணத் தொகை வழங்கியிருந்ததை அறிகிறார் அவர். அந்த நிவாரணத் தொகையையுடன் தன் ஒரு மாத சம்பளத்தையும் புயல் நிவாரண நிதியாக முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரனுக்கு அனுப்பி வைத்தார்.
1979 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ஒரு கருப்பு நாளாக முடியப்போகிறது என்று எவர்தான் அறிந்திருக்கக்கூடும்?
தஞ்சாவூரில் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் முடித்துவிட்டு மாலையில் மன்னார்குடிக்கு பேருந்தில் வந்து இறங்கிய தோழர் எஸ்ஜி.முருகையன். அரசுப் பேருந்தில் தானும் ஏறி, மக்களோடு மக்களாய் தன் கிராமத்துக்குப் புறப்பட்டார்!
நள்ளிரவு 12. 30 மணிக்கு சித்தமல்லி கிராமத்துக்குள் நுழைகிறது பேருந்து. நிறுத்தத்தில் அவர் இறங்கிக்கொண்டபோது, “ஐயா, ஒரே இருட்டாகக் கிடக்கிறது! மின்சாரம் வேறு இல்லை போலிருக்கிறது. நான் வேண்டுமானால் வீடு வரைக்கும் வந்து வண்டியைக் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டார் நடத்துநர்.
Also read
புன்சிரிப்போடு அதை மறுத்துவிட்டு, அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்ற தோழர் முருகையன் இருளில் இறங்கி நடக்கத் தொடங்குகிறார். எங்கிருந்தோ மறைந்திருந்த கயவர் கூட்டம் அவரைத் திடுமெனச் சூழ்கிறது. சரமாரியாக கத்திகளால் துளைத்தெடுக்கப்படுகிறது அவரது உடல்! வாழ் நாளெள்ளாம் எளியவர்களுக்காக உழைத்தஅந்த மாவீரனை மரணம் தழுவிக் கொண்ட போது, அவரது வயது 47 தான்!
முதுகில் எட்டு கத்திக்குத்துகள் – நெஞ்சில் இருபத்தியைந்து கத்திக்குத்துகள் என முப்பத்துமூன்று கத்திக்குத்துகளுடன் அவரது சடலம் வீழ்ந்து கிடக்கிறது. அருகில் விழுந்து திறந்து கிடந்த பெட்டியிலிருந்து சிதறிக் கிடந்தன ஒரு ஜோடி மாற்று வேட்டிசட்டை, மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்கள், அவரின் லெட்டர் பேடு, நாடாளுமன்ற உறுப்பினர் அட்டை, மூக்குக்கண்ணாடி, ஒற்றை நூறு ரூபாய்த்தாளுடன் கொஞ்சம் சில்லரைக் காசுகள்… இவற்றுடன் கிடந்தது அவர் தன் குழந்தைகளுக்காக வாங்கிய அந்த பிஸ்கெட் பாக்கெட் !
கட்டுரையாளர் : முஹித் சேகுவேரா
அருமையான கட்டுரை.
தோழர் முருகையன் அவர்கள் பற்றி நான் படிக்கும் முதல் கட்டுரை.
வெளியிட்ட அறம் இதழுக்கு நன்றிகள்.
மொத்த பழைய தஞ்சை மாவட்டத்தில் கீழ் தஞ்சை மாவட்டம் கம்யூனிஸ்ட்கள் கோட்டை. அத்தகு கோட்டை உருவாக்கியதில் இப்படி பல பட்டியிலன மக்கள் உழைப்பு, தியாகங்கள் இருக்கின்றன.
அதை வெளிகொனரும் வகையில் இந்த கட்டுரை இருக்கிறது
கடைசி வரிகள் நெஞ்சை உலுக்கும். அனைவரும் அறிய வேண்டும். அறம் சாவித்ரி கண்ணன் அவர்களுக்கு நன்றிகள்.
மறக்கக் கூடாத மாபெரும் தியாக வரலாறு!
– முஹித் சேகுவேரா – தோழர் முருகையன்! – மாமனிதர். நன்றி அறம்
Unmaiyana makkal thalaivar
Arumaiyana varalattru pathivu valga Thiya SGM pugal
உண்மையான கம்யூனிஸ்ட் தோழர் மறக்க முடியாத வரலாற்று பதிவு பதிவிட்ட அறத்திற்கு நன்றி
பதிவை படிக்கும் பொழுது கண்ணீர் வருகிறது இப்படிப்பட்ட மாபெரும் தலைவரை வணங்குகிறேன்
எளிமையாய் வாழ்ந்த ஏழைத்தாயின் தவப்புதல்வன் SGM .ஆண்டுகள் ஆயிரம்ஆனாலும் நீங்கள் செய்த மக்கள் சேவை என்றும் மறையாது அய்யா
Veeravanakkam ayya
Makkal thalaivarai vanangukiren
இப்படிப்பட்ட மாமனிதரை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது வீர வணக்கம் ஐயா. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த தோழரை பற்றி பதிவு வெளியிட்ட அறம் சமூக வலைதளத்திற்கு எங்கள் நன்றி
Sirappana varalatru pathivu vaalga thiyagi SGM pugal
அய்யாவின் வரவாறு படிக்கும்போது கண்கலங்குகிறது மகத்தான மக்கள் போராளி வாழ்க அவரின் நாமம். பதிவிட்ட அறம் இணையதளத்துக்கு மனமார்ந்த நன்றி
Maamanithanukku veeravanakkam
கண்ணீர் வரலாறு இப்படிபட்ட மாமனிதர்களை அடையாள படுத்திய அறம் வாழ்க