எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்.சி.பி.ஹெச்?

புத்தக வாசிப்பை பட்டி தொட்டியெங்கும் முதன்முதலாக பரப்பிய 72 ஆண்டுகள் பாரம்பரியமிக்க என்.சி.பி.ஹெச் நிறுவனம் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து ஒரு சில தனி நபர்களால் களவாடப்பட்டிருக்கிறது. பல சர்ச்சைகள், சட்டச் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் என்.சி.பி.ஹெச்சில் என்ன நடந்தது?

ஏழைத் தொழிலாளிகள் மற்றும் கூலி விவசாயிகளின் கட்சியாக அன்று அறியப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக வந்து கொண்டிருந்த ஜனசக்தியின் கிளை நிறுவனமாக முதலில் ஜனசக்தி பிரசுராலயம் என்றும் ஆங்கிலத்தில் பீப்பிள் புக் ஹவுஸ் என்ற பெயரிலும் 1951 வாக்கில் உருவானது. இதற்கு கட்சி தான் முதலீடு செய்து வி.சீனிவாசராவ், ஜீவா, மணலி கந்தசாமி, எம்.ஆர்.வெங்கட்ராமன், வி.பிசிந்தன் போன்றோரை பங்குதார்களாக அறிவித்தது. சில ஆண்டுகளில் சோவியத் யூனியன் உதவி செய்ய முன் வந்தது. எனவே, அந்த உதவியை ஒரு கட்சிக்கு செய்ய முடியாது என்பதால் பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றப்பட்டது! இதன் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் யாவருமே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.வி.சுந்தரம், மோகன் குமாரமங்களம், பாலதண்டாயுதம், பா.மாணிக்கம், ராதாகிருஷண மூர்த்தி.. போன்ற பலர் இதன் பொறுப்பில் மகத்தான பங்களிப்பு தந்துள்ளனர். ஊழியர்களுமே கட்சி குடும்பத்து பிள்ளைகள் தாம்!

அந்த நாட்களில் சோவியத் யூனியனின் மிகத்தரமான ஆனால், மிகவிலை குறைந்த புத்தகங்கள் 70 சதவிகித தள்ளுபடிக்கு என்.சி.பி.ஹெச்சுக்கு தரப்பட்டன! அனுப்பும் செலவும் அவர்களுடையது தான். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை மட்டுமே பத்து லட்சம் பிரதிகள் விற்பனையான காலகட்டம் அது. கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற லட்சிய தாகம் தான் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்த தோழர்களை அன்று இரவு, பகல் பாராமல் வேலை பார்க்க வைத்தது. என்.சி.பி.ஹெச் வருமானத்தில் எப்போதாவது கட்சிக்கு நிதி உதவியாக ஐம்பதாயிரம், ஒரு லட்சம் தருவார்கள். பல இடங்களில் நிறுவனத்திற்கு சொத்து வாங்கப்பட்டது. அம்பத்தூரில் சேவை நோக்கத்தோடு மருத்துவமனை, பள்ளிக் கூடம் போன்றவை கட்டப்பட்டன. இவை எல்லாமே மிக குறைந்த லாபத்தை என்.சி.பி.ஹெச் ஈட்டிய காலத்தில் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சோவியத் யூனியன் சிதைவுக்கு பிறகு, சோவியத் புத்தகங்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப பல்வேறு வியாபார உத்திகள் வகுக்கப்பட்டு பல தரப்பட்ட புத்தகங்கள் போடத் தொடங்கினர். அப்போதே கொள்கையில் இருந்து சற்று விலகுவதாகப் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன! பேராசிரியர் நா.வானமாமலை என்.சி.பி.ஹெச் பொறுப்பில் இருந்து விலகினார்.

அதே சமயம் இந்த காலகட்டத்தில் அம்பேத்காரின் ஆக்கங்கள் பலவும் அச்சிடப்பட்டன. என்.சி.பி.ஹெச்சின் துணை நிறுவனங்களாக பாவை பிரிண்டர்ஸ், தாமரை பதிப்பகம், அறிவு பதிப்பகம்.. போன்றவை உருவாக்கப்பட்டன! பள்ளிக் கல்வித் துறையின் புத்தகங்கள் அச்சடித்தனர். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிடம் நிறைய ஆர்டர் பெற்றனர். வங்கிகளில் கூட பிரிண்டிங் ஆர்டர் பெற்றனர். ஆரம்ப காலத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை..என இருந்தது பத்து கிளைகளாக விரிவாக்கம் பெற்றது.

இன்றைக்கும் பதிப்பகத் துறையில் கோலோச்சும் ஆர்.எஸ்.சண்முகத்தின் செண்பகா பதிப்பகம், லட்சுமணனின் ஏகம் பதிப்பகம், என்.கே.கிருஷ்ணமூர்த்தியின் ராஜ்குமார் பப்ளிகேஷன்ஸ், ஜெயக்குமாரின் அருணா பப்ளிகேஷன்ஸ், ஆவுடையப்பனின் ஏ.எம்.புக் ஹவுஸ்..போன்ற பத்துக்கு மேற்பட்ட பதிப்பகங்கள் என்.சி.பிஹெச்சில் உழைத்து, களைத்து வெளியேறியவர்களால் ஆரம்பிக்கப்பட்டவையே! இது ஒரு வகையில் தனிப்பட்டவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, திறமை இவற்றை அங்கீகரித்து பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை தரத் தவறியதன் விளைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நிறுவனத்தின் உழைப்புக்கு அடிநாதமாக உள்ள உழைப்பாளிகளுக்கு அதன் லாபத்தில் உரிய பங்கை தராமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு என்றும் சொல்லலாம்.

இன்றைய சண்முக சரவணனுக்கு முன்னோடியாக துரைராஜ் என்பவர் செயல்பட்டார். அவர் நிறைய ஊழல் செய்தார் என புகார் பட்டியல் தந்து தான் தஞ்சை கிளை மேலாளராக இருந்த சண்முக சரவணன் சென்னைக்கு வந்து போகும் போதெல்லாம் தா.பாண்டியனின் குட்புக்கில் இடம் பெற்றார்.

தா. பாண்டியன் அவர்களால் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டவர் தான் இந்த சண்முகச் சரவணனும், இரத்தினசபாபதியும் மற்றும் சிலரும்! இவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருந்தனர். இதைத் தொடர்ந்து ஏற்கனவே பல புகார்களுக்கு ஆளாகியுள்ள சண்முக சரவணனுக்கு சொந்த சாதிப் பற்று காரணமாக தா.பாண்டியன் முக்கிய இயக்குனர் பதவி தந்துள்ளார் என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்தன! இயக்குனர் பதவிக்கு வந்த சரவணனை மேனேஜிங் டைரக்டராகவும் பதவி உயர்வு தந்தனர்.

தா.பாண்டியனால் பதவியும்,அதிகாரமும் அளிக்கப்பட்டவர் தான் சண்முகம் சரவணன்.

என்.சி.பி.ஹெச்சில் சுமார் 400 ஊழியர்கள் உள்ளனர். பதவிக்கு வந்ததும் சண்முக சரவணன் செய்த காரியம் ஊழியர்களின் சாதி குறித்த விபரங்களை அவர்களிடமே கேட்டு பெற்றது தான்! இவ்வாறு அறிந்து கொண்ட பிறகு ஏராளமானோர் குறிப்பாக பல காலம் நேர்மையாக பணியாற்றியோர் வேலையில் இருந்து விலக்கப்பட்டனர். ”இதையல்லாம் தா.பாண்டியன் கவனத்திற்கு கொண்டு வந்த போது, அவர் சண்முக சரவணன் பக்கமே உறுதியாக நின்றார்” என்று விரக்தியடைந்து வெளியேறிய சிலர் கூறுகின்றனர்.

