தமிழ்நாட்டில் தற்போது காவல்துறையின் மீதான நம்பகத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது! ‘ரசியல் செல்வாக்கானவர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தமிழக போலீஸில் ஒரு போதும் நியாயம் கிட்டாது’ என்ற நிலை நாளுக்கு நாள் உறுதியாகிக் கொண்டுள்ளது. ஒரு விரிவான பார்வை;
பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரும் போது, பாதிப்புக்குள்ளாகியவர் செல்வாக்கானவர் என்றால், காவல்துறை இதில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவதற்கு கூட தயக்கம் காட்டுவது என்பது காவல் துறை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதற்கான சிறந்த அடையாளமாகும்.
இப்படி நடந்து கொண்டதால் தான் கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் மக்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்றார்கள்! இன்று வரை அதற்கு நீதி கிடைக்கவில்லை. காரணம், குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் மூலம் கொடுத்த நெருக்குதலேயாகும்.
ஏதோ இந்த ஒரு விவகாரத்தில் மட்டும் என்றில்லை. எல்லா விவகாரத்திலும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டால், அவர்கள் எப்படி பாரபட்சமின்றி விசாரிப்பதற்கான துணிச்சலை பெறுவார்கள்? உண்மையான குற்றவாளி யார் என்று தெரிந்தும், நெருங்கத் துணிவின்றி வேங்கை வயல் விவகாரம் இன்னும் இழுத்துக் கொண்டே இருப்பது தமிழ்நாட்டு அரசின் நிர்வாகத்திற்கே ஒரு கரும்புள்ளி! இந்த கோழைத்தனம் வரலாறு நெடுகப் பேசப்படும்.
விசாரணை என்ற பெயரில் கொடூரமாக நடந்து கொண்ட காவல்துறை அதிகாரி பல்வீர் சிங்கிற்கு இன்று வரை சிறிய அளவில் கூட ‘பனீஸ்மென்ட்’ தர முடியாத அளவுக்கு இந்த அரசின் தலைமை இருக்கிறது என்றால், மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்திரவாதம்?
யார் தவறு செய்தாலும் தண்டனை நிச்சயம் உண்டு என்பது 100 சதவிகிதம் இல்லாவிட்டாலும், முடிந்த வரை முயற்சிப்பதே காவல்துறைக்கு கம்பீரம் தரும்.
கடந்த இரண்டாண்டுகளாக பாஜக அண்ணாமலையும், அவரது சீட கோடிகளும் தமிழகத்தில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக் கொண்டிருப்பதோடு, அரசாங்கத்தை துச்சமாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள்! தற்போது மிக, மிகக் காலம் தாழ்ந்து தான் அமர்பிரசாத் ரெட்டி மீது நடவடிக்கை தொடங்கி உள்ளது!
இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் காவல்துறையில் இருந்தாலும், இது வரை இவரை ஏன் சுந்திரமாக நடமாடவிட்டது அரசு என்பது புரியாத புதிர்! எனினும், தற்போது கைது செய்த வரை மகிழ்ச்சியே! ஆனால், இதில் உறுதிப்பாடு காட்டுவார்களா..? என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.
இதே போல கார்த்திக் கோபிநாத் என்ற களவாணி இளைஞன் (விஷ்வ இந்து பரிஷத்) பெரம்பலூர் சிறுவாச்சூரில் பெரியசாமி மலை அடிவாரத்தில் பெரியசாமி, செங்கமலையார் கோவில் சிலைகள் உடைபட்ட விவகாரத்தில் வதந்தியைப் பரப்பி, பல லட்சங்கள் பொதுமக்களிடம் நிதி வசூலித்து ஆட்டையைப் போட்டார். இவர் பாஜக தலைமையுடன் நெருக்கமானவர் என்பதால், மக்கள் நிர்ப்பந்தத்தால் கைது செய்த காவல்துறை கோர்ட்டில் முறையாக குற்றத்தை வேண்டுமென்ற நிரூபிக்கத் தவறி, அலட்சியம் காட்டி அவரை விடுவித்தது.
தமிழ்நாட்டில் தற்போது அதிக ரவுடிகள், நில அபகரிப்பு மற்றும் மோசடி பேர்வழிகள் அடைக்கலமாகி உள்ள கட்சியாக பாஜக உள்ளது. இந்த நபர்கள் மீது தமிழக காவல் நிலையங்களில் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. மத்தியில் அதிகாரத்தில் உள்ள கட்சி. மாநில அரசுக்கு நம் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் எங்கிருந்து வரும் பார்த்துவிடுவோம்.. என்பது இவர்களில் பலரது எண்ண ஓட்டமாக உள்ளது.
நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொய்களை அள்ளி இறைத்து கலவர அரசியலுக்கு வித்திட்ட வண்ணம் உள்ளார்! இந்த விவகாரத்தில் அரசு கனத்த மெளனம் சாதிக்கிறது.
இதன் உச்சமாக, ”இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என கிறிஸ்தவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கின்றன” என வதந்தியை பரப்பினார். உண்மையில் இந்த வழக்கை போட்டது இந்துவான அர்ஜின் கோபால் என்பவரே!
இதை சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், ”அப்படி எந்த கிறிஸ்த்துவ நிறுவனமும் வழக்கு போடவில்லை…! அண்ணாமலை இரு மதங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கி கலவரத்தை விளைவிக்க பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை வேண்டும்” என சேலம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதற்கு என்ன விளக்கம்? என அண்ணாமலையை அழைத்து விசாரிக்க வேண்டிய நீதிமன்றமோ, தமிழக அரசிடம் அனுமதி பெற்று வரக் கூறுகிறது! அண்ணாமலை சட்டப்படி எந்த அரசு உயர் பதவியிலும் இல்லாத போது விசாடிப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் அரசிடம் அனுமதி வாங்கச் சொன்னது விசித்திரமாக உள்ளது! சுயேட்சையாக செயல்பட வேண்டிய நீதிமன்றமே இந்த லட்சணத்தில் இருந்தால் எப்படி?
