மெல்லக் கொல்லும் விஷமாக ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் நாளும் நம் உடலில் உணவின் வழியே சேர்கின்றன. விவசாயம் நச்சுமயமானதற்கு, தடை செய்யப்பட்ட படு ஆபத்தான பூச்சிக் கொல்லி, களை கொல்லிகளை இந்தியாவில் அரசாங்கமே அனுமதிப்பது தான்!
“Monocrotophos” போன்ற இன்னும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசால் 60 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை விற்ற மருந்துகள் பாதி நிலத்திலும் மீதி நாம் உண்ட உணவிலும் வயிற்றை சென்றடைந்ததுள்ளது. இன்னும் சில கடைகளிலும் விவசாயிகள் கைகளிலும் மிச்சமுள்ளது. மீண்டும் அறுபது நாள் கழித்து புதுப்பொலிவோடு வேறு ஒரு பெயரில் வெளியிட்டு மகிழ்வான் வெளிநாட்டுக்காரன். சீப்பை ஒளித்து விட்டேன் கல்யாணம் நின்னுடும் என்ற பழமொழிக்கு இந்த சம்பவமே சாட்சி:
“ரசாயனங்களை உண்ணும் சனங்களா “வாங்க நம்ம ஊர என்ன பண்ணி வச்சிருக்கானுங்கன்னு பார்ப்போம்!
பூச்சிக்கொல்லி மருந்தில் உள்ள 0.1சதவீதம் மருந்து பூச்சிகளை கொல்கிறது. மீதமுள்ள 99.9சதவீதம் மருந்துகள் காற்று நீரிலும், நிலத்திலும்,பயிரிலும் கலக்கின்றன! இதை கார்ப்பரேட் நிறுவனங்கள் மறைத்துவிடுகின்றன! விளைச்சல் என்னும் மாயையை விவசாயிகளின் மூளையில் தொடர்ந்து விதைத்து, உண்மைகளை உணரவிடாமல் செய்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். அதற்கு துணை போவதை எப்போது சாமானியன் உணரப் போகிறான்.
CIDE என்பது மருந்து அல்ல, அது உயிர்கொல்லி (Pesticide) நாம் மண்ணிடம் தோற்கவில்லை, இயற்கையிடம் தோற்கவில்லை, அறிவால் தோற்று விட்டோம் பேராசையால் நம் வளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். காடுகளில் எந்த உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் தெளிக்கப்படுவதில்லை. அங்கெல்லாம் பயிர்கள் நன்றாக வளரத்தானே செய்கின்றது. எந்த களைச் செடிகளும் தேவையற்றது இல்லை எல்லாம் பன்மயம் கலந்த உணவுச் சங்கிலியின் ஓர் அங்கமே.
மசானோ ஃபுக்காக்கோ அவர்களின் “Do Nothing Farming” ஐ மறந்த உலகத்தின் விளைவு தான் இவை. அதிகபட்சம் பூச்சிகளை விரட்டிய சமூகம் இன்று பூச்சிக் கொல்லிகள் என்று பகிரங்கமாக சந்தைப்படுத்தி விவசாயிகளை நம்ப செய்து தனது வியாபாரத்தை பெருக்கி வந்துள்ளது வியாபார உலகம். மனிதனுக்கு இன்று பொறுமை இல்லை, அதிகப்படியான பேராசை ஆட்டிப்படைத்து விதைத்தவுடன் அறுவடைக்கு தள்ளப்படும் சிந்தனை பெருகி விட்டது. இயற்கை தனக்காக எடுத்துக் கொள்ளும் நேரத்தை குறைத்து ஹைபிரிட் விதைகள், பழங்கள் மற்றும் பிராய்லர் கோழிகளை உருவாக்கி, உடனே பலனை அனுபவிக்க தேடுகிறான் நவீன மனிதன். இயற்கையோடு இணைந்து வாழ்வதை மறந்து, அவசர உலகில் பயணித்து தனக்கும் மற்ற உயிர்களுக்கும் மரணத்தை உருவாக்கி வருகின்றான். அளவுக்கு மீறிய பேராசையை தூண்டி பொருளாதார அறுவடை செய்வது எங்கோ இருக்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்று உணர வேண்டிய நேரம் இதுவல்லவா!
விவசாயம் என்பது வியாபாரம் அல்ல, அது வாழ்க்கை முறை எனக் கூறிய எங்கள் பெருந்தகப்பன் நம்மாழ்வார் வரிகளை நாம் ஒவ்வொருவரும் உள் வாங்கி அனைவருக்குமான விழிப்புணர்வை உருவாக்க வேண்டாமா? நம்மைச் சுற்றியுள்ள உணவு அரசியல் மிகப் பெரியது. வெறும் வியாபாரமாக பார்க்கும் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ந்து விவசாயிகளை ஏழையாக வைத்திருப்பதே அவர்கள் திட்டம். அரசும், வேளாண்மை துறைகளும் தொடர்ந்து இந்த உரங்களை இறக்குமதி செய்து கொண்டே இருக்கிறது. மானியம் என்னும் பெயரில் மறைமுகமாகவும், நேரடியாகவும் உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் வழங்கிக் கொண்டே இருக்கின்றன.
