மரங்களே பூமியை தாங்கி பிடித்திருக்கும் பந்த கால்கள். வீட்டுக்கு அழகே முன்னால் நிற்கும் மரங்கள் தான். சின்ன சின்ன மரங்களின் வழியே சித்திரம் அசைக்கும் வீதி தெருக்கள். வேப்ப மரங்களின் காற்றும், நிழலும் உள்ளம் பூரிப்பவை! ஒரு மரம் இரண்டு தொழிற் சாலைகளுக்கு சமம். மரங்களுக்கும், மனித வாழ்வுக்குமான தொடர்புகள் ஆழமானது!
மரம் நடுகிறவன் கடவுளுக்கு ஒப்பானவன். அவனே ஆதியை கை நழுவாமல் பற்றி இருக்கிறான். அவன் தான் தீர்க்கதரிசி.
எல்லாமே சுழற்சியின் ஞாபகங்களால் உருவானவை. கோடரி கதை…. விறகு வெட்டி கதைகளை தூரோடு தூக்கி எரியும் காலம் இது. தங்க கோடரி அல்ல… தங்க கோபுரமே கொடுத்தாலும் மரம் வெட்டோம் என்ற சபதமே இந்த பூமியை காப்பாற்றும். தேவைக்கு வெட்டும் போதும் அதற்கு மாற்றாக மரங்களை நட வேண்டும். அது தான் தெய்வ வாக்கு. அல்லது தாக வாக்கு.
மரம் நடுவது ஆர்வத்தில் கூட நடக்கலாம். அதை ஒரு கட்டம் வரை வளர்த்தெடுப்பது தான் ஆழம் நிரம்பியவை. வீதிக்குள் நுழையும் போதே ஊரின் உயிர் காத்து நிற்பது போல நிற்கும் புளியமரம்…தினம் தினம் புதிதாக தெரியும். ஊரின் நடுவே ஓங்குதாங்காக பரந்து விரிந்து கிளை சரிந்திருக்கும் ஆலமரம்… எல்லா நேரமும் மனிதர்களை சந்திக்கும் சிந்தனை திடல். கிணற்றுக்கு போகும் வழியில் இருக்கும் அரசமர அழகு கண்களில் மணி அடிக்க…அரசமர இலைகளில் லட்சம் இதயங்கள் மினு மினுங்கும்!
ஒரு மரம் என்பது இரண்டு தொழிற்சாலைகளுக்கு சமம். ஒன்று, ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இன்னொன்று, கார்பன்டை ஆக்ஸைடை உரிந்து கொள்ளும். மரமில்லாத மலை சூரிய வெப்பத்தை இன்னும் அதிகமாக இழுத்து தரும் என்பது சூழலியல் விதி. இங்கே நமது வாகனம் வெளியிடும் புகை… இமயமலைக்கு போகும் என்பது சூழலியல் சூட்சுமம். உலகின் மிகப் பெரிய பம்புகள் மரங்கள் தான் என்பதை அறிந்து விட்டாலே.. மரத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவோம்.அத்தனை வேகத்தில் வேரின் மூலமாக நீரை உரிந்து தனக்கு போக மிச்சத்தை ஆவியாக்கி விடும்மாய மந்திர தந்தை இந்த மரம். மரத்தை உற்று நோக்குகிறவன்… கண்டிப்பாக அதை வெட்ட முனைய மாட்டான் என்பது நான் கண்ட போதி.
மரத்தை வெட்டும் போது அது வெட்டுபவனுக்காகவும் அழுகிறது. வெட்டுபவனின் வாரிசுகளுக்காகவும் புலம்புகிறது. உயிரின் பதறலை கொண்டு அலை பாய்கிறது. கவலை கொள்கிறது. பின் செத்துபோகிறது. காலங்களை சுமந்து கொண்டு வாழ்வின் சாட்சியாய், நம்பிக்கையின் வேராய் நிற்கும் மரத்தை வெட்டி வீழ்த்தும் போது.. கால இடைவெளி பற்றிய ஆவணங்களை அழித்தெறிகிறோம் என்று பொருள்.
காடுகளை அழித்தல் தன் வீட்டுக்கே தீ வைத்தலுக்கு சமம் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். புலி இருக்கும் காடே வளமான காடு. புலிகள் இருக்க புதர்கள் வேண்டும். யானைகள் காட்டின் பேரழகு. காடு அழிய அழிய கோவிலில் பிச்சையெடுக்கும் யானைகளின் எண்ணிக்கை பெரும் பாவமென அரங்கேறத்தான் செய்யும். காட்டின் பிரமாண்டத்தை கையேந்த விடும் இந்த மானுடத்தை… விதிகளின் விழிகள் உற்று நோக்கிக் கொண்டு தான் இருக்கின்றன.
