தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு புனித யாத்திரை : கி. மோகன்

-பீட்டர் துரைராஜ்

இந்தியாவில் பிறந்திருந்தாலும் காந்தி மகாத்மாவாக பரிணமித்த இடம் தென்னாப்பிரிக்கா தான். இனப் பாகுபாட்டிற்கு எதிராக காந்தி நடத்திய போராட்டங்கள் இன்றைக்கும் தென்னாப்பிரிக்க மக்களை வழி நடத்துவதை கண்கூடாக பார்த்தும், காந்தி நடமாடிய இடங்களை கண்டு நெகிழ்ந்தும் திரும்பியுள்ள காந்தி கல்வி நிலையத்தின் மோகன் நேர்காணல்;

ஆசிரம வாழ்க்கை, கூட்டு வழிபாடு, பெண்களை போராட வைப்பது,  இந்து – முஸ்லிம் ஒற்றுமை என காந்தி இந்தியாவில் உருவாக்கியதை நாம் அவரது  தென்னாப்பிரிக்க வாழ்க்கையிலேயே காணமுடியும்.  தென்னாப்பிரிக்கா  செல்வதை காந்தியர்கள் புனிதயாத்திரையாக கருதுகிறார்கள்.  சமீபத்தில் அங்கு  பயணம் செய்து திரும்பியுள்ள காந்தி கல்வி நிலையத்தைச் சார்ந்த கி. மோகன், தனது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த மாநாட்டைப் பற்றி சொல்லுங்களேன் ?

தென்னாப்பிரிக்காவின் உசுலு பல்கலைக்கழகத்தில்  ஜூன் 6,7,8,9 தேதிகளில் GKM 2023 மாநாடு நடைபெற்றது. காந்தி – மார்ட்டின் லூதர் கிங் – மண்டேலா என்ற மூவரின் சுருக்கம் தான் GKM. பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பேராசிரியர் கள், களப்பணியாளர்கள் என பல தரப்பினரும் வந்திருந்தனர். “அனைவருக்கும் அமைதியும்  நீதியும் ; அகிம்சையான மாற்றத்திற்கு ஒன்று கூடுவோம்” என்பது தான் இந்த மாநாட்டின் நோக்கமாகும். தில்லி காந்தி அருங்காட்சியக இயக்குநர் அண்ணாமலை, காந்தி கல்வி நிலையத்தில் இருந்து நான், பிரேமா, தஞ்சாவூர் காந்திப் பேரவையைச் சார்ந்த பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் உட்பட 23 பேர் இந்தியாவில் இருந்து   கலந்துகொண்டோம். Gandhi as a lawyer என்ற நூலை  எழுதியுள்ள அண்ணாமலை அது குறித்து அங்கு பேசினார். காந்தி  கல்வி நிலைய செயல்பாடு குறித்து  நானும், பிரேமாவும் ஏழு நிமிடம் பேசினோம். எத்தியோப்பியா வழியாக தென் ஆப்பிரிக்கா சென்றோம். பத்து நாட்கள் பயணத்திற்குப் பிறகு திரும்பினோம்.

தென்னாப்பிரிக்காவில் நீங்கள் பார்த்த இடங்கள் என்னென்ன ?

தென்னாப்பிரிக்காவில் 1904 ஆம் ஆண்டு, காந்தி ஜான் ரஸ்கின் எழுதிய ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற நூலைப் படித்து வியப்படைந்தார். எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று உறுதி கொள்கிறார். 105 ஏக்கர் நிலத்தில் ஜோகான்ஸ்பர்க் அருகில் பீனிக்ஸ் குடியிருப்பை நண்பர்களோடு சேர்ந்து  உருவாக்குகிறார். கூட்டு வாழ்க்கை முறையை முதலில் பரிசோதித்தவர் அவர்தான். அந்தப் பண்ணையில் அனைவரும் உழைக்க வேண்டும். கைத்தொழில், விவசாய வேலைகளை ஒரு மணிவரை வேலை செய்ய வேண்டும். பின்னர் அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தர வேண்டும்.  அனைவருக்கும் ஒரே மாதிரியான சமமான ஊதியம் வழங்கப்பட்டது. எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். இங்கு அனைத்து மத கூட்டுவழிபாடு நடந்தன. இதனை முதலில் கொண்டு வந்தது காந்திதான். கீதை, விவிலியம், குரான், யூதம் என பல சமயங்களின் மதநூல்கள் வாசிக்கப்படும்.

காந்தி அங்கு உருவாக்கிய பீனிக்ஸ் பண்ணையை அவருடைய இரண்டாவது மகன் மணிலால் பார்த்துக் கொண்டார். அவருடைய மகள்  அதாவது காந்தியின் பேத்தி இலா காந்தி இன்னமும் அங்கு இருக்கிறார். அவருக்கு  இப்போது 86 வயதாகிறது. காந்தி தன்னுடைய கருத்துக்கள் மக்களுக்கு என்னவென்று விளக்குவதற்காக 1904 ல் இந்தியன் ஒபீனியன் என்ற பத்திரிகையை  அந்தப் பண்ணையில் இருந்துதான் ஆரம்பித்தார். ஆங்கிலம், குஜராத்தி இந்தி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் அவை வெளி வந்தன. இலா காந்தி இந்தியன் ஒபீனியன் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்ட அச்சுக் கூடத்தையும், தட்டச்சு எந்திரத்தையும் எங்களுக்கு காட்டினார். காந்தி தங்கியிருந்த இடம் பாதுகாக்கப்படுகிறது . இப்போது அங்கு காந்தி நடத்திய கூட்டு வாழ்க்கை இல்லை. அங்கு தென்னாப்பிரிக்க பெண்களுக்கு சாப்ட்வேர் போன்றவை சொல்லித் தரப்படுகின்றன.

