போராட்டங்களே உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன!

- பீட்டர் துரைராஜ்

அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய 44 கட்டுரைகளின் தொகுப்பு தற்போது நூலாக வெளிவந்துள்ளது. உலகம் முழுமையிலும் பல்வேறு கால கட்டங்களில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களின் சமூக, அரசியல் பின்னணி, அவை நடைபெற்ற விதம், அதற்கான நியாயங்கள் குறித்த பதிவாக இந்த நூல் கவனம் பெறுகிறது.

மதுரையைச் சேர்ந்த அ.முத்துக்கிருஷ்ணன் சமூக செயற்பாட்டாளர். இவரது சமூகப் பங்களிப்பிற்காக பெரியார் விருதையும், அம்பேத்கர் விருதையும் பெற்றவர். பல்வேறு காலக்கட்டங்களில் உலகெங்கிலும் நடந்துள்ள எதிர்ப்பியக்கங்களைத்  தேர்ந்தெடுத்து இந்த நூலில் எழுதியுள்ளார்.

இங்கிலாந்தின் தேநீர் வரியை எதிர்த்து அமெரிக்காவில் நடந்த போராட்டம் அதன் விடுதலைக்கு  காரணமாயிற்று. இதனைச்  சொல்லும் ‘பாஸ்டன் தேநீர் கலகத்தில்’ இருந்து சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் எழுச்சி உட்பட விதவிதமான எதிர்ப்பியக்கங்களை எழுதியுள்ளார்.

“உரிமைகளின் போராட்டப் பின்னணியை சமூகத்திற்கு நிரந்தரமாக நினைவுபடுத்துவதன் மூலமே  நிகழ்காலத்தில் நடைபெறுகிற ஜனநாயக போராட்டங்களுக்கு சமூக ஒப்புதலைப் பெற முடியும்” என்று மனித உரிமைப் போராளியான டாக்டர் கே.பாலகோபால் கூறுவார். அதற்கேற்றவாறு இந்த நூல்  உள்ளது. இனம், சாதி, சுற்றுச்சூழல், மனித மாண்பு, காலனியாதிக்க எதிர்ப்பு, மாற்றுப் பாலினத்தவர்,விடுதலைப் போராட்டம்  என பலவிதமான போராட்டங்கள் அடங்கிய கலவையாக உள்ளது. சகல ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நமது அனுதாபத்தை, ஆசிரியர் இந்த நூல் வழியாகக்  கோருகிறார்.

ஒவ்வொரு கட்டுரையிலும், அந்தப் போராட்டம் குறித்து கூடுதலாக படிக்க வேண்டிய நூல் அல்லது தெரிந்துகொள்ள வேண்டிய ஆளுமை பற்றிய குறிப்பையும் பெட்டிச் செய்தியாக கொடுத்துள்ளார். ஹாசிப் கான்  வரைந்துள்ள ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. நமது புத்தக அடுக்கில் இருக்க வேண்டிய பார்வை நூல்.

போராட்டங்களைப் பற்றி  தெரிந்தவர்களுக்கும் கூடுதல் விவரங்களை  இந்த நூல் தருகிறது. ‘மதுவுக்கும் உப்புக்கும் ஒரே வரி விதிக்கப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்கான தொடர் செயல்பாடாக இருந்தது’ என்று  காந்தி 70 பேருடன் தொடங்கிய உப்புச் சத்தியாகிரகத்தைப் பற்றிக் கூறுகிறார்.

பெரியாரின் வைக்கம் போராட்டம், திருநெல்வேலி எழுச்சி,  இடிந்தகரை போராட்டம் என இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடந்த போராட்டங்கள் பற்றி  அலசப்படுகின்றன. ஒவ்வொரு கட்டுரை முடியும் போதும் அதோடு தொடர்புள்ள சமகால பிரச்சினைகளைச் சொல்லி முடிக்கிறார். “தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில், இலங்கையிலிருந்து வந்த அகதிகள் 59,716 பேர் வசிக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறார்கள். இவர்களில் 99% பேர் இந்துக்கள். இவர்களுக்கு குடியுரிமை இல்லையெனில் இந்தச் சட்டம் எவ்வளவு சூழ்ச்சியானது?” என்று  ‘குடியுரிமைச் சட்டம்; மக்கள் எழுச்சியின் சாட்சியம்  கட்டுரையை முடிக்கிறார்.

