இந்திய அரசாங்கம் எந்த சட்டதிட்டங்கள் கொண்டு வந்தாலும், அவை ‘மக்கள் நலன்’ என்ற போர்வையில், கார்ப்பரேட் முதலாளிகளை வாழ வைப்பதாகவே உள்ளது. விவசாயம் தொடங்கி விண்வெளி ஆராய்ச்சி வரையிலும் எல்லாமே சில கார்ப்பரேட் பயனடைவதற்காக என்றால்.., வின்சென்ட் சர்ச்சில் சொன்னது உறுதியாகிறது;
பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில் இந்தியவிற்கு சுதந்திரம் தருவது பற்றி பேசியதை முதன்முதல் கேள்விப்பட்ட போது, அவர் மீது எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது என்பது உண்மை! ஆனால், தற்போது நினைத்துப் பார்க்கும் போது, ‘அந்த ஆள் இந்தியாவின் தலைவர்கள் பற்றி அன்றே சரியாக கணித்து, வைத்திருக்கான்…’ என வியக்கத் தோன்றுகிறது..!
அவர் சொன்னாராம்;
இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால், சுதந்திரம் தந்தால் அதிகாரம் ராஸ்கல்ஸ், ரோக்ஸ், உழைக்காமல் வழிபறி செய்பவர்கள் கைகளுக்கு போய்விடும்.. இந்தியத் தலைவர்கள் திறனில்லாதவர்கள், வேத்துப் பேர்வழிகள்! இவர்கள் இனிமையான நாக்குள்ளவர்கள், ஆனால், அற்பமான இதயம் படைத்தவர்கள். இவர்கள் அதிகாரத்திற்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு சர்சையிலேயே நாட்டை வைத்திருப்பர். காற்றுக்கும், தண்ணீருக்கும் வரி போடும் சூழலைக் கூட நாட்டில் உருவாக்கிவிடுவார்.
இதை நன்கு தெரிந்த பிறகு தான் நமக்கு சுதந்தரமே தந்திருக்கிறார்கள் பிரிட்டிஷார்! பாருங்க, இன்னைக்கு 150 லட்சம் கோடி கடனுக்கு நாட்டை கொண்டு வந்துவிட்டிருக்காங்க. நாட்டில் ஒரு பக்கம் செல்வம் குவியது. மறுபக்கம் ஏழ்மை பெரிய மாற்றம் இல்லாமல் தொடர்கிறது!
விவசாயத்தை அதிக செலவில் அன்னிய நாட்டு ரசாயன உரங்களை நம்பி இருக்கும்படி ஆபத்தான நிலைமைக்கு கொண்டு வந்தது போதாது, என்று தற்போது ‘இந்தியாவில் விளையும் அரிசி சத்தாக இல்லை’ என்று செறிவூட்டப்பட்ட அரிசியை மக்கள் உணவில் திணிக்கிறார்கள்!
‘சத்தாக இல்லாமல் போனதற்கு ரசாயன உரங்களால் மண் வளம் இழந்தது தானே காரணம்! ஆகவே, நாம் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு திரும்புவோம்’ என நகர்கையில்,
‘அரிசி சத்தாக இல்லாததால், மக்கள் பலவீனமாக இருக்கிறாங்க. அதற்கு இதோ தீர்வு’ என அரிசியை கூழாக்கி, அதில் தேவையில்லாத வேதிப் பொருட்களை நுழைத்து, மீண்டும் அரிசியாக்கி தந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்!
‘அரிசியை மாவாக்கிவிட்டு, மீண்டும் அதைக் கெட்டிப்படுத்தி அரிசியாக கொடுத்தால், அதை வேக வைக்க முடியாது கரைந்து விடும். வேதிப் பொருள் கலவையால் உணவும் சாப்பிட முடியாமல் வீணாகும்’ என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், ‘கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையூட்டு வாங்கியாகிவிட்டது’ என்பதால், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் வழியாகவும், மதிய உணவுதிட்டம் வழியாகவும் இதை திணிக்க திட்டம் போட்டுவிட்டனர். விரைவில் அமலாகவுள்ளது.
செறிவூட்டப்பட்ட உணவு ஒழுங்குமுறை சட்ட விதிகள்படி, தாலசீமியா, ரத்த சோகை உள்ளவர்கள், இரும்பு சத்து சேர்க்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியை உண்டால், ஆபத்துக்கு ஆளாவார்களாம். குறிப்பாக இதை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாதாம். ஆனால், சுமார் 3,000 கோடி செலவில் எல்லாம் தயார்படுத்தியாச்சு. மேலும், இதை பரிசோதிக்கும் வகையில் விநியோகிக்க மட்டுமே மேலும் 174.64 கோடியை ஒதுக்கிட்டாங்க. அதாவது, மக்களே பரிசோதனை எலிகள்! முன்னெல்லாம் எலிகளுக்கு தந்து பரிசோதித்து மக்களுக்கு கொண்டு வரும் முறையாவது இருந்தது. தற்போது அதுவும் இல்லை.
இப்படித்தான் ‘அயோடின் கலந்த உப்பை கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும்’ என்று அடாவடியாக நிர்பந்தித்து அயோடின் தயாரிப்பு நிறுவனங்களை வாழ வைத்தார்கள்! அயோடின் தேவைக்கு அயோடின் நிறைந்திருக்கும் உணவு வகையறாக்களான பால், தயிர், செளசெள காய், மீன், சிறுதானியங்கள், பாரம்பரி சிகப்பு அரிசி சாப்பிட்டால், தானே உடலில் அயோடின் சேரும். பல ஆண்டுகளாக அயோடின் கலந்த உப்பை நம் மீது திணித்தும், அதனால் கடுகளவும் இது வரை பயனில்லை. தீமைகள் தாம்! அயோடின் என்ற ஒன்றை தனித்து எடுத்துவிட்டாலே, அது காற்றில் கலந்து விடக் கூடியது. இந்த உண்மை நன்கு தெரிந்த பிறகும், டாட்டாவை வாழ வைக்க இன்று வரை அயோடின் கலந்த உப்பை நிர்பந்திக்கிறார்கள்!
இந்த செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் ‘அயோடின் திணிப்பு மாதிரி பயனில்லாமல் போய்விட்டது’ என்ற அளவில் முடிந்துவிடக் கூடியது அல்ல. இது பல தீமைகளை ஏற்படுத்தக் கூடியது. ஆனால், அதனால் என்ன? அந்த தீமைக்கும் ஒரு தீர்வு தர இன்னொரு கார்ப்பரேட் கிடைப்பானே..!
மக்களை பலிகடாவாக்கி, சம்பாதித்து பிழைப்பதே ஆட்சி என்றாகிவிட்ட பிறகு – அழிவு தரும் திட்டத்தையும் கூட ஆராதித்து எழுதவும், பேசவும் இங்கு அறிவுஜீவி கூட்டமும், ஊடகங்களும் எலும்பு துண்டுக்கு ஓடி வரும் நாயைப் போல இருக்கிறார்கள் எனும் போது,
இயற்கையை சூறையாடிய திட்டத்திற்கு பசுமை புரட்சி,
நாட்டுமாடுகளை ஒழித்துக் கட்டிய திட்டத்திற்கு வெள்ளை புரட்சி,
அயோடின் கலந்த உப்பை திணித்தற்கு ஆரோக்கிய புரட்சி..
என்று தொடர்ந்து இன்றைக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் வந்து நிற்கத் துணிந்து விட்டார்கள்..!
‘நாடு, இயற்கை, உயிரினங்கள், மனிதர்கள்… அழிந்தால் என்ன? அறிவியலின் பெயரால் ஆராய்ச்சிகளை எல்லாம் அழிவுக்கே பயன்படுத்தி, கார்ப்பரேட்களை வாழவைத்து எங்கள் கஜானாவை நிரப்பும் சுயநலப் போக்கை மாற்றமாட்டோம்’ என்பது தான் நமது ஆட்சியாளர்களின் நிலைபாடாகும்.
