கலவரம் தூண்டி கட்சி வளர்க்கும் பாஜக!

-ச.அருணாசலம்

மணிப்பூர் மாநிலம் அல்லோகலப்படுகிறது. உயர்சாதிப் பிரிவினரை பழங்குடியினராக அறிவித்ததால்! தன் ஆண்டான் – அடிமை கலாச்சாரத்தை நிலை நாட்ட, உண்மையான பழங்குடியினரை ஒடுக்க நினைத்த பாஜகவின் சூழ்ச்சியால் அங்கு கலவரம்! மருள வைக்கும் மணிப்பூர் நிலவரத்தின் முழு விபரங்கள்..!

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. வகுப்புக்கலவரங்கள் மலைசூழ் மாநிலத் தலைநகர் இம்பாலிலும், பிற மாவட்டங்களிலும் வெடித்து கிளம்பியுள்ளன. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு, இன்டர்நெட் தடை அமலில் உள்ளது. சொந்த மண்ணில் மணிப்பூர் பழங்குடியினர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

ஏன் இந்த நிலைமை?

மணிப்பூரில் ” டபுள் இன்ஜின் ” அரசு தான் ஆட்சியில் இருக்கிறது, பிறகு, ஏன் இந்த கலவரச்சூழல் ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள பா ஜ க அரசின் முதல்வர் பிரேந்திர சிங் . கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் பா ஜ க சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலர் (பலர்?) புது தில்லியில் முகாமிட்டு, பிரேந்திர சிங்கை மணிப்பூர் முதல்வர் பொறுப்பிலிருந்து தூக்க வேண்டும் என்று மோடி மற்றும் அமீத் ஷா விடம் முறையிட்ட செய்தி பலருக்கு நினைவிருக்கலாம்.

ஆட்சிக்கு வந்து ஓராண்டு கழியும் முன்னரே முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் பதவிச் சண்டையாக சித்தரிக்கப்படலாம் , ஆனால் மணிப்பூரை பொறுத்தவரை இத்தகைய கோரிக்கை மணிப்பூர் சமுதாய வெளியில் ஏற்பட்ட விரிசலை நமக்கு உணர்த்துகிறது என்றே கூற வேண்டும்.

உள் துறை அமைச்சர் அமித்ஷாவும், மணிப்பூர் முதல்வர் பிரேந்திர சிங்கும்!

வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் பல்வேறு பழங்குடி இனத்தவரும் , பள்ளதாக்கு பகுதிகளில் வாழும் பழங்குடி அல்லாத மக்களும் கலந்து வாழும் ஒரு மாநிலமாகும்

பழங்குடி இனத்தவர்களாக அன்ய நாகா பிரிவினரும், அன்ய குக்கி பிரிவினரும், ஜோமி இனப்பிரிவினரும் உள்ளனர் . இப்பழங்குடி இனத்தவர் பெரும்பாலும் மலைகளில் தான் வசித்து வருகின்றனர். மணிப்பூர் மக்கள் தொகையில் கிட்டதட்ட 42 சதவிகிதத்திற்கு மேல் உள்ள பழங்குடியினர் வாழும் மலைப்பிரதேசங்களின் அளவு மணிப்பூரில் ஏறத்தாழ 83 சதவிகிதமாகும்

இப் பழங்குடியினர் பல்லாண்டுகளாக இந்திய அரசையும் இந்திய ராணுவத்தையும் எதிர்த்து போராடியவர்கள். இந்திய அரசிற்கும் இப்பழங்குடி பிரிவுகளுக்கும் நடந்த நீண்ட போரானது கடந்த 2001 ம்ஆண்டு தான் ஒரு இடைக்கால ஒப்பந்தம் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது.
இப் பழங்குடியினரை இந்திய அரசு பட்டியலினத்தவராக மதித்து அவர்களது உரிமைகளை- பாரஸ்ட் ரைட் என்றழைக்கப்படும் வன வாழ்வுரிமையை – வழங்கியுள்ளது.

மலைவாழ் பழங்குடியினரான இவர்கள் பெரும்பாலும் கிறித்தவர்களே ஆவர். நகரவாசிகளைப் போன்று தனிச் சொத்தின் மீது மோகம் கொண்டவர்கள் அல்ல. இந்த எளிய கிறிஸ்துவ மக்கள் எப்படி நிம்மதியாக வாழலாம் பாஜக ஆட்சியில்? அது பாஜகவின் ராஜ தர்மத்திற்கே தலைகுனிவல்லவா?

”இந்துக்கள் வாழ்வுரிமைக்கு ஆபத்து, இந்துக்களே ஓரணியில் திரளுங்கள் , நானே உங்களது பாதுகாவலன்” என பறையடித்து ‘அரசியல்’ செய்யும் பாரதிய ஜனதா கட்சி , அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் மணிப்பூர் வாழ் உயர்சாதியினராகிய மெய்தீ இன மக்களை சமீப காலமாக கவர்ந்தது வியப்பில்லை.

