ஆஸ்திரேலிய வெற்றியும், இந்தியாவின் தோல்வியும்!

-அண்ணாமலை சுகுமாரன்

படு எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி பெற்றதற்கு என்ன காரணம்? இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றி, தோல்விகளில் அதிக உணர்ச்சிவசப்படுவது எதனால்? கம்மின்ஸ் திமிரானவரா? உலக கோப்பை விளையாட்டு நிகழ்வை அணுவணுவாக ரசித்து  விமர்சிக்கிறார், அ.சுகுமாரன்!

‘’மைதானத்தில்   இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் இந்திய ரசிகர்களை மௌனமாக்க விரும்புகிறேன்’’ என்று போட்டிக்கு முன்பு பேட்டியில்  கூறிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறார்.

அவர் சொன்னது போலவே ஆஸ்திரேலியா போட்டியில் வென்று இந்திய ரசிகர்களை மௌனமாக்கி விட்டார். ஆனால், இந்திய ரசிகர்கள் அவர் எதிர்பார்த்தது போல் இல்லாது அவர்களின் வெற்றிக்கு அதிக ஆரவாரம் செய்து, அவர்களின் வெற்றியை பாராட்டிப் போற்றி  இந்தப் போட்டியில் நாம் வென்றது போல் மகிழ்திருக்கலாம். எப்படியும் வென்றது விளையாட்டு தான் என்று இருக்க வேண்டும். இதே போட்டி  சென்னையில் நடந்திருந்தால்  ரசிகர்கள் அகமதாபாத் அரசிகர்கள் போல இருந்திருக்கமாட்டார்கள்!

விளையாட்டுத்திறன் (Sportsmanship) எனப்படுவது யாதெனில்,  நியாயமான விளையாட்டு நெறி முறைகளைக் கடைப்பிடித்தல், விளையாடுபவரின் நடத்தை மற்றும் ஈடுபாடு   மற்றும் எதிராளியிடம் காட்டப்படும்  பொதுவான நல்லெண்ணம் பற்றிய அவர்களைப் பற்றிய புரிதல்  அதில் காட்டப்படும் அர்ப்பணிப்பு ஆகியவை முக்கியம் ஆகும்.

விளையாட்டில் வெற்றி தோல்விகள் இருக்கலாம். ஆனால், இரு புறமும் வெற்றியடைவது விளையாட்டுத்திறன் ( Sportsmanship )எனும்  மேன்பாடுதான். இதுவே, உலகளவில் உணரப்படுவது. எந்த ஒரு விளையாட்டும் அது விளையாட்டாகவே பார்க்கப்பட வேண்டும். அதுவே, இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியானாலும், அதையும்  விளையாட்டாக தான் பார்க்க வேண்டும். தோல்வி பெறும்  நாட்டின் அணி அந்த விளையாட்டில் தான் தோற்கிறது, அதில் ஆடிய  அணி தான் தோற்றது. அதில் தோற்றது அந்த நாடல்ல. ஆனால், நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கிரிக்கெட்அணி தான்  தோற்றது அதை ஏதோ இந்திய நாட்டிற்க்கே  ஏற்பட்ட தோல்வி போல் எண்ணி பலரும் மனம் கலங்குகின்றனர்! தேசபக்தியை  விளையாட்டில் தொடர்பு படுத்துவதும், தேவையில்லாமல் அதிக ‘மீடியா ஹைக்’ ஏற்படுத்தியதுமே இதற்கு காரணமாகும். விளையாட்டில் வெற்றி பெறுவதற்குத் தோல்விக்குப் பல காரணிகள் உண்டு. ஒரு அணி தான் ஒரு சமயத்தில்  வெல்ல முடியும்!. வெற்றி தோல்வி மாறி மாறித் தான் வரும்.