ஐயா வின்சென்ட் சர்சிலே நீ உண்மையிலேயே தீர்க்க தரிசி தானய்யா!
அதே சமயம், அன்னியர்கள் நம்மை ஆள்வதில் நமக்கு உடன்பாடில்லை. எனவே, இது போன்ற அநீதிகளை எதிர்த்து மக்களை விழிப்படைய வைத்து போராடுவது தான் தீர்வு. நான் பார்த்த வரை தமிழ் நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக மிகத் தெளிவாக களம் கண்டு வரும் ஒரே இயக்கமாக தமிழ் தேசிய பேரியக்கம் மட்டுமே உள்ளது. இதை எதிர்த்து தமிழ் தேசிய பேரியக்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நேற்றைய தினம் (அக்டோபர்-14) இதன் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம் பெண்களை அணிதிரட்டி பெண்களையே பேச வைத்த, அருமையான நிகழ்வை முழுமையாக கண்டும்,கேட்டும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். நிகழ்ச்சியில் மருத்துவர் பிரேமா, இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், தோழர்.கி.வெங்கட்ராமன் ஆகியோரின் உரைகள் வெகு சிறப்பு! தோழர். கி.வெங்கட்ராமன் ‘செறிவூட்டப்பட்ட அரிசி திணிப்பு’ என்ற அருமையான நூல் எழுதியுள்ளார்! படித்து பயன் அடையுங்கள்!
Also read
அரிசிக்கு செறிவூட்டல் என்ற திணிப்பை தவிர்த்து, நிலத்தை இயற்கை உரமிட்டு வளப்படுத்தினாலே போதும், அது செலவின்றி நமக்கு காலமெல்லாம் தலைமுறைகள் கடந்தும் சத்தான உணவுப் பொருட்களை தந்து கொண்டே இருக்கும். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு செலவழிக்கும் பணத்தை ஆடு, மாடு வளர்க்க தாருங்கள்..! இவை மண்ணை பொன்னாக்கித் தரும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Iodine என்பது பதங்கமாக கூடியது. அதாவது sublimation என்று சொல்வார்கள். குளோரின், புரோமின், இயோடின் இவைகள் எல்லாம் நிலையாக இருக்காது. அதனுடைய சதவிகித அளவு குறைந்து கொண்டே இருக்கும். உப்பில் இருப்பதாக சொல்லப்படும் இயோடின், இருக்குமா என்பது சந்தேகம் தான். இப்படியான இயோடின் குறைபாடு முன் கழுத்து கழலை என்கிற நோய்க்கும்,thyroid குறைபாடுக்கும் தான் கொண்டு செல்லும்.
வின்சென்ட்சர்ச்சில் மேலும் சொன்னது,” இந்தியாவுக்கு சுதந்திரம் தந்தால் மதம் – ஜாதியின் பேரால அரசாள்வோர் மக்களை காட்டுமிராண்டிகளாக மாற்றி அழித்தொழிககும் வேளையில் இறங்கிவிடுவார்கள். ” அது இன்று மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு அருகே சென்னிமலையில் நடந்த மத மோதல் ஆர்ப்பாட்டம் குறித்து எழுதுங்கள். பல ஆயிரம் பேர் கூடி அதிர்ச்சி தந்திருக்கிறார்கள். இந்த திராவிட அரசியல் ஊழல்வாதிகள் பழைய நினைப்பில் செய்யும் ஊழலை மறைக்க சனாதனம் அது இது என பேசி மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் இந்துத்துவ ஆதரவு சாமானிய மக்களிடத்தில் சத்தமில்லாமல் நிலத்துக்கடியில் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. இப்படியே போனால் தமிழ் நாட்டில் இரண்டு பெரும்பான்மை சாதிகளை யாவது கையகப்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்து விடும்.