கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிறதா?

-அஜிதகேச கம்பளன்

கை உடைப்பு, ஒன்றடுத்து ஒன்றென பல வழக்குகள், நிரந்தரமாக சிறையில் வைக்கும் முயற்சியா..? குண்டர் சட்டம் பாய்வதற்கான நகர்வுகள்! சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி சிகிச்சை பெறும் நிலை! துடைப்பத்தோடு பெண்கள் அழைத்து வரப்பட்டது.. ஆக, சவுக்கு சங்கரை என்ன தான் செய்ய நினைக்கிறார்கள்?

கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் நேற்று (மே-8,2024) சிறப்பு நீதிமன்றத்தில். மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்! அப்போது அரசியல் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருவது போல, சவுக்கு சங்கர் மீது துடைப்பத்தை வீச, கூட்டம் கூட்டமாக பெண்களை கூட்டி வந்த சம்பவம் நடந்துள்ளது.

யாருக்கு எதிராக கூட்டி வரப் பெற்றோம்? எதற்காக வந்தோம்?…சம்பந்தப்பட்ட நபர் செய்த குற்றம் என்ன..? என எதுவும் தெரியாத நிலையில், அந்த பெண்கள் அழைத்து வரப்பட்டது அவர்களிடம் பேசியதில் தெரிய வந்தது. அவசர கதியில் அழைத்து வரப்பட்டதில்,’ பெண்கள் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்’ என்ற பேனரை கையில் கொடுத்து நிற்க வைத்துள்ளனர்.

சவுக்கு சங்கரை நிரந்தரமாக சிறையில் வைக்க வலுவான குற்றம், மற்றும் அதற்கான ஆதாரங்களையும், புகார்களையும் பல்வேறு நிலைகளில் காவல்துறை உருவாக்கி வருகிறது. கஞ்சா வழக்கு, மாவட்டம் தோறும் ஆள் வைத்து புதுப் புது வழக்குகள், அதை விட மோசமாக மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான சவுக்கு சங்கர் மீது பெண்களை தூண்டி விட்டு, பணம் கொடுத்து துடைப்பத்துடன் அழைத்து வந்து தாக்க தூண்டி விட்ட சம்பவத்தை பாலிமார் தொலைகாட்சி அம்பலப்படுத்தி உள்ளது.

இது கோர்ட், வழக்கு, சிறை என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் சவுக்கு சங்கர் மீது இந்த ஆட்சியாளர்களுக்கு உள்ள வன்மத்தை காட்டுவதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அரசியல் கூட்டத்திற்கு ஆட்களை அழைத்துச் சென்றது போல பணம் கொடுத்து, ஏழைப் பெண்களை அழைத்துச் சென்று, இந்த கீழ்த்தரமான வேலையை செய்துள்ளனர்.

 சவுக்கு சங்கர் கைதின் பின்னணியில் முழுமையாக  ஆளும் கட்சி தலையீடு  உள்ளது என்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. அவர் மீது குண்டர் சட்டத்தை பிரயோகிக்க உள்ளதாக பரவலாக பேசப்படும் நிலையில் ஒரு வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டு அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் திமுக அரசில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத் திறமையின்மை கொண்டவர் என்றும் தொடர்ந்து விமர்சித்து வந்தார்! இந்தச் சூழலில் அவரது சவுக்கு மீடியாவில் வேலை செய்த கார்த்திக் என்ற மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றொரு நெறியாளரான லியோ என்பவரை கைது செய்வதற்கு அவரது காதலியை தொடர்பு கொண்டு புகார் கொடுக்க கேட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் கோபத்திற்கு ஆளான சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ் யூடியூப் சானலில் பெலிஸ் ஜெரால்டுக்கு தந்த நேர்காணலில் காவல்துறையில் பெண் காவலர்களை உயர் அதிகாரிகள் சிலர் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாகச் சொல்ல வந்த போது, ஒரு குறிப்பிட்ட அதிகாரியை அவரது பதவி மற்றும் அதிகாரம் காரணமாக அவர் பணிக்கு செல்லும் இடமெல்லாம் காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் காதலிப்பதாக சொல்லியது பெரும் சர்ச்சையாக வெடித்துவிட்டது. இது காவல்துறையில் வேலை பார்க்கும் பெண்களின் கண்ணியத்தை குலைப்பதான பேச்சாக கருதப்பட்ட நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுக அரசு சவுக்கு சங்கரை தூக்கியது.

