வசதியானோருக்கு மட்டுமே இங்கு வாழும் உரிமையா?

-ஹரி பரந்தாமன்

கடற்கரை நகரமான சென்னையின் பூர்வீகக் குடிகள் என்றால், அது மீனவர்களே! ஆனால், சிங்காரச் சென்னையின் பெயரால் மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்து கிறார்கள்!  கடற்கரை லூப் சாலையின் மீன் கடைகளை அதிரடியாக அகற்றிய நடவடிக்கை சொல்ல வரும் செய்தி என்ன..?

சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதி முழுவதும் மீனவர் குப்பங்களாக ,அவர்கள் வாழ்விடமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த மீனவ குப்பங்களுக்கு மேற்கே விவசாய கிராமங்கள் இருந்தன.

தொழில் வளர்ச்சி என்பதன் பெயரால் சென்னை நகரத்தின் கடற்கரையை ஒட்டி தொழிற்சாலைகளும் ,துறைமுகங்களும் , அனல் மின்சார உற்பத்தி நிலையங்களும் வந்தன. குறிப்பாக வட சென்னையில் மிகப்பெரும் பாதிப்பை இதனால் மீனவ மக்கள் சந்தித்தனர். கொசஸ்தலை ஆறே காணாமல் போய்விடும் அளவில் அனல் மின் நிலையங்களும், தொழிற்சாலைகளும், காமராஜ் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகமும் மீனவ மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பத்தை உண்டாக்கி விட்டது. அவர்கள் வாழ்விடங்களில் இருந்து கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வாழ்வதற்கான ஆதாரமே கடல்தான். கடலில் இருந்து அவர்கள் பிரிக்கப்பட்டனர். அந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதையும் எந்த அரசும் செய்யவில்லை.

அன்றைய தினம் ஆசிய வங்கி மிகப் பெரிய அளவில் நிதி உதவி செய்ய முன்வந்தது. அதற்கு முன் நிபந்தனையாக மெரினா கடற்கரையை அழகு படுத்தக் கூறியது. படகுகள், மீன் வலைகள் கடற்கரையின் அழகை கெடுக்கின்றனவாம். உண்மையில் மீன் வலைகளும் மீனவர்களின் படகுகளும் தான் கடற்கரையின் அழகுக்கு அழகு சேர்ப்பது. ஆனால், அன்றைய முதல்வாராக இருந்த எம்.ஜி.ஆர், ”சென்னையை சிங்கார சென்னையாக மாற்றப் போகிறேன்” என்றார்!

மீனவ நண்பனாக நடித்து தமிழ்நாட்டின் முதல்வராக ஆன எம் ஜி ஆர் ஒரு நாள் அதிரடியாக 10,000 கவல்துறையினரை களத்தில் இறக்கி. மெரினா கடற்கரையில் இருந்த மீனவர்களின் படகுகள் மற்றும் மீன் வலைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் கொதித்தெழுந்து போராடினர். ஒரு சிலர் இந்த அறிவிப்பை எதிர்த்து தற்கொலை செய்து கொண்டனர். நீதிமன்றங்களை நாடினர். இப்படி தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு அமைதியான முறையில் மீனவர்கள் போராட்டம் செய்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போராடடிக் கொண்டிருந்த மீனவ மக்கள் மேல் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி  1985ல் துப்பாக்கிச் சூடு நடத்தியது எம்ஜிஆர் அரசு. அதில் ஐந்து மீனவர்கள்  இறந்தார்கள். 19 பேர் படுகாயமுற்றனர். இன்னும் கூட உயிர்கொடுத்து போராட மீனவ மக்கள் வீறுகொண்டெழுந்தனர். அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் கண்டு மிரண்ட எம்.ஜி.அரசு, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் அராஜகத்தை நிறுத்தி வைத்தது.

சென்னை சென்ட்ரல் ஸ்டேசன் அருகே ‘மூர் மார்க்கெட்’ என்ற ஒரு பிரம்மாண்ட சந்தை இயங்கி வந்தது. அங்கே பழங்காலத்து அரிய கலைப்  பொருட்கள் தொடங்கி பழைய புத்தகங்கள் வரை கிடைக்கும். ‘கிடைக்காத பொருளே இல்லை’ எனச் சொல்லும் அளவுக்கு திகழ்ந்தது. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த மூர்மார்க்கெட் அருகே  உள்ள நேரு ஸ்டேடியத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தலாம் என திட்டமிட்ட நிலையில், அங்கே இருந்த மூர்மார்க்கெட் ஆதிக்க சக்திகளின் கண்களை உறுத்தியது. அவர்கள், எம்.ஜி.ஆர் அரசுக்கு தந்த நெருக்கடியால் வியாபாரம் செய்து வந்த ஏழை எளிய மக்களை அரசு அப்புறப்படுத்தி தூக்கி எறிய எத்தனித்தது. அப்போது நீதிமன்றத்தை நாடிய ஏழை, எளிய வியாபாரிகளுக்கு ஆதரவாக அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து உத்தரவு போட்டார் அன்றைய உயர் நீதிமன்ற நீதிபதி ஜே. கனகராஜ் !

இந்தச் சூழலில் தான் மே 30, 1985 ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவு பழம் பெருமை வாய்ந்த மூர்மார்க்கெட் தீப்பற்றி கொழுந்துவிட்டு எறிந்தது. இது தீ விபத்தா? அல்லது சதிச் செயலா? என்பதற்கான உண்மையான காரணம் இன்று வரை கண்டறியப்படவில்லை.

கலங்கரை விளக்கிற்கும், பட்டினப்பாக்கத்திற்கும் இடையே கடற்கரையை ஒட்டி தற்போதிருக்கும் சாலை சமீப காலத்தில் உருவானது. சந்தோம் சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் போது குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்வதற்காக மீனவத் தெருவாக இருந்தது சாலையாக மாற்றப்பட்டது. உண்மையில் தங்கள் குடியிருப்புகளை ஒட்டிய இந்த சாலையின் வாகனப் போக்குவரத்து, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் செய்த போதிலும். அவர்கள் சகித்துக் கொண்டனர். இச்சாலை பின்னர் கூடுதல் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு சாலையும் விரிவுபடுத்தப்பட்டது.

தங்களின் வெளியேற்றத்தை எதிர்த்து மீன்களை சாலையில் கொட்டி போராடிய பெண்கள்

இங்கே பன்னெடுங்காலமாக  மீனவப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மீன் கடைகளை வைத்திருந்தனர். ஆண்கள் கடலில் மீன் பிடித்து வந்தவுடன் அந்த மீன்கள் இந்த கடைகளில் பிரஷ்சாக விற்பனைக்கு வந்துவிடும். இது தென் சென்னை வாசிகள் தரமான மீன்களை வாங்கிக் செல்லும் இடமாக திகழ்கிறது.

ஒரு மரப் பெஞ்சு, ஒரு நாற்காலி! மேலே சிறிய துணிக் குடை! இவ்வளவே இவர்களது கடை! திறந்த வெளியில் வானமே கூரையாக அமர்ந்திருப்பார்கள்! அதாவது, இவர்களுக்கு வெயிலில் இருந்தும் மழையிலிருந்தும் எந்த பாதுகாப்பும் கிடையாது. இப்படிப்பட்ட ஏழ்மை நிலையில், இவர்களின் வாழ்வாதார ஜிவிதம் காலம்காலமாக நடந்தது!

இந்த மீன்  கடைகள் அந்தக் கடற்கரை சாலைக்கு தற்போது ஆக்கிரமிப்பாகிவிட்டதாம். இந்த மீன் கடைகளும், மீனவப் பெண்களும் ஆக்கிரமிப்பாளர்களாம்.   இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் , சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்து அந்த சாலையில் பயணம் செய்வதற்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் ஒருவர் பொதுநல வழக்கு என்ற பெயரில் ஒரு வழக்கைபோடுகிறார் சென்னை உயர் நீதிமன்றத்தில்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் எஸ். எஸ் .சுந்தர் மற்றும் ஆர்.பாலாஜி அமர்வு மேற் சொன்ன மீன் கடைகளை எந்த கால அவகாசமும் இன்றி உடனடியாக அப்புறப்படுத்துமாறு ஏப்ரல் 11, 2023 அன்று உத்தரவிட்டது.

உத்தரவை நிறைவேற்றிய விபரத்தை 18 ஏப்ரல்  2023 அன்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று  மனிதாபிமானமற்ற ஒரு உத்தரவை அளித்துள்ளது.

மீன் கடைகள் அகற்றத்தை எதிர்த்து நடு சாலையில் படகை நிறுத்தி உட்கார்ந்து போராடும் மீனவப் பெண்கள்.

அரசின் சார்பில் வழக்காடிய வழக்குரைஞர் ரவீந்திரன் , அங்கே கடற்கரை சாலையை ஒட்டி மீன் அங்காடி ஒன்று  ஆறு மாதங்களில் கட்டப்பட்டு விடும் என்றும் ,அதற்கு பின்னர் இந்த மீனவ  பெண்கள் அங்கே மீன் வியாபாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் எடுத்துரைத்தார். காலம் காலமாக மீன் வியாபாரம் செய்யும் இவர்கள் மேல் கருணை கொண்டு ஆறு மாதத்திற்கு மட்டும் இங்கே சாலை ஓரத்தில் மீன் வியாபாரம் தொடர அனுமதிக்க வேண்டினார். இந்த ஆறு மாத காலங்களில் அரசு கூடுதல் நடவடிக்கை எடுத்து சாலையை பராமரித்து போக்குவரத்திற்கு சிரமம் இல்லாமல் அப்பகுதியில் ஏற்பாடு செய்வதாகவும் எடுத்துரைத்தார்.

