தொலைந்து போன பெண்கள்! தொலையாத பெண்மை!

பீட்டர் துரைராஜ்

‘லாபதா லேடீஸ்’ என்றால் ‘தொலைந்து போன பெண்கள்’ என்பதாகும். யதார்த்தமான  கிராமத்து பெண்கள்,  வெள்ளந்தி குணங்கள்..மனைவியை தொலைத்த கணவர்கள்.. என சிற்பம் போல செதுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் வழியே, நுட்பமான பெண்ணியமும், ஆணாதிக்க அவலமும் எள்ளலோடு பேசப்படும் சுவாரஷ்யமான படம்;

அமீர்கான் தயாரிப்பில், அவரது மனைவி கிரண்ராவ் இயக்கத்தில் வந்துள்ள  இந்த இந்திப் படத்தை அனைவரும் கொண்டாடுகின்றனர்! இது பெண்களுக்காக, பெண்களை மையப்படுத்தி, ஒரு பெண்ணால் எடுக்கப்பட்ட படம்!

கதை வட இந்தியாவில் ஒரு கிராமத்தில் தொடங்குகிறது. ‘கணவன் பெயரைச் சொல்லக் கூடாது, அவனது செருப்பைப் பார்த்து தான் நடக்க வேண்டும்’ என்று சொல்லி வளர்க்கப்பட்ட பெண்ணிற்கு திருமணம் நடக்கிறது. மனைவியை கணவன் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான்!

ஒரு இரயில் லெவல் கிராசிங்கில் ஒரு தொலை தூர இரயில் நிற்கிறது. அனுமதிக்கப்பட்ட இரயில் நிலையம் போல, அதன் மீது மர ஏணியை சாய்த்து, காத்திருக்கும் பயணிகள் ஏறுகிறார்கள். (இதுபோல தமிழ்நாட்டில் நடக்குமா!) அதே இரயிலில் இவர்களைப் போலவே மணம் முடித்த வேறொரு தம்பதியினரும், அவர்கள் உறவினர்களோடு பயணிக்கிறார்கள். இரண்டு மணப் பெண்களுமே திருமணக் கோலத்தில், சிவப்புச் சேலையில், குனிந்த தலை நிமிராமல், முக்காடோடு  இருக்கிறார்கள்.

பயணத்தின் ஊடாக தன் மகன் வரதட்சணையாக எவ்வளவு பெற்றான், எத்தனை பவுன் நகை பெண்ணுக்கு போட்டார்கள் என பெருமிதத்தோடு பேசிக்  கொண்டிருக்கிறார்கள். இறங்க வேண்டிய நிலையம் வரும் போது, தூக்கக் கலக்கத்தில், அவசர கதியில் மணமகளை கை பிடித்து இரயிலில் இருந்து இறங்கி, பேருந்து பிடித்து, கிராமத்திற்கு மணமகன் அழைத்து வருகிறான். பெற்றோர் ஆரத்தி எடுக்கும் போது தான், மணப்பெண் தங்கள் மருமகள் இல்லை என்பது தெரிகிறது. அதன் பிறகு சில நாட்கள் நடப்பது தான் கூத்து.

அதே நேரத்தில் இரயிலில் கணவனை தவறவிட்ட மணப்பெண் வேறு வழியின்றி,  இரண்டாவது மணமகனின் குடும்பம் இறங்கிய இரயில் நிலையத்தில் இறங்கி, அங்கேயே தங்குகிறாள். கதை செல் போன் புழக்கத்திற்கு பரவலாக இன்னமும் வராத 2001 காலத்தில் நடக்கிறது. ஒரு பூவின் பெயர் தான் தன் கணவனின் கிராமத்தின் பெயர் என்கிறாள் மணமகளான ஃபூல் (அதாவது பூ). இந்தப் படத்தில் பூக்களின் பெயர்கள் பரவலாக  வைக்கப்பட்டுள்ளன.

எப்படி கொஞ்சம் கூட விவரம் இல்லாத பெண்ணாக இருக்க முடியும்? திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் போது,  பெண் வீ்ட்டார் ஒருவர் கூட  உடன் போக மாட்டார்களா என்ன? எத்தனை நாள் மணமகளை கண்டு பிடிக்காமல் இருக்க முடியும் என்ற  கேள்விகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால் இது அற்புதமான படம்.