என்.சி.பிஹெச் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனம். ஆகவே, அதை தனி நபர்கள் உரிமை கோருவதை அனுமதிக்க முடியாது என இன்று கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள்! இது நூறு சதவிகித உண்மை தான்! ஆனால், இந்த நிறுவனத்தின் மீது எந்த வகையிலும் ஈடுபாடு காட்டாமல், கண்காணிப்போ, வழி நடத்தலோ இல்லாமல் தொடர்ந்து கட்சித் தலைமை எப்படி அம்னீஷியா மோடுக்கு போனது என்பது தான் பலரும் வைக்கின்ற கேள்வியாகும்.

பின் வரும் கேள்விகளுக்கு கட்சி என்ன விடை சொல்லப் போகிறது?

# இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது இருந்த அரசியல் சூழல்கள் காரணமாக இது பிரைவேட் லிமிடெட் ஆக உருவாக்கப்பட்டாலும், பிற்பாடு இதை கட்சி சார்ந்த ஒரு அறக்கட்டளையாக அல்லது கூட்டுறவு நிறுவனமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது ஏன்?

# குறிப்பிட்ட ஒரு சாதியின் ஆதிக்கம் பொதுவுடமை இயக்கத்தின் நிறுவனத்தில் கோலோச்ச அனுமதித்தது எப்படி?

# கொள்கைக்கு மாறான வகையில் குப்பையான படைப்புகளையும் வணிக நோக்கத்திற்காக பதிப்பித்த போது அனுமதித்தது எப்படி?

# நூலக ஆர்டர்கள் பெறுவதற்கு பல லட்சங்கள் அதிகாரிகளுக்கு கையூட்டு தரப்பட்டதாக கணக்கு எழுதிய போது, இந்த அணுகுமுறையை பொதுவுடமை இயக்கத் தலைமை கண்டித்து நல்வழிப்படுத்த தவறியது ஏன்? இது தமிழக பதிப்பு துறையில் என்.சி.பி.ஹெச் மீதுள்ள மரியாதையை தரைமட்டம் ஆக்கியதா? இல்லையா?

# எழுத்தாளர்கள் சிலர், ”உரிய சன்மானமோ, ராயல்டியோ வழங்கவில்லை” என புகார் எழுப்பிய போதும், வெளி நிறுவனங்களின் புத்தகத்தை விற்ற பிறகு பணம் தராமல் ஏமாற்றுவது குறித்தோவான புகார்கள் நீண்டகாலமாக என்.சி.பி.ஹெச் மீது இருப்பதை ஏன் முற்றிலுமாக களையவில்லை?

# பாட்டாளி தலைவர்களால் அடித்தளமிடப்பட்டு, சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை, முற்போக்கு இலக்கியங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல நூற்றுக்கணக்கான தோழர்களின் அர்ப்பணிப்பால் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் தனி ஒருவரின் சம்பளம் ஒன்றரை லட்சம் என்பது எப்படி ஏற்கப்பட்டது? உழைக்கும் பல தோழர்களின் சம்பளத்திற்கும், சண்முக சரவணனின் சம்பளத்திற்கும் மலைக்கும், மடுவிற்குமான வித்தியாசம் இருக்கிறதென்றால், இது எப்படி சாத்தியமாயிற்று?

# முதலாளித்துவ நிறுவன எம்.டிக்களை போல விலை உயர்ந்த கார்கள், கிளை நிறுவனங்களுக்கு செல்வதற்கே விமானப் பயணம், தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல், மது விருந்துகள்.. இன்னும் சில ஒழுக்க கேடுகள்..ஒரு தனி நபரால் அனுபவிக்க முடிந்திருக்கிறது என்றால், இதையெல்லாம் கண்டும், காணாமல் உங்களை கடந்து போக வைத்தது எது?

