யாருக்காக விளை நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன?

-சாவித்திரி கண்ணன்

அபகரிக்கபடும் விளை நிலங்கள்! அகதிகளாகும் விவசாயிகள்! வளர்ச்சி என்பது யாருக்கானது? யாரை வீழ்த்தி யாருக்கு தாரை வார்க்கப்படுகிறது விளை நிலங்கள்! லாபமும், வேலை வாய்ப்புகளும் யாருக்கு கிடைக்கிறது..? அடிமைச் சேவகவத்திற்காக, தமிழ் நிலத்தை பறித்தெடுத்து தாரை வார்க்கும் ஆட்சியாளர்கள்!

தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியை அடிமைப்படுத்தி தங்கள் காரியங்கள் அனைத்தையும் சாதித்தது போல தற்போதும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை தன்னுடைய வேட்டைக்காடாக்கி வருகிறது! தமிழகத்தின் இயற்கை வளங்களை திட்டமிட்டு அழிப்பது, நிலங்களை தமிழ் பூர்வீகக் குடிகளிடம் இருந்து அபகரிப்பது, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் வட இந்திய தொழில் அதிபர்களுக்கு நிலங்களை கணக்கு வழக்கின்றி அள்ளித் தருவது, பின்பு அதில் வேலை செய்ய பல லட்சம் வட இந்தியர்களை இங்கே குடியேற்றுவது ஆகியவையே தமிழகத்தில் தற்போது கண்ணும், கருத்துமாக நடந்து கொண்டுள்ளது.

வளர்ச்சி அன்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும், ஆனால், வாயில்லா பூச்சிகளான விவசாயிகளை மிரட்டி, அவர்களின் விளைநிலங்களை அபகரித்து, அவர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கக் கூடாது! ஆனால், தமிழகத்தில் அது தான் நடந்து கொண்டுள்ளது.

சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் எங்கும் இல்லாத விதமாக 15.7 சதவிகிதம் என 38,837 தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு அண்மையில் தொழில் நிறுவனங்களுடன் போட்ட ஒப்பந்தங்களின் படி வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்து இருந்தது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, காஞ்சிபுரம், நாகபட்டினம், தேனி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உட்பட 11 மாவட்டங்களில் 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட்களை விரிவாக்கம் செய்ய உள்ளனர்.

இந்த தகவல்களை கேட்கும் எல்லோருக்கும் இது முன்னேற்றம் தானே! தமிழ்நாட்டில் சிப்காட்கள் மேன்மேலும் அதிகரிப்பதும், விரிவாக்கம் செய்யப்படுவதும், அதன் மூலம் கூடுதல் தொழிற்சாலைகள் வருவதும் சிறப்பு தானே என்ற எண்ணமே ஏற்படும்!

ஆனால், யதார்த்தத்தில் இந்த மண்ணின் மைந்தர்கள் பயனடைவதற்காக இவை தோற்றுவிக்கபடுவதில்லை. இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள சிப்காட்களில் எத்தனை தொழிற்சாலைகள் தமிழர்களுக்கானது? அதில் வேலை செய்பவர்களில் எத்தனை பேர் தமிழர்கள் என்ற கேள்வியைக் கொண்டு இதைப் பார்த்தால், நமக்கு தெரிய வருவது, இங்குள்ள சிப்காட்களில் உள்ள தொழிற்சாலைகளில் கணிசமானவை வட இந்திய தொழில் அதிபர்களுக்கானது என்றும், அதில் வேலை பார்ப்பவர்களில் கணிசமானவர்கள் வட இந்தியத் தொழிலாளர்கள் என்றும் தெரிய வரும். ஆக, லாபமும் அவர்களுக்கே செல்கிறது. வேலை வாய்ப்பும் அவர்களுக்கே செல்கிறது என்பது மட்டுமல்ல, அவர்களுக்காக இங்குள்ள விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு, ‘சொந்த மண்ணிலேயே தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டு வருகின்றனர்’ என்பது தான் வேதனையானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே நான்கு சிப்காட்கள் உள்ளன! இதற்காக ஏற்கனவே பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இதற்காக கையகப்படுத்தப்பட்டு உள்ளன!  இந்த நிலையில் ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 21,000 கோடிகளில் 5-வது சிப்காட் அமைக்க , மத்திய அரசின் நிர்பந்தத்தால் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஓசூரில் வரவுள்ள ’சிப்காட்டிற்காக நிலங்களை பறிக்காதே’ எனப் போராடும் விவசாயிகள்!

