மாநில உரிமைகளுக்காக எதிர்கட்சிகள் ஒன்றுபடுமா?

-ஹரி பரந்தாமன்

டெல்லி மக்களின் நம்பிக்கையை பெற முடியாத பாஜக, அரவிந்த் கெஜ்ரிவாலின் நல்லாட்சியை முடக்க  என்னென்னவோ முயற்சிக்கிறது! கொல்லைப் புறமாக கவர்னரின் மூலம் அதிகாரம் செலுத்துவது போதாது என்று தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி, அராஜக சட்டம் ஒன்றை அரங்கேற்றத் துடிக்கிறது..! நடக்குமா..?

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி  டெல்லி சட்ட சபை தேர்தலில் கடந்த இரு முறையும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. எவ்வளவோ முயன்றும் பாஜக  தோல்வியை சந்தித்தது. டெல்லி மக்கள் தங்களின் ஜனநாயக விருப்பத்தை மிகத் தெளிவாக தெரிவித்து ஆம்  ஆத்மியை ஆட்சியில் அமர்த்தினர்.

மோடி அரசுக்கு ஜனநாயகத்தின் பேரில் எந்த நம்பிக்கையும் இல்லை. எதிர்க்கட்சி ஆட்சி ஆட்சி செய்யக்கூடிய எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கே கவர்னர்களின் மூலமாக மத்திய பாஜகவே ஆட்சி செய்ய அனைத்து  நகர்வுகளையும் செய்து வருகிறது. தமிழ்நாட்டிலும், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும், தெலுங்கானாவிலும் இதை நாம் பல நிகழ்வுகளில் காண்கிறோம். ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்திலும் இதே நிலைமை தான். பஞ்சாப் மாநில சட்டசபையை கூட்டுவதற்கு அங்கே உள்ள ஆளுநர் மறுத்து அழிச்சாட்டியம் செய்த போது, உச்ச நீதிமன்றத்தின் உதவியின் மூலமே மாநில சட்டசபை கூட்ட முடிந்தது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்த நாள் முதல், கெஜ்ரிவால் அரசை  செயல்பட விடாமல் செய்து வருகிறது மோடி அரசு. இதற்கு மோடி அரசால் நியமிக்கப்பட்ட   லெப்டினன்ட்  கவர்னரை  கருவியாக்கிக் கொள்கிறது. மக்கள் நலத்திட்டங்களை  கெஜ்ரிவால் அரசு கொண்டு வந்தபோதெல்லாம் அவற்றுக்கு ஒப்புதல் தர மறுத்து வந்தார் லெஃப்டினென்ட் கவர்னர்.

கவர்னர் மாளிகையில் இரவு முழுக்க படுத்து தர்ணா செய்த ஆம் ஆத்மி தலைவர்கள்!

ஒரு கட்டத்தில் வெகுண்டு எழுந்த கெஜ்ரிவால், கவர்னர் கையெழுத்து போடும் வரை அவரது மாளிகையில் இருந்து வெளியே போகப் போவதில்லை என்று தெரிவித்து, இரவு முழுக்க அங்கேயே படுத்து விட்டார் . இது இந்திய அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதுபோன்று ஒரு போராட்ட  உத்தியை வேறு மாநில முதல்வர்கள் கைக்கொண்டதில்லை. கெஜ்ரிவால் இறுதியில் வெற்றி பெற்றார் .உடனே, மக்கள் நல சட்டங்களுக்கு கையெழுத்தைப் போட்டார் ஆளுநர்.

இதையடுத்து ஆம் ஆத்மி அரசை முடக்க டெல்லி அரசு தேசியத் தலைநகர் பிரதேச திருத்த அறிவிப்பு- 2015 ல் வெளியிட்டது பாஜக அரசு!

