தமிழக சிற்றூர்களில் கோலோச்சும் தீண்டாமை!

-சாவித்திரி கண்ணன்

மீனாட்சி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவில்களில் எல்லாம் வெற்றிகரமான ஆலய நுழைவு சுதந்திரத்திற்கு முன்பே சாத்தியமாகியும், இன்னும் தமிழகத்தின் நூற்றுக்கணக்கான சிற்றூர் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்கிறது. இதில் சாதியக் கட்சிகளின் ஆதாய அரசியல் முடிவுக்கு வருமா?

சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் இங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்த சுதந்திரம் சென்று சேரவில்லை என்பதை தான் தமிழகத்தின் பல பகுதிகளில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்படும் விவகாரங்கள் உணர்த்துகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர் அருகே மேல்பாதி  கிராமத்தின் திரௌபதி அம்மன் கோயிலுக்குள்  பட்டியல் இனத்தவர்களை வழிபாட்டுக்கு  அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் அந்த கோயிலுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்து ஒரு மாதம் கடந்த நிலையில், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த வட்டாரத்தில் காவல்துறையினர் ஆயிரத்திற்கும் அதிகமாகக் குவிக்கப்பட்டு ஒரு நிரந்தர பதற்றம் நிலவுகிறது.

இந்தக் கோயிலில் ஜீன் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெற்ற நிலையில், அந்தக் கோயிலுக்குள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சில பட்டியலின இளைஞர்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளனர். அப்போது அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் ஒரு பிரிவினர் தடுத்ததோடு, ஓட,ஓட விரட்டித் தாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் நுழைவை எதிர்த்த மக்கள்!

இதனைத் தொடர்ந்து பட்டியலின அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடிஉறுதிதந்தார்.

இதனை அறிந்த வன்னிய மக்களில் சிலர் ஆவேசமாகி கோயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அங்கு சென்றனர். அப்போது அவர்கள் ”எங்களுக்கு சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு அடையாள அட்டைகள் எதுவும் தேவையில்லை. இது எங்கள் கோவில். ஆகவே, பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம்” எனக் கூறி வாதங்கள் செய்தனர். அதில் இருந்த சிலர் தங்கள் கையிலிருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்கவும் முயன்றுள்ளனர்.

இந்தக் கோவில் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கும் சொந்தமானதல்ல. தமிழக அரசின் அற நிலையத் துறைக்கு சொந்தமானதாகும். இதை ஏற்கனவே நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் அறநிலைத்துறைக்கு சொந்தமான முத்து மாரியம்மன் கோவிலிற்குள், அதே ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உள்ளே செல்வதற்கு கடந்த 80 ஆண்டுகளாக அனுமதிக்கப்படாத நிலை இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு, இந்த கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தர்கள், `எங்களையும் திருவிழா நடத்த ஒருநாள் அனுமதிக்க வேண்டும். உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதற்கு ஊர் பொது மக்கள் பலர் அனுமதி வழங்காததால், மனவேதனை அடைந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், ‘தங்களை கோவிலின் உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறையினரிடம் மனு அளித்தனர்.

தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோவில்

இதைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ‘’திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். தென்முடியனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் வழிபாட்டு உரிமையை போராடி பெற்றதால், தலித் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மடம் கிராமத்தில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.’’ என போராட்டம் நடத்தினர்.

மாவட்ட நிர்வாகம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி பட்டியலின மக்களை கோவிலுக்கு அழைத்து சென்று வழிபாட் வைத்தது. தலி மக்கள்  சொல்லொணா மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

அவர்கள் கோவிலுக்கு சென்று வந்ததால் ஊர் பொதுமக்கள் யாரும் அவர்களிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை, விவசாயக் கூலி வேலைக்கு அவர்களை அழைக்க மறுப்பது, பட்டியலின மகக்ள் வசிக்கும் பகுதியில் இருந்து கறவை மாட்டுப் பாலை விநியோகம் செய்யும் நிறுவனங்களும் கூட வாங்க மறுக்கபடுவது, விவசாய நிலத்திற்கு வரவேண்டிய தண்ணீரையும் கூட  மாற்று சமூக மக்கள் தடுத்து நிறுத்துவது.. என பல்வேறு துயரங்களையும், மன வேதனைகளையும் அவர்கள் அனுபவிக்கின்றனர்.

இதனால், அவர்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தாலும் அவர்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது.