மனைவியை இழந்து விட்ட கணவன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறான். தன் மனைவி குறித்த தவிப்பை புஷ்பக் நன்றாக காட்டுகிறான். அவனுடைய காதல் மனைவி அவனுக்கு வேண்டும்.  வெற்றிலை போட்டுக் கொண்டே பேசும்  காவல் ஆய்வாளரின் நடிப்பு அபாரம். அவனுக்கு மாமூலும் வேண்டும்; அதே சமயம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் அளிக்க வேண்டும். படம் முழுமையும் மெலிதான நகைச்சுவையோடு ஓடுகிறது. செல்போன் இருந்தும், தன் குடும்பத்திற்கு செய்தி சொல்லாத மணப்பெண்ணிற்கு கொள்ளைக்காரர்களோடு தொடர்பு இருக்கிறது என நம்புகிறான். இதனை எந்த ஒரு சராசாரி காவல் நிலையமாகவும் நாம் கருத முடியும்.

இரயில் நிலையத்தில் தவிக்கும் பெண்ணான ஃபூல் பாத்திரத்தில் நித்தான்ஷி கோயல் நடித்துள்ளார். அவரது முகம் வெளிப்படுத்தும் அப்பாவித்தனம் வெகு இயல்பாக உள்ளது. காவல் நிலையத்திற்கு போக விருப்பமில்லை. சொந்த கிராமத்திற்கு, கணவன் இல்லாமல் போனால் அவமானமாக இருக்கும்.  எந்த சமையலறைக்கு ஏற்றவாறும் தன்னை மாற்றிக் கொள்ள அவரது தாய் வளர்த்துள்ளார். எனவே அவள் இரயில் கேண்டீனில் பால்கோவா கிண்டுவதில் வியப்பில்லை.

அவளுக்கு புகலிடம் கொடுக்கும், இரயில் கேண்டீன் நடத்தும் மஞ்சுமாய் யதார்த்தமாக பேசுகிறாள். ‘கணவன் அடிப்பதற்கு உரிமை இல்லையா என்ன ?’ என்று கேட்ட குடிகார கணவனிடம், ‘அதே உரிமையை நான் ஒருநாள் எடுத்துக் கொண்டேன். அன்றோடு பிரச்சினை தீர்ந்தது’ என்கிறாள்.

பெண்கள் பல்வேறு படிநிலைகளில், எதிர் கொள்ளும் சிக்கல்களை அழகாக இப்படம் சித்தரிக்கிறது. மேற்படிப்பு படிப்பவளை தடுத்து திருமணம் செய்கிறார்கள்! கணவன்  பொறுப்பற்றவனாகவும் இருக்கிறான்… எனவே, அழைத்துச் செல்வது கணவன் அல்ல, என்று தெரிந்தும் செல்கிறாள். அவர்கள் வீட்டிலேயே தங்குகிறாள். அவள் அங்கு போன பிறகு அந்த வீட்டின் வரைபடம் மாறுகிறது. அவள் நாத்தனார் மெதுவாக தன் கணவன் பெயரைச் சொல்கிறாள். அவள் ஓவியம் வரைவதை மறைக்க வேண்டியதில்லை. விவசாயத்திற்கு ஆலோசனை சொல்கிறாள். கணவனுடைய தம்பிக்கு காதல் வரலாம்.  ‘எல்லாம் சுபம்’ என இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு படம் முடிவடைகிறது.

ஆணாதிக்கத்திற்கு தன்னை முற்றாக ஒப்புக் கொடுத்து, கணவனின் பெயரையும் உச்சரிக்க தயங்கும் ஃபூல்குமாரி கதாபாத்திரம், படிக்க விரும்பி அது முடியாமல் போன நிலையில், திருமணத்தை தவிர்க்க முயலும் ஜெயா கதாபாத்திரம், அடித்து அடிமைப்படுத்திய கணவனை பிரிந்து, தனித்து வாழும் மஞ்சு மாயி என்ற உழைப்பாளி பெண்ணின் கதாபாத்திரம் என மூன்று கதாபாத்திரங்களும் முத்திரை பதிக்கின்றன!

கதையும், அதன் வசனங்களும் இப்படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.பிலிப் கோஸ்வாமி, ஸ்னேகா தேசாய்,  திவ்யநிதி ஷர்மா ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். ‘மும்பை டைரிஸ்’ எடுத்த இயக்குநரான கிரண் ராவ் இயக்கி இருக்கிறார். கதை ‘நிர்மல பிரதேசம்’ என்னும் மாநிலத்தில் நடக்கிறது. இதனை எந்த ஒரு இந்தி மாநிலமாகவும் நாம் கருத முடியும். தரவரிசையில், ஐஎம்டிபி 8.5 புள்ளி கொடுத்துள்ளது.

நெட்பிளிக்சில் ஓடும் இப்படத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘So cute’ என்று பெண்ணியச் செயற்பாட்டாளரான கீதா நாராயணன் இப்படம் குறித்து ஒரு வரியில் எழுதியிருக்கிறார்.

திரை விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time