தனக்கு தேவை என்பதைத் தாண்டி… பண்டமாற்று முறை கொஞ்சம் சிரமம் என்பதைத் தாண்டி… பணம் புழங்க துவங்கிய பிறகு… எங்கோ, எவனுக்கோ ஆரம்பித்த பித்து.. முறுக்கேறி முறுக்கேறி.. மூச்சு முட்டி….கழுத்தை நெரித்து.. இதோ வெறும் பத்து பணக்காரனுக்காக மட்டுமே இந்த உலகம் தினம், தினம் தன் கண்களை மூடிக் கொண்டே குருட்டுப் பூனையாய் கிடைத்த விட்டத்தில் எல்லாம் எட்டிக் குதித்து கொண்டிருக்கின்றன.போகிற போக்கில் பலி ஆகும் யாவும்…. கூட மரமும் ஆகிறது. சிந்திக்கும் மனமோ வேகிறது.
அவிநாசி சாலையில் இருந்த மரங்களை வெட்டிய பாவத்தை இப்போது அனுபவிக்கிறோம். கோவையில் இத்தனை வெயில் எந்த காலத்தில் இருந்தது. இந்தக் காலத்தில் என்று எதிர்காலம் இனி சொல்லும். வெயிலின் வெக்கைகளில் எல்லாம் உயிரோடு சருகான இலைகளின் கோபம் இல்லாமலா போகும்.
சரி, தேவைக்கு சில போது மரங்களை அகற்ற வேண்டி தான் இருக்கிறது. அதற்கும் மாற்று விழி இல்லாமல் இல்லை.மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பக்கம் நடுவது. ஆனாலும், அதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பக்கம் நடுவதில்…. நம் மண்ணின் மரங்கள் மட்டுமே வேர் பிடித்து உயிர் பிடித்து மீண்டும் வளர்கின்றன…!. மற்ற மரங்கள் பட்டுப் போகின்றன என்று அறிய வருகையில்.. மண்ணுக்கும் மரத்திற்குமான உறவை புரிந்து கொள்ள முடியும். மண்ணின் இயல்பை.. அதன் பாரம்பரியத்தை.. அதன் பண்பை உணர்த்த இதை விட நாம் அறிய வேண்டியது ஒன்றும் இல்லை. மரமாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் அதனதன் மண்ணில் இருக்கும் போதுதான் வேர் பிடித்த வாழ்வு சாத்தியமாகிறது.பத்துக்கு பாதியையாவது இந்த வழியில் காப்பாற்ற முடிந்தால் அதை செய்தல் தான் முறை.
என் மலை உச்சியில் மரத்தோடு மரமாக நின்று கத்தி விளையாடிக் கொண்டிருக்கும் என்னை எப்போதாவது நான் காண நேர்கையில் இப்படித் தான் தோன்றும். ஒரு பெரு மழை அசைத்து பார்க்கும் என் உயிர்ப்பின் சுவடுகளை நான் உணரும் தருணம் தான் இயற்கையின் கொடை. யாருக்காவது இறைவனின் கொடை என்றும் தோன்றலாம். இயல்பாகவே காடும், காடு சார்ந்த வாழ்வை விரும்புகிறவன் நான். என்னை போன்றோருக்கு மரம், மனிதனை விடவும் பெரியது. நமக்கு முன்பே இந்த பூமியில் உருவான திரு.. திருமதி அது. அதற்கான வெகுமதி, அதை வணங்காவிடினும் வெட்டாமல் இருப்பது தான்.
மரத்திற்கு உயிர் இருக்கிறது. அது வேலை செய்கிறது. அது நம்மை கண்காணிக்கிறது. அதற்கு மொழி இருக்கிறது. மௌனம் கூட இருக்கிறது. உற்று நோக்குகிறவனுக்கு அது கடவுளாகவும் இருக்கிறது. அதனால் தான். மரத்தைக் கண்டால்… மஞ்சள் துணியை சுற்றி சாமியாக்கி விடுவோரை அவர்களின் மூட நம்பிக்கைகளையும் தாண்டி மனம் விரும்புகிறது.
