‘அயோக்கிய சிகாமணி ராமதாஸ்’ – வாழப்பாடியார் நூல்!

- சாவித்திரி கண்ணன்

‘டாக்டர் அய்யாவிற்கு மனம் திறந்த மடல்’ என்றொரு சிறு நூல்!

84 பக்கங்கள் கொண்டது! வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய மனிதரும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது!

பல வன்னிய அறிவு ஜீவிகள்,முன்னோடிகள் இந்த சிறுநூல் உருவாக்கத்திற்கு அளப்பறிய தகவல்களைத் திரட்டித் தந்துள்ளனர்.

ராமதாஸின் அரசியல் வளர்ச்சிக்கு அருந்துணையாக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அப்படிப்பட்ட வாழப்பாடியார் 1999 நாடாளுமன்ற தேர்தலுக்கு நின்ற போது அவரை தோற்கடிக்க களம் கண்டு வெற்றி பெற்றார் ராமதாஸ். அந்த துரோகம் இன்றளவும் வன்னிய முன்னோடிகளால் வருத்ததுடன் நினைவு கூறப்படுகிறது! அதன் விளைவாக இந்த நூல் வெளியானதாகத் தெரிகிறது.

பக்கத்துக்கு பக்கம் வன்னியர்களின் அக்னி கலசத்தின் தீ ஜீவாலை பற்றி எரிந்து ராமதாஸை எரிக்கிறது. இதைவிட அதிகமாக யாரால் ராமதாஸின் முகத்திரையை கிழிக்க முடியும் எனத் தெரியவில்லை.

இந்த புத்தக உருவாக்கத்தில் அச்சமில்லை ந.இறைவன் மிகுந்த பங்களித்துள்ளார். இதில் உள்ள ஒரு சிலவற்றை மட்டும் இங்கே கவனப்படுத்தினால் போதுமானது என நினைக்கிறேன்.

”இந்தக் கொடூரமான மனிதரிடமிருந்து வன்னிய சமூகத்தை மீட்டு எடுக்க வேண்டியதருணம் இது தான்! இது காலத்தின் கட்டளை !”

இவ்வாறாக எஸ்.எம்.பாலசண்முகம், உத்திரமேரூர் ஆர்.விஸ்வநாதன், சா.கார்த்திகேயன் ஆகியோர் இதன் அணிந்துரையில் பிரகடனப்படுத்தி உள்ளனர்.

1987 சாலைமறியல் போராட்டத்தில் உயிர் நீத்த 25 வன்னிய தியாகிகளின் விபரங்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு ராமதாஸ் ஒன்றுமே செய்யவில்லை என்றும் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் தர முயன்ற தலா இரண்டு லட்சத்தையும் தடுத்து, ”நான் ஐந்து லட்சம் தருகிறேன் வாங்காதீர்கள்” சொல்லிவிட்டார் ராமதாஸ். ஆனால், கடைசி வரை எதுவும் தரவில்லை. அதன் பிறகு, சில ஆண்டுகள் கழித்து பேராசிரியர் தீரன் முயற்சியில் தான் கருணாநிதி உயிர் ஈந்தோருக்கு தலா மூன்று லட்சம் தந்தாராம்!

டாக்டர் ராமதாஸ் பெரிய உத்தம புத்திரன் போல ஐந்து சத்தியங்கள் செய்தார். அதில் குறிப்பாக ஒன்று; ”நானோ, எனது வாரிசுகளோ, சந்ததியினரோ, வன்னிடர் சங்கத்திலோ, கட்சியிலோ எந்த பதவிக்கும் வரமாட்டார்கள்! எங்கள் கால் செருப்பு கூட சட்டமன்றத்திற்குள்ளோ, பாராளுமன்றத்திற்குள்ளோ நுழையாது. இது என் தாய் மீது சத்தியம்” என்றார்!

”இதில் நான் தவறினேன் என்றால், என்னை நடுரோட்டில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்” என்றெல்லாம் மேடைக்கு மேடை வசனம் பேசினார்!

நமது சங்கத்தின் மூத்த தலைவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் வன்னிய சமுதாயத்திற்கே துரோகம் செய்துவிட்டதாகக் கூறி அவருக்கு உங்கள் செருப்பு, வளையல், மயிர் ஆகியவற்றை பார்சல் செய்து அனுப்புகள் என்றார். புகழ் பெற்ற வன்னியர் சமூகத்தின் முதுபெரும் தலைவருக்கு ஒற்றைக்கால் செருப்பை பார்சல் செய்ய வைத்து அவமானப்படுத்தினார். கொடுமையான எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.