அந்த சட்டத்தின்படி டெல்லி என்பது மாநிலம் அல்ல. எனவே மாநில அரசுக்கு சொந்தமான அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேசத்திற்கும் இருக்குமென்ற யூகமே தவறு.  டெல்லி அரசாங்கம் என்பதன் பொருள் துணைநிலை ஆளுநர் என்பவர் தானேயன்றி, மக்கள் தேர்ந்தெடுத்த அரசல்ல என அந்த அறிவிப்பு  வரையறுத்தது.  அந்த புதிய அறிவிப்பு மூலம் டெல்லி அரசின் அன்றாட நிகழ்வுகள், முடிவுகள், செயல்திட்டம்.. என எது ஒன்றை டெல்லி  அரசு முன்னெடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது என ‘செக்’ வைக்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். இந்த அறிவிப்பை அப்போது டெல்லி உயர் நீதிமன்றம் சரி தான் என்றது. அதற்கு மேல்முறையீடு செய்தது கெஜ்ரிவால் அரசு! அதில் தான் தற்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட  அமர்வு மே- 11, 2023 அன்று இறுதி தீர்ப்பு தந்தது.

ஆம் ஆத்மியை அழிக்கத் துடிக்கிறதா பாஜக அரசு?

தற்போது டெல்லி துணை முதல்வர்  சிசோடியாவை சிறையில் வைத்துள்ளது மோடி அரசு. இதுவரை அவருக்கு பிணை கூட கிடைக்கவில்லை. அமலாக்க துறையின் மூலம்  இந்த அடாவடி செயல்களை செய்து வருகிறது மோடி அரசு.

சிபிஐயும் ,தேசிய புலனாய்வுத் துறையையும், அமலாக்க துறையையும் முழுக்க முழுக்க சொந்த அரசியல் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயலை செய்து வருகிறது பாஜகவின் மோடி – அமித்ஷா அரசு. அவசரநிலை காலத்தில் இந்திராவின் அரசு செயல்பட்டதை விட மிக மோசமான நிலை தற்சமயம் நிலவுகிறது. இது ஒரு அறிவிக்கப்படாத அவசரகாலம்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசாங்கத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரையும் நியமிப்பது,  மாற்றம் செய்வது ஆகியவைகளை லெப்டினன்ட் கவர்னர் தான் செய்வார் என்று அநியாயம் செய்தது மோடி அரசு. அதன் மூலம் அரசு ஊழியர்கள் கெஜ்ரிவால் அரசுக்கு கட்டுப்படாமல் மோடி அரசுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள் என்பதே அவர்களின் மோசமான எண்ணம். இதன் மூலம் ஆம் ஆத்மி அரசையே செயல் இழக்க செய்தது மோடி அரசு.


வேறு வழியின்றி,  ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதி மன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்த, மிகச் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், மோடி அரசின் செயல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று சுட்டி காட்டியது .டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசே டெல்லி அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும்  மாற்றல்களை செய்ய முடியும் என்று தெளிவாக கூறியது.

டெல்லி மாநிலம் இந்தியாவின் தலைநகரமாக இருப்பதை ஒட்டி ,சில அதிகாரங்கள் மட்டும் ஒன்றிய அரசின் கையில் இருக்கிறது. அதன்படி, டெல்லி காவல்துறை, நிலம் சம்பந்தப்பட்ட துறை, சட்டம் ஒழுங்கு ஆகிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்றும் ,மற்ற டெல்லி மாநில அரசின் ஊழியர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள் என்றும், அதுவே ஜனநாயகத்தின் கோட்பாடு என்றும் தெளிவுபடுத்தியது உச்ச நீதிமன்றம்.

”டெல்லி அரசுக்கு தான் அதிகாரம்! லெப்டினண்ட் கவர்னருக்கு அல்ல” என்றது ஐந்து நீதிபதிகள் அமர்வு!

இந்த தீர்ப்பின் மை உலர்வதற்குள் மோடி அரசு அதன் அராஜக ஆட்டத்தை துவங்கி விட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் விதத்தில் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்ததுள்ளது மோடி அரசு. அதே நேரத்தில்  மேற் சொன்ன  உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கான மனுவையும் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் இந்தியாவின் தலைநகரமாக டெல்லி இருப்பதால், டெல்லி மாநில அரசில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஜனநாயகத்திற்கு விரோதமாக கூறியுள்ளது. அந்த மனுவை வெளிப்படையாக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் ,உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அறைகளுக்குள்ளே அவர்களே தீர்மானம் செய்து உத்தரவு அளிக்க வேண்டாம் என்றும் கேட்டு உள்ளது மோடி அரசு.