அவர் அங்கு உருவாக்கிய டால்ஸ்டாய் பண்ணை இடிக்கப்பட்டுவிட்டது. அங்குள்ள ஒரு கட்டடத்தில் ஒருசில புத்தகங்கள் இருந்தன.  அதன் பிறகு தென்னாப்பிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை, அவரை ஏமாற்றி கைது செய்த இடம், அவரை விசாரித்த நீதிமன்றம் ஆகியவற்றையும் நாங்கள் பார்த்தோம்.

காந்தி முதலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட ஜோகானஸ்பேர்க் நகரில்  அவருக்கு சிலை உள்ளது. உலகிலேயே வழக்கறிஞர் உடையில் அங்கு தான் சிலை உள்ளது. அதனைப் பார்த்தோம். அவர் இருந்த பகுதிக்கு  காந்தி சதுக்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

காந்தியை இரயில் பெட்டியிலிருந்து தள்ளிவிட்ட இடத்திற்கு போனீர்களா ?

காந்தி முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தாலும்,  கறுப்பர் என்பதால், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்ற இரயில்  நிலையத்தில் அடாவடியாக இறக்கிவிடப்பட்டார். இரவு முழுவதும் அங்கேயே இருந்தார். அப்போதுதான் நிறவெறிக்கு எதிராக போராட வேண்டும் என்று முடிவு செய்கிறார். மறுஆண்டு  (1894) ‘நேட்டால் இந்திய காங்கிரஸ்’ என்பதை உருவாக்குகிறார். ஒன்றுகூடி மக்கள் போராட வேண்டும். அதற்கு முன்னதாக நம்மிடம் உள்ள குறைபாடுகளை போக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

வியாபாரிகள் நேர்மையாக வியாபரம் செய்ய வேண்டும். பெண்களை சமமாக நடத்த வேண்டும். ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். அவரே சைக்கிளில் மூன்று இடங்களுக்கு சென்று ஆங்கிலம் கற்றுத் தருகிறார். அவர் தள்ளிவிடப்பட்ட நாளான ஜூன் 7ம் தேதி அந்த ரயில் நிலையத்தில் நாங்கள் இருந்தோம். காலை பத்து மணிக்கே எங்களால் குளிரைத் தாங்க முடியவில்லை. இரவு முழுவதும் காந்தி எப்படி அங்கு இருந்திருப்பார் என நாங்கள் நினைத்துக் கொண்டோம். இந்த நிலையத்தைக் காண உலகம் முழுவதிலும் இருந்தும் பயணிகள் வருகிறார்கள். சத்தியாகிரகம் உருவான இடம் அல்லவா ! காந்தியின் வாழ்க்கை வரலாறும் முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் எழுதப்பட்டது. ஜோசப் .ஜே. டோக் என்ற பாதிரியார் 1909 ல்  காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இதற்காக அவரை கிறிஸ்தவச் சபையிலிருந்து  நீக்கிவிட்டார்கள். அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.  இயேசுநாதரின் போதனைகளை நடைமுறையில் கடைபிடிப்பவராக காந்தி இருக்கிறார் என்று அவர் கூறினார்.

அவரோடு இணைந்து போராடியவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அங்கு உள்ளனவா?

‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’ என்ற நூலில்  காந்தி தனக்கு உறுதுணையாக இருந்த தமிழர்களை விதந்தோதுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மைக்கு தென் ஆப்ரிக்காவில் நினைவிடம் உள்ளது. அதைப் பார்க்க நினைத்தோம். ஆனால், வாய்ப்பில்லாமல் போய் விட்டது. சிறையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்த நாகப்பன்  நினைவிடம் உள்ளது. ஒப்பந்த கூலியாக இருந்த நாராணயணசாமி தண்டனையாக நாடு கடத்தப்பட்டு கப்பலில் திரும்ப வரும்போது நோயால் பீடிக்கப்பட்டு இறந்தார். அவரது உடல் கடலில் தூக்கியெறியப்பட்டது. அவருக்கு  நினைவுச் சின்னம் ஏதுமில்லை. ஒப்பந்தக் கூலிகள் ஹமீதியா மசூதியில் தான் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆசியர்கள் அவர்களது கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என்ற கறுப்புச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் ஜெனரல் ஸ்மித்,  தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் அங்கிருந்த ஒப்பந்த கூலிகள் தங்கள் பதிவு செய்த அட்டைகளை கூட்டம் நடந்த மசூதியில் ஒன்றாக போட்டு கொளுத்தியிருக்கிறார்கள்.  காந்தியை போராட்டத்தின் போது தாக்கிய தாக்கிய மீர் ஆலம் என்ற முஸ்லிம்தான் முதலில் தன் அட்டையை கொளுத்தி போராட்டத்தில் பங்குபெற்றார். நிறவெறிக்கு எதிரான போராட்டம் 1906 முதல் 1914 வரை எட்டு ஆண்டுகள் நடந்தது. தெனாப்பிரிக்கா வரும் ஆசியர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசியப் பதிவுச் சட்டத்தை எதிர்த்து, இந்து முறைப்படி செய்துகொள்ளும் திருமணம் செல்லாது என்ற திருமணப் பதிவுச் சட்டத்தை எதிர்த்து அமைதியான வழியில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.1913 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் சார்லஸ் டவுன் நகரத்திலிருந்து பர்மிட் இல்லாமல் பிரிட்டோரியா நகரத்தை நோக்கி ஊர்வலம் போகிறார். இதில் 2037  பேர் கலந்து கொண்டனர். இதில் 127 பெண்களும், 57 குழந்தைகளும் இருந்தனர். ஒரு நாளைக்கு ஐந்து மைல் என நான்கு நாள் நடந்த போராட்டம். அத்தனை பேரும் தமிழர்கள். அந்த இடத்திற்கு போக  வேண்டும் என விரும்பினோம். போக முடியவில்லை.

இந்தியா திரும்பிய காந்தி மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்றாரா?

21 ஆண்டுகள் கழித்து 1914 ஆண்டு தனது 45 வயதில் இந்தியாவிற்கு திரும்பிய காந்தி பின்னர் தென்னாப்பிரிக்கா செல்லவில்லை. ஆனால், தனக்குப் பிறகும் அங்கு போராட்டங்கள் தொடர்ந்து நடக்கும் என நம்பிக்கையோடு அவரே எழுதியிருக்கிறார்.  காந்தியின் இறப்பிற்கு கூட அவரது மகன் மணிலால் காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வரவில்லை. அங்கேயே தனது 70 வயதில் (1965) இறந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு சார்பில் ஜூன் மாதம் ஏழாம் தேதி பீட்டர்மாரிட்ஸ்பர்க்  நகரில் இருக்கும் சிலைக்கு மரியாதை  செய்யப்படுகிறது. அந்த சிலையின் ஒருபுறம் சிறுவயது காந்தியும், மறுபுறம் வயதான காந்தியும் தென்படுவார்கள். இந்த ஆண்டு கப்பற்படை மரியாதை செய்தது. தென்னாப்பிரிக்காவில் ஆசியர்களின் போராட்டங்களுக்கு காரணமான ஜெனரல் ஸ்மிட்ஸ் காந்தியால் கவரப்பட்டு, 1947 ல் இந்தியாவின் விடுதலைக்கு ஆதரவாக இங்கிலாந்தில் பேசி  இருக்கிறார். தனது எதிராளிகளையும் கவரும் ஆற்றல் அவருக்கு உண்டு என்பது நமக்குத் தெரியும்தானே ! இவருடைய போராட்டத்தினால் ஆதர்சம் பெற்றவர்தானே நெல்சன் மண்டேலா. மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவில்  நடத்திய பேருந்தை புறக்கணிக்கும் புகழ்பெற்ற மோண்ட்கோமரி போராட்டத்திற்கும் காந்திய வழிமுறைதானே காரணம் !

அங்கு இந்தியர்கள் இப்போது இருக்கின்றார்களா ?

நான் தயாளன் என்ற தமிழரைப் பார்த்தேன். அவர் பட்டியலினத்தைச் சார்ந்தவர். அவருக்கு தமிழில் எழுத முடியாது. பேசுவதை புரிந்து கொள்கிறார். அவரது உடைகள் மாறிவிட்டன. இந்தியர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். மாரியம்மன் கோவில், தீமிதி, முருகன் கோவில் போன்றவை அங்கு உள்ளன. அங்கு பேசிய ஒரு தென் ஆப்பிரிக்க பெண்மணி தமது தாய்மொழிமீது பற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். தென் அமெரிக்க கண்டத்தின் கீழ்கோடியில் உள்ள நாடுதான் தென் ஆப்பிரிக்கா.  வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை அங்கு நிலவுகிறது. பெரிய நதிகள் அங்கு இல்லை. மழைநீரை நம்பிதான் உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களும் அங்கு உண்டு.  வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர். அங்கும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அங்கிருக்கும் இயற்கை, கனிம வளங்களை  பன்னாட்டு கம்பெனிகள் குறி வைத்துள்ளன. வைரம், துத்தநாகம், தாமிரம், நிலக்கரி என கனிம வளம் நிறைந்து இருக்கிறது. வெட்டியெடுக்கப்பட்ட சுரங்கங்கள் மலைபோல குவிந்துள்ளன. இந்த சுரங்கங்களில் வேலை செய்வதற்காகத்தான் இங்கிருந்து ஒப்பந்தக் கூலிகளை அங்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்காகத்தான காந்தி போராடியிருக்கிறார் !

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time