ஜெயமோகனோடு வெற்றிமாறன் ஒத்துப் போகிறாரா..?

-பீட்டர் துரைராஜ்

ச.பாலமுருகனின் பிரபலமான சோளகர் தொட்டி நாவலின் மையக் கருவிலிருந்து தான் விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது! அப்படி இருக்க, ஏன் இந்துத்துவ தேசிய அரசியலைப் பேசும் ஜெயமோகனுக்கு அங்கீகாரம் தருகிறார் தமிழ் தேசக் கருத்தியலைப் பேசும் வெற்றிமாறன்?  சினிமா விமர்சகர் முகமது இல்யாஸுடன் நேர்காணல்.

‘இந்து தேசியம் இந்திய சினிமா’ என்ற நூலை  எழுதிய ரா.முகமது இல்யாஸ் நுட்பமான சினிமா விமர்சகர்.

சென்னை ஐஐடியில் ‘ தமிழ் சினிமா, வெகுமக்கள் கலாச்சாரம்’ குறித்த  ஆய்வு மாணவர். ‘Read between lines’ என்ற இணைய இதழின் ஆசிரியர். சமீபத்தில் நடந்த இவரது  திருமணத்தில், மணமகளுக்கு மஹராக 101 புத்தகங்கள் வழங்கப்பட்டன  என்ற செய்தி பிரபலமானது.  கவனிக்கப்படக் கூடிய வளர்ந்து வரும் முக்கிய விமர்சகராக தெரிகிறார். சமகால திரைப்படங்கள், தொடர்கள், ஊடகங்கள்  குறித்து இந்த நேர்காணலில் அலசுகிறார்.

ர. முகமது இல்யாஸ்

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படம் வெளிவந்துள்ளது. ‘சோளகர் தொட்டி’  நாவலில் வரும்  காட்சிகள் இந்தப்படத்தில் வருகின்றன என்று கூறியிருக்கிறீர்களே ?

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழர்களின் மனதில் நிலைபெற்று விட்டது. அதனையொத்த ஒரு சில சம்பவங்கள் ‘பத்து தல’ படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல மகாபலிபுரம் கூவத்தூர் பங்களாவில் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த அரசியல் நிகழ்வை வைத்து ஓரிரு படங்கள் வெளிவந்துள்ளன. மக்களின் கூட்டு நினைவில் ஓரிரு நிகழ்வுகள் பதிந்துவிடும். எனவே அதைப்பற்றிய படங்கள் வெளிவரும். அப்படி ஒரு படம் தான் விடுதலை. இதில் உள்ள  பல காட்சிகள் சா.பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி  நாவலை ஒத்தவை.  விடுதலை படத்தின் பேசு பொருள், சம்பவங்கள் என அனைத்தும் சோளகர் தொட்டி நாவலை ஒத்தவை. தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களைதான் புனைவாக சா.பாலமுருகன் எழுதியுள்ளார். வெற்றி மாறன் நல்ல வாசிப்பாளர். இந்த நாவலை அவர் படிக்காமல் இருந்திருக்க முடியாது. எனவே, அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து இருக்க வேண்டும். நான் மட்டுமல்ல, சோளகர் தொட்டி நாவலை வாசித்த பலரும் இதையே சொல்கின்றனர்.

ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை வைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். அந்தச் சிறுகதையையும் நான் படித்துவிட்டேன். அது  புனைவு. இடதுசாரிகளை அதில் மோசமாக சித்தரித்துள்ளார். நெருக்கடி தாங்க முடியாமல் காவல்துறையினர் கொடூரமாக நடக்கிறார்கள் என்று அவர்களை மனிதாபிமானமுள்ளவர்களாக காட்டி இருப்பார். ஜெயமோகன் இந்து தேசிய அரசியலை பகிரங்கமாக பேசுபவர். இவரை ஏன் தமிழ்த்  தேச கருத்தியலை பேசும் வெற்றிமாறன் முன்னிருத்த வேண்டும்…? இதன் விளைவு என்னவாக இருக்கும் என்றால், சோழர் வரலாறு பேசும் பொன்னியின் செல்வன் என்றாலும், விடுதலை போன்ற  படம் என்றாலும் ஜெயமோகன்தான்  வருங்கால தலைமுறையினருக்கு அடையாளம் காட்டப்படுவார்.  இது சரியல்ல.