 

ஆனால், இந்தியாவிலோ அதை ஒரு போதையாக, ஒரு உயர் வர்க வெளிக் காட்டுதலாக, சமுதாய உயர்வைக் காட்டும் குறியீடாக, தேசபக்தியின் அடையாளமாக கட்டமைத்துள்ளனர்! கிரிக்கெட் போட்டிகள் அந்த அளவு வணிக கார்பரேட்டுகளாலும், எதையும் ஊதிப் பெரிதாக்கும் வணிக நோக்கம் கொண்ட ஊடகங்களாலும் இந்திய மக்கள் ஆட்டுவிக்கபடுகின்றனர்! நிஜ வாழ்வை விட கிரிக்கெட், சினிமா போன்ற  கனவுலக போதைகளில் மனதை செலுத்தச் செய்து சமூகத்தின் நிஜமான துக்கங்களை உணராவண்ணம் மடை மாற்றம் செய்யும் யுக்தி நமது நாட்டில் கடைப் பிடிக்கப்படுகிறது. எனவே, இங்கு விளையாட்டு த் தோல்வி மிகுந்த மனச் சோர்வை அளிக்கிறது. ஏனெனில், அதன் வெற்றி அந்த அளவு எதிர்பார்க்கப்பட்டது. பல ஆலயங்களில்  வழிபாடுகள், பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டது. இதனால் கிடைத்த தோல்வியை கண்ணியமாக  எதிர் கொள்ளவே நாம்  தயாரில்லை!

 

இந்திய அணி 2-ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை நழுவ விட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்று ரசிகர்களும், இந்திய அணியினரும் நம்பி இருந்த நிலையில், அனைத்தும் கானல் நீராகிவிட்டது. போட்டிக்குப் பின் இந்திய ஊடகங்கள் ஒரு விதம் என்றால், உலக ஊடகங்கள் அவைகளை வேறு விதமாக நோக்கின. ”உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் விளையாட்டுத் திறமையைக் காட்டவில்லை” என்று தி கிரானிக்கிள் செய்தித் தாள் தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.

லீக் சுற்றுகளில் தோல்வியே இல்லாமல் தொடர்ந்து 9 வெற்றிகள், அரையிறுதியில் மிகப்பெரிய வெற்றி என்று வெற்றி நடையுடன் வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை எந்தப் போட்டியிலும் தோல்வி அடையாத இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், இந்த வெற்றி சிறப்பு வாய்ந்தது என்று அந்த நாளிதழ் எழுதியிருக்கிறது.

மேலும், கோப்பை ஆஸ்திரேலிய அணியிடம் ஒப்படைக்கப்பட்ட சமயம், இந்திய அணி களத்தில் எங்கும் காணப்படவில்லை” என்று அந்தச் செய்தி கூறுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் கருத்துகளை ‘ஹெரால்ட் சன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், அவர் ஆடுகளம் தொடர்பான இந்தியாவின் வியூகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தயார் செய்யப்பட்ட ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக பாண்டிங் கூறியுள்ளார்!

அதே சமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியை விட ஆடுகளத்தை நன்றாகப் புரிந்து கொண்டதாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

‘நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நிலவிய அமைதி கம்மின்ஸுக்கும் அவரது அணியினருக்கும் பொன்னான தருணம்’ என்று ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது

‘தி ஏஜ்’ பத்திரிகை, ‘90, 000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சத்தம் எழுப்பிய மைதானத்தில், விராட் கோலியின் விக்கெட் வேரோடு பிடுங்கப்பட்ட சத்தத்திற்குப் பிறகு, 11 ஆஸ்திரேலிய வீரர்களின் உற்சாகக் குரல்கள் மட்டுமே கேட்டன, ’ என்று எழுதியிருக்கிறது.

அது மேலும், “கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், கம்மின்ஸ் தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார், பின்னர் மீதமுள்ள பணியை டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுசேன் இடையேயான 192 ரன்களின் பார்ட்னர்ஷிப் மூலம் முடித்தார்” என்று எழுதியிருக்கிறது.

‘தி சண்டே மார்னிங் ஹெரால்ட்’ பத்திரிகை, ‘இந்தியாவில் உலகக் கோப்பையை வெல்வது ’கிரிக்கெட்டின் உச்சம்’, என்று கூறியதாக எழுதியிருக்கிறது.

இந்தியாவைத் தோற்கடித்து ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது தனது அணியின் மிகப்பெரிய சாதனை என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் கருதுவதாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

கம்மின்ஸ், “இது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக இந்தியாவில் இது போன்ற பார்வையாளர்களுக்கு முன்னால் வெற்றி பெற்றது. இது நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாகும். எங்கள் அணி ஆஷிஸ் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளது. இது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும், ” என்று கூறியுள்ளார்!

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் அபாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை, அடுத்த ஒன்பது போட்டிகளிலும் வெற்றிபெறச் செய்த கம்மின்ஸ் ஒரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்!