# வயது முதியவரை – எந்த ஒரு நிர்வாகத்தையும் கையாள முடியாத நிலையில் உள்ளவரை – பற்பல முறைகள் சண்முக சரவணனின் பித்தலாட்டங்கள் தொடர்பானவற்றை கவனப்படுத்திய போதிலும் வாளாவிருந்த பெரியவர் நல்லகண்ணுவை – தொடர்ந்து என்.சி.பி.ஹெச்சின் சேர்மனாக ஏன் வைத்திருந்தார்கள்! அல்லது தன்னால் ஒரு சிறிதும், நிர்வகிக்கவோ, கவனம் செலுத்தவோ இயலாத ஒரு பதவியில் அவரும் ஏன் தொடர்ந்தார் என்பதற்கெல்லாம் விடை தெரியவில்லை.

# சண்முகம் சரவணன் தொடர்ந்து நல்லகண்ணுவின் தொடர்பில் இருந்துள்ளார். தா. பாண்டியன் தாவூத் ஆகியோர் மறைவுக்கு பிறகு அவர்களது பங்குகளை தனக்கு மாற்றியுள்ளார். நல்லகண்ணுவும் தன் பங்குகளை இரண்டாண்டுக்கு முன்பே சண்முக சரவணனுக்கு எழுதி தந்துள்ளார். சண்முக சரவணன் தொடர்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக கண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ அல்லது கட்சித் தலைமை கவனத்திற்கேனும் கொண்டு செல்லவோ அவர் முயற்சிக்கவே இல்லை! இதை எப்படி புரிந்து கொள்வது?

# கட்சியின் முக்கிய தலைவர்களான முத்தரசன், வீரசேனன், சந்தானம், முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, தற்போதைய எம்.பி.சுப்பராயன், ஸ்டாலின் குணசேகரன்,.. என இத்தனை இயக்குனர்கள் இருந்தும் கடந்த நான்கைந்து வருடங்களாக ஒரு தனி நபர் கட்சி ஸ்தாபனத்தை படிப்படியாக – அதுவும் சட்ட பூர்வமாக – விழுங்கி கொண்டிருப்பதை எப்படி கவனிக்காமல் போயினர்?

தற்போதைய நிலவரப்படி சண்முக சரவணனிடம் பெரும் அளவிலான பங்குகள் சட்டபூர்வமாக உள்ளன! இந்த கிரிமினல் பேர்வழி தற்போது தலைமறைவாகி உள்ளார். நீதிமன்றத்தில், ‘கட்சியின்  முக்கியஸ்தர்கள் யாரும் என்.சி.பி.ஹெச்சிற்குள் நுழையக் கூடாது’ என தடை உத்தரவும் வாங்கியுள்ளார்!

இந்த சண்முகம் சரவணன் தான் சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா, நல்லகண்ணு, முத்தரசன், பழனிசாமி,ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட 15 பேர் என்.சி.பி.ஹெச் அம்பத்தூர் அலுவலகத்திற்கு வந்த போது, ”சந்தேகமில்லாமல் இது கட்சி சொத்து தான்! நான் எப்படி அபகரிக்க முடியும்? இரண்டே நாள் டயம் தாங்க, வியாழன் மாலை தோழர் நல்லகண்ணு வீடு வந்து என்  ஷேர்களையெல்லாம் கட்சி பொறுப்பாளர்கள் பெயருக்கு மாற்றித் தந்து விடுகிறேன்’’ என வாக்குறுதி தந்துள்ளார். அனைவருமே அந்த வாக்குறுதியை நம்பி ஏமாந்துள்ளனர். ஆயினும், எத்தனை நாள் தலைமறைவாக இருக்க முடியும் சண்முக சரவணனால்?

எத்தனையெத்தனையோ தன்னலமற்ற பல நூறு தோழர்களின் கடும் உழைப்பால், அர்ப்பணிப்பால் உருவாக்கப்பட்ட சுமார் 700 கோடி பெறுமானமுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்தை ஒரு தனி நபர் கபளீகரம் செய்துவிட முடியுமா என்ன? பார்ப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time