விடுதலை  பார்க்க வேண்டிய ஒரு  படம்தான்.  வெற்றிமாறனின் முந்தைய படங்களை விட இது தொழில்நுட்ப ரீதியிலும் நன்றாக உள்ளது. டெல்லி அதிகார எதிர்ப்பை கேள்வி கேட்பதால் ரசிகர்களையும் ஈர்க்கிறது.

தமிழில் தொலைக்காட்சி தொடர்கள் கூட்டுக் குடும்பங்களை மையமாக வைத்து வருகின்றனவே?

சந்தைப் படுத்தலைப் பொறுத்துத் தான் கதைகள் வரும். ஆங்கிலப் படங்களுக்கு உலகம் முழுவதும் சந்தை இருக்கிறது. அங்கு விதவிதமான வகைகளில் (Genre) தொடர்கள் வருகின்றன. எனவே ஆங்கிலத் தொடர்களோடு தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களை ஒப்பிடக்கூடாது. என் அம்மா ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் கூட தொலைக்காட்சி பார்ப்பார். அவருக்கு கூட்டுக்குடும்பம் என்பது ஒரு ஏக்கமாக உள்ளது. எனவே, இதுபோன்ற தொடர்கள் வருகின்றன. இதனை நாம் தவறாகப் பார்க்க வேண்டியதில்லை.

90 களில் வந்த இளைஞனுக்கு காதல், கல்லூரி குறித்த ஏக்கம் உள்ளது. அதனால்தான் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தை இளைஞர்கள் விரும்பினார்கள். நல்ல சீரியல்கள் வரத் தொடங்கி உள்ளன. குற்றங்களை வைத்து வெளியான ‘விலங்கு’ நல்ல தொடர்தான். ஜியோ தொலைபேசி வந்த பிறகு யூ டியூப் பார்ப்பவர்கள் அதிகரித்தனர். யூ டியூப் நிகழ்ச்சிகளை உருவாக்குபவர்களும் அதிகரித்தனர். செல்பேசி வழியாக படம் பார்ப்பது அதிகரித்தது. இதனை ‘ஜியோ விளைவு’ என்கிறோம்.

வெற்றிமாறன் தலைமையில் உருவான  ‘பேட்டைக்காளி’ ஜல்லிக்கட்டை வைத்து ஜீ தொலைக்காட்சியில் வந்த ஒரு நல்ல தொடர். ஜீ 5 ல் எஸ். ஆர்.பிரபாகரன் இயக்கிய ‘செங்களம்’  தொடரும் நன்றாக இருக்கும். இவர் தேவர் சமூகத்தை நல்லவிதமாக சித்தரித்து ‘சுந்தர பாண்டியன்’ போன்ற படங்களை இயக்கியவர். சாதி பற்றி இருந்தாலும், கதை மண்சார்ந்து வருகிறது. நிறைய  தொடர்களை இயக்க, முக்கியமான இயக்குநர்களோடு ஒப்பந்தம் ஆகியிருக்கிறது. பார்ப்போம்.

திரைப்படங்கள் இசுலாமியருக்கு எதிராக ஒரு மனநிலையை உருவாக்கி வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

தலித்துகளை வில்லன்களாக, மோசமான இடத்தில் குடியிருப்பவர்களாக திரைப்படங்கள் சித்தரிக்கின்றன. அது போல பெண்களை காட்சிப் பொருளாக காட்டுகின்றனர். பழங்குடி மக்களை கண்காட்சி (exotic)  போல காட்டுகின்றனர். அதைப் போல இசுலாமியர்கள்  தீவரவாதிகளாக காட்சிப்படுத்தப்படுகின்றனர். விசுவரூபம் என் வாழ்வில் ஒரு முக்கியமான படம். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு அல் கொய்தா தீவிரவாதி கோவையில் பயிற்சி எடுப்பது போல, அந்தப் படத்தில் காட்டி இருப்பார்கள். அப்போது எனக்கு 17 வயது. கோவையில் படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு பள்ளி மாணவனாக எங்களைப் போன்றவர்களுக்கு அந்தப்படம் எத்தகைய மன அழுத்தத்தை  கொடுத்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். அந்தப் படம் குறித்து மாணவர்களாகிய  எங்களுக்குள் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியாகத்தான் நான் ஊடகத்துறைக்கே வந்தேன் . இது வந்த வருடம் 2013.

அதே போல விஜய் நடித்த பீஸ்ட் படமும் இசுலாமிய வெறுப்பை கக்கும் படம்தான். இது வந்தது 2022. இடைப்பட்ட காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருசில கதாநாயகர்கள் பொறுப்புணர்ந்து இது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார்கள். சிம்பு நடித்த மாநாடு படத்தில்  முஸ்லிம் கதாநாயகன். இது இசுலாமியர்களை நன்றாக காட்டுகிறது. கேரளாவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கான சந்தை  அங்கு இருக்கிறது. முஸ்லிம்கள் தயாரிப்பாளர்களாகவும் இருக்கின்றனர். ‘நசீர்’ என்ற படம் சமீபத்தில் வந்துள்ள நல்ல படம்.

வட இந்திய ஊடகங்கள் தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்வதற்காக இசுலாமிய வெறுப்பை காட்டுகின்றன என்று உங்கள் நூலில் கூறியிருக்கிறீர்களே ?

உலகம் முழுவதும் உண்மைக்கு மதிப்பு கொடுப்பதில்லை; மாறாக உணர்வை மையப்படுத்திய செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்கு இடதுசாரிகளும் பலியாகி, விவாதத்தை அதன் போக்கில் நடத்துகிறார்கள். பார்ப்பன கருத்தியலை முன்வைத்து பெரும்பான்மை அரசியலுக்கு உதவி செய்யும் தினமலரின் அரசியல் அனைவருக்கும் தெரிந்துதான். தமிழ் இந்துவும் அதே பாணியில் நாசுக்காக அதே அரசியலைச் செய்கிறது. பல காட்சி ஊடகங்களும் இப்படித்தான் இருக்கின்றன.

இசுலாமியர்கள் திரைப்படங்களை புறக்கணிக்கிறார்கள் என்று கூறுகிறீர்களே ?

பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள்; கெட்டவர்களை கதாநாயகனாக காட்டுகிறார்கள்;  பொழுதுபோக்கு தேவை இல்லை என்று சொல்லி திரைப்படம் பார்ப்பதை முஸ்லிம்கள் தவிர்த்தார்கள். ஆனால், இப்போது கண்ணோட்டம் மாறி வருகிறது. சில இசுலாமியர்களும் தயாரிப்பாளர்களாக வருகிறார்கள்.  நல்ல படங்களும் வருகின்றன. ’பொம்மை நாயகி’ இயக்குநர் ஷான் இஸ்லாமியர் என்பதால், எளிதில் ஒரு இயல்பான இஸ்லாமிய கதாபாத்திரத்தை, தலித் கதாநாயகன் இருக்கும் படத்தில் சேர்த்திருக்கிறார்.

முஷின் பராரி, தள்ளுமாலா

முஷின் பராரி எழுதிய  ‘தள்ளுமாலா’ படம் நன்றாக இருக்கும். இது வடக்கு கேரளாவில் நிலவும் ஆண் மையவாதத்தை சுட்டிக்காட்டும் படமாகும். முகமது சக்கரியா நன்றாக எழுதுகிறார். தாயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவர் இயக்கிய   ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ என்ற படம் கேரள இளைஞர்களும், கறுப்பின இளைஞர்களும் கால்பந்தாட்டம் ஆடுவது பற்றிய படம். இதில் தாயாரின் மறுமணம் பற்றியும் அழகியலோடு சொல்லப்பட்டிருக்கும். ‘ஹலால் லவ் ஸ்டோரி’யில் ‘கோக்’ குடிக்காதவன், விவாகரத்தான/ குடிப்பழக்கம் உள்ளவர் என பலதரப்பட்ட முஸ்லிம்களை வெகு யதார்த்தமாக காட்டியிருப்பார்கள். பல முஸ்லிம் இளைஞர்கள் ஆர்வமாக என்னிடம் திரைப்பட ஆக்கம் குறித்து பேசி வருகிறார்கள். இப்படி நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இடதுசாரிகள் பற்றிய படம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ?