நடிகை கெளதமி விவகாரத்தில் புகார் கொடுத்து ஐம்பது நாட்களாகியுள்ள நிலையில் நிலமோசடி, பொருளாதார மோசடி செய்த அழகப்பனை காவல் துறை நெருங்க முடியவில்லை. குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார் என்பது நம்பும்படி இல்லை. கெளதமி சொல்வது போல அவருக்கு பாஜக தலைவர்கள் ஆதரவாக உள்ளதால், காவல்துறை தயங்கி நிற்கிறதோ என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்!
கடந்த ஜீலை மாதம் கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் காவல்துறையில் விசிக பிரமுகர் விக்ரமன் மீது புகார் கொடுக்கிறார். விக்ரமன் புகார் மனுவில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும், நானும் நெருக்கமாகப் பழகி வந்தோம். விக்ரமன் என்னை காதலிப்பதாக சொன்னார். அவரிடம் என்னை சட்டரீதியாகத் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதை ஏற்கவில்லை. அவர் என்னைக் காதலிப்பதாக சொல்லி ரூ.13.7 லட்சம் பணம் வாங்கி அதில் ரூ.12 லட்சத்தைத் திருப்பி கொடுத்துவிட்டார். இன்னும் ரூ.1.7 லட்சம் திருப்பி தர வேண்டும். அவர் மீது என்னைக் காதலிப்பதாக சொல்லி நம்பிக்கை மோசடி செய்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன்.
இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள கௌதமசன்னா, சந்திரகுமார், கனல்விழி, சுந்தரவள்ளி மற்றும் செம்மலர் என்ற ஐந்து நிர்வாகிகளை ஒரு குழுவாக அமைத்து புகார் கொடுத்த மற்றும் புகார் சுமத்தப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை முடிந்து அவர்கள் அறிக்கை சமர்பித்ததாகத் தெரிகிறது. ஆனால், அந்த விசாரணையின் இறுதி அறிக்கையை தலைவர் திருமாவளவனும் வெளிப்படுத்தவில்லை. எனக்கும் தரவில்லை. விக்ரமன் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்த்ததில் கட்சித் தலைமையின் மெளனம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. ஆகவே காவல்துறை விசாரித்து எனக்கு நீதி வழங்க வேண்டும்’’ எனக் கேட்டுள்ளார்.
ஆனால், இந்தப் புகாரை காவல்துறை கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போட்ட நிலையில், அந்தப் பெண் நீதிமன்றத்தை அணுகி காவல்துறை வழக்கு பதிவு செய்ய ஆர்டர் பெற்றுள்ளார். பொதுவாக பாதிக்கப்பட்ட பெண்களில் மிகப் பெரும்பாலோர் காவல்துறைக்கு வந்து புகார் கொடுக்கத் துணிவதில்லை. இப்படி அத்திபூத்தாற் போல ஒருசிலர் தான் முன் வருகின்றனர். இந்த பெண் கொடுத்த புகாரிலேயே அந்த விக்ரமன் என்பவர் இது வரை 15 பெண்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதில் இருந்தே இதை உணரலாம்.
மக்கள் கேட்பதெல்லாம் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு புகார் தந்தால், பாதிப்புக்குள்ளாக்கியவர் செல்வாக்கான நபர் என்றால், முதல் கட்ட விசாரணை செய்யக் கூட தயக்கம் காட்டுவீர்களா..? மாதக் கணக்கில் ஒரு புகாரை வாங்கி வைத்து அலட்சியப்படுத்துவது அவலமில்லையா? அரசியல் பிரமுகர்கள் என்றால், காவல்துறை நெருங்கவே முடியாது என்பது காவல்துறைக்கு பெருத்த அவமானம் இல்லையா? பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீதிமன்றம் சென்றால் தான் விசாரிக்கும் தைரியம் பெறுவீர்களா…? இவ்வளவு பலஹீனமாக தமிழக காவல்துறையை வைத்திருப்பது அதனை நிர்வகிக்கும் முதல்வருக்கும், அவரது ஆட்சிக்கும் நல்ல பெயரைத் தருமா?
Also read
ஒரு அரசாங்கம் என்பது எளியோருக்கு அரணாக இருக்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது தொடங்கி, அது ஆதிக்க சக்திகளுக்கு தான் அரணாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டுள்ளது! ஒரு அரசு எத்தனை இலவசங்களை மக்களுக்கு அள்ளிக் கொடுத்தாலும், நீதி வழங்கத் துணிவின்றி கோழையாக இருந்தால், மக்கள் அந்த அரசை நிச்சயம் நிராகரித்துவிடுவார்கள்! இதை முதல்வர் மனதில் இருத்தி, இனியுள்ள ஆட்சி காலத்திலாவது காவல் துறையை கம்பீரமாக இயங்க அனுமதிக்க வேண்டும். தன்னால் காவல்துறையை நிர்வகிக்க இயலாவிட்டால், அதற்கு தோதான ஆளுமையை கண்டறிந்து தந்துவிட வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
இந்த இதழுக்கு பாசக வெறுப்பு இதழ் என்று பெயர் வைத்திருக்கலாம். பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல.