ஓபிஎஸ் நடத்தும் ஓரங்க நாடகம்!

- சாவித்திரி கண்ணன்

மத்திய அரசின் ரயில்வே மைதானத்தில் சிறப்பு அனுமதி பெற்று திருச்சியில் மாநாடு கூட்டியுள்ளார் ஒ.பி.எஸ்! மாநிலத்தில் ஆளும் திமுக அரசின் சகல ஒத்துழைப்போடும் சட்டத்திற்கு புறமாக இரட்டை இலைச் சின்னம், அதிமுக கொடியைப் பயன்படுத்தி மாநாடு காண்கிறார். திருச்சி மாநாடு சொல்லும் செய்தி என்ன?

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நடிகர் சிவாஜி என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்! ஆனால், அவர் பாவம் காமிராவின் முன்பு மட்டுமே நடிக்கத் தெரிந்தவர். நடைமுறையில் ஒரு சிறிதும் நடிக்கத் தெரியாத அப்பாவி. இதை நான் அவரை பல முறை நேரில் பார்த்தும், தொடர்ந்து பயணித்த வகையிலும் சொல்கிறேன். ஆனால், நம்ம ஒ.பி.எஸ் இருக்காரே! அய்யோடா சாமி, அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு – சாந்தமாக சிரித்துக் கொண்டு – சதிச் செயல்கள் செய்வதில் சகலகலா வல்லவர்! என்னுடைய கணிப்பில் இவர் தான் தமிழ் நாட்டின் நம்பர் ஒன் உண்மையான வில்லன்!

ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருக்கும் போதே தன் விசுவாசத்தை மோடி பக்கம் மாற்றிக் கொண்டவர் ஒபிஎஸ்! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னான அரசியல் நகர்வுகளுக்கு முன் கூட்டியே தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டவர் தான் ஒபிஎஸ்! அந்த வகையில் ஜெயலலிதா மரணச் சூழலில், பாஜகவின் நிர்பந்தத்தில் தான் ஒ.பி.எஸ் முதல்வராக்கப்பட்டார். அதாவது, அது பேருக்கு தான் அதிமுக ஆட்சி. ஆனால், உண்மையில் ஓ.பி.எஸ், பாஜகவின் முதல்வாராகத் தான் இயங்கினார். ‘தமிழக அரசு வேலை வாய்ப்புக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வை வட மாநில இளைஞர்களும் எழுதலாம்..’ என்பது உட்பட பல பாஜகவின் அஜந்தாக்களை பன்னீர் செல்வம் விசுவாசமாக நிறைவேற்றினார்.

ஒ.பி.எஸுன் மோடி உறவைக் கண்டு அஞ்சிய சசிகலா, அதிரடியாக எடுத்த முடிவு தான், ‘தானே அதிகாரத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும்’ என அவசரப்பட்டது. அது கைகூடவில்லை என்பதால், எடப்பாடியை முதல்வராக்கிச் சென்றார். எடப்பாடி பழனிச்சாமிக்கு டி.டி.வி.தினகரன் நாளும், பொழுதும் குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார். போதாக்குறைக்கு 18 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறினார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி குருமூர்த்தியின் உத்தரவுப்படி தர்மயுத்த ஸ்டண்ட் நடத்தி சீன் காட்டிய ஒ.பி.எஸ்சை அதிமுகவிற்குள் மீண்டும் நுழைத்துவிட்டது பாஜக! ”மோடி தான் என்னை துணை முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொள்ளும்படி சொன்னார்” என பன்னீரே பகிரங்கமாக சொல்லியது நினைவிருக்கலாம்.  அதிமுகவிற்கும் பெரும்பான்மையை நிருபிக்க ஒபிஎஸுன் 11 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டனர்.

அதன்பிறகான எஞ்சிய ஆட்சி காலமெல்லாம் பாஜக தலைமையிடம் தனக்கிருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தியே அதிமுகவிற்குள் ராஜாங்கம் செய்து கொண்டிருந்தார் பன்னீர் செல்வம். அதனால், ‘ஒ.பி.எஸ் என்பவர் பாஜகவிற்கு வேலை செய்வதற்காக அதிமுகவிற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆள்’ என்பது கட்சியின் அனைத்து மட்டத்திலும் ஆழமாக உணரப்பட்டது. ஆனால், அவரை இந்தக் காரணத்தைச் சொல்லி, கட்சியில் இருந்து தூக்கினால் பாஜகவின் விரோதத்தை சந்திக்க நேரும் என்பதால் படிப்படியாக காய் நகர்த்தி, தனக்கான ஒரு வலுவான அணியை உருவாக்கி வெளியேற்றினார் இ.பி.எஸ்!

ஒபிஎஸ்சை பொறுத்த வரை அவர் என்றுமே தலைமைப் பண்புக்கான தகுதியை பெற முடியாதவர்! எடுப்பார் கைப்பிள்ளை! இதை ஜெயலலிதா தெளிவாக புரிந்து வைத்திருந்ததால் தான் தற்காலிகமாக முதல்வர் பதவியை தந்து அவசர காலத்திற்கு அவரைப் பயன்படுத்திக் கொண்டார். புயலடிக்கும் நேரத்தில் குப்பைக் காகிதம் கூட பறந்து கோபுரத்தில் சில மணித்துளிகள் ஒட்டிக் கொள்வதைப் போல இருந்தவர் தான் ஒ.பி.எஸ். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை தகுதிபடுத்த அவர் ஒரு துளியளவும் முயற்சிக்கவில்லை. அப்படி முயற்சிப்பது தெரிந்தாலே, அவர் கதையை ஜெயலலிதா அன்றே முடித்திருப்பார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மக்கள் தலைவரல்ல என்ற போதும் இ.பி.எஸ், கட்சியை ஒரளவு கட்டுக்கோப்பாக கொண்டு செலுத்தும் கலையை தன்னுடைய குறைந்த காலகட்ட தலைமை பொறுப்பிலேயே கண்டறிந்து கொண்டார். அதிமுகவை அரவணைத்தே அழித்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள துடியாய் துடிக்கும் பாஜகவிடம் இருந்து பக்குவமாக கட்சியை இதுவரை இ.பி.எஸ் காப்பாற்றி வருகிறார் என்பதே என் கணிப்பு! இனி என்னாகும் எனத் தெரியாது!

ஏனெனில், ஒரு பக்கம் பாஜகவிற்கும் செல்லப் பிள்ளை, திமுகவிற்கும் செல்லப் பிள்ளை என்ற நிலையில் ஒ.பி.எஸுக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டும் பக்கபலமாக உள்ளன! உப்புச் சப்பில்லாத ஒ.பி.எஸுன் சட்டப் போராட்டத்திற்கு பின்னணி பலமாக பாஜக இருக்கிற காரணத்தினால் தான், மீண்டும், மீண்டும் மேல்முறையீடு, விசாரணை என நீண்ட இழுத்தடிப்பு நாடகங்கள்!

ஒரு கட்சியின் உயர்மட்ட அதிகார மையமான பொதுக் குழு கூடி ஒருவரை கட்சியில் இருந்து நீக்குவது என்பதையே ஒரு குற்றச் செயலாக கட்டமைக்கத் தான் எத்தனை முயற்சிகள்! மெனக்கிடல்கள்! எல்லாம் சந்தித்து ஒரு முடிவை எட்டிவிட்ட நிலையிலும் நிம்மதி பெருமூச்சுவிட முடியவில்லை.

62 உறுப்பினர்களைக் கொண்ட உண்மையான அதிமுகவிற்கு சட்டமன்ற துணைத் தலைவர் பதவி கொடுப்பதற்கு மாற்றாக, ஒ.பி.எஸூக்கு தந்து அழகு பார்க்கிறது திமுக அரசு. ”நீதிமன்றத்தின் முடிவு சபாநாயகரை கட்டுபடுத்தாது” என்கிறார் என்கிறார் அப்பாவு! அவர் சொல்லாமல் விட்டது பாஜகவின் முடிவு தான் சபாநாயகரை கட்டுப்படுத்தும் என்பது!

தேர்தல் ஆணையம், நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட ஒ.பிஎஸ் இன்று அதிமுக கொடியையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தி மாநாடு நடத்துகிறது. இதற்கு காவல்துறையில் புகார் தந்தால் நடவடிக்கை இல்லை. காரணம், இன்றைய தமிழக காவல்துறையே ஒ.பி.எஸுக்கு காவல் அரணாக உள்ளது. அதிமுக அலுவலகத்தை ரவுடிகள் புடை சூழ வந்து ஒ.பி.எஸ் சூறையாடிச் செல்லும் வரை அவருக்கு பக்கபலமாக இருந்ததும் தமிழக காவல்துறை தான்! எனக்கு புரியாத மற்றொரு புதிர் என்னவென்றால் திமுகவின் ஐ.டிவிங்கில் இருக்கும் சிலர் ஒ.பி.எஸ் புகழ்பாடுவது தான்!

இவ்வளவு தூரம் திமுகவுடன் கைகோர்த்து செயல்படும் பன்னீர் செல்வம் இன்றைக்கு திடீர் என்று திமுகவை எதிர்ப்பது போல பாவனை காட்டுகிறார். இன்றைய விளம்பரங்களில் கருணாநிதியை திட்டியுள்ளார். திமுக எதிர்ப்பை காட்டினால் தான் அதிமுக தொண்டன் தன்னை ஏற்றுக் கொள்வான், மாநாட்டிற்கு வருவான் என்பதற்காக பன்னீர் திடீர் பல்டி அடிக்கிறார்.

ஒ.பி.எஸுன் புதிர் நிறைந்த அரசியலைக் கண்டு சசிகலாவும், டி.டி.விதினகரனுமே அரருடன் கைகோர்க்க முடியாமல் சற்று அதிர்ச்சியோடு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாக இருபதாண்டுகள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சூழலைப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடிகள் சம்பாதித்து வைத்திருக்கும் ஒ.பி.எஸ் பெரும் பணத்தை அள்ளி இறைத்து பெரும் கூட்டத்தை கூட்டுகிறார். நாளிதழ்களில் பக்கம், பக்கமாக விளம்பரங்கள் வேறு! கூட்டம் சேர்ப்பவர்கள் எல்லாம் தலைவர்களாகிவிட முடியாமா? கத்துக்குட்டி அண்ணாமலையே தன் கூட்டத்திற்கு பெரிய கூட்டத்தை திரட்டி காட்டுகிறார்! ஆனால், தேர்தலில் தனித்து நின்றால் டெபாசிட் கூட தேறமாட்டார்.

தன்னுடைய பலவீனத்தை பார்த்து தன்னை கொஞ்ச நாட்களாக பாஜக அலட்சியபடுத்தி வருகிறதோ.. என அச்சப்பட்ட ஒ.பி.எஸ் இந்த மாநாட்டின் மூலம் பாஜகவின் பார்வையை தன் பக்கம் திருப்ப நினைக்கிறார். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே இது தான்! ‘மக்கள் நம்பிக்கை, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலம் ஆகியன இல்லாத நிலையிலும் அதிகார மையங்களின் அரவணைப்பு இருந்தால் போதும் அரசியல் செய்யலாம்’ என நினைக்கிறார் ஒ.பி.எஸ்!

கவுன்சிலர் தேர்தலில் நின்றால் கூட வெற்றி பெற வாய்ப்பில்லாத தன் சுயபலம் ஒபிஎஸுக்கு தெரியாமல் இருக்க முடியாது. பாஜகவை நம்பி பயணித்து, தன் சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்த அரசியல் சூனியம் தான் பன்னீர் செல்வம்! அவருடைய அரசியல் பயணம் தற்போது பாஜக பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு ஒரு பாடமானால், திமுகவாவது தப்பி பிழைக்கும்.

திராவிடக் கட்சிகளின் பலவீனங்களை பயன்படுத்தியே அவர்களை ஆட்டுவித்து வீழ்த்தி, தமிழக  ஆட்சி கட்டிலில் அமரத் துடிக்கிறது பாஜக! ‘அந்த நோக்கத்திற்கு துணை போகும் ஆளுமைகள் திராவிடக் கட்சிகளுக்குள்ளேயே  உள்ளனர்’ என்பது தான் நாம் கவனிக்க வேண்டியதாகும்!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time