இந்த மோசமான அவசர சட்டம், சட்டமாக ஆக வேண்டும் என்றால், ராஜ்யசபையில் பெரும்பான்மை தேவை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேருமானால், மோடி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது. எனவே, கெஜ்ரிவால் மகாராஷ்டிராவின் சரத் பவரையும் மற்றும் உத்தவ் தாக்கரையும் சந்தித்து ராஜ்யசபையில் மோடி அரசின் அவசர சட்டம், சட்டமாகாமல் பார்க்க வேண்டும் என்று ஆதரவு கேட்டுள்ளார். அவர்கள் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். அதேபோல பீகாரின் நித்திஷ் குமார்,  தேஜஸ்வி ‌ யாதவ், தெலுங்கானா சந்திர சேகர ராவ் ஆதரவையும் கேட்டு பெற்றுள்ளார். அடுத்து மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆதரவை கேட்க உள்ளார்; தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆதரவை கேட்க உள்ளார்.


திமுக, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், ஒரிசாவின் நவீன் பட்நாயக் ஆகியோர் இந்த ஜனநாயக விரோத அவசர சட்டத்தை எதிர்க்க முன்வரும் பட்சத்தில்  ராஜ்யசபையில் மேலே சொன்ன அவசர சட்டம் ,சட்டம் ஆகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

மிக முக்கியமாக காங்கிரசின் ஆதரவும் இதற்கு அவசியம் தேவை. பாஜகவிற்கு அடுத்த நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை ராஜ்ய சபையில் வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ்தான் .அந்தக் கட்சி இந்த நேரத்தில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக நிற்பதன் மூலம், மோடி அரசிற்கு பலத்த அடியை கொடுப்பதுடன், மாநிலங்களின் உரிமையை காப்பதற்கு நிற்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

இன்றைய பத்திரிகை செய்தியில் டெல்லியின் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான அஜய் மெக்கான் ட்விட்டரில் ஒரு பதிவை செய்ததாக வந்துள்ளது. அதில் அவர் இதற்கு முந்தைய  டெல்லி மாநில அரசின் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் போல் புத்திசாலித்தனமாக நடந்து மோடி அரசை எதிர்கொள்ள ஆலோசனை கூறுகிறார் கெஜ்ரிவாலுக்கு. அதாவது காங்கிரஸ் கட்சி, மோடி அரசின் சட்டத்தை ராஜ்ய சபையில் வீழ்த்தும் என்ற வாக்குறுதியை அவர் தரவில்லை.

காங்கிரசின் தலைமை இதுவரையில் வாய் திறக்காமல் இருக்கிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் சித்தாராமையா முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்த காங்கிரஸ் கட்சி கெஜ்ரிவாலை அழைக்கவில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போராடாமல், மாநில உரிமையை காப்பதற்காக முன்வராமல் , காங்கிரஸ் வரும் 2024 மோடியை வீழ்த்தி விட முடியாது. இதை காங்கிரஸ் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டெல்லி மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் மோடி அரசின் அவசர காலச் சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டால் அது கெஜ்ரிவாலுக்கான இழப்பு தானே, நமக்கென்ன..? என்று நினைப்பதைப் போல முட்டாள்தனம் வேறில்லை! உண்மையில் இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மோடிக்குமான தனிப்பட்ட பிரச்சினையல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரங்கள் சம்பந்தப்பட்டது!

மாநிலங்களின் உரிமையை பறிப்பது என்பது, இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் மீதான மரண அடியாகும். மாநில உரிமைகள் விஷயத்தில் அப்படி ஒரு மரண அடி விழுவதை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும்  பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதே நம் வேண்டுகோளாகும்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

முன்னாள் நீதிபதி,

சென்னை உயர் நீதிமன்றம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time