பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாக கொண்ட ஒரு எம்.பி! அவருக்கு பாதுகாப்பும், பதவியும் தந்து அழகு பார்த்த செல்வாக்கான அரசியல் குடும்பம்! ஏழெட்டு வருடங்களாக எதையும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்த சமூகம்! எல்லா அரசியல்வாதிகளும் பெண்கள் விஷயத்தில் ஒருவருக்கொருவர் ஒன்றுபடுவது ஏன்?
உலகையே உலுக்கி போடும் வகையில் பிரஜ்வால் ரேவண்ணா என்ற கர்நாடகா எம்பி பெண்களை துஷ்பிரயோகம் செய்து மானபங்கப்படுத்தும் ஆபாச வீடியோகள் 2,926 வெளிவந்துள்ளன! கர்நாடகத்தின் மிக செல்வாக்கான குடும்பமான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் தான் இந்த பிரஜ்வால் ரேவண்ணா என்பது இந்த விவகாரத்தை மேலும் பிரபலமாக்கி, அகில இந்திய அளவில் அனைத்து தலைவர்களும் இதில் கேள்வி கேட்கும் நிலையை ஏற்படுத்திவிட்டது.
இப்படிப்பட்ட ஒரு பாலியல் குற்றவாளியின் தொகுதிக்கு சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்ததை ராகுல்காந்தியும், பிரியங்காவும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளனர். இப்படிப்பட்டவர் என தெரிந்திருந்தும் அவருக்கு ஏன் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற கேள்வியை பல கட்சிகளின் தலைவர்கள் வைத்துள்ளனர். கர்நாடகா முழுமையும் காங்கிரஸ் கட்சியின் மகளீர் அணியினர் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக கொந்தளித்து போராட்டம் நடத்தி உள்ளனர்.
இந்த விவகாரத்தில் நம்மை மிக அதிகமாக உறுத்தும் கேள்விகள் பல எழுகின்றன..! சுமார் 300க்கு மேற்பட்ட பெண்களை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யவும், அவர்களை தொடர்ந்து வீடீயோ எடுத்து அச்சுறுத்தவுமான செயல்பாடுகளை சுமார் ஏழெட்டு ஆண்டுகள் வரையிலும் செய்வதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டார்…? அதுவும் நாளும் பொது மக்களை சந்திக்கும் அரசியலில் பொறுப்பில் இருப்பவருக்கு இது எப்படி சாத்தியப்பட்டது? என்பதே பிரதான கேள்விகளாகும். குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் ரேவண்ணாவின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்காமல் இது தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை.
பிரஜ்வால் ரேவண்ணா என்ஜினியரிங் படித்தவர்! கட்சியில் சேர்ந்த மூன்றாவது ஆண்டிலேயே அதுவும் அவரது 26 ஆம் வயதிலேயே அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உயர்வு தரப்படுகிறது. அப்போது முதல் தான் இந்த காமகளியாட்ட வேட்டையில் தொடர்ந்து வெறித்தனமாக இயங்கி இருக்கிறார்.
2018 ஆம் ஆண்டிலேயே இவருடைய பாலியல் திருவிளையாடல்கள் பொதுவெளிக்கு வந்துள்ளது. ஆன போதிலும் அதனால் கட்சிக்குள் இவரது இருப்பு எந்த விதத்திலும் பதிக்கப்படவில்லை.2019 ஆண்டில் இவருக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்ககப்பட்டிருக்க கூடாது. ஆனால் வாய்ப்பு தரப்பட்டு, வெற்றியும் பெற்றுள்ளார். அதற்கு பிறகு எம்.பி என்ற அந்தஸ்த்தில் இன்னும் அதிக குற்றங்களை செய்துள்ளார். அவரது வீட்டில் வேலை பார்க்கும் எட்டு பெண்கள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாலியல் துன்புறுத்தலை வெளியில் சொல்ல முடியாமல் சிலர் வேலையை விட்டு விலகி உள்ளனர்.
ஆக, வீட்டுக்குள்ளேயே இந்த தப்புகள் நடக்கும் என்றால், அந்த குடும்பத்தின் யோக்கியதை என்ன என்று பார்க்க வேண்டும்.
அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரில் தானும், தன் மகளுமே பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஒட்டு மொத்த சமூகமும் ஆயிரக்கணக்கான பாலியல் வீடியோ காட்சிகளால் கொந்தளித்து போன நிலையில் தான் இந்த பணிப்பெண்ணுக்கு ரேவண்ணா மீது புகார் கொடுக்கும் தைரியமே வந்துள்ளது. இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே தற்போது பகிரங்கமாக புகார் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தது கவனிக்கதக்கது.
தேவகவுடாவின் மூத்த மகன் ஹெச்.டி.ரேவண்ணாவும் – அதாவது பிரஜ்வால் ரேவண்ணாவின் அப்பாவும் – இது போன்ற பாலியல் தொல்லைகளை வீட்டு பணிப் பெண்களுக்கு கொடுத்துள்ளார் என்பது பேரவலம். இதன்படி அப்பா, மகன் பிரஜ்வல் ஆகிய இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மிகக் காலம் தாழ்ந்த நடவடிக்கையே! இதுவுமே கூட காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் தான் சாத்தியமானது. பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலே நரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பெண்களின் போராட்ட அறிவிப்பே காரணமாகும். ஆயினும் கைது செய்ய முயற்சிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட ஹெ.டி.ரேவண்ணா தான் ம.ஜ.க ஆட்சியில் பொதுப் பணித்துறை அமைச்சராக வாய்ப்பு பெற்றுள்ளார். இப்படிப்பட்ட மகனையும், பேரனையும் கண்டிக்காமல், அவர்களின் தவறுகளை தண்டிக்காமல் அரசியலில் அவர்களுக்கு மேன்மேலும் முக்கியத்துவம் தந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா தான் முதல் குற்றவாளியாகும்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.டி.குமாரசாமி, “எங்கள் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்க, காங்கிரஸ் செய்த சூழ்ச்சியே இது. இவை எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல. இது, பிரஜ்வல் ரேவண்ணாவின் தனிப்பட்ட பிரச்சினை. நான் பிரஜ்வால் ரேவண்ணாவுடன் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என நழுவி உள்ளார். இவ்வளவு படுமோசமான கூடப் பிறந்த அண்ணனுக்கும், அவரது மகனுக்கும் உயர்பதவி வாய்ப்புகளை பார்த்து அழகு பார்த்த குமாரசாமி, ”எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல” எனச் சொல்லும் துணிச்சலை எங்கிருந்து தான் பெற்றாரோ! தற்போதுமே கூட ரேவண்ணாவை தற்காலிகமாகத் தான் கட்சியில் இருந்து நீக்கி உள்ளாராம்!
இத்தனை வருடங்கள் மஜகவில் அனைத்தும் அறிந்திருந்தும் மவுனம் காத்த நிர்வாகிகளில் ஒரு சிலர் தற்போது ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சொன்னதும், ”ரேவண்ணாவா? 19 எம்.எல்.ஏக்களா கட்சித் தலைமை முடிவு செய்யட்டும்” எனப் பேசி இருப்பதும் சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பவே! இத்தனை நாள் இந்த விவகாரத்தை நன்கு தெரிந்திருந்தும் அவரவர்க்கான ஆதாயங்களை பெற்றுக் கொண்டு, அமைதி காத்த அனைத்து மஜ கட்சியினர் அனைவரும் குற்றவாளிகளே!
இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கிய நிலையில் தான் மூன்று நாட்கள் மவுனத்தை கலைத்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. அமித்ஷாவும் வாயைத் திறந்தார்.
இந் நிலையில், புகாரளித்த பெண்ணின் மாமியார் கவுரம்மாவை ரேவண்ணா குடும்பத்தினர் ஆசைகாட்டியும், நிர்பந்தித்தும் மருகளுக்கு எதிராக பேச வைத்துள்ளது கொடுமை. அந்த மாமியாரை ஹாசனில் செய்தியாளர்களைச் சந்திக்க செய்துள்ளனர் ரேவண்ணா குடும்பத்தினர். அப்போது, ரேவண்ணா மீது புகார் அளித்துள்ள எனது மருமகள் கடந்த 5 ஆண்டுக்கு முன்பே அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். ஆனால் இப்போது தான் புகார் அளித்துள்ளார். இதன் பின்னணி நோக்கம் வேறாக இருக்கிறது. தேவகவுடா குடும்பத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது மருமகளின் நோக்கமாக உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோவில் உண்மையில்லை…’’ எனக் கூறியுள்ளார்! மருமகளும், பேத்தியும் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு கிழவியை இப்படி பேச வைக்கும் அரசியல் அதிகார அழுத்தத்தை என்னென்பது?
