யார், யாரை எல்லாம் காப்பாற்ற இந்த தீர்ப்பு!

-சாவித்திரி கண்ணன்

இந்த நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்த தப்பு செய்தாலும் ஒரு போதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதோடு, அவர்களின் கருவியாக பயன்படுத்தப்பட்ட எளிமையானவர் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள்! வி.வி.ஐ.பிக்களை காப்பாற்ற, ஒரு வழக்கை எப்படி எல்லாம் நீர்த்து போக வைப்பது என்பதற்கு இதுவே அத்தாட்சி;

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு பழக்கப்படுத்த முயன்ற அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு வழக்கில் கல்லூரி மாணவிகளை அனுபவிக்கத் துடித்தவர்கள் யார்? தொடர்ந்து அனுபவித்து வந்தவர்கள் யார்? இதில் சங்கிலி தொடர் போல இருக்கும் – பல நிலைகளில் உள்ளவர்கள் – யார்? யார்? என்பதை எல்லாம் சமார்த்தியமாக மறைத்து, தனி ஒரு மனுஷி மட்டும் தண்டிக்கப்பட்டு இருப்பது, இந்த வழக்கில் அதிகார அழுத்தம் எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

நிர்மலா தேவி என்பவர் ஒரு சாதாரண உதவி பேராசிரியை! ஆனால், அவர் மதுரை காமராஜர் விருந்தினர் மாளிகையில் நிரந்தரமாக ரூம் போட்டு தங்கியுள்ளார்! பிரபல அரசியல்வாதிகள், அமைச்சர்கள் தொடங்கி ஆளுநர் வரை அவர் நெருக்கம் பாராட்டி உள்ளார். அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்ளும் நிகழ்வில் – அவரை வரவேற்கும் முதல் வரிசை வி.ஐ.பிக்கள் வரிசையில் அவருக்கும் இடம் கொடுத்துள்ளனர்.

மதுரை காமராஜர் பலகலைக் கழக துணைவேந்தருக்கோ, அதன் பதிவாளருக்கோ மற்ற அதிகார நிலையில் உள்ளவர்களுக்கோ தெரியாமல் அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை! பல்கலை கழகத்தை பாலியல் கழகமாக மாற்றிய எந்த பாவியுமே தண்டிக்கபடவில்லையே!

நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவில் ”யூனிவர்சிட்டியில இருக்கிற மிக முக்கியமானவங்க காலேஜ் மாணவிகளை விரும்பறாங்க..! இதன் தொடர்பில் தனக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறாங்க…” எனச் சொல்லி உள்ளார்.

ஏப்ரல் 2018 தொடங்கி சுமார் ஆறு ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த பல கட்ட விசாரணையில் மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் சக பேராசிரியர்கள், மதுரை காமராஜர் பல்கலையின் நிர்வாகிகள்..என நூற்றுக்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது.

இதில் ஆரம்ப நிலையில் கைது செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் தண்டிக்கபடாமல் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.

அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி முதல்வரும், நிர்வாகிகளும் கல்லூரிக்கே சரியாக வராமல் சதா சர்வகாலமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் தங்கியபடி  வி.வி.ஐ.பிக்களோடு வலம் வந்த கணித பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஏன் சம்பளம் தந்து வேலையில் வைத்திருந்தனர்…? நிர்மலாதேவியின் வி.ஐ.பிக்கள் சகவாசம் இந்தக் கல்லூரிக்கு என்னென்ன பலாபலன்களை பெற்றுத் தந்தது..?  என்ற கேள்விகளுக்கு தீர்ப்பில் விடையில்லை.

இந்த வழக்கில் உள்ள அனைத்து முக்கியஸ்தர்களையும் காப்பாற்றும் வண்ணமாக ஆறாண்டுகள் விரைவு மகளீர் நீதிமன்றம் தாமதமாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளதோ.. என ஐயுறத் தோன்றுகிறது.

இந்த வழக்கில் அன்றைய கவர்னர் பன்வாரிலால் புரோகிதிற்கு தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவாக இருந்த நிலையில், அவரை தப்புவிப்பதற்காக இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய சி.பி,சி.ஐடியின் கூடுதல் டிஜிபி ஜெயகாந்த் முரளி மாற்றப்பட்டு, அமரேஷ் பூஜாரி என்பவர் நியமிக்கப்பட்டார். இத்துடன் ஆளுநரே இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் என்பவரை கொண்டு விசாரணை கமிஷன் அமைத்து, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டார் என்பதை நாம் மறக்க முடியாது.