இராமசாமி படையாட்சியார்
இராமசாமி படையாட்சியார்

அதிமுக தலைவர் ஜெயலலிதாவை வெள்ளைப் பன்னி, மலத்திலே நெளிகின்ற புழு, தெரு நாய் என்றெல்லாம் வசைபாடிய ராமதாஸ் ஜெயலலிதாவின் கையால் தாலி எடுத்து கொடுக்க தன் மகன் அன்புமணிக்கு கல்யாணம் செய்து வைத்தார் என்கிறது நூல்!

”வாஜ்பாய் அமைச்சரவையில் பாமக சார்பில் பொன்னுசாமியும், சண்முகமும் அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் இலாகா சம்பந்தப்பட்ட கோப்புகள் மாதக் கணக்கில் முடங்குகிறது. காரணம் உங்கள் மகன் அன்புமணியின் உத்தரவு உடனே கிடைகாதது தான்! அன்புமணி பைல் பார்த்து, பைல் தொடர்பான நபரை பார்த்து, அந்த நபரிடம் பேரம் நடத்தி, கைக்கு விஷயம் வந்து சேர்ந்தால் தான் கோப்பு நகர்கிறது. இதனால், அந்த இலாகா தொடர்பான செயலாளர்கள் மனம் உடைந்து, பிரதமருக்கு புகார் கூறினார்களே.., பிரதமர் வாஜ்பாய் இது தொடர்பாக உங்களை நேரில் அழைத்துக் கடிந்து கொண்டாரே நினைவு இருக்கிறதா..?’’

என்றெல்லாம் கேட்கப்பட்டு உள்ளது!

தன்னுடைய கடந்த காலம் குறித்து ராமதாஸ் கூறி இருப்பதாவது;

கீழ்விசிறி ஆதி திராவிடர் பள்ளியிலே (கவனிக்க ஆதி திராவிடர் பள்ளி) நான் படித்துக் கொண்டிருந்த போது, வறட்டி தட்டுவதற்காக, தினமும் மாலையில் ஒரு கூடை சாணி பொறுக்கி வீட்டுக்கு கொண்டு வந்தால் தான் காலையில் குடிக்கக் கொடுக்கும் கூழுக்கு கொஞ்சம் கீரை கொடுப்பார் என் அம்மா! அம்மா வறட்டி தட்ட, நான் சாணம் பொறுக்கி தராவிட்டால், சில சமயங்களில் கூழும் கிடைக்காது. இப்படியெல்லாம் சிரமப்பட்டேன்…!

இது போல ராமதாஸ் குறித்த அரிய தகவல்களைக் கூறி, அவ்வாறான ஏழ்மையில் இருந்தவர் உயர்ந்து வந்தது இழிவில்லை. ஒரு வகையில் பெருமை தான்! ஆனால், தற்போது அவர்

”சூழ்ச்சி, வஞ்சனை, சர்வாதிகாரம், தாசி தளுக்கு, ஜமீந்தார் மினுக்கு, ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசம், டாடா சுமோ, சபாரி, ஓபல் ஆஸ்ட்ரோ, போர்டு கார்களின் அணிவகுப்பு, சுயநலம், குடும்ப பாசம், வாரிசு அரசியல், தன் குடும்பம், தன் சம்பந்திகளின் குடும்பங்கள், லட்சங்கள், கோடிகள், மாட மாளிகைகள், விஸ்தாரமான தோட்டங்கள்..என்று சுய நலத்தோடு சுண்டைக்காயாக சுருங்கிவிட்டார்.’’ என வருணித்து உள்ளது.

வன்னிய சங்கத் தலைவராக இருந்த பு.த அருள்மொழியை நீக்கிவிட்டு, அதில் காடுவெட்டி குருவை தலைவாராக்கினாராம் ராமதாஸ். அது பற்றி கேள்வி எழுப்பி உள்ள இந்த நூல் இவ்வாறு கேட்கிறது;

யார் இந்த காடுவெட்டி குரு? வன்னியர் சங்க தலைவராக இருந்த பு.த.அருள்மொழியை நீக்கிவிட்டு, அந்த இடத்திலே காடுவெட்டி குரு என்பவரை ராமதாஸ் நியமித்து உள்ளார். இவர் மீது கொலை,கொள்ளை, ஆள் கடத்தல்.. என டஜன் கணக்கில் வழக்குகள் உள்ளன…! கொலைகாரன் என்று பெயரெடுத்தவர். டேங்கர் லாரி, டூவீலர், கார் போன்றவற்றை கடத்துபவர் என்றும், சாராயம் காய்ச்சுபவர், பெட்ரோல் கடத்துபவர் என்றும் பத்திரிகைகள் எழுதுகின்றன! போன்ற பல செய்திகள் நூலில் சொல்லப்பட்டு உள்ளன!