ஒரு மரத்தை காக்க ஒரு கடவுள் தேவைப்பட்டால் இன்னொரு கடவுளையும் உருவாக்கலாம் என்பது மர நீதி. மரம் எல்லாவற்றையும் விடப் பெரியது. வேர் பிடித்து கிளைபரப்பி இலைகள் விட்டு துளிர்கள் விட்டு..,. காய்த்து பூத்து….., வெயில் பிடித்து…., மழை குடித்து.., காற்று அசைத்து…,பறவை பட்சிகள் புழு பூச்சிகள் வாழ இடம் கொடுத்து…என நிழலும், நிஜமுமாக நிற்கும் மரத்தை ஒப்பிட்டு, மனிதனை மர மண்டை என்றால், அது நியாயம் இல்லை தானே.
எப்போதும் மரம் அசையும் காற்றுடன்…..எப்போதும் குடை மறந்த மழையுடன்…எப்போதும் மனம் நிறைந்த குளிர்ச்சியுடன் கழிந்த பால்யத்தை இப்போது நினைத்தாலும் மனமெங்கும் மழை தான். விழியெங்கும் கதை தான். எப்போது திறந்தாலும் ஓடி வரும் ஓடையில் படக்கென்று படுத்து நாயைப் போல வாய் வைத்து நீர் குடித்தவன்….. இன்று பிளாஸ்டிக் போத்தலில் வாங்கி மகானைப் போல குடிக்கிறேன். குலை நடுங்க…… குரல்வளை பிடுங்க… தாகம் மிரளும் தத்துவம் என்னை சூழ்கிறது.
கண் உறுத்தும் வறட்சிக்கு முன் ஓ வென குற்ற உணர்ச்சியோடு நிற்கிறேன். நானும் கூட இதற்கு காரணம் தான். உள் மனம் சத்தமிட்டு கூறுகிறது. நானும் இந்த காற்றை மாசு படுத்தி இருக்கிறேன். மரங்களுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறேன். பிளாஸ்டிக் கோப்பைகளை மற்ற குப்பைகளோடு சேர்த்துப் போட்டிருக்கிறேன். சாக்லேட் கவர்களை……., கொரியர் கவர்களை……கூச்சமே இல்லாமல் சாலையில் போட்டு போயிருக்கிறேன். கொஞ்ச காலம் முன்பு வரை கூட கறி வாங்க.., மீன் வாங்க.., காய்கறி வாங்க…, வெறும் கையோடு சென்று…. வாங்கியவைகளை பாலிதீன் கவர்களில் வாங்கி வந்திருக்கிறேன். வெட்கி கவிழ்கிறேன். துக்கித்து உணருகிறேன். உள்ளுக்குள் எழும் அசைவை எந்த மரஅசைவால் நிறுத்த.
Also read
இயல்பாகவே மண்ணுக்கும், மரத்துக்கும் துரோகம் செய்வது தவறென்று நினைக்கும் மானுடத்தை இழக்க வைத்திருக்கிறது….. இன்றைய நவீனம்.
ஒரு சொட்டு நீருக்காக அண்டை மனிதனின் ரத்தம் குடிக்கும் மரணம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கு முன் விழித்துக் கொள்ள வேண்டும்.மரங்களின் கரம் பற்றிய மனிதன் பிழைத்துக் கொள்கிறான்.
சூட மரம்… சவுக்கை மரம்… பூ மரம்… தண்ணிக்கா மரம்…தைல மரம்…முகர வீங்கி மரம்… தேக்கு மரம்…ஈட்டி மரம்…என நினைவுகளில் அசையும் மரங்களின் ஈர காற்றில் இதயம் நிரம்புகிறது. மரங்களில் இதயம் வரைந்தது போதும்….! இளைய சமுதாயமே…. மரத்தை இதயத்தில் வரைவோம்.
எனது கவிதை ஒன்றோடு கட்டுரையை முடிக்கிறேன்.
“மரம் தொலைத்த வேதனை
மனிதனுக்கு இல்லாமல் இருக்கலாம்
கூடு தொலைத்த பறவைக்கு
கூடுதல் கவலை அது…”
காக்கைக் கூடு நடத்திய செங்கால் நாரை விருதுக்கான பரிசு கட்டுரை!
கட்டுரையாளர்; கவிஜி
மனித குலத்தை மட்டுமல்லாமல், உலக உயிர்கள் அனைத்தையும் காக்க மரங்களை வளர்க்க வேண்டும் எனக் கூறிச் சூழலியல் மீது அக்கறை காட்டும் கட்டுரையை வெளியிட்டுள்ள அறம் இணைய இதழுக்கு வாழ்த்துக்கள்.. மரம் வளர்க்கும் காக்கும் உங்கள் அறம் வளரட்டும்…