அ.முத்துக்கிருஷ்ணன் ஒரு செயற்பாட்டாளரும் கூட.  வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது,  ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை தான் எதிர்கொண்ட கதையை முகநூலில் எழுதியவர். வல்லுறவை எதிர்த்து, 12 தாய்மார்கள் நிர்வாணமாக இராணுவத் தலைமையகம் முன்பு குரல் எழுப்பியதையும், 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா பற்றியும் உணர்ச்சியோடு எழுதியுள்ளார்.

16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா

அடக்குமுறையை எதிர்த்த போராட்டம் இன்ன வடிவத்தில்தான்  வரும் என்று யாரும் சொல்ல முடியாது. அதேபோல ஒரு இடத்தில் நடக்கும் போராட்டத்தின் தாக்கம் மற்ற இடங்களுக்கும் பரவும். பழங்களை தெருவோரமாக விற்கும் ஓர் இளைஞன், ஊராட்சி அலுவலகம் முன்பு தீக்குளித்து இறந்ததனால் ஏற்பட்ட ‘துனிசிய புரட்சி’, 23 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் தாக்கம் எகிப்து, ஜோர்டன், அல்ஜீரியா,ஏமன், லிபியா என அரபுலகம் அனைத்திலும் வினையாற்றியது என்கிறார்.

நூலாசிரியர் புது தில்லியில் இருந்து 9 நாடுகளின் வழியே 10,000 கி.மீ. பயணித்து பாலஸ்தீனம் சென்ற சர்வதேச குழுவில் இடம் பெற்றவர். துருக்கி: குட்டைப் பாவாடை அணிந்த ஆண்கள், இராக் போர் எதிர்ப்பு போன்ற பல அரபுலக நாடுகள் பற்றிய கட்டுரைகள் உள்ளன.

ப்ளாச்சிமடா, சர்தார் சரோவர், பருவநிலை மாற்றம், வங்கதேசம் அலையாத்தி காடுகள் போன்ற சுற்றுச்சூழல் கட்டுரைகளும் கீழ்வெண்மணி, மஹத், பீமா கொரேகான், தோள்சீலைப் போராட்டம் போன்றவை பற்றியும், அவசரநிலை, சீனா தியானென்மென்  போராட்டம் பற்றியும் இதில் உள்ளன.

உலகின் பல நாடுகளில் இப்போது தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தன்பாலினத்தவர்களின் வலிகளையும்,பிரச்சினைகளையும் கவனப்படுத்துகிறார். இதற்கு முன்னோடியாக, அமெரிக்காவில் 1969 ல் நடைபெற்ற ஸடோன்வால் கலகத்தைப் பற்றி இதில் கூறப்பட்டுள்ளது. ஒருபால் விருப்பம் கொண்டோர் ஸ்டோன்வால் விடுதியில் சந்திப்பது வழக்கமாக இருந்த காலத்தில் போலீஸ் மாமூல், ரௌடிகள் மிரட்டல் ஆகியவைகளை எதிர்த்து ஸ்டோன்வால் விடுதியில் நடந்த கலகம் தன்பாலினத்தவரின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள அமெரிக்க சமூகத்திற்கு உதவியது. அதன் எழுச்சியின் 50 வது ஆண்டை ஒட்டி 50 இலட்சம் பேர் பெருமிதப் பேரணியில் (2019) கலந்துகொண்டனர். அமெரிக்கா அதனை தேசியச் சின்னமாக மாற்றியுள்ளது என்கிறார். இந்தக்  கட்டுரை ஒருசில புரிதல்களை எனக்குத் தந்தது.

இந்த நூல் போராட்டங்களின் மீது மக்களை நம்பிக்கை கொள்ள வைக்கிறது. ஜனநாயக நெறிமுறைகள் வலிமைபெற உதவுகிறது. இதன் இரண்டாம் பாகத்தை எழுத இருப்பதாக ஆசிரியர் கூறியிருக்கிறார். இதனை வெளியிட்டதன் மூலம் விகடன் குழுமம் நல்ல சேவையை  செய்துள்ளது.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

நூல்; போராட்டங்களின் கதை

ஆசிரியர்; அ. முத்துக்கிருஷ்ணன்

வெளியீடு; விகடன் பிரசுரம்

பக்கங்கள்;  288 , விலை; ரூ 310

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time