ஒரு இடத்திலே ராமதாஸை ‘தலை சிறந்த அயோக்கிய சிகாமணி’ என்ற தலைப்பில் பல தகவல்கள் உள்ளன. ஏ.கே.மூர்த்தி, துரை போன்ற தற்குறிகளை ராமதாஸ் எம்.பியாக்கிவிட்டார் என்றும் சொல்லப்பட்டு உள்ளது!

வன்னிய இளைஞர்கள் வன்முறை போராட்ட பாதையில் திருப்பப்பட்டு, சதா சர்வ காலமும் அவர்கள் கோர்டு, வழக்கு, சிறைவாசம் அலைகழிக்கப்படுகின்றனர். ‘‘தொண்டர்களின் சிரமத்தை பற்றி எல்லாம் எள்ளளவும் கவலைப்படாமல், மூச்சுக்கு மூச்சு போராட்டங்கள் நடத்தி, கடைசியில் வன்னியர்களை மறுபடியும் குற்றப் பரம்பரையாக்கி விட்டுத்தான் ராமதாஸ் ஒய்வார் போல இருக்கு’’ என்ற வாழபாடியாரின் ஆதங்கமும் பதிவாகியுள்ளது!

மேலும் இந்த புத்தகம் வன்னியர் நலன்களுக்காக உண்மையாக பாடுபட்ட முன்னோடிகளை வரிசைப்படுத்தி அவர்களின் பெருமைகளையும் சொல்கிறது. ”அப்படிப்பட்ட வன்னிய சமூகத்தின் ஆகச் சிறந்த பெரியோர்களை எல்லாம் (வன்னிய அடிகள், ஏ.கே.நடராஜன், ச.சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ், கோபால் நாயக்கர், பாக்கம் ராமகிருஷ்ணன், பேராசிரியர் தீரன்…) பின்னுக்குத் தள்ளி அவர்களைப் பற்றி இழிவான தோற்றம் ஏற்படுத்தி காலி செய்தவர் டாக்டர். ராமதாஸ்!” எனச் சொல்லும் இந்த நூல் மேலும் இவ்வாறு விவரிக்கிறது;

”வன்னியர் சங்கமும், கட்சியும் பலப்பட பாடுபட்ட நமது குலக் கொழுந்துகளை எல்லாம் திட்டமிட்டு அவமதித்து தூக்கி எறிந்தார் ராமதாஸ். உதவிய கரங்களையே தமுக்கடித்து வெட்டினார். சாலை மறியல் தியாகிகளை மறந்தார். ஆட்சி அதிகார சுகம் வசப்பட்டதும் பழைய ராமதாஸ் காணாமல் போனார். புதிய சுயநல ராமதாஸ் உருவெடுத்தார். சூழ்ச்சிகளின் ஒட்டுமொத்த உருவமாக, துரோகியாக இன்று காணப்படுகிறார்!என்று சொல்லும் இந்த நூல் ராமதாஸ் எப்படியெல்லாம், எந்தெந்த நேரங்களில் எல்லாம் துரோகம் செய்துள்ளார்” என அதிர்ச்சிகரமான சம்பவங்களை அடுக்கி சொல்லிச் செல்கிறது!

“இந்தக் கொடூரமான மனிதரிடமிருந்து வன்னிய சமூகத்தை மீட்டு எடுக்க வேண்டிய தருணம் இது தான்! இது காலத்தின் கட்டளை !”எனக் கூறப்பட்டு உள்ளது.

இந்த நூலை தந்து உதவிய வாழப்பாடியாரின் மகன் சுகந்தன் அவர்களுக்கும் அதற்கு பாலமாக இருந்த அன்பு நண்பர் கார்டூனிஸ்ட் பாரி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

இதை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பை சொடுக்கி அனைத்தையுமே வாசிக்கலாம்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time