திட்டமிட்டு கொந்தளிப்பை உருவாக்கும் ஆளுநர்!

-சாவித்திரி கண்ணன்

பெரிய பதவி! ஆனால், சின்ன புத்தி! வாயைத் திறந்தால் வருவது பொய்யும், அவதூறுகளும்! தமிழக மக்கள் காசுல சொகுசு வாழ்க்கை! ஆனால், அவர் மனதில் இருப்பதோ கலவர வேட்கை! நாம் வெள்ளையரிடம் போராடி பெற்ற சுதந்திரத்தைக் களவாடி, நம்மை நிரந்தரமாக சனாதனத்தின் கைதியாக்கத் துடிக்கிறார்கள்…!

ஆளுநர் மாளிகை கேட்டருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது மிகவும் கண்டனத்திற்கு உரியது தான்!

ஆனால், இதைத் தான் ஆர்.என்.ரவியும், அவரை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் விரும்பியது! அதனால் தான் தொடர்ந்து மக்களை எரிச்சலூட்டும் கருத்துக்களை கவர்னர் பேசிக் கொண்டே இருந்தார். இது எல்லோருக்குமே தெரிந்த உண்மை தான்!

இதனால், இன்றைய தினம் தமிழ்நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்படுபவராக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார்!

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவர்னர் மாளிகை உண்மைக்கு புறம்பாக பேசுவதாக கூறியுள்ளார். அதாவது கவர்னர் சொல்வது எல்லாமே பொய் என்பதைத் தான் டிஜிபி நாகரீகமாக சொல்லி இருக்கிறார்! சாலையின் எதிர்முனையில் வெகு தூரத்தில் இருந்து பெட்ரோல் குண்டுகளை வீசிப்பட்டுள்ளது. அவை கேட்டின் முன்பாக பேரிகேட் இருக்கும் பகுதியில் விழுந்துள்ளன!

கருக்கா வினோத்‌ செயல்பட்டுள்ளது குறித்து தமிழக டிஜிபி விவரித்த சம்பவத்தைக்  கொண்டு  அவதானித்தால் “25.10.2023 அன்று மதியம்‌ 3 மணியளவில்‌, சம்பந்தப்பட்ட நபர் சர்தார்‌ படேல்‌ சாலை வழியாக ஆளுநர்‌ மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார்‌. அவர்‌ பெட்ரோல்‌ நிரம்பிய நான்கு பாட்டில்களைக்‌ கொண்டுவந்து, அவற்றை ஆளுநர்‌ மாளிகை அமைந்துள்ள சர்தார்‌ படேல்‌ சாலையின்‌ எதிர்ப்புறத்தில்‌ இருந்து எறிய முற்பட்டபோது, ஆளுநர்‌ மாளிகை வெளிப்புறத்தில்‌ பாதுகாப்புப்‌ பணியிலிருந்த தமிழ்நாடு காவல் துறை போலீசாரால்‌ தடுக்கப்பட்டு பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு பயந்து, சம்பவ இடத்துக்கு எதிரே சற்று தூரத்திலிருந்து இரண்டு பாட்டில்களை வீசினார்‌. அவை ஆளுநர்‌ மாளிகையின்‌ அருகே சர்தார்‌ படேல்‌ சாலையில்‌ வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது. பின்னர்‌, அவர்‌ ஆளுநர்‌ மாளிகையின்‌ பிரதான வாயிலிலிருந்து சுமார்‌ 30 மீட்டர்‌ தூரத்தில்‌, பாதுகாப்பு போலீசாரால்‌ உடனடியாக கைது செய்யப்பட்டு, காவல்‌ நிலையத்துக்கு அழைத்துச்‌ சென்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அதாவது, கவர்னர் மாளிகை எதிர்புறத்தில் இருந்து அவர் வீசிய பெட்ரோல் குண்டு பிரதான வாயிலுக்கு வெளியேவே விழுந்துள்ளது. அது கவர்னர் மாளிகைக்குள் வீசப்படவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. அந்த அளவுக்கு பேரிகேட் வைத்து பாதுகாப்பு அரண்களோடு காவல்துறை கண்காணிப்பும் இருந்துள்ளது. ஆகவே, நியாயப்படி பார்த்தால் கவர்னர் தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து இருக்க வேண்டும்.

அவரோ.. அடடா! இது தான் சான்ஸ்! குய்யோ, முறையோவென கதறவும், கலவரத்தை தூண்டவும் என நினைக்கிறார்! அதனால் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி கதை அளக்கிறார். வெறும் வாயை மென்று கொண்டிருந்த நபருக்கு அவல் கிடைத்தது போலாகிவிட்டது.

ஆளுநர் மாளிகைக்குள் இருவர் நுழைய முயன்றார்களாம்! ஆளுநர் மாளிக்கைக்குள் இரு குண்டுகள் விழுந்துவிட்டதாம்! ஒரு குண்டு கேட்டின் மீது விழுந்து நுழைவு வாயில் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டதாம்! ஒரு பெரிய மனிதன் வாயிலே இத்தனை பொய்கள் வருமா? வரலாமா..?

அதனால் தான், இப்படி பொய்யையும், புரட்டையும் பரப்பி கலவரம் செய்யத் துடிக்கிறார் கவர்னர்! இது வரையிலும் தமிழகத்தில் கவர்னராக இருந்தவர்கள் யாரும் இவ்வளவு கன்னிங் ஆக இருந்ததில்லை! இவர் பதவி காலத்தில் இவருக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்து போரட்டம் நடத்தியது போல எந்த காலத்திலும் தமிழகத்தில் நடந்தது இல்லை.

கவர்னர் பேசிய அவதூறு கருத்துக்கள்:

# சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பங்களில் குழந்தை திருமணங்கள் நடப்பதை ஆதரித்து தமிழக அரசு மீது களங்கம் கற்பித்தார்!

# உலக அளவில் அதிகமாக போதைப் பொருட்களும், ஆயுதங்களும் தமிழ்நாட்டில் விற்கப்படுகின்றன என்றும் ,குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து இவைகள் விற்கப்படுகின்றனவாம்!

# ‘தமிழகத்தில் உள்ள சமூக விரோத சக்திகள் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வைத்துவிட்டனராம்!

# சமஸ்கிருத வேதங்களை படித்து தான் திருவள்ளுவர் திருக்குறளை எழுதினாராம்!

# திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய மாபெரும் அறிஞர் கார்டுவெல்லை அதிகம் படிக்காதவர் என்றார்! உண்மையில் தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமையும் சுற்றி அலைந்து இந்தியாவிற்கே அதன் உண்மை வரலாறை தோண்டி எடுத்துச் சொன்ன ஒப்பிட முடியாத பேரறிஞர் தான் கார்டுவெல்!

# தமிழக மக்களின் வரிப்பணத்தில் தினசரி ஆடம்பர விழாக்கள் பலவற்றை நடத்தி, படாடோபமாக பரிசுகளை அள்ளி வழங்கி, தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோருக்கு கோடிக்கணக்கில் கவர்னர் செலவு செய்வதை ஏற்கனவே அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அம்பலப்படுத்தினார்.

# மக்களை பாகுபடுத்தி இழிவு செய்யும் சனாதனக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார்!

# தமிழ்நாடு என்று சொல்லாதே தமிழகம் என்று சொல் என கட்டளை இடுவாராம்.

# தமிழகம் விடுதலை போராட்டத் தியாகிகளை போற்றவில்லையாம்! அவர் பார்வையிலே கோட்சேவும், சாவர்க்கரும் தான் விடுதலை போராட்டத் தியாகிகள் என்றால், அவர்களை நாம் எப்படி கொண்டாட முடியும்..?

இத்தனை நாட்களாக கவர்னர் பேசி வரும் கலவரப் பேச்சுக்கு அமைதி பூங்காவான தமிழகமும், அஹிம்சைக்கு ஆதரவான தமிழக மக்களும் அசாத்தியமான சகிப்புத் தன்மையை காண்பித்தது தான் இவருக்கு தொக்காகிவிட்டது.

ஏனென்றால், கவர்னரே எதிர்பார்த்திருப்பார் என்னடா நாம் தொடர்ந்து அவதூறு பரப்பிக் கொண்டு இருக்கிறோம். ஆத்திரமூட்டிக் கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு சூடு சொரணையே இல்லை போல இருக்கிறதே..என தவியாய் தவித்திருக்கிறார்!

அந்த தவிப்புக்கு எண்ணெய் ஊற்றித் தீ வளர்ப்பது போல பாஜகவினரும், இந்தத்துவ இயக்கத்தினரும் தமிழக அரசை தாக்குகின்றனர்.

தமிழக ஆட்சியாளர்கள் இன்னும் பம்மிப் பணிந்து விளக்கம் சொல்வதைத் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி, கவர்னருக்கு எச்சரிக்கை தர வேண்டும். தலைக்கு மேல் தொங்கும் கத்தியைப் போல ரெய்டு, அமலாக்கத்துறை சோதனை, சிறைவாசம், ஆட்சி கலைப்பு..என பூச்சாண்டி காட்டினாலும் அஞ்சாது கவர்னரை எதிர்க்க வேண்டும். அப்போது தான் தமிழக மக்களும் தலை நிமிர்ந்து நிற்க முடியும். பிரிட்டிஷார் ஆட்சியைவிட இந்த இந்துத்துவ சனாதனிகளின் மத்திய பாஜக ஆட்சி மிக மோசமானதாக இருக்கிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time