இதை எதிர்த்து கடந்த 16 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த பசுமையான விளை நிலங்களில் தக்காளி,கேரட், பீன்ஸ்,பட்டர் ரோஸ், செண்டு மல்லி ஆகியவை விளைவிக்கபடுகின்றன! இவற்றை பறிப்பதன் மூலம் பத்தாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது! தங்களின் பூர்வீக மண்ணையும், பாரம்பரிய விவசாயத்தையும் இழக்கமாட்டோம்” என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதே கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கெலமங்கலம் ஒன்றியம் வன்னியபுரம் கிராமம் அருகே டாடா எலக்ரானிக்ஸ் எனப்படும் போன் உதரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று 5,300 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த ஆலை செயல்படுவதற்காக தமிழ்நாடு அரசின் ‘டிட்கோ’ 500 ஏக்கர் நிலத்தை தந்துள்ளது. ”இங்கு ஆப்பிள் நிறுவனத்திற்கான போன் உதிரிபாகங்களை தயாரிக்க உள்ளதால், 18,000 பேருக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றனர். இந்த 18,000 பேரில் 1,993 பேர் மட்டுமே இந்த மண்ணுக்கானவர்கள்! மற்றவர்கள் ஜார்கண்ட் போன்ற வட இந்திய மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள இந்த வேலை வாய்ப்பிற்காக முன்கூட்டியே அவர்களுக்கு தொழிற் பயிற்சி தந்து, இங்கு இறக்குமதி செய்துள்ளனர் என்பது கவனத்திற்குரியது. இதை எதிர்த்து தமிழ் தேசிய மற்றும் இடதுசாரி அமைப்புகள் போராடி வருகின்றனர்.

ஓசுர் டாடா தொழிற்சாலையில் 80 சதவிகிதம் வட இந்திய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து போராட்டம்!

இப்படி சிப்காட் அமைப்பதற்காக மட்டும் நிலத்தை எடுப்பதில்லை. சிப்கட்டில் தயாராகும் பொருட்களை எடுத்துச் செல்ல விரிவான சாலை வசதி வேண்டும் என்பதற்காக அதற்கும் விளை நிலங்களை பறிக்கின்றனர்!

திமுக அரசு தேர்தல் அறிக்கையில், ’விளை நிலங்களை தொழிற்சாலைக்காக அழிக்கமாட்டோம். அதை பாதுகாப்போம். தமிழ்நாட்டின் விவசாய நிலப்பரப்பை இருமடங்காக அதிகரிக்க பாடுபடுவோம்’ என்றது.

மதுரை மாவட்டம் திருமங்களத்தில் இருந்து செங்கோட்டை புளியரை வரை நான்கு வழிச்சாலை திட்டமிட்டு உள்ளனர். இதில் வரும் ராஜபாளையம் முதல் புளியரை வரை உள்ள வாசுதேவ நல்லூர், கடைய நல்லூர் பகுதிகள் முப்போகம் விளையும் பசுமை பிரதேசமாகும், தென்னை,வாழை தோப்புக்ள அடர்த்தியாக உள்ள பகுதியாகும்! காணும் திசையெல்லாம் நெற்பயிர்கள் தலையாட்டிச் சிரிக்கும் பகுதியாகும்! இந்த விளை நிலங்களில் 2,800 ஏக்கரை பறிக்கிறார்கள்! அதுவும், இந்த சாலையை நேர்பாதையாக கொண்டு போகாமல், சுற்றிவளைத்து கொண்டு போவதன் மூலம் அதிக நிலங்களை அபகரிக்கிறார்கள்! நேர் வழியில் மாற்றுப் பாதைக்கான திட்டத்தை விவசாயிகளே வகுத்து கொடுத்த போதும், அதற்கு அரசு தரப்பில் பதில் இல்லை. காரணம், இதில், ‘ரியல் எஸ்டேட் மாபியாக்கள்’ சம்பந்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்! அப்படியானால், ‘இது யாருக்கான அரசு’ என்று நாம் யோசிக்க வேண்டும்.

