பேராசையில் இருந்து விடுபடுவாரா, இளையராஜா?

-சாவித்திரி கண்ணன்

இளையராஜா இத்தனை வயதுக்கு பிறகாவது பெருந்தன்மையையும், பக்குவத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அவர் தன் பேராசையால் பெருமளவு நட்பு வட்டாரத்தை இழந்தது போதாதா..? திரை இசை பாடல்களுக்கு முழு உரிமை கோரும் இளையராஜா வழக்கு ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது;

பல ஆண்டுகளாக திரை இசை பாடல்களுக்கு இளையராஜா முழு உரிமை கோரும் வழக்கில்  நேற்றைய தினமான ஏப்ரல்-24, 2024 அன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் கொண்ட அமர்வு கேட்ட கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

“ பாடலின் வரிகள், பாடலைப் பாடும் பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்..?” என கேள்வி எழுப்பி உள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கில் இசை நிறுவனங்கள்  தாங்கள் வைத்த வாதத்தில் ”காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் தயாரிப்பாளரிடம் நாங்கள் பணம் தந்து குறிப்பிட்ட ஆண்டுகள் வரையும் உரிமை வாங்கிய பிறகு இளையராஜாவிற்கும் பணம் தர முடியாது. இளையராஜா தன் இசைக்கான ஊதியத்தை தயாரிப்பாளரிடம் பெற்றுவிட்ட பிறகு மேன்மேலும் உரிமை கோர முடியாது” என வாதிட்டனர்.

அதற்கு இளையராஜாவின் சார்பிலான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ”இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் இதற்குப் பொருந்தாது” என கூறி இருக்கிறார்!

பாடல் எழுதும் கவிஞனும் கூட கிரியேட்டர் தானே! இளையராஜாவின் இசை என்பது கூட சுமார் நாற்பது, ஐம்பது இசைக் கலைஞர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் சம்பந்தப்பட்டது. ஆனால், பாடல் என்பது கவிஞனின் தனிச் சொத்து! கண்ணதாசன், புலமைபித்தன், முத்துலிங்கம், வாலி, வைரமுத்து, மு.மேத்தா, பழனிபாரதி, ந.முத்துகுமார், யுகபாரதி போன்ற எத்தனை அரும், பெரும் கவிஞர்களின் பங்களிப்பு திரை இசைப் பாடல்களில் புதைந்துள்ளன.

அதே போல பாடல்களை உணர்ச்சி பாவத்துடன் பாடி, அதற்கு உயிர்ப்பு தரும் டி.எம். செளந்திரராஜன், பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்பிமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம், ஹரிகரன், சங்கர் மகாதேவன்.. ஆகிய இவர்களை போன்றோர்களின் பங்களிப்பு இல்லாமல், பாடல்கள் நம் இதயத்தை தீண்டுமா..? ஆனால், இவர்கள் எல்லோரின் பங்களிப்பில் உருவாகும் பாடல்களுக்கு தனக்கு மட்டுமே உரிமை கொண்டாடுகிறார் இளையராஜா. இத்தனைக்கும் அவருக்கு திரை இசைப் பாடல்களுக்கான ராயால்டியும் பெரிய அளவில் கிடைத்துக் கொண்டுள்ளது.

இந்த ரீதியில் விவாதம் வைக்க ஆரம்பித்தால் திரைப் படத்திற்கு கதை தான் மூலம். கதையும் கிரியேட்டிவ் தான். அடுத்து இயக்கம். இயக்குனரே படத்தின் மிகப் பெரிய கிரியேட்டர். அடுத்து கதாநாயக நடிகர். அவரை வைத்து தான் வியாபாரமே! இதனால், ஒவ்வொரு திரையிடலுக்கும் இவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா..?

ஒரு படம் தோல்வி அடையும் போது அதை முழுக்கவும் தயாரிப்பாளரே அனுபவிக்கிறார். நாமெல்லாம் எம்.ஜி.ஆர் படம், சிவாஜி படம், ரஜினி படம் எனக் கொண்டாடுகிறோமே. இதில் நடித்துக் கொடுத்து பணம் பெற்ற பிறகு இவர்களுக்கு அந்தப் படத்தில் எந்த உரிமையும் இருப்பதில்லை. அது எப்போதும் அந்தப் படத்தை தயாரித்த நிறுவனங்களான ஏ.வி.எம், விஜயா புரொடக்‌ஷன்ஸ், சன் பிக்‌ஷர்ஸ், லைகா புரோடக்‌ஷன், ஸ்டுடியோ கிரீன் போன்ற சம்பந்தப்பட்ட  நிறுவனங்களுக்கு தான் சொந்தமாகும்.

இன்று வரை கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களை லட்சோப லட்சம் தமிழர்கள் தினசரி கேட்டு மனம் குதூகலிக்கிறோமே..! அதற்கெல்லாம் அவர் குடும்பத்திற்கு பணம் போகிறதா? என்ன..? அந்தப் பாடலை மக்களிடம் இன்றும் கொண்டு சேர்ப்பதற்கு வாகனமாக இருப்பவர்களே அதற்கான லாபத்தை பெறுவார்கள். இது தான் உலக நியதியாக உள்ளது!

இளையராஜாவே கூட பொதுவுடமை இயக்கத்தின் மேடைப் பாடகராக, இசை அமைப்பாளராக இருந்த காலகட்டங்களில் எம்.எஸ்.வி. கே.வி.மகாதேவன் பாடல்களைத் தானே பயன்படுத்தி வளர்ந்தார். ஒன்றை உருவாக்கி கொடுக்கும் கலைஞருக்கு அதற்கான ஊதியம் என்பது முக்கியம். அதற்கு பிறகு அது சமூகத்திற்கான சொத்து தான்! சமூகப் பயன்பாட்டில் தன் படைப்பு இருப்பது தான் ஒரு படைப்பாளிக்கு ஆகப் பெரிய சந்தோஷமாக இருக்க முடியும்.

எல்லாவற்றையுமே பொருளாதார அளவுகோலைக் கொண்டு பார்ப்பது ஒருவித மனநோயாகத் தான் போய் முடியும். இறுதி தீர்ப்பு ஜூன் இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது! அது அனைத்து தரப்புக்கும் நியாயம் சேர்பதாக இருக்கும் என நம்புவோமாக!

-சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time