இந்த வாதங்களை செவிமடுக்க நீதி அரசர்கள் தயாராக இல்லை . மீன் கடைகளை நடத்தும் இந்த மீனவ பெண்கள் “ஆக்ரமிப்பாளர்கள்” என்று உறுதி பட கூறினார்கள். ஆறு மாதங்களோ அல்லது அதற்கு குறைந்த அளவிலான கால அவகாசமும் கூட இல்லாமல் ஒரு வாரத்தில் அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்கள். இந்த ஆக்கிரமிப்பால் சிங்கார சென்னையின் அழகு கெட்டு விட்டதாக வேறு புலம்பித் தீர்த்தார்கள்.


எது அழகு என்பது அவரவர்கள் பார்வையில் மாறுபடும். கடற்கரை ஓரம் மீனவர்கள் வசிக்கும் குப்பத்திற்கு அருகில் சாலை போட்ட ஆக்கிரமிப்பாளர்கள் நாம்தான்.

கடந்த இரு நாட்களாக ஏழை மீனவ பெண்கள் நடத்தி வந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன! அசுர வேகத்தில் செயல்பட்டது அரசு. மறுபரிசீலனை மனுவோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்ற நிலையோ, ஏனோ அரசு எடுக்கவில்லை. சட்டங்களையும், விதிகளையும் மீறி கடற்கரையை ஒட்டி மிகப்பெரும் செல்வந்தர்கள் பங்களாக்கள் கட்டி வசித்து வருகின்றனர்; இதே போல பல தொழில் கூடங்களும் இயங்கி வருகின்றன. இவைகளையெல்லாம் அகற்ற நீதிமன்றம் முன் வருமா? நீதிமன்றம் முன் வந்தாலும் அரசு அந்த உத்தரவுகளை செயல்படுத்துமா? அதுவும் மின்னல் வேகத்தில் மீனவ மக்களுக்கு எதிராக செயல்படுத்தியது போல் செயல்படுத்துமா?

இதே சாலையில் சிறிது தூரம் பயணித்தால் நீதியரசர்கள் வசிக்கும் வீடுகளும், மந்திரிமார்கள் வசிக்கும் வீடுகளும் வரும். அந்தப் பகுதியையும் அடையாறு ஆலமரத்தை ஒட்டிய பகுதியையும் இணைத்து அடையாறு ஆற்றையும்  கடக்கும் ஒரு அகலமான சாலையை போட்டால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் என்று அரசு நினைத்தது. இதற்காக அரசின் இரண்டு ஏக்கர் நிலம் அங்குள்ள சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்தின் ஆளுகைக்குள் உள்ளது. அதனை திரும்ப அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் புதிய அகலமான சாலை அமைப்பதற்கு அந்த அரசின் நிலம் வேண்டும் என்றும் அரசு கோரியது. உடனடியாக  சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் தடை கொடுத்தது. இதுவும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி தான்.

அடையாறு திரு வி க பாலத்தை நடந்தவுடன், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் இருப்பதை அப்பகுதி வழியாக செல்லும் அனைவரும் அறிவர். சத்யா ஸ்டுடியோவிற்கு தரப்பட்ட நீதி, மீனவப் பெண்களுக்கு ஏன் கிடைக்கவில்லை?


காங்கிரஸ்காரரும், வழக்குரைஞருமான பசுபதி தனராஜ் சட்டக்கல்லூரியில் மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது ,1970 ஆம் ஆண்டை ஒட்டிய காலத்தில் நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அவரை அமைந்தகரை பகுதியில் வேட்பாளராக நிற்குமாறு காமராஜர்  கேட்டுக் கொண்டார். ”நான் நாமக்கல்லைச் சேர்ந்தவன் ஆயிற்றே, சென்னைவாசி இல்லையே” என பசுபதி தனராஜ்  தெரிவித்தாராம். அப்போது காமராஜர் அவர்கள் அளித்த பதில், ”நம்மை போன்ற இங்குள்ள சென்னைவாசிகள் பெரும்பாலோர் வந்தேறிகள் தானே!” என்பதாகும். இந்த பதிலை காமராஜர் அவர்கள் அளித்தவுடன் தான் பசுபதி தனராஜ் அவர்கள் தேர்தலில் நின்று கவுன்சிலராக வெற்றி பெற்றார்.

வந்தேறிகளான நாம்  சென்னையின் பூர்விக குடிகளான மீனவர்களையும், மீனவ குப்பங்களுக்கு அருகில் இருந்த விவசாயிகளையும் கணிசமான அளவில் அப்புறப்படுத்தி விட்டு தான் இந்த மிகப் பெரும் சென்னையை உருவாக்கி உள்ளோம். அனால், தற்போது அவர்களை முற்றிலும் புறக்கணிக்க துணிந்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு என் நெஞ்சை உறுத்துகிறது. வசதிபடைத்தவர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மட்டுமே இந்த உலகம் படைக்கப்படவில்லை.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time