இதே போல் கரூர் மாவட்டத்திலும் வீரணாம்பட்டி காளியம்மன் கோவிலில் பட்டியல் மக்கள் நுழைவதற்கு மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த செய்தி வெளியானது. அங்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் சீல் வைக்கப்பட்ட காளியம்மன் கோயில் திறக்கப்பட்டது. இரு தரப்பினரிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கோயில் திறக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி திறந்து வைத்தார். இதற்கு பிறகு இந்த கோவிலைக் குறித்து பிரச்சினைகுரிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.

வீரணாம்பட்டி காளியம்மன் கோவில், ஆட்சியர் பிரபு சங்கர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரக்கை கிராமத்தில் அமைந்துள்ள சாத்தப்ப அய்யனார் கோவிலில் பல ஆண்டுகளாக சாமி கும்பிடுவதற்கு ஆதிதிராவிட பொதுமக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதால் சாமி அனைவருக்கும் பொதுவானது என்பதை நிலைநாட்ட தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி (மற்றும்) வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஆலய நுழைவு போராட்டம் மே- 5 ஆம் தேதியன்று நடைபெற இருந்தது.அது தடுக்கப்பட்டது. ஆதிதிராவிட மக்களை அனுமதிக்காததைக் கண்டித்து, வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராடினர்.


இது சம்பந்தமாக அமைதிப் பேச்சு வார்த்தை மே மாதம் 10 ஆம் தேதியன்று திட்டக்குடி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஆதிதிராவிட பொதுமக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்த போது எதிரதரப்பினர் கொந்தளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து  இரு தரப்பிலும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இறுதியில் கோவில் நிர்வாக தரப்பினர் கிராம பொது மக்களிடம் கலந்து பேசி ஒரு மாத காலத்திற்குள் முடிவு தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். எனினும் இது வரை சுமூக நிலை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கும்பாபிஷேகத்தின் போது இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் இணைந்து திருவிழா நடத்துவது குறித்து சமாதான கூட்டம் நடந்தது. இதில் பட்டியலினத்தவர் பால்குடம் எடுத்து அன்னதானம் வழங்க தயாராக இருந்த நிலையில் அனுமதி மறுக்கப்படவே, “எங்களை குலதெய்வ கோவிலுக்கு பால் குடம் எடுக்கவும், அன்னதானம் வழங்கவும் அனுமதிக்கவில்லை” என்று கூறி கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே பால்குடம் எடுக்க வாங்கிய பால், அன்னதானத்திற்காக நறுக்கப்பட்ட காய்கறிகள், மளிகை பொருட்களை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட துயர்க் காட்சிகள் ஊடகங்களில் பார்த்த போது மனம் கனத்தது.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் 48 நாள் மண்டகப்படி நடந்து வந்தது. அப்போது 48 நாளில் ஏதாவது ஒரு நாளாவது மண்டகப்படியில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்கள் கேட்டனர்.அதற்கான பேச்சுவார்த்தை நடத்தியும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீறி கோவிலுக்கு செல்ல முயன்றனர் பட்டியலின மக்கள். இது கலவரத்தை உருவாகும் சூழலை உணர்ந்து கோவிலுக்கு ஏப்ரல் மாதம் சீல் வைத்து விட்டனர்.இதனால், யாருமே சாமி கும்பிட முடியாத நிலை தொடர்கிறது.

மேற்சொன்னவை எல்லாம் சில சான்றுகளே! தமிழகத்தில் பல நூறு கிராங்களில், சிற்றூர்களில் தலித் மக்கள் பொதுக் கோவிலில் வழிபட முடியாத நிலையும், ஒதுங்கி வாழும் சூழலும் நிலவுகிறது. இதில் சம்பந்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கட்சிகள் ஆதாய அரசியல் செய்யும் சூழல்களும் உள்ளன. சட்டங்கள், அதிகாரங்களை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் வாய்ப்புகள் பிற்பாடு அவர்களுக்கு நிரந்தர துன்பமாக மாறிவிடுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இயல்பான மன மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதே சிறந்ததாகும்.

உண்மையான ஆன்மீக அமைப்புகள், காந்திய அமைப்புகள், சுய மரியாதை இயக்கத்தினர், திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் இரு தரப்பிலும் உட்கார்ந்து இணக்கம் உருவாக்க பேச முயற்சிக்க  வேண்டும். குறிப்பாக தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கும் சாதியில் உள்ள படித்த இளைஞர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள் களம் கண்டு சமூக நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும். ”இந்துக்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம்” என மார்தட்டிக் கொள்ளும் பாஜக, மற்றும் இந்துத்துவ இயக்கங்கள் எளிய தலித் மக்களுக்கு ஆதரவாக ஒரு போதும் நிற்பதில்லை என்பது எல்லா நிகழ்விலும் துல்லியமாகத் தெரிகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம்இணையஇதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time