டாஸ்மாக் போலி சரக்கே சாவுகளுக்கு காரணம்!

-எஸ்.இர்ஷாத் அஹமது

”டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கரூர் சரக்கே  தஞ்சையில் இருவர் பலியானதற்கு காரணம்” என குடிமகன்கள் உரத்துக் கூறுகின்றனர்! தமிழகம் முழுமையும் போலி சரக்குகள், சட்டபூர்வமற்ற விற்பனைகள் ஆகிய உண்மைகளை மறைக்கத் தான் எத்தனை தகிடுதத்தங்கள் அரங்கேறுகின்றன…!

தஞ்சாவூர் கீழ் அலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையையொட்டி அமைந்துள்ள மது அருந்தும் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே விற்கப்பட்ட மதுவை வாங்கிக் குடித்த 68 வயது குப்புசாமி, 36 வயது குட்டி விவேக் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக பல உண்மைகள் தற்போது வந்து கொண்டுள்ளன!

இச் சம்பவத்தில் பலியான குப்புசாமி மீன் மார்க்கெட்டில் நவீன் என்பவருக்குச் சொந்தமான மீன் கடையில்  வேலை பார்த்து வந்தார். மற்றொருவரான  குட்டி விவேக் அடிப்படையில் லாரி ஓட்டுநர். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அவரது சகோதரர் வினோத் என்பவருக்குச் சொந்தமான மீன் கடையில் மீன்களை சுத்தம் செய்யும்  தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையையொட்டி அமைந்துள்ள அனுமதி பெற்ற மது அருந்தும் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கிக் குடித்த மீன் மார்க்கெட் தொழிலாளிகள் குப்புசாமி, குட்டி விவேக் ஆகியோரின் அடுத்தடுத்த மரணம் தற்போது தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

அதிலும் குறிப்பாக, அக் குறிப்பிட்ட பிராண்ட் மது முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பங்குதாரராக இருப்பதாக கூறப்படும் மதுபான உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என்ற ஓர்  தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதை நம்மால் ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை.

இந்நிலையில் தான், அரசு தரப்பிலான சதுரங்க ஆட்டம் ஆரம்பமானது.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், இச் சம்பவத்தில் பலியான குப்புசாமி, குட்டி விவேக் ஆகியோர் குடித்த மதுவில் ‘சயனைடு’ விஷம் கலந்திருப்பது  viscera test-ல் தெரிய வந்துள்ளதாக அறிவித்தார் அப்போதைய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

‘இறந்தவர்களில் ஒருவரான குட்டி விவேக் என்பவருக்கு குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்துள்ளதாக வட்டாட்சியர் (வேக,வேகமாக) சமர்ப்பித்துள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும் என்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அது தற்கொலையாக இருப்பின், கொடிய விஷமான சயனைடு கூலித் தொழிலாளர்களான குப்புசாமி, குட்டி விவேக் ஆகியோருக்கு எப்படி கிடைத்தது?, கொலையாக இருப்பின், டாஸ்மாக் மது அருந்தும் கூடத்தில் சில்லறையில் விற்கப்பட்ட மதுவில் யார் இதைக் கலந்தது..? போன்ற கேள்விகளுக்கு சம்பவம் நடைபெற்று ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை காவல்துறை சார்பில் உரிய விளக்கம் தரப்படவில்லை.

பலியான குப்புசாமியின் மனைவி காஞ்சனா.

 

இச் சம்பவத்தில் பலியான குப்புசாமிக்கு குடும்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. மிகவும் சந்தோசமாக இருந்தார். எனவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு எந்தவொரு காரணமும் இல்லை. சம்பந்தப்பட்ட நாளன்று மீன் குழம்பு வைக்கச் சொல்லி ஆசையாக கேட்டிருந்தார். அதற்காகவே என்னையும் மார்க்கெட்டிற்கு அழைத்திருந்தார். மீன் வெட்டி சுத்தம் செய்யப்படும் கேப்பில் இதோ வந்துவிடுகிறேன் என டாஸ்மாக் சென்று திரும்பியவர் என் கண் முன்பாகவே வாயில் நுரை வர மயங்கி விழுந்தார். ஆக, டாஸ்மாக் மதுவில் தான் ஏதோ கோளாறு இருக்கிறது. பிரச்சினையை திசை திருப்பாமல் நேர்மையாக விசாரித்து அவர் சாவுக்கான காரணத்தை அரசு சொல்ல வேண்டும் என அவரது மனைவி காஞ்சனா மற்றும் குடும்பத்தினர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர் . இதையே விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளனர். இதே போல குட்டி விவேக்கின் குடும்பத்திலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  டாஸ்மாக் மது அருந்தும் கூடத்தில் விற்கப்பட்ட அக் குறிப்பிட்ட பிராண்ட் மதுவில் தான் ஏதோ ‘கோளாறு’ இருந்திருக்க வேண்டும். அதை மறைக்கவே, மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றனர் என்ற ஒரு சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. இதனால், சில பேர் மிக கோபமாக டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

மரக்காணம் சம்பவத்திலும் டாஸ்மாக் மது பாட்டிலில் இருந்த மதுவை வாங்கிக் குடித்தவர்கள் தான் இறந்துள்ளனர். தஞ்சாவூரிலும் அதே போல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபல நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பிராண்ட்களைப் போலவே போலியாக மது தயாரிக்கப்பட்டு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் துணையோடு டாஸ்மாக் மது அருந்தும் கூடங்களில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.