ஹெச்.டி.ரேவண்ணா கடவுள், ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். அவரது நெற்றியில் எப்போதும் திலகத்துடனும், கையில் கயிறுகளுடனும், கழுத்தில் ருத்ராட்சத்துடனும், விரல்களில் அதிர்ஷ்ட கற்களின் மோதிரத்தையும் அணிந்து, பக்திமானாக தன்னை வெளிக் காட்டிக் கொண்டு, தன் பாலியல் வக்கிரங்களுக்கு பக்தியை கவசமாக்கிக் கொண்டுள்ளார்.
இந்த பாலியல் துன்புறுத்தல்கள் வெளிவரக் காரணமானவர் ரேவண்ணா குடும்பத்திற்கு 15 வருடங்களாக கார் டிரைவராக இருந்த கார்த்திக் என்பவர் தான். ஒரு நிலப் பிரச்சினை தொடர்பாக அவரை ரேவண்ணா தாக்கிவிட்டு, அந்த நிலத்தை பறித்துக் கொண்டதன் விளைவாக கார்த்திக் ரேவண்ணாவை அம்பலப்படுத்திவிட்டார்.
சென்ற ஆண்டு ஜூன் மாதமே ஒரு சில புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி உள்ளன! அதை வெளிக் கொணர்ந்தது கார்த்திக்கும், முன்னாள் காங்கிரஸ்காரரும், இன்னாள் பாஜக பிரமுகருமான தேவராஜே கவுடா என்பவர் தான்! இதை சில ஊடகங்களும் கூட அம்பலப்படுத்தின! உடனே, தன்னைப் பற்றி செய்தி போடுவதற்கு குறிப்பிட்ட ஊடகங்களின் மீது தடை விதிக்க உயர் நீதிமன்றத்தை அணுகி தப்பித்துள்ளார் ரேவண்ணா! ஆக, உயர் நீதிமன்றத்தின் யோக்கியதை இவ்வளவு தான்!
இத்தனை நிகழ்வுகளையும் ஆளும் காங்கிரஸ் வேடிக்கை பார்த்தபடி இருந்துள்ளது தான் கொடுமை. காங்கிரஸ் ஆட்சி சென்ற ஆண்டு ஜுன் மாதமே ரேவண்ணா மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. தற்போது தேர்தல் நடப்பதற்கு முதல் நாள் இந்த ஆபாச வீடியோ வெளியாகி, தேர்தல் வாக்குப் பதிவு அடுத்த நாள் நடந்து முடிந்து, அதற்கடுத்த நாள் ரேவண்ணா ஜெர்மனி தப்பித்து செல்லும் வரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததை எப்படி புரிந்து கொள்வது? மாநில காவல்துறையும், உளவுத் துறையும் அறியாமல் ஒரு பிரபல குற்றவாளி வெளிநாட்டுக்கு பறக்கவே வாய்ப்பில்லை. அரசியல் செல்வாக்குள்ள குடும்ப பின்னணியும், சக்தி வாய்ந்த சாதியின் பின்புலமும் சட்டத்தின் கைகளை கட்டிப் போட்டுவிட்டதா?
கைது செய்யத் தான் துணிவில்லை என்றால், கண்காணிக்கவும் துப்பில்லை என்றால், இது என்ன ஆட்சி? வெறுமனே இந்த பிரச்சினையால் மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயங்களை அடைவதே போதுமானது என காங்கிரஸ் கருதுகிறது என்று தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், கொந்தளிக்கும் சமூகம் ரேவண்ணா கைது செய்யப்படும் வரை ஓயப் போவதில்லை.
Also read
பெண்கள் விஷயத்தில் எந்த அரசியல்வாதியும் உத்தமன் இல்லை. அதனால், ‘பிறிதொரு அரசியல்வாதியை தண்டித்தால், நம்மை பற்றிய உண்மைகளை அவர் அம்பலபடுத்திவிடுவார்’ என அச்சப்படுகின்றனரோ, என்னவோ…!