இம்பால் பள்ளத்தாக்கு என்ற செழுமையான நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மெய்தீஸ் எனப்படும் பிரிவினர் அரசியல் செல்வாக்கும், செல்வ செழிப்பும் மிக்கவர்கள். இவர்கள் வசம் உள்ள நிலப்பரப்பு சொற்பமே ஆனாலும், செழிப்பான நிலமாதலால் பணபலமும், அதிகார பலமும் உடையவர்கள் இந்த மெய்தீஸ் இனப் பிரிவினர். ஆனால், இவர்கள் பழங்குடிகள் அல்ல. இவர்களது எண்ணிக்கையோ கிட்டத்தட்ட 51 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது. இந்த முன்னேறிய வகுப்பினர் பெரும்பாலும் இந்துக்களே.

பழங்குடி இனத்தவருக்கான கட்சிகளை வளைத்து தன் கூட்டணியில் இணைத்ததன் வாயிலாக குக்கி நாகா இனப்பழங்குடி மக்களிடத்தும் தங்களது செல்வாக்கை விரிவு படுத்திக் கொண்டது பாஜக அரசு?

முரண்பட்ட இரு வேறு பிரிவினரிடமும் காலூன்றிய பா ஜ க, இம் மக்கள் கூட்டத்திடையில் நல்லுறவையும், இணக்கத்தையும் ஏற்படுத்தியதா?

டபுள் என்ஜின் அரசு தடம் புரண்டது எதனால்?

மாநிலத்திலு,ம் மத்தியிலும் பாரதீய ஜனதாவே ஆட்சி கட்டிலில் இருந்த போதிலும் மணிப்பூர் இன்று எரிவதேன்?

அக்னி ஜுவாலையில் அழகிய மணிப்பூர் அழியும் அவலம்!

கடந்த 3ந்தேதி (மே 3, 2023) அனைத்து மணிப்பூர் பழங்குடி மாணவர் சங்கம் (All Tribal Student Union Manipur ATSUM)  ஒற்றுமை பேரணி ஒன்றை சுரசன்ட்பூர் மாவட்டத்தில் நடத்தியது. இப் பேரணியில் நாகர்கள், ஜோமி இனத்தவர், குகி இனத்தவர் பலரும் பெருமளவில் கலந்து கொண்டனர் . இவர்கள் எண்ணிக்கையில் மணிப்பூர் மக்கள் தொகையில் 40 சதவிகித்ததிற்கு மேலானவர்.

மணிப்பூர் உயர் நீதி மன்றம் கடந்த மாதம் மணிப்பூர் அரசிற்கு ஓர் உத்தரவு பிறப்பித்தது. முன்னேறிய பிரிவினரான மெய்தீ இன மக்களை  பட்டியலினத்தவர் அட்டவணையில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசிற்கு, மாநில அரசு பரிந்துரை அனுப்ப  வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும்.

மெய்தீ இன மக்களின் பட்டியலினத்தவராக தங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை- இதர பழங்குடி மக்கள் ( நாகர், ஜோமி, மற்றும் குகி இன மக்கள்) கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மெய்தீ இன மக்கள் பேசும் மொழியை, அரசியல் சாசன எட்டாவது பிரிவில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏறகனவே பல வாய்ப்புக்கள் உள்ளன. சமூக நிலையில மிக உயர்ந்த நிலையில் உள்ள மெய்தீ இன மக்கள் அதிகாரமும், செல்வாக்கும் நிரம்ப பெற்றவர்கள் என்பது மொத்தமுள்ள 60 சட்ட மன்ற உறுப்பினர்களில் 40 பேர மெய்தீ இனத்தை சார்ந்தவர்கள் என்பதிலிருந்து விளங்கும் என பழங்குடி மாணவர் சங்கம் கூறுகிறது.

பட்டியலினத்தவர் அட்டவணையில் இவர்களையும் சேர்த்தால் இதர பழங்குடி மக்களின் உரிமைகள் தட்டி பறிக்கப்படும், முன்னேறிய வகுப்பினரான இவர்களுக்கு (மெய்தீ இன மக்களுக்கு ) மேலும், மேலும் சலுகைகள் அளிப்பது ஏன்? என்று இந்த முடிவை கடுமையாக எதிர்க்கின்றர் பழங்குடி இன மக்கள்.

எங்களது மண், எங்களது கலாச்சாரம், எங்களது பாரம்பரியம் ஆகியவற்றை காப்பாற்ற எங்களை பட்டியலினத்தவராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மெய்தீ இன மக்களிடம் 2012ல் தூவப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களது கால்தடங்களை, மலைகளிலும் பதிக்கலாம்-பட்டியலினத்தவர் என்ற தகுதியின் மூலம்- மலைகளிலும் தங்கள் செல்வாக்கை விரிவு படுத்தவே இந்த கோரிக்கை முன்னிறுத்தப்படுகிறது.

பட்டியலினத்தவர் என்ற அடிப்படையில் மலைப்பகுதிகளிலும் இவர்களால் நிலம் வாங்க முடியும் உரிமை கொண்டாட முடியும் என்பதாலேயே இந்த கோரிக்கை மெய்தீ இன மக்களிடம் வலுக்கிறது.


அதே சமயம் ஏற்கனவே பின்தங்கியுள்ள பழங்குடி- பட்டியலின- வகுப்பினர் தங்களது கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளும் மெய்தீ மக்களின் உள்வரவால் நசுக்கப்படும் என அஞ்சுகின்றனர்.

ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டிய ஆளும் கட்சியோ, அரசியல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு வெறுப்பு உணர்வையும், பிளவு வாதத்தையும் முன்னிறுத்தியது.

கடந்த மார்ச் மாத்த்தில் குகி இன மக்களை அவர்களது வாழ்வாதார நிலங்களில் இருந்து மணிப்பூர் அரசு அப்புறப்படுத்தியது. இத்தகைய’ எவிக்‌ஷன் ‘ எனப்படும் அப்புறப்படுத்தும் அரசு நடவடிக்கை குகி மற்றும் ஜோமி இன பழங்குடிகளை மிகுந்த சினத்துக்குள்ளாக்கியது. இத்தகைய அப்புறப்படுத்தும் செயலை ” கஞ்சா பயிரிடுதலை ஒழிக்கிறோம், மியான்மரிலிருந்து (பர்மா) வந்த வந்தேறிகளை விரட்டுகிறோம் என்று சொல்லி  நியாயப்படுத்த அரசே முயன்றது பழங்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


மூன்றாவதாக மணிப்பூர் அரசு இந்த பழங்குடி இன மக்களோடு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதன் விளைவாக ” நடவடிக்கை நிறுத்தம்” என்ற Suspension of Operations (S0P) என்ற முடிவு மணிப்பூர் அரசால் 2008 மார்ச் மாதம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் குகி இன போராளிகளுக்கு எதிரான அரசு ஆயுத தாக்குதலை , நடவடிக்கையை நிறுத்தி வைத்தது எனலாம்.

இந்த சண்டை நிறுத்த நடவடிக்கையை கடந்த மார்ச் மாதம் வாபஸ் வாங்கியதன் மூலம் இந்த பாஜ க அரசு வம்பை விலை கொடுத்து வாங்குகிறது என்று பெரும்பான்மையான மணிப்பூர் மக்கள் கருதுகின்றனர்.

தங்களது நிலங்களும், வன வாழ்வு உரிமைகளும் இந்த அரசால் பறிக்கப்படுகின்றன என பழங்குடியினர் எண்ணத்தொடங்கினர் ,கொதித்தெழுந்தனர். இந்நிலையில் மணிப்பூர் உயர்நீதி மன்ற உத்தரவு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது. கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் எண்ணெய் மேலும் ஊற்றப்பட்டது உயர் நீதி மன்ற தீர்ப்பால்.


மே 3 பழங்குடி மாணவர் சங்கம் நடத்திய பேரணியில் வெடித்த வன்முறை பழங்குடி இன மக்களுக்கும் மெய்தீ இன மக்களுக்கும் இடையே  பெரும் மோதலாக உருப்பெற்றுள்ளது.

அரசியல் செல்வாக்கும், பணபலமும் நிரம்ப பெற்ற மெய்தீ இனத் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களை திரட்டி பழங்குடி இன மக்களை கொல்வது, அவர்களது உடைமைகளை தீயிட்டு கொளுத்துவது போன்ற நாசகார செயல்களை அரங்கேற்றினர் . காவல் துறை கைகட்டி நின்றது.  காவல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டு ஆயுதங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

ஏற்கனவே தமக்கு வாக்களித்த மக்களின் வற்புறுத்தலால் பாரதிய ஜனதா கட்சியை சாரந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் -குகி இனத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் – தங்கள் பதவியை ராஜினாமா செய்த பிறகும் பா ஜ க அரசு நிலமையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்றோ ,  உன்ஜாகின் வால்தே என்ற பா ஜ க எம்.எல்.ஏ. – குகி இனத்தை சார்ந்த எம்.எல்.ஏ.- மெய்தீ இன குண்டர்களால் தாக்கப்பட்டு மரணப்படுக்கையில் உள்ளார்.

இன்றோ வன்முறை பல்வேறு மாவட்டங்களிலும் பரவி , ராணுவம் துணைக்கு அழைக்கப்பட்டுள்ள  நிலையைக் காண்கிறோம் .

பிளவுபட்ட,  எதிரும் புதிருமான நலன்களை கொண்ட மக்கள் கூட்டத்தினரை சமரசப் பாதைக்கு அழைத்துவர தவறிய ஆளுங்கட்சி, இன்னமும் தனது தவறை உணர்ந்தபாடில்லை. தங்களுடைய தவறான அணுகுமுறையால் ( நிலங்களிலிருந்து பழங்குடியினரை வெளியேற்றுதல், பயிர்களை அழித்தல், வனங்களில் இருந்து பழங்குடியினரை துரத்துதல் போன்ற அணுகுமுறையால் ) பழங்குடி இன மக்களை பகைத்துக்கொண்ட அரசு மத ரீதியான அணுகுமுறையால் ஆதிக்க சாதிகளின் ஊதுகுழலாக மாறியதன்  விளைவே இந்த மணிப்பூர் கலவரம், கொந்தளிப்புக்கு காரணமாயிற்று.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time