சமூக ஊடகம் மக்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் ஜனநாயக வெளியாக மாறியிருக்கிறது. இதில் பலரும் முற்போக்காக இயங்கினாலும், பலரிடையே முற்போக்கு பாவனை மட்டும் இருக்கிறது. இந்த முற்போக்கு அரசியலுக்கும், பாவனையான முற்போக்கிற்கும் இடையில், சமகாலத்தில் அரசியல் பேசும் அனைவருமே, நான் உட்பட, தினமும் சுயவிமர்சனம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

இதில் இருந்து சமகாலத்தில் வெளிவரும் இடதுசாரி திரைப்படங்களை மதிப்பிடுகிறேன். சமூக அதிருப்தியை இடதுசாரி கதாநாயகன் அறுவடை செய்யும் படங்களாக  ‘சகாவு’, ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ போன்ற மலையாளப் படங்கள் உள்ளன.  உண்மையில் அவர்கள் பாசாங்கான முதலாளித்துவத்தையே (Woke Capitalism) கடைபிடிக்கிறார்கள்.  இடதுசாரி இயக்குநராக அறியப்படும் ராஜூ முருகன் இயக்கிய ‘ஜிப்சி’யில், சாதி இல்லை, மதம் இல்லை, வர்க்கம் இல்லை என்று சொல்லும் கதாநாயகன், ஒரு  முஸ்லிம் குடும்பத்து பெண்ணை காதலித்து மீட்பான். அது சரியான சித்தரிப்பு அல்ல.

மேலும், இடதுசாரி சினிமா என்று கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் வரும் வெகுஜன திரைப்படங்கள் அமைப்பாய்த் திரள்வதின் அவசியத்தைப் பேசுவதில்லை. இடதுசாரி அரசியலைத் தனிநபர்வாதமாக சுருக்குகின்றனர். இதனை இடதுசாரிகள் கொண்டாடுவது அபத்தமாக இருக்கிறது. ஆனால்   ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அமைப்பாக அணி திரளுவது பற்றி நன்றாக பேசியது. அதே போல ‘விட்னஸ்’ படத்தில் கதாநாயக பிம்பம் இல்லாமல், களத்தில் இருக்கும் இடதுசாரி தோழரையே நடிக்க வைத்திருப்பார்கள்; சம்பளத்தை கேட்கும் ரோகினி, அது மறுக்கப்படும்போது சக தொழிலாளர்களோடு தரையில் அமர்ந்து போராடுவாள்.

துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய விட்னஸ்.

இப்போது வரும் திரை விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள் ?

திரை விமர்சனம் என்பது தொழில் நுட்பம், கலைப்படைப்பு, அரசியல், வெகுமக்கள் மீதான தாக்கம் என பல கூறுகளில் பேசப்படுகிறது. நல்ல படம், கெட்ட படம் என்று நான் ஒற்றை வரியில் பார்ப்பதில்லை. பரத்வாஜ் ரங்கன், ஜெய்பீம் படத்தை ஒரு cry baby ( அழும் குழந்தை) என்று வருணித்தார். அவருடைய விமர்சனங்களை கதாகலாட்சேபமாகவே நான் பார்க்கிறேன். அவர் தீவிரமான அரசியலைப் பேசுவதில்லை.

மணிரத்தினம் படங்கள் தொழில்நுட்ப ரீதியில் சிறந்து இருக்கும். ஆனால் மோசமான அரசியலைப் பேசுபவை.  சிறுபத்திரிகைகளில் வருவது போல, ஆழமான  திரை விமர்சனங்கள் பொதுத் தளத்தில் வருவதில்லை. பெண் விமர்சகர்கள், தலித்  விமர்சகர்கள் அதிகமாக இல்லை.  இப்போது இருக்கும் பெண் விமர்சகர்கள் மேல் சாதியிலிருந்து வந்தவர்கள். திரைப்படம் ‘பெண்களை ஆபாசமாக காட்டுகிறது’ என்று கூறிவிடுவதோடு நிறுத்தி விடுவார்கள்.