அன்றிலிருந்து இன்று வரை அரசும் ஒவ்வொரு வருடமும் பயிர் விளைச்சலை ஊக்குவிக்க உரங்களை வழங்கி வருவது கூடிக் கொண்டே போகிறது. மண்ணின் தரம் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. மேலும், தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. இன்று ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளில் ஏதுமறியா நோயாளிகளின் வரிசைகள் நீண்டு கொண்டே செல்கிறது. நோயையும் உற்பத்தி செய்து, அதற்கு மருந்தையும் வழங்கி, தொடர்ந்து இதே நிலையில் வைத்திருக்க விரும்புகின்றனர் ஆட்சியாளர்கள். இந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை 0.1சதவீதம் நுகர்ந்தால் கூட, ஒரு மனிதனை காப்பாற்ற இயலாத போது, எந்த நம்பிக்கையில் இவற்றையெல்லாம் நிலத்தில் தூவுகின்றோம்.
ஒரே பொருள், ஒரே விலை, ஒரே தேசம் என்னும் மாய வார்த்தைகள் கொண்டு அனைத்தும் ஒரு முதலாளியின் கீழ் கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன, நம் தேசத்தில். நிச்சயம் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தாலேயும் இயற்கை விவசாயத்தை கையில் எடுக்க முடியாது, எடுக்கவும் மாட்டார்கள். அவர்களின் கொள்கை வர்த்தகம் ஒன்றே! இதில் எந்த பல்லுயிர் தன்மையோ சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியோ அவர்கள் கவலைப்படுவதே இல்லை. அது அவர்களுக்கு தேவையும் இல்லை.
நாம் அனைவரும் தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்கும் முக்கியமான கட்டத்தில் உள்ளோம். நம் நாட்டில் காற்று நிரப்பப்பட்ட பாக்கெட்டில் விற்கப்படும் சிப்ஸ் விலை பற்றி கவலை இல்லை, சினிமா தியேட்டர் டிக்கெட் விலை ஏற்றம் பற்றிய கவலை இல்லை, எந்த கேள்விகளும் கேட்பதும் இல்லை எண்ணிலடங்கா குளிர்பானங்கள் பற்றியோ அதன் விலை பற்றியோ எந்த கவலையும் இல்லை, ஆனால் எங்கோ ஒரு இயற்கை விவசாயி விற்கும் ஒரு தக்காளியின் விலை பற்றி மட்டும் அதிர்ச்சியுறும் நம் நாட்டு மக்களின் மனநிலை பற்றி நான் மிகவும் கவலையாக உள்ளது. ஆரோக்கியமான பொருட்கள் பற்றிய விலையை கேட்டு, புறந்தள்ளி ஏளனம் செய்யும் மக்கள் வாழும் ஊரில் எல்லா நோய்களும் வரத் தானே செய்யும்!
தெருவோரம் காய் விற்கும் வயதான தாய்மார்களிடம் பேரம் பேசும் நம் மக்களே சூப்பர்மார்க்கெட்டில் சாயம் பூசி விற்கும் பழங்களும் காய்களும் விலையேற்றம் பற்றி கேள்வி கேட்காமல் இன்னும் எத்தனை காலங்கள் நடை பிணங்களாக வாழ போகிறார்கள்? கொள்ளை லாபம் வைத்து வியாபாரம் நடக்கும் நம் தேசத்தில் கொள்ளை நோய் வருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இன்று விதைகள் பற்பல வெளிநாட்டு நிறுவனத்தின் கைகளில் உள்ளன. நம் விவசாயிகள் இந்தச் சூழல் தெரியாமல் சுயத்தை இழந்து லாபம் என்னும் பேராசை வலையில் சிக்கி இன்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை மீட்டெடுக்க வேண்டாமா நாம்!
ஒரு விதையை விற்பதும், அதன் நோய்க்கான மருந்து கடைகளை அந்த ஊரின் பிரபலமான பகுதியில் திறப்பதும், அவர்களுக்கு நம் ஆட்கள் கொடி பிடிப்பதும், பின் அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நாம் விவசாயிகளின் குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவரும் காற்று மாசினாலும் நீர் மாசினாலும் பாதிக்கப்பட்டு, பின் அவனே கட்டி வைத்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்ந்து பின் அவன் தரும் மருந்திற்கு நாமே பில் கட்டி வரும் பெருந்துன்பத்தை இப்போதாவது உணரத் தொடங்க வேண்டும்! இந்த உண்மைகளை தொடர்ந்து மறைத்தும், நம் அறிவை மழுங்கடிப்பதுமான வேலைகளை வேளாண் கல்லூரிகளும் நம் மருத்துவ உலகமும் தொடர்ந்து செய்து வருகின்றன என்று கூறும் நம் மண்ணின் பெருந்தகப்பன் நம்மாழ்வார் அய்யாவின் வரிகளை ஞாபகபகம் கொள்வோம்.