நடந்து முடிந்திருக்கும் உலகக் கோப்பைத் தொடரின் 3-ஆவது போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணி பெறத் துவங்கிய வெற்றிகள், தவறுகளைத் திருத்திக் கொண்டு ஆடிய ஆட்டங்கள் ஆகியவை மெல்ல ஆஸ்திரேலியாவின் பக்கம் கவனத்தைத் திருப்பச் செய்தன. அதிலும் டிராவிஸ் ஹெட் அணிக்குள் திரும்பியது அந்த அணிக்கு மிகப் பெரிய பலம்.

அது மட்டுமல்லாமல் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்பதால், இறுதிப் போட்டியை எவ்வாறு அணுக வேண்டும்? எவ்வாறு எதிரணிக்கு வியூகங்களை வகுக்க வேண்டும்? ஒவ்வொரு வீரருக்குமான தனிப்பட்ட திட்டங்கள் என்ன? என்பதை ஆஸ்திரேலிய அணி நன்றாக அறிந்திருக்கும்.

அதற்கு ஏற்றார் போல், டாஸ் வென்றவுடன் கேப்டன் கம்மின்ஸ் சற்றும் யோசிக்காமல் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தனித் தனி யுத்திகளைப் பயன்படுத்தி, கச்சிதமாகத் திட்டங்களைச் செயல்படுத்தி 240 ரன்களுக்குள் சுருட்டினார்.

அதிலும் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடர், ஆமதாபாத்தில் 1. 25 லட்சம் இந்தியர்களுக்கு மத்தியில் அந்நாட்டு அணியை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமல்ல.

ஆமதாபாத் மைதானத்தில்  நடந்த இறுதிப்போட்டி ஆடுகளம் மெதுவான ஆடுகளம், பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை, சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதா என்பதுகூடத் தெரியாது. ஆனால், இவை அனைத்தையும் தங்களின் வலிமையாக மாற்றிக் கொண்டு செயல்பட்டது தான் ஆஸ்திரேலியா சாம்பியனாக உருவெடுக்கவும், 6-ஆவது முறையாகப் பட்டம் வெல்லவும் காரணமாக அமைந்தது!

வேகப்பந்து வீச்சிலும் ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகிய 3 பேரைத் தவிர யாருமில்லை. சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பா மட்டுமே முழுநேரச் சுழற்பந்து வீச்சாளர், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்ஷ் ஆகியோர் பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள். இவர்களை வைத்துக் கொண்டு ஆடுகளத்தைத் தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டு இந்திய அணியை 240 ரன்களில் சுருட்டியதில் தான் ஆஸ்திரேலியா ஒரு சாம்பியனாக மிளிர்கிறது.

அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்த 3 பந்து வீச்சாளர்களுக்குக் கிடைத்த அனுபவம் தான் பைனலில் சிறப்பாகப் பந்துவீச முடிந்தது. பெரிதாக ஸ்விங் பந்துவீச்சு இல்லை, கட்டர்கள் கூட பெரிதாக இல்லை ஆனாலும், லைன் – லெங்த் துல்லியமாக இருந்தது, 90% பந்துகளை தவறான லெங்த்தில் வீசவில்லை, தொடர்ந்து நெருக்கடி தரும் லெங்த்தில் வீசி, இந்திய பேட்டிகளைக் கிறங்கடித்ததுதான் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களின் பலம்.

ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை ஆஸ்திரேலிய அணியிடம் ஆட்டம் கையில் இல்லை. ஆனால், ரோஹித் சர்மா பலமுறை ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவரைப் பந்துவீசச் செய்து கட்டம் கட்டினர். 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விவியன் ரிச்சார்ட்ஸுக்கு இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் பிடித்த கேட்ச் தான் திருப்புமுனையாக அமைந்து, மேற்கிந்தியத் தீவுகள் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

அதுபோல், இந்திய அணியின் இந்த உலகக் கோப்பைத் தோல்விக்குக் காரணமாக அமைந்தது ரோகித் சர்மாவின் கேட்சை டிராவிஸ் ஹெட் பிடித்தது தான். இந்த இரு கேட்சுகளும் தான், போட்டியின் முடிவுகளை எதிரணியின் கைகளிலிருந்து பறித்த தருணங்களாகும். சேஸிங்கிலும் ஆஸ்திரேலிய அணியின் நுணுக்கங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஷமி, பும்ரா இருவரும் பவர்ப்ளேயில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்! ஓவருக்கு 4. 5 ரன்கள் என்று எகனாமி வைத்திருக்கிறார்கள். ஆமதாபாத் மைதானம், லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுக் குரல், பும்ரா, ஷமியின் ஸ்விங் பந்துவீச்சு, மின்னொளி வெப்பம் எனக் கடும் அழுத்தத்துக்கு மத்தியில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் விளையாடினர்.

