சரத்பாபு மிக அழகானவர். நன்றாக நடித்தார். எனினும், பெரிய ஹீரோவாகவில்லை. அவருமே அதற்கு விரும்பவில்லை. கடைசி வரை ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டாகவே, கதாபாத்திரத்திற்கு தன்னை பொருத்திக் கொண்டார்! ஜெயலலிதாவுக்கு ஹீரோவாக சரத்பாபு நடித்த அனுபவங்களை படத்தை இயக்கிய லெனின் கூறுகிறார்.
இதனால் தான் தமிழின் மிகச் சிறந்த இயக்குனர்கள் சரத்பாபுவை தங்கள் படங்களில் தொடர்ந்து பயன்படுத்தினர். பாலச்சந்தரின் பட்டிணப் பிரவேசம், நிழல் நிஜமாகிறது ஆகியவற்றில் அவரது கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கது. நிழல் நிஜமாகிறது படத்தில் கிட்டத்தட்ட வில்லன் பாத்திரம் என்று கூட சொல்லலாம்! மகேந்திரனின் பல படங்களில் தொடர்ந்து நடித்தார். முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி..எனப் பல படங்களில் நடித்தார். முள்ளும், மலரில் கண்ணதாசன் எழுதி இளையராஜா இசை அமைத்து, ஜேசுதாஸ் பாடிய, ”செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா…” என்ற பாடல் காலத்துக்கும் சரத்பாபுவை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். ஈகோ பார்க்காதவர் என்பதால் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனரும், எடிட்டருமான பி.லெனினின் நதியைத் தேடி வந்த கடல், பண்ணைபுரத்து பாண்டியர்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் கடைசி ஹீரோ என்ற பெருமையும் சரத்பாபுவுக்கு உண்டு. இந்தப் படம் குறித்து இயக்குனர் பி.லெனின் அவர்களுடன் பேசிய போது, சரத்பாபு ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். நதியைத் தேடி வந்த கடல் என்ற மகரிஷியின் நாவலை திரைபடமாக்க நான் நினைத்த போது அதில் சைக்காலாஜிக்கல் பிரச்சினையுள்ள புரொபஷர் கேரக்டரில் நடிக்க சரத்பாபு தான் பொருத்தமானவர் என முடிவு செய்தேன். பஞ்சு அருணாச்சலம் சார் தான் இதற்கு வசனம் எழுதி தந்தார். சரத்பாபு, ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, படாபட் ஜெயலஷ்மி ஆகியோர் நடித்தனர். கதையை நன்கு உள்வாங்கி, கதா பாத்திரத்தில் தன்னை சரியாக பொருத்திக் கொள்பவர் சரத்பாபு. சரத்பாபுவிடம், ‘ஜெயலலிதா தான் உங்களுக்கு ஜோடி’ என்றவுடன் மிரண்டுவிட்டார். ”சார், அவங்க எவ்வளவு பெரிய ஹீரோயின் எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் ஆகியோரோடு நடிச்சவங்க.. அவங்க எப்படி என்னோட நடிப்பாங்க..” எனக் கேட்டார்.
”அவங்க நடிக்க ஒத்துக் கொண்டாங்க. நீங்க பயப்படாமல் இயல்பா நடிங்க” என்றேன். ஜெயலலிதாவைக் காட்டிலும் சரத்பாபு மூன்றாண்டுகள் இளையவர். எனினும் உயரமாகவும், வாட்டசாட்டமாகவும், கலராகவும் அவர் இருந்ததால் ஜோடி பொருத்தம் சரியாக அமைந்தது. சரத்பாபு ஒரு வெஜிடேரியன். காய்கறிகள் நிறைய சாப்பிடுவார். வெங்காயமெல்லாம் பச்சையாகவே சாப்பிடுவார். ”வெங்காயம் சாப்பீட்டு நடித்தால் வாய்ல வாடை வருமே.., என்ன செய்ய” என்றார். ”வாயை நன்றாக கொப்பளித்துவிட்டு, கிராம்பு எடுத்து வாயில போட்டுக்குங்க” என்று சொல்லி நடிக்க வைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்தாலும், எல்லோரும் எந்த ஈகோவுமின்றி நடித்தனர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் நண்பர்களாகவே இயங்கினோம்.