இதை அன்றைக்கு கடுமையாக எதிர்த்து, ”இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்” என முழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கில் உரிய முன்னெடுப்புகளை செய்யவில்லை என்பதோடு, இதை நீர்த்து போக என்னென்ன செய்ய முடியுமோ.., அவை அனைத்துக்கும் உறுதுணையாக ஆட்சி நிர்வாகத்தை அனுசரித்து செயல்பட வழி வகுத்தார் என்பது தான் வேதனை. பொள்ளாச்சியில் மாணவிகள் பாதிக்கப்பட்ட வழக்கிலும் கிட்டதட்ட இந்த ஆட்சியில் உரிய விசாரணையும், நல்ல தீர்ப்பும் கிடைக்கவில்லை.

அந்த வழக்கை நீர்த்து போகச் செய்த சி.பி.சி.ஐ.டி அதிகாரி ராஜேஸ்வரியைத் தான் இந்த வழக்கில் இந்த ஆட்சியாளர்களும் பயன்படுத்தி உள்ளனர்! ஆக, பெண்கள் விவகாரத்தில் அதிகார மையத்தில் இருப்பவர்கள் கட்சி வித்தியாசம் பாராமல் ஒருவரை ஒருவர் பாதுகாக்கவே விரும்புகின்றனர். ஏனெனில், அதிகார உச்சத்தில் இருப்பவர்களில் மிகப் பெரும்பாலோர் பெண்கள் விவகாரத்தில் பலவீனமானவர்களாக உள்ளனர். தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி இது போன்ற பாலியல் சுரண்டலை செய்பவர்களாக உள்ளனர். ஆகையால், சுலபத்தில் தங்களுக்குள் ஒன்றுபட்டு விடுகின்றனர்.

நிர்மலாதேவியை 11 மாதங்கள் சிறையில் அடைத்து, அவர் எந்த உண்மையையும் சொல்லக் கூடாது என நிர்பந்திக்க நிர்வாணப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு  எல்லாம் கொடுமைபடுத்தபட்டதாக செய்திகள் வந்தன! சிறையில் இருந்து வெளியான நிர்மலா மன அழுத்த பாதிப்பில் இருந்த செய்திகளும் தொடர்ந்து வந்தன! உண்மையை பேச முயற்சித்து இருந்தாலே கூட, நிர்மலா இன்றைக்கு உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.

இந்த வழக்கின் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், “மாணவிகள் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், பாதிக்கப்படுவார்கள் என்று தான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். துன்புறுத்தும் வகையில் பேசி குற்றத்துக்கு அழைத்ததே குற்றம் தான். சாட்சிகளிடம் விசாரணை முறையாக நடைபெற்றுள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றவாளியான நிர்மலா தேவிக்கு அதிகபட்ச தண்டனை வேண்டும்’’ என கேட்டுள்ளார்.

பல்கலைக் கழக பாலியல் புரோக்கர்கள் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி

மாணவிகள் பாதிக்கப்படவில்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். காரணம், மாணவிகள் பாதிக்கப்பட்டதை ஒத்துக் கொண்டால், அந்த பாதிப்பில் நேரடியாக சம்பந்தப்பட்ட – அதாவது அவர்களை அனுபவித்த வி.வி.ஐபிக்கள் – அனைவரும் குற்றவாளிகள் எனக் காட்ட வேண்டியதாகிவிடுமே! எனவே அரசின் நோக்கம் இதில் தெளிவாகவே உள்ளது. உண்மையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்வதற்கு தோதாகவே அரசின் அணுகுமுறைகள் உதவி இருக்கிறது. விசாரணையை நீர்த்து போகச் செய்யும் வண்ணம் 1,360 பக்க அறிக்கையை கவனமாக தயார் செய்து கொண்டு, விசாரணை, முறையாக நடைபெற்றதாக அரசு தரப்பு அறிவிப்பது கபட நாடகமன்றி வேறல்ல.

ஆக, ஒரு எளிய பெண்மணியை பலிகடாவாக்கிவிட்டு- 10 ஆண்டுகள் தண்டனை, 2.45 லட்சம் அபராதம் என கடும் தண்டனை அளித்துவிட்டு, இளம் கல்லூரி மாணவிகளை காம வேட்டையாடிய – அதற்கு பல நிலைகளில் உதவிய – அனைத்து தரப்பினரும் தப்புவிக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை!

இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தீர்ப்பு வழங்கியதும், விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரியும் பெண்களாகவே இருந்தாலும், இந்த ஆணாதிக்கமிக்க, பசாங்குத்தனமான சமூகத்தில் நியாயத்திற்கு வாய்ப்பில்லை என்பது நிருபணமாகியுள்ளது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time