இன்றைக்கு பல கட்சிகளில் தலைமையில் இருப்பவர்களுக்கு பெண்களை கூட்டிக் கொடுத்து பதவி வாய்ப்புகளை பெறுபவர்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தலைமை பொறுப்புகளில் பாலியல் பலவீனமுள்ள ரேவண்ணாக்கள் கணிசமான அளவில் இருந்து கொண்டு தான் உள்ளனர்! இவர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை. இன்னும் சொல்வதென்றால், இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் கூட்டுக் களவாணிகளே! பல விவகாரங்கள் அம்பலத்திற்கே வருவதில்லை.
இந்தியாவில் பெண்கள் விவகாரத்தில் எந்த அரசியல்வாதியும் பெரும்பாலும் தண்டனையே பெறுவதில்லை. இதற்கு மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பல வருடங்களாக கொடூரமான பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான பிரிட்ஜ் பூசன் சிங்கை கடும் போராட்டம் நடத்தியும் கூட மத்திய பாஜக அரசு தண்டிக்கவில்லை போன்ற சம்பவங்களே சாட்சியாகும்!
சாவித்திரி கண்ணன்
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும் துணை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கிற்கும் கண்டிப்பாக தொடர்பு இருந்திருக்க வேண்டும். கல்லூரி மாணவிகள் தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்க வேண்டும். (இருக்கலாம்) அதனால் தான் அவரை மட்டுமே குற்றவாளி எனக் கூறி பத்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண் விவகாரத்தை பொருத்தவரை தமிழகத்தில் உள்ள தலைவர்களிலும் பல யோக்கியம் இல்லை. இதில் தந்தை மகன் என்று வேறுபாடு எல்லாம் இல்லை. சென்னை எழும்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் மிகப் பிரபலமான அரசியல்தந்தைக்குப் பின் அவருடைய மகன் சென்று பிரபல நடிகையை மிரட்டிய வரலாறு கண்ணன் அறியாதது அல்ல. இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றால் இன்றும் மக்களிடம் நிலவி வரும் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அனைவரிடமும் பணம் இருந்தால் எதிர்காலத்தில் பெண்கள் காப்பாற்றப் படலாம். தொடக்கத்திலேயே போலீசாரிடம் சென்று தைரியமாக தங்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை பெண்கள் புகாராக முறையிடும் பட்சத்தில் முத்து போலீஸ் நிலையத்தில் இருக்கும் அதிகாரியும் நேர்மையானவராக இருப்பின் இது போன்ற பிரச்சனைகள் நடக்காமல் தடுக்கலாம். இல்லையென்றால் இது இன்னும் தொடரும், சிக்கினாலும் நிர்மலா தேவி போல் ஒருவரை பலிகடா ஆக்கி மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள். பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் நீதிமன்ற கூண்டில் நின்று ஆக்ரோஷமாக கருணாநிதி எழுதிய உரையாடலை பேசி முடிப்பார். அதன் நிறைவில் இந்தப் பிரச்சனைகள் களையபடும் வரை குற்றங்களும் குற்றவாளிகளும் குறையப்போவதில்லை என்ற பொருள் படும்படி இருக்கும் அந்த உரையாடல். அது இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்தும்
நியாயமான கேள்விகள்.
விடை தர யார் இருக்கின்றனர்?
மிக கொடூரம். “இந்தியாவில் பெண்கள் விவகாரத்தில் எந்த அரசியல்வாதியும் பெரும்பாலும் தண்டனையே பெறுவதில்லை. ” என்ற வரிகள் நாட்டில் அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து விட்டது என்று உணர்த்துகிறது
பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது அரசியல்வாதிகளிடம் அதிகமாகி வருகிறது.
காரணம் அதிகாரத்திமிரும், பெண்களை போகப் பொருளாக நினைப்பதுமே காரணம் ஆகும்.
இதற்கு இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் மோடி , குஜராத் முதல்வராக இருந்த போது ஓர் பெண் பொறியாளரை கர்நாடகா வரை தன் காவல் துறை மூலம் உளவு பார்த்தது நாடே அறியும்.
ஆளுநர் மாளிகை விபச்சார விடுதி ஆக்கிய பெருமை ஆளுநர்களான என் டி திவாரி சண்முகநாதன் போன்றோரே சாட்சி.
பாஜக வைச் சேர்ந்த ஆளுநர்களின் பாலியல் ஒழுக்கக்கேடு பற்றி பாஜக வில் இருந்த ஊடகவியலாளர்கள் பலரின் முகநூல் பதிவே சிறந்த சாட்சி