அதனால் தான் வெளிப்புற அழுத்தத்தில் என்னசெய்வெதென்று தெரியாமல்கூட, ஸ்மித் தனக்குரிய டி. ஆர். எஸ் வாய்ப்பைப் பயன்படுத்தாமல் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணியும் ஒரு கட்டத்தில் அழுத்தத்தில் இருந்தாலும், அதிலிருந்து லாபுஷேன், ஹெட் இருவரும் தங்களையும் மீட்டு, அணியையும் மீட்டுக் கரை சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடியும் போது, ஆஸ்திரேலியா தங்கள் வெற்றி இலக்கில் கால் பகுதியைக் கூட எட்டவில்லை.

வெற்றிக்குப்பின் ஆஸ்திரேலியக் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “இந்த வெற்றிக்காகத்தான் எங்களின் சிறப்பான ஆட்டத்தைச் சேமித்து வைத்திருந்தோம் என நினைக்கிறேன். இரு பெரிய பேட்டர்கள் சேர்ந்து எங்களுக்கு வெற்றியை உரித்தாக்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் வயதானவர்களாக இருப்பினும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.

”ஆமதாபாத் அரங்கில் குழுமும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் நிசப்தமாக்கிவிடுவேன். அதைத் தவிர எனக்கு மனநிறைவு தரக்கூடியது வேறு ஒன்றுமில்லை என்று இறுதிப் போட்டிக்கு முன்பாக கம்மின்ஸ் பேசியிருந்தார். தான் சொன்னதை கம்மின்ஸ்” நிறைவேற்றிவிட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கான ரகசியங்கள்;

இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆஸ்திரேலிய அணியினர் தனித்தனியாக ஸ்கெட்ச் அமைத்தனர் எனக் கூறப்படுகிறது. ரோஹித் சர்மா பலவீனம் என்ன? அவரை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது? கோலியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?, ராகுலுக்கு நெருக்கடி அளிப்பது எப்படி? என ஒவ்வொருவருக்கும் தனித்தனித் திட்டத்தை வகுத்திருந்தனர்.

அந்தத் திட்டத்தை வகுப்பது மட்டுமல்லாமல், அதைக் களத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தெரிந்த கேப்டன் இருப்பது அவசியம். அந்தப் பணியை நேற்று கம்மின்ஸ் மிகுந்த கச்சிதமாகச் செய்தார். ரோஹித் சர்மாவை பெரிய ஷாட்களை அடிக்க வைத்து அவருக்கான வலையில் அவரை சிக்க வைத்தனர்.

விராட் கோலி பவுண்டரி அடிக்கும் திசையில் கட்டுக்கோப்பான கூடுதல் பீல்டர்களை நிறுத்தி அவரை திணறவைத்து, பொறுமையிழந்து ஆட்டமிழக்க வைத்தனர். இது போன்று ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பிளான் அமைத்திருந்தனர்.

முதல் 10 ஓவர்கள் வேண்டுமானால் இந்திய அணியின் பக்கம் ஆட்டம் சென்றிருக்கும். ஆனால், மீதமுள்ள 40 ஓவர்களும் ஆஸ்திரேலியக் கட்டுப்பாட்டில் தான் ஆட்டம் இருந்தது.

கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக வந்தது முதல் இதற்கு முன் இருந்த மற்ற கேப்டன்களில் இருந்து தன்னை வேறுபடுத்திச் செயல்பட்டார். மற்ற கேப்டன்களான ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், கிளார்க், டிம் பெய்ன் போல் கம்மின்ஸ் தன் முகத்தைச் சிடுசிடுவென களத்தில் வைத்திருக்கவில்லை.

கம்மின்ஸ் திறமை இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தனித் தன்மையுடன் வெளிப்பட்டது. இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான வியூகத்தை கம்மின்ஸ் வகுத்தார். வியூகம் வகுப்பது முக்கியமில்லை அதைக் களத்தில் கச்சிதமாகச் செயல்படுத்தி கோப்பையை வென்று கொடுத்த போது கம்மின்ஸ் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்!

எப்போதும் புன்னகையுடன், அமைதியான முகத்துடன், சகவீரர்களை அனுசரித்துச் செல்லும் போக்கை கம்மின்ஸ் கடைப்பிடித்தார். பந்துவீச்சாளர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து, அவர்களின் நோக்கத்தின்படி பீல்டிங்கை மாற்றி அமைத்துச் செயல்பட்டார்

வெற்றிக்கு கம்மின்ஸ் தலைமை மட்டும் காரணமல்ல, ஆஸ்திரேலிய அணியில் 7 வீரர்கள் கடந்த 2015 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விளையாடி வருகிறார்கள். அனுபவம் மிக்க வீரர்கள் கம்மின்ஸுக்கு பக்கபலமாக இருந்ததும், கோப்பையை வெல்ல முக்கியக் காரணம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

”ஒரு லட்சம் ரசிகர்களை மவுனமாக்குவேன்” என்று கம்மின்ஸ் பேசிய பேச்சு ஆதிக்க மனப்போக்கு இல்லை.  ஆஸ்திரேலியா இயல்பாகவே விளையாட்டு சார்ந்த நாடு. அங்கிருக்கும் வீரர்கள் எதிரணியினரை இதே போன்றுதான் இயல்பாகவே பேசுவார்கள். இது ஆதிக்க மனப்போக்கு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இது முழுமையான ஸ்போர்ட்மேன்ஷிப், ஆஸ்திரேலியர்களின் மனநிலையை கம்மின்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் இந்தியாவில் கொரோனா கடுமையாகத் தாக்கியபோது, ஆக்சிஜன் தேவைக்காக 50 ஆயிரம் டாலர் நிதியுதவி அளித்தவர் பாட் கம்மின்ஸ். அப்போது அவர் இப்படி இங்கு வந்து கிரிக்கெட் ஆட வரப்போகிறோம் என்பதை அறிந்திருக்கமாட்டார்.

இந்திய அணி இப்போது இருக்கும்ஃபார்மில் எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இருப்பதாக இருந்தது. இந்த உலகக் கோப்பையோடு பல மூத்த வீரர்கள் விடைபெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆதலால், நிச்சயமாகக் கோப்பையை வென்று கொடுப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், அனைத்தும், இறுதிப் போட்டியில் எதிர்மறையாக நடந்துவிட்டது. அதிகப்படியான எதிர்பார்ப்பு பளு அவர்கள் மேல் ஏற்றப்பட்டது. அவர்கள் பதற்றமுடன் விளையாட நேர்ந்தது. அவர்களின் இயல்பான விளையாட்டை வெளிப்படுத்த இயலவில்லை. இறுதியாட்டம் ஆட, ஒரு தனி மனப்பான்மை வேண்டும். அது அவர்களிடம் இல்லை.

உலகக் கோப்பையை நடத்தும் அணிகள் தான் அந்தக் கோப்பையை வெல்லும் என்ற டிரண்ட் கடந்த 3 தொடர்களாக இருந்தது. அதை மாற்றி, இந்தியாவில் நடத்தப்பட்ட உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, தங்களை உலக சாம்பியன் என்று நிரூபித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசியின் டி20 உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை என 3 கோப்பைகளையும் வென்று, உலகக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செய்து ஆட்சி செய்துள்ளது.

இந்திய அணி லீக் ஆட்டங்களிலும், அரையிறுதியிலும் பெரிதாகத் தவறு ஏதும் செய்யவில்லை, அல்லது குறைவாகத் தவறுகள் செய்ததால் தான் வென்றது என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியால் ஏன் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. இனி விளையாட்டை விளையாட்டாக மற்றும் கருதி உணர்ச்சி வசப்படாது, பதற்றமின்றி விளையாடி வரும் காலங்களின் நமது அனைத்து விளையாட்டு அணிகளுமே வெற்றியைக் குவிக்கும் என்று வாழ்த்துவோம். .

இப்போது வாழ்த்தும், நல்லெண்ணமுமே தேவை.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பதில்

வள்ளுவர் தரும் ஊக்கம் நமக்கு அடுத்தூர்வது நிச்சயம் இத்தகைய தோல்வி அல்ல

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

(இதில் இடம் பெற்ற சில செய்திகள் பிபிசி இணையதளக் கட்டுரைகளில் வெளிவந்த தரவுகளை ஆதாரமாகக் கொண்டன.)

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time