கதையைக் களவாடி ஓடி ஒளியும் இலக்கியவாதி!

-சாவித்திரி கண்ணன்

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை என விளம்பரப்படுத்தி வெளியாகியுள்ளது அயோத்தி! அந்தக் கதை ஒரு உண்மை சம்பவம். அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் எஸ்ராவை தொடர்பு கொண்டால், ஓடி ஒளிகிறார்! நாமும் தொடர்பு கொண்டோம். போன் எடுத்துப் பேச முன் வரவில்லை! என்ன நடந்தது..?

”தமிழ் சினிமாவில் இது வரை ஆயிரக்கணக்கான கதைகள் வந்துள்ளன! ஆனால், இது மாதிரியான ஒரு கதை இது வரை வந்ததே இல்லை என தாரளமாகச் சொல்லலாம்” என்றும், ”உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்” என்றும் விளம்பரப்படுத்தி, வெளியாகியுள்ள படம் அயோத்தி! இது டிரைடண்ட் என்ற நிறுவனத் தயாரிப்பில், மந்திரமூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் தற்போது ஓடிக் கொண்டுள்ளது. நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது! பிரபல எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் எழுதியுள்ள இந்தப் படத்தின் கதை சம்பந்தமான ஒரு சர்ச்சை வெடித்துள்ளது! இது என் கதை என்பதாகவோ, கதை திருட்டு என்பதாகவோ, நஷ்டஈடு கேட்டோ இந்த சர்ச்சை எழவில்லை!

இது ஒரு உண்மை சம்பவம்! இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களையும், அதை பதிவு செய்தவரையும் எஸ்ராவுக்கு நன்கு தெரியும். ‘இந்த உண்மை சம்பவத்தையே நான் கதையாக்கி விட்டேன்’ என ஒப்புக் கொள்ள மறுத்து, அவர் ஓடி ஒளிவதே தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இந்த சர்ச்சையின் நாயகனான எழுத்தாளரும், தொழிற்சங்கவாதியுமான தோழர். மாதவராஜை தொடர்பு கொண்டு பேசினேன்.

அயோத்தி படம் பார்த்து விட்டேன். தீராத பக்கங்களில் – 2011ல் நான் எழுதிய உண்மை சம்பவப் பதிவு தான் மூலக்கதை. அது படத்தில் அப்படியே இருக்கிறது. அயோத்தி திரைப்படம் யாருடைய ‘கதை’யும் அல்ல. உண்மை நிகழ்வு. ராமேஸ்வரம் வந்த வட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கி தவித்துப் போய் நின்ற போது எங்கள் வங்கியின் சங்கத் தோழர்கள் செய்த மனிதாபிமான உதவி அது. படத்திற்கு நான் எழுதிய பதிவே அச்சாணி என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

எஸ்.ராமகிருஷ்ணன், மாதவராஜ்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை அவருடைய கல்லூரி நாட்களிலிருந்தே பழக்கம். நான் மிகவும் மதிக்கிற, சாத்தூரில் இருக்கிற மருத்துவர் வெங்கடாசலம் அவர்களின் தம்பி அவர். நல்ல சினிமா. நிச்சயம் பாராட்டலாம். வரவேற்கலாம். படத்தை இன்னும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் எடுத்து இருக்க முடியும்.

அதில் நேரடியாக பங்கு பெற்ற இரண்டு தோழர்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உயிரோட்டமாய் முதன் முதலில் எழுத்தாக செப்டம்பர் 2011ல் ஆவணப்படுத்தியதும், ஒரு கதை போல எழுதியதும் நான் தான்!

இராமேஸ்வரம் வந்த வடநாட்டுக் குடும்பம் கார் விபத்தில் விபத்தில் சிக்கினர், அந்த குழந்தைகளின் அம்மா இறந்து போனார்! நிலமும் மொழியும் வேறான மதுரையிலிருந்து அந்த குடும்பத்தை கடும் சிரமங்களுக்கு இடையே, எந்த எதிர்பார்ப்புமின்றி , மனித நேயத்துடன் விமானத்தில் எப்படி அனுப்பி வைத்தனர் என்னும் மையக்கதை அப்படியே இருக்கிறது.

திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. பீகாரில் இருந்து வந்தவர்களாக குறிப்பிட்டு இருந்தேன். அதை அயோத்தியாக மாற்றி இருக்கிறார்கள். ஒரு கிராம வங்கி ஊழியராக பாதிக்கப்பட்டவரைச் சொல்லி இருந்தேன். சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிய ஒரு சங்கியாக அந்த வட இந்திய மனிதரை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு மகள்களும், ஒரு மகனும் என பதிவு செய்திருந்தேன். ஒரு மகளும், மகனும் என காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிய தமிழ்நாட்டு மனிதர்களாக எங்கள் வங்கியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜோதிக்குமாரையும், சுரேஷ் பாபுவையும் குறிப்பிட்டு இருந்தேன். இதில் விபத்துக்குள்ளான கார் டிரைவரின் நண்பனான சசிக்குமாரும் இன்னொருவரும் உதவுவதாக சித்தரித்து இருக்கிறார்கள்.

உண்மை சம்பவத்தின் கதாநாயகர்கள்!

ரம்ஜான் பண்டிகை மற்றும் மங்காத்தா பட ரிலீசை ஒட்டிய ரசிகர்களின் கொண்டாட்டங்களாய் வெளியுலகம் இருந்ததை குறிப்பிட்டு இருந்தேன். இதில் தீபாவளி கொண்டாட்டங்களாய் காட்டி இருக்கிறார்கள்.

பதிவின் இறுதியில், உதவி செய்த சாமுவேல் ஜோதிக்குமாரையும், சுரேஷ் பாபுவையும், கையெடுத்துக் கும்பிட்டு, “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? ” என அந்த வடநாட்டு மனிதர் பேசுவதாக எழுதியிருந்தேன். மனிதாபிமானத்தின் மகத்துவத்தை அப்படி உணர்த்தி இருந்தேன். படத்தில் “தம்பி, உங்க பேர் என்ன?’ என கேட்பார். உதவி செய்த சசிகுமார், “மாலிக்’ என சொல்வார்.

இந்தக் கதை தன்னுடைய கதை என எழுத்தாளர் எஸ்.ரா பதிவிட்டு இருக்கிறார். படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தியையும், நிழல் நாயகன் சசிகுமாரையும் ஆகா, ஓகோ என புகழ்ந்து எழுதி தள்ளியுள்ளார் எஸ்ரா! இது குறித்து ஏற்கனவே எழுந்த சர்ச்சைகளும் எனக்கு தெரிய வந்தன. ஃபேஸ்புக்கில் என் பதிவிலும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.

அவைகளிலிருந்து, குறிப்பாக திரைக்கதை எழுதிய சங்கர் தாஸ் பதிவின் வழியாக எனக்கு உண்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

சங்கர் தாஸ் அவர்களிடம் அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி இரண்டு பக்க கதை ஒன்றை கொடுத்து இது எஸ்.ராவின் கதை, இதற்கு திரைக்கதை வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். அதில் பீகார் என்பதை அயோத்தி என நான் மாற்றினேன் என சங்கர்தாஸ் சொல்கிறார்.  நான் எழுதிய பதிவில் பீகாரைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டு இருந்தேன். ஆக, எஸ்.ராவின் கதை என கொடுக்கப்பட்டதில் பீகார் என்றுதான் ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. இதற்கு மேல் நடந்தவைகளைச் சொல்ல என்ன வேண்டி இருக்கிறது?

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதுரை தோழரான சுரேஷ்பாபு எழுத்தாளர் எஸ்.ராவிடம் இரண்டு நாட்களாக வாட்ஸ் அப்பில் அனுப்பிய பதிவுகளை எனக்கு ஷேர் செய்திருந்தார். தனது கதை என எஸ்.ரா குறிப்பிட்டு இருந்ததை மறுத்து, உண்மைகளை எடுத்துரைத்துள்ளார்.  மாதவராஜ் அப்போதே இது குறித்து எழுதி இருக்கிறார் என அவரிடம் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், அவருக்கு பதில் அளிக்காமல் கமுக்கமாக இருந்துள்ளார் எஸ்.ரா. எனக்கு அது தான் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்தது.