‘முள்ளும், மலரும்’ தயாரித்த வேணு செட்டியார் தான் இந்த படத்தையும் தயாரித்தார். ஆனால், படம் வெளி வரும் போது இறந்து விட்டார். படம் ஓரளவு வெற்றிப் படமாகவே அமைந்துவிட்டது. இந்த படத்தில் வருகின்ற தவிக்குது, தயங்குது ஒரு மனது என்ற கங்கை அமரன் எழுதி, இளையராஜா இசை அமைத்து ஜெயச்சந்திரனும், எஸ்.பி.சைலஜாவும் பாடி, சரத்பாபுவும் ஜெயலலிதாவும் நடித்த காதல் பாடல் இன்றும் பிரபலமாக கேட்கப்படுகிறது. இது தான் ஜெயலலிதா நடிக்கும் கடைசி படம்’’ என அப்போது யாருமே நினைக்கவில்லை என்றார் பி.லெனின்.
‘நதியைத் தேடி வந்த கடல்’ ஜனவரி 15, 1980 ஆம் ஆண்டு வந்தது. அதே ஆண்டு, அதே ஜனவரி மாதம் 26 ஆம் தேதி பிரபல தயாரிப்பாளர் கே.பாலாஜியின் ‘பில்லா’ படம் வெளியானது. அந்தப் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க பாலாஜி முதலில் அணுகியது ஜெயலலிதாவிடம் தான். ஏனோ தெரியவில்லை. ஜெயலலிதா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதே சமயம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். பில்லா மிகப் பெரிய வெற்றிப் படமானது.
Also read
சரத்பாபு 200 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் சினிமா நடிகன் என்ற ஒளிவட்டத்திற்குள் தன்னை ஒப்புக் கொடுக்கவில்லை. மிக இயல்பானவராகவே இருந்தார். சரத்பாபுவுக்கு கடைசி காலத்தில் தமிழ் படங்களைவிடவும் தெலுங்கு பட வாய்ப்புகளே அதிகம் வந்தன. ஆந்திர அரசு அவருக்கு மூன்று முறை நந்தி விருது வழங்கியுள்ளது. அவர் முதலில் திருமணம் செய்தது ரமாபிரபா என்ற நடிகையை! பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு நடிகர் நம்பியாரின் மகளான சினேகலதாவை மணந்தார். இந்த மண உறவும் பத்தாண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. இறுதியில் தனிமனிதனாகவே வாழ்ந்து மறைந்தார்.
கட்டுரையாளர்; அஜிதகேச கம்பளன்
இந்த கட்டுரையின் தற்போதைய தேவை என்னவோ?
நடிகர் சரத்பாபு நல்ல நடிகர்.அதை மறுக்கவில்லை.ஆனால் அவர் சமூகத்திற்கு ஆற்றிய பணி என்ன ?
அவர் சாவு மட்டுமல்ல எந்த ஒரு மனிதனின் சாவும் நமக்கு மகிழ்ச்சி அளிக்காது.அளிக்கவும் கூடாது. அது வேறு.
திரைப்பட நடிகர்களை வைத்து வயிறு வளர்க்கும் ஊடகங்கள் பல தமிழகத்தில் உள்ளது.அதில் சரத்பாபு வரலாறை எழுதி பிழைக்கட்டும்.நமக்கு எந்த ஒரு ஆட்சேபனை இல்லை
ஆனால் இந்த இதழில் அவர் பற்றிய செய்தி தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது இல்லை.
நம் சமூகத்திற்கு என்ன பயனைத் தரும்.
சார்லி சாப்ளினின் போர் குணம் பற்றி எழுதுங்கள்,
எம் ஆர் ராதாவின் போர் குணம் பற்றி எழுதுங்கள்,
இன்று போர்குணத்துடன் சமரசம் இன்றி மோடியை கடுமையாக விமர்சித்து வரும் பிரகாஷ்ராஜின் துணிவை ( அவர் மோடி பற்றி எழுதிய முக நூல் பதிவு ) எழுதுங்கள்.
மக்களுக்காக வாழுகின்ற, வாழ்ந்து மறைந்த கலைஞர்களைப் பற்றி எழுதுங்கள்.அதை விடுத்து தனக்காக வாழ்ந்து மறைந்த எவர் பற்றியும் அறம்
இதழில் எழுதுவது தவறு மட்டுமல்ல குற்றமே யாகும்.