தேனியில் வைத்து கைது செய்யப்பட்ட போது சவுக்கு சங்கர் காரில் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் சவுக்கு சங்கரின் டிரைவரும், நண்பரும் சேர்க்கப்பட்டனர்.

”என்னை கைது செய்து சிறையில் அடைக்கும் ஆபத்துள்ளது” என சமீபமாக சவுக்கு சங்கர் பேசி வந்த நிலையில், அவர் காரில் இருந்து கஞ்சா எடுப்பது போன்றவை ‘ஜோடிக்கப்பட்ட வழக்கு’ என்ற கருத்து பரவலாக உள்ளது. ஜெயலலிதா காலத்தில் தனக்கு எதிரானவர்களை அவர் இவ்விதம் தான் பழிவாங்கினார்.

அரசு மீதும் , ஆட்சியாளர்கள் மீதும் தொடர்ந்து சவுக்கு சங்கர் எல்லை தாண்டி வைக்கும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்களில் நமக்கு முழுமையான உடன்பாடு இல்லை. அதில் பொய்கள், புனைவுகள் இருக்கும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து அரசு தண்டிக்கட்டும். அப்படி தண்டிக்கும் பட்சத்தில் யாரும் அதை கேள்விக்கு உட்படுத்த முடியாது.

ஆனால், ஆட்சி அதிகாரம் தங்களிடம் உள்ளது என்பதற்காக விமர்சனம் செய்வோரை, கஞ்சா வழக்கு, குண்டாஸ் , போன்ற வழக்குகள் போடுவது, சிறையில் கடுமையாக தாக்குவது.., கைகளை ஒடிப்பது.. போன்ற வகையில்  அச்சுறுத்தி, முடக்க நினைக்கும் செயல் மனித உரிமை மீறலாகும். தமிழகம் ‘போலீஸ் ஸ்டேட்’ ஆக மாறிக் கொண்டிருக்கிறதோ..’ என்ற அச்சத்தையே இது ஏற்படுத்துகிறது.

இவை அனைத்தையும் பொதுச் சமூகம் பார்த்துக் கொண்டு உள்ளது என்ற பிரக்ஜையாவது ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா? தெரியவில்லை.

சிறையில் சவுக்கு சங்கர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது கவனத்திற்கு உரியது. அந்த புகாரின்அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு மருத்துவக் குழுவினர் சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில்  சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு தாக்கப்பட்டது உறுதியானதால், சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான போது தான் தாக்கப்பட்டு, கை முறிந்துள்ளதை நீதிபதியிடம் கூறிய சவுக்கு சங்கர், ”எனக்கு கோவை சிறையில் பாதுகாப்பில்லை, மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று கூறியதை நீதிபதி சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி ஆகியோர், இது தொடர்பாக சவுக்கு சங்கர் காயம் அடைந்துள்ளாரா என்பது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

ஆக, சிறையில் அடைப்பதன் மூலம், ‘சவுக்கு சங்கர் பேசுவதை முடக்கிவிட்டோம்’ என அரசு நிம்மதி கொள்ள முடியாதபடிக்கு சவுக்கு சங்கரை பெரும் பேசுபடு பொருள் ஆக்கி விட்டனர்…!

‘சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்பது போல, பதற்றத்திலும், ஆத்திரத்திலும் செய்யப்படும் முதிர்ச்சியற்ற இது போன்ற தரம் தாழ்ந்த அணுகுமுறைகள் சவுக்கு சங்கரை மேலும் ஹீரோ நிலைக்கே உயர்த்தும். ஆக, ‘வரம்பு மீறி பேசுகிறார்’ என்பதற்காக சவுக்கு சங்கரை அழித்துவிடச் செய்யும் நிதானமற்ற போக்குகள் அவரை மேலும் ஆளாக்கி விடுவதில் தான் சென்று முடியும்.

சவுக்கு சங்கரும், திமுக அரசும்

”பாசிச பாஜகவை எதிர்ப்போம்” என மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் திமுக அரசு, அதே பாசிச அணுகுமுறையை தன் அரசியல் எதிரிகளிடம் காட்டுவது முறையா?  ஜனநாயகத்திற்கு தகுமா?

அஜிதகேச கம்பளன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time