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் தலித் பெண் கதாநாயகப் பாத்திரமாக வருவாள். இது குறித்து பேராசிரியர் செம்மலர் சிறப்பாக எழுதியிருந்தார். {அதில் இடதுசாரி பற்றி வந்த ஒரு தவறான வசனத்தினால், அந்தப்படம் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது (Cancel culture)} கறுப்பின படங்கள் குறித்து பெல் ஹூக்ஸ் (Bell Hooks)  நிறைய விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டின் ஸ்பைக் லீ (spike Lee) என்று நான்  இயக்குநர் பா.ரஞ்சித்தை கூறுவேன். நல்ல விமர்சனம் வரும்போது, எங்களைப் போன்றவர்களின் வாதங்களும் விரிவடையும். அது திரை ரசனைக்கு, நல்ல படங்களுக்கு வழிவகுக்கும்.

ஸ்பைக்லீ, பா.ரஞ்சித்

நெட்பிளிக்ஸ், பிரைம் டிவி போன்ற தனியார் ஓடிடி தளங்கள் வரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

இத்தகைய வாய்ப்புகள் சினிமா போக்கை மாற்றி அமைத்துள்ளன. விட்னஸ் படம் ஓடிடி தளம் இல்லையென்றால் அதிகமான மக்களை சென்றடைந்திருக்காது. இத்தகைய தளங்கள் இல்லை என்றால் படைப்பாளிகளுக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்காது.  வடகிழக்கு மாநிலப்படங்கள், வங்காளப் படங்கள் என அனைத்தையும் நமது செல்போனிலேயே பார்க்கிறோமே ! முன்பெல்லாம்  இத்தகைய படங்களை திரைப்பட விழாக்களில்தான் பார்க்க முடியும். நெட்பிளிக்சில் நல்ல நைஜீரியா, பாலஸ்தீன படங்கள் உள்ளன. ஓடிடி தளங்கள் இருந்ததால் தான் ‘சேக்ரட் கேம்ஸ், பாதாள் லோக்’, போன்ற காத்திரமான அரசியலைப் பேசும் தொடர்கள் வந்துள்ளன.

‘All that breathes’ என்ற ஆவணப் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என கவலைப்பட்டிருந்தீர்கள் அல்லவா?

விருது பெற்ற Elephant Whisperers நல்ல ஆவணப்படம்தான். ஆனால்  டெல்லி முஸ்லிம் இளைஞன் ஒருவனை மையப்படுத்திய All that breathes போதுமான அளவு பேசப்படவில்லை என்பது தான் எனது ஆதங்கம். HBO  தளத்தில் வந்ததால் அதிகம் பேர் பார்க்கவில்லை என்பது ஒரு காரணம்.  ஆஸ்கார் விருது புவி அரசியலைப் பொறுத்துதான் வழங்குகிறார்கள். சர்வாதிகார அரசை எதிர்த்து ஒரு எதிர்கட்சித்தலைவர் எப்படி  குரல் எழுப்புகிறார் என்பதைப்பற்றி வந்ததால்தான் ‘Navalny’ என்ற ரஷ்ய படத்திற்கு ஆஸ்கார் விருது கொடுத்தார்கள். ஏனெனில், உக்ரேன் போர் சமயத்தில், அமெரிக்காவிற்கான அரசியலை அந்தப் படம் பேசுகிறது.

 விகடனில் இருந்து ஏன் வெளியேறினீர்கள்?

விகடனில் மாணவப் பத்திரிகையாளராக இருந்து செய்தியாளராக தேர்வாகியதைத் தொடர்ந்து  இரண்டரை ஆண்டுகாலம் விகடனில் பத்திரிகையாளராக இருந்தேன். ர.முகமது இல்யாஸ் என்ற என் சொந்தப் பெயரை கைவிட்டு வேறு பெயரில் கட்டுரை எழுதச் சொன்னதை  அவமரியாதையாக உணர்ந்தேன். எனது எழுத்தும், கருத்தும், உழைப்பும் வேண்டும்; ஆனால் பெயர் வேண்டாம் என்பது எப்படி சரியாக இருக்கும்.  என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறியதை பெரும்பான்மைவாதத்தின் நீட்சியாக பார்க்கிறேன். இந்த நிகழ்வால் அந்த காலகட்டத்தின் அரசியலைப் புரிந்து கொண்டதோடு, என் மன ஆரோக்கியத்தைக் காப்பாற்றவும், சுயமரியாதையை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலும் விகடன் நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன்.

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time