நாம் அரசியலை மாற்றி விடலாம், அவர்கள் வந்து நன்மை செய்வார்கள், எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்ளும் என்றும் சினிமாவைப் போல சூப்பர் ஹீரோ வந்து எல்லாவற்றையும் மாற்றி விடுவார் என்னும் பொய்யை தொடர்ந்து நம்ப வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையில் சோற்றை உற்பத்தி செய்யும் ஒரு விவசாயிதான் இந்த நாட்டின் கொண்டாடப்பட வேண்டிய சூப்பர் ஹீரோ இதை உணர்வதற்குள் நம்மில் பாதிபேர் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்போம் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதை சரி செய்திட இயற்கை உயிர்ம வேளாண் கொள்கைகளை கையில் எடுக்க போராடும் உழவர் இயக்கங்களோடு நாம் கை கோர்க்கும் நேரம் இது. சுபாஷ் பாலேக்கர் சொல்வது போன்ற ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கு அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இடு பொருள் என்பது ஒரு நிலத்திலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும், இந்த சுழற்சி முறையினை அனைவருக்கும் தெளிவுபடுத்தி இயற்கை விவசாயம் நோக்கி நகர்த்தும் வேலையை நாம் செய்தாக வேண்டும் உடனடியாக!
விவசாயிகளின் தயக்கத்தை உடைத்து அவர்களின் பொருளுக்கு தகுந்த விலை கொடுத்து வாங்கும் நுகர்வோராக நாம் மாற வேண்டும். முறையான நியாயமான சந்தைப்படுத்துதல், அதில் உள்ள சிக்கல்களை நாமே நம் எளிமையான பொருளாதார கொள்கை கொண்டு சரி செய்ய முன் வர வேண்டும். எல்லாவற்றிலும் லாபம் பார்க்கும் நம் மனோ பாவம் ஒழிய வேண்டும். நாம் அருந்தும் பாலாக இருந்தாலும் சரி, நாளை வரும் சந்ததி அருந்தும் நீராக இருந்தாலும் சரி, துளி அளவேனும் விஷம் கலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். முடிந்த வரை நம் அருகில் இருக்கும் நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் விழிப்புணர்வையும், நல்ல தொடர்பினையும் ஏற்படுத்தி மண் மலடாக்கப்படாமல் தடுக்க வேண்டும்.
இனி நம் தாய் மண்ணில் நுண்ணுயிரிகள் நிரம்பி வழிய வேண்டும், நீரழிவு நோய் முதல் புற்று நோய் வரை எல்லாம் கடையறுத்திடல் வேண்டும். ஹைபிரிட் விதைகள் தவிர்த்து, அனைவரையும் விதை திருவிழாக்களில் பங்கு பெறச் செய்து, விதைகள் பரிமாறி, நம் இளைய சமுதாயம் கருத்தரிப்பு மையங்களை நாடிச் செல்வதை குறைத்திடல் வேண்டும். பொருளுக்கு சரியான விலை கொடுத்திடும் விவசாயிகளின் கனவு நிறைவேறி, சரியான விலை இல்லாததினால் சாலைகளில் கொட்டப்படும் அவல நிலை இங்கு மாறிடல் வேண்டும்.
Also read
உரக்கடைகளுக்கு கடனாளியாக மாறி வரும் நம் தலையெழுத்து மாறி, பூச்சிமருந்து உட்கொள்ளும் அவல நிலையும் மாறிட வேண்டும், நம் களப்பணிகளால். இனி எவரும் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடக்க வேண்டாம். போதும், இந்த அடிமை வாழ்வு! கையில் எடுப்போம் தீர்வு தரும் இயற்கை விவசாயத்தையும், தற்சார்பு வாழ்வியலையும். விவசாயம் என்பது பணம் ஈட்டி தரும் என்னும் நிலை மாறி, நம் முன்னோர்களின் முறையான பண்டமாற்று முறையில் விதைகளை நாமே பகிர்ந்து அந்தந்த பகுதியில் விதை வங்கிகள் அமைத்து இந்த அடிமை பொருளாதார கொள்கைகளை வேரறுப்போம்.
இயற்கையோடு ஒத்திசைந்த வாழ்வை மேற்கொண்டு இனி வரும் தலைமுறைக்கு நல்ல உணவுகளையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சூழலியல் பேணும் வாழ்க்கை முறையையும் கொண்டு சேர்க்கும் தலைமுறைகளாக நாம் இருப்போமாக!
சூழல் காப்போம்! தேசம் காப்போம்!
கட்டுரையாளர்; க.முத்துகிருஷ்ணன்
ஒருங்கிணைப்பாளர்,
மரங்களின் நண்பர்கள் அமைப்பு,
அரியலூர் மாவட்டம்.
Leave a Reply