திருவள்ளுர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திராவின் சித்தூர் வரையிலான மத்திய அரசின் ஆறு வழிச்சாலை திட்டத்திற்கு நல்ல வளமான விளை நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன! அதுவும் ஊத்துக்கோட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகா நெல், கரும்பு, மலர்கள் சாகுபடியாகும் அற்புதமான விவசாயப் பகுதியாகும். இங்கே எந்த விவசாயியும் தங்கள் நிலத்தை தரத் தயாரில்லை என்றும், இங்கே இருக்கின்ற சாலை வசதிகளே போதுமானது என்றும், மேலும் சாலை போடுவது தேவையற்றது என்றும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். சாலை போடப்பட்டால், 1,200 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் தார் சாலையாவதோடு 15 ஏரிகள், முப்பது குளங்கள் அழிந்து போகும். தமிழனின் இந்த விளை நிலங்கள் யாருடைய நலன்களுக்காக பறிக்கப்படுகின்றன?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க 4,700 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியுள்ளது! இவ்வளவு அதிகமான நிலப்பரப்பு தேவையற்றது. இதில் 2,750 ஏக்கர் விவசய நிலங்களை அழிக்க உள்ளனர்! சுமார் ஆயிரம் ஏக்கரில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற பல வகைப்பட்ட நீர் நிலைகளை நிர்மூலமாக்குகின்றனர். நான்கு கிராமங்களை முற்றாக அழிக்கின்றனர்! வீடுகள், பள்ளிகள், வழிபாட்டுத் தளங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன! யாருடைய நலன்களுக்காக? இப்படி மக்களிடம் இருந்து அராஜகமாக நிலத்தை பறித்து அமைக்கவுள்ள விமான நிலையம் ஒரு சில வருடங்களில் அதானி வசம் தான் செல்லும். ஏனெனில், ஏற்கனவே இந்தியாவில் பல விமான நிலையங்களை அவர்களுக்குத் தான் அதிரடியாக தாரை வார்த்துள்ளது ஒன்றிய பாஜக அரசு!

‘பரந்தூர் விமான நிலையத்திற்காக பறிக்காதே விளை நிலத்தை’ என போராடும் மக்கள்!

ஏற்கனவே, விவசாயிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட எட்டு வழிச்சாலையை அமைக்க உள்ளனர். அதிலும், பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பறிபோக உள்ளன!

விவசாயம் இல்லாவிட்டால் உணவில்லை! விவசாய நிலங்கள் உள்ளவரை தான் நாம் சுய சார்புடன் வாழ முடியும். விவசாயத்தையும், நிலத்தையும், நீர் நிலைகளையும் இழந்து சொந்த மண்ணிலேயே கூலிகளாக இந்த மண்ணின் மக்களை மாற்றுவது கொடுமை!

தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளுமே பாஜகவின் கொத்தடிமைகளே! உழைப்புக்கு பேர் போன தமிழர்களை குடிபோதைக்கு அடிமையாக்கி, உழைக்கும் திரனற்றவர்களாக்கி, தங்கள் கஜானாக்களை வளப்படுத்திக் கொண்ட தமிழக அரசியல்வாதிகள் – பிரிட்டிஷாருக்கு அன்றைய குறுநில மன்னர்கள் பணிந்து போனது போல –  தங்கள் சொந்த மக்களை பலிகடாவாக்கி, வளர்ச்சி என்ற பெயரில் வட இந்திய ஆதிக்க சக்திகளுக்கு அடி பணிந்து சேவகம் செய்கின்றனர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time