எஸ்ரா தன் மனைவி சந்திரபிரபாவுடன்!

எஸ்.ராவின் மனைவி சந்திர பிரபா ராமகிருஷ்ணன் என் முகநூல் பதிவில், ”இது யார் கதையும் அல்ல..” என போட்டு இருந்தார்! அதற்கு கீழ் நான், ”இது யார் கதையும் இல்லை என்றால், எஸ்ராவின் கதையும் இல்லை என்றாகிறது! உண்மையை நீங்களே ஒத்துக் கொண்டதற்கு நன்றி” என பதிவிட்டேன். உடனே வேகமாக அதை அழித்துவிட்டார். எஸ்ரா தனக்கென்று முகநூல் பக்கத்தை வைத்துக் கொள்ளாமல், மனைவியின் முகநூல் பதிவில் எழுதி வருகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும்.

சார், நாங்க பணத்தையா எதிர்பார்த்தோம், இல்லை! அது உண்மை சம்பவம். இதோ இவர்கள் தான் அதில் சம்பந்தப்பட்டவர்கள்! அந்த அனுபவத்தை எழுதியவர் இன்னார். இதை படித்த உந்துதலில் தான் இந்தக் கதையை எழுதினேன் என்ற உண்மையைச் சொன்னால் போதும், அந்த அங்கீகாரமே போதும், நாங்கள் மகிழ்வோம்!’’ என்றார்.

மாதவராஜுன் ஆதங்கம் தொடர்பாக விளக்கம் பெற எழுத்தாளர் எஸ்ரா அவர்களை 9444045947 என்ற எண்ணுக்கு மூன்று முறை தொடர்பு கொண்டேன். அவர் போன் எடுத்து பேச முன் வரவில்லை. ஆகவே, அவரது விளக்கத்தை நம்மால் பிரசுரிக்க முடியவில்லை.

நடந்த ஒரு சம்பவத்தை உயிப்புடன், உருக்கமாக மாதவராஜ் பதிவு செய்ய, அதையே சிற்சிறிய மாற்றங்களுடன் இரண்டு பக்க சிறுகதையாக்கி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு உண்மை சம்பவம் கதை எழுத தூண்டுதலாக இருப்பது இயல்பே! அது குற்றமும் அல்ல! இந்த இரண்டு பக்க கதைக்கு எட்டு லட்ச ரூபாய் சன்மானம் பெற்றுள்ளார் எஸ்ரா! இதுவும் நமக்கு மகிழ்ச்சியே! பத்து லட்சம் வாங்கி இருந்தாலும் மகிழ்ச்சியே!

ஆனால், எந்த உண்மை சம்பவத்தின் பாதிப்பும், யாருடைய உன்னத மனிதாபிமானமும் அவருக்கு கதை எழுதவும், திரைப்படம் எடுக்கவும் காரணமோ… அவர்களை நன்றியுடன் அங்கீகரிப்பதில் என்ன பிரச்சினை? அது அவரது கடமை அல்லவா? இந்த திரைப்படத்தால் தனக்கு கிடைக்கும் பேர், பணம், புகழ் அனைத்திற்கும் ஆதாரமான தோழர்கள் இவர்களே என ஒத்துக் கொள்வதில் என்ன குறைந்துவிடப் போகிறார் ? படத்தின் முடிவில் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய கதாநாயகர்களின் புகைப்படங்களை போட்டு கார்டு போட்டிருந்தால் அது எவ்வளவு பெருமைக்குரிய விஷயமாக இருந்திருக்கும்.

அதைப் பார்க்கும் மக்களுக்கும் நாமும் இவர்களைப் போல மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கவும் வாய்ப்புள்ளது! இதை மறைத்துவிட்டு, தற்போது ஓடி ஒளிவது ஒரு எழுத்தாளனுக்கு பெருமையா? என எஸ்ரா யோசிக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time