பாஜக அரசின் ஆதரவில் ‘மணல் மாஃபியா’ துரைமுருகன்!

-சாவித்திரி கண்ணன்

வரலாறு காணாத மணல் கொள்ளைகள் முழ்வீச்சில் அரங்கேறி வருகின்றன! நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை சூறையாடுவதால் மழை, வெள்ள காலங்களில்  பாதிப்பு அதிகமாகிறது. மலையளவு கொள்ளையடித்து, மடுவளவு அரசு வருமானத்தை காட்டும் துரைமுருகனை மத்திய பாஜக ஏன் விட்டுவைத்துள்ளது?

துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்த கோவில்பத்து வி.ஏ.ஓ.,வான  லுார்து பிரான்சிஸ் முறப்பநாடு பகுதியில், தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை தடுக்க முயற்சித்ததில் மணல் மாபியாக்கள் லுார்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு சென்றனர்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளுவதாக பொதுமக்கள் புகாரைத் தொடர்ந்து மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி (வி.ஏ.ஓ), உதவியாளர் மகுடீஸ்வரன், இரு போலீசார் என நான்கு பேரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

சட்ட விரோதமாக சவுடு மணல் கடத்தி செல்லும் லாரியை மடக்கிப் பிடித்து வி.ஏ.ஒ, தாசில்தார், கோட்டாட்சியர் என அடுத்தடுத்து தகவல் தெரிவித்து முறைப்படி அவர்களிடம் ரிப்போர்ட் வாங்கி மணல் கடத்தல்கார்களை கைது செய்ய முயற்சிக்கிறார் கும்பகோணம்- நாச்சியார் கோவில் காவல் நிலைய எஸ்.பி ஈஸ்வரன்! இவர்கள் யாருமே சப்போர்ட் தர முன்வரவில்லை என்பதோடு, அந்த எஸ்.ஐயை 48 மணி நேரத்தில் இடமாற்றம் செய்துவிட்டனர்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாறு மட்டுமின்றி, வறண்டு கிடக்கும் பெரும்பாலான நீர்நிலைகளில் மணல் மற்றும் மண் அதிக அளவில் கடத்தப்படுகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் பகல், இரவு பாராமல் மணல் திருட்டு நடைபெறுகிறது.

அமைச்சர் துரைமுருகனின் சொந்த மாவட்டமான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக லாரி, டிராக்டரில் மணல் கடத்தப்படுவதை நவம்பர் 2 ஆம் தேதி பார்த்த முன்னாள் ராணுவ வீரரான உமாபதி என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த அந்த கும்பல் வேகமாக வந்து உமாபதியை அரிவாளால் வெட்டியுள்ளனர்!

இவை எல்லாம் சில சமீபத்திய சாம்பிள்களே! நாள் தோறும் தமிழகத்தில் மணல் மாபியாக்கள் எதிர்ப்போரை தாக்கி வருகின்றமர். ஆக, தமிழகத்தில் நேர்மையாக செயல்பட துடிக்கும் அரசு அலுவலர் யாரும் செயல்படவே வாய்ப்பற்ற நிலைமை நிலவுவதையே உணர்த்துகிறது! காரணம் மேல்மட்டத்திலேயே மணல் மாபியாக்களுக்கு பூரண சுதந்திரம் தரப்பட்டுவிடுவதால் அனைத்து நிலைகளிலும் இயற்கை வளத்தை சூறையாடித் திளைக்கின்றனர். அரசு அதிகாரிகளை சரிகட்டும் மணல் மாஃபியாக்கள் மாவட்டம் முழுவதும் தங்கள் தொழிலை தற்போது விரிவுப்படுத்தியுள்ளனர்!

திமுக அரசு பதவி ஏற்ற பிறகு நீர்வளத்துறையும், குவாரிகளுக்கான பொறுப்பும் அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு சென்ற ஆட்சியைக் காட்டிலும் கூடுதல் குவாரிகள் செயல்படவும், அளவுக்கதிகமாக மணல் அள்ளவும் பச்சைக் கொடி காட்டினார் அமைச்சர்! இவை தவிர, அனுமதியில்லாமல் குவாரிகள் திறக்கப்பட்டு மணல் கடத்தல் ஜரூராக நடப்பதையும் ஊக்குவித்து தன் உதவியாளர் உமாபதி மூலம் கமிஷனும் பெற்று வருகிறார்.

காவல் மற்றும் வருவாய்த் துறையினரும் பெயரளவுக்கே சோதனை நடத்துவதாகவும், மணல் மாஃபியாக்களுக்கு பெருமளவு அரசு அதிகாரிகளே ஒத்துழைத்து வருவதால் மணல் திருட்டு தங்கு தடையின்றி நடைபெறுகிறது என்றும் அனைத்து தரப்பிலும் சொல்லப்படுகிறது! ‘நிகழ்கால தேவைக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும். ஸ்டாக் வைக்கக் கூடாது’ என்ற விதிகளை எல்லாம் தளர்த்தினார் துரைமுருகன். மணல் கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படுவதாக ஷோ காண்பித்தார். இதனால், மணல் திருட்டுகள் அதிகரித்தனவேயன்றி குறைந்தபாடில்லை.

மணல் கடத்தல் புகழ் கரிகாலனுடன் அமைச்சரும், அவர் மகனும்!

தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையை அரசே தமிழ்நாடு நீர்வளத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. ஆன்லைனில் மணல் வாங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது.  ஆனால், கணக்கில் வராமல் பெருமளவில் மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக ஆஃப்லைனிலும் விற்பனை நடப்பதாக புகார்கள் பரவலாக எழுந்தன! இதனால் மத்திய பாஜக அரசின் அமலாக்கத்துறையானது, மணல் விற்பனையில் பணமோசடி மற்றும் வரிஏய்ப்பு நடப்பது குறித்து தமிழகத்தின் வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 34 இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்! மணல் அள்ளும் மையங்கள், மணல் விற்பனை செய்யப்படும் இடங்கள், மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இந்த சோதனை மேற்கொண்டனர்.

மணல் மாபியாக்கள் ராமச்சந்திரன், ரத்தினம்

தமிழகத்தில் மணல் கடத்தலில் மும்மூர்த்திகளாகத் திகழும் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் இடங்களிலும் தீவிரமாக சோதனை நடத்திய அமலாக்கத் துறை இதில், ரூ.12.82 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.2.33 கோடி பணம் மற்றும் ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது எனக் கூறியதேயன்றி, மணல் கடத்தலுக்கு துணை போன அமைச்சர் துரை முருகன் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தீப் சக்சேனா ஆகியோர் தொடர்பான உண்மைத் தகவல்களை இது வரை சொல்லவில்லை. இதில் சூத்திரதாரியாக செயல்படும் எந்த முக்கியஸ்தர்களையும் கைது செய்யவில்லை. தமிழக நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையாவுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரித்தனர். அவ்வளவு தான்! மேல்மட்டத்தில் என்ன டீலிங் நடந்ததோ தெரியவில்லை.

இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது!

மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து , “சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகார வரம்பு இல்லை. மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கில் அமலாக்கத் துறை செயல்படுகிறது” என்று வாதிட்டது!

அப்போது அமலாக்கத் துறை தரப்பில், ”இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு சட்டங்களின் கீழ் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு. இதை தமிழக அரசு தடுக்க முடியாது” எனக் கூறி பின்வரும் அதிர்ச்சி தகவல்களைக் கூறினர்.

# தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் ரூ.4.700 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

# ஒரு யூனிட் மணலுக்கு அரசுக்கான வருமானம் ரூ.1900 தான்! ஆனால், ரூ.20 ஆயிரம் வரை லாபம் தனியாருக்கு செல்கிறது.

# மணல் அள்ள தமிழக அரசு அனுமதித்ததோ 490 ஏக்கர். ஆனால் அள்ளப்பட்டு வருவதோ 2,500 ஏக்கர்களில்!

# நீர்வளத் துறை ரெக்கார்ட்படி நான்கு லட்சத்து ஐயாயிரம் யூனிட் தான் மணல் அள்ளப்பட்டதாக உள்ளது. ஆனால், உண்மையில் 27 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் அளவுக்கு மணல் அள்ளப்பட்டு உள்ளது.

இவை மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்களை விசாரிக்க வேண்டும்’’ என கேட்டனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏனோ அனுமதிக்கவில்லை.

இது குறித்து தமிழக நீர்வளத்துறையின் ஒரு சில நேர்மையான அதிகாரிகள் கூறியது என்னவென்றால், துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் அமைச்சரின் கண் அசைவில் தான் இங்கே எல்லாம் நடக்கிறது! அமைச்சரின் உதவியாளர் உமாபதி தான் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செய்து அமைச்சருக்கு பணம் பெற்றுத் தருகிறார். உமாபதியை ஏன் விசாரணக்கு உட்படுத்தவில்லை எனத் தெரியவில்லை! ஊழலுக்கு துறை ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கி வருபவர் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா. அவரையும் கைது செய்யவில்லை. இவர்களை எல்லாம் மீறி மாவட்ட ஆட்சியர்கள் நீர்வளத் துறை விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது! மாவட்ட ஆட்சியரை முத்தையா தான் கோர்த்துவிட