இது டாஸ்மாக் மூலமாக வந்த வருமானம்! வராமல் போனவை எவ்வளவோ!

“பிரபல மது உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் மது வகைகள் நேரடியாக டாஸ்மாக் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கி வைக்கப்பட்டு,  அதன் பின்னரே அங்கிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும். இவை அனைத்திற்கும் அரசுக்கு முறையாக கலால் வரி செலுத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய்  கிடைக்கும். ஆனால் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதுவும் கிடைக்காது.

ஆனால்,  பிரபல பிராண்ட்களின் பெயர்களில் தயாரிக்கப்படும் ‘கரூர் சரக்கு’ நேரடியாக டாஸ்மாக் மது அருந்தும் கூடங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இவற்றிற்கு கலால் வரி செலுத்தப்படுவதில்லை. அதனால், இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. இந்த வருவாய் அனைத்தும் அரசின் கணக்கில் வராமல் நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு போகிறது. இது மட்டுமின்றி,  தமிழகம் முழுமையும் டாஸ்மாக் மது விற்பனை என்ற பெயரில் அனுமதி இல்லாத பார்களும், போலி மதுபான விற்பனையும் இரவு, பகல் என சதா சர்வ காலமும் நடக்கின்றன.. என்கின்றனர் டாஸ்மாக் நிறுவன முன்னாள் அதிகாரிகள்.

அது போல தயாரிக்கப்பட்ட ஒரு மதுவகை தான் தஞ்சையில் டாஸ்மாக் கடை மது அருந்தும் கூடத்தில் சில்லறையில் விற்கப்பட்ட மது. தஞ்சையில் விற்கப்பட்ட பிராண்ட் மதுவில் ஏதோ கோளாறு இருந்திருக்கிறது. அதனால் தான், அதை குடித்த 2 நபர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர்.

இந்த உண்மை வெளியே தெரிந்தால் குடிமகன்களிடையே பீதி ஏற்பட்டு அதன் காரணமாக டாஸ்மாக் மது விற்பனை பாதிக்கப்படும் என்பதாலும், ஆளுங்கட்சிக்கு நெருக்கமான சம்பந்தப்பட்ட மது தயாரிப்பு நிறுவனத்தை காப்பாற்றும் வகையிலும், திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சயனைடு கலப்பு கதை என சொல்லி வேதனைப்பட்டனர் நேர்மையான அதிகாரிகள்.

இத்துயரச் சம்வத்திற்கு சுமார்  பத்து நாட்களுக்கு முன்னர் தான் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச் சாராயம் குடித்தவர்கள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்  பகுதியில் டாஸ்மாக் மது குடித்தவர்கள் என அடுத்தடுத்து மொத்தம் 22 பேர் பலியாயினர்.

இதைத் தொடர்ந்து, இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு, பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆனால்,  தஞ்சையில் பலியான இருவரின் குடும்பத்திற்கு இதுவரை எந்தவொரு இழப்பீட்டுத் தொகையும் அறிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் அறிவித்துள்ளது தமிழக அரசு.

முன்னதாக கள்ளச் சாராயம் குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு  பத்து லட்சம் அறிவிக்கப்பட்டது.

அதே சமயம் டாஸ்மாக் மதுவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு எதுவுமே கிடையாது.

ஏன் இந்த பாரபட்சம்?

கள்ளச் சாராயம் சாப்பிட்டு இறந்த உயிர்களை மட்டும் மிக உசத்தியாக நினைக்கிறதோ தமிழக அரசு!

இந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் அனைவரும்  ஏழை எளிய கூலித்  தொழிலாளர்கள் தான். இந் நிலையில், எந்த அளவுகோலைப் பயன்படுத்தி அரசு இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கிறது? என ஆதங்கத்துடன் கேட்கின்றனர் நடுநிலையாளர்கள். இது ஒருபுறமிருக்க, டாஸ்மாக் பார்கள் நேரங்காலமின்றி இயங்குவதையும், அவற்றில் போலி சரக்கு விற்கப்படுவதையும் விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் தமிழக அரசு.

கட்டுரையாளர்; எஸ்.இர்ஷாத் அஹமது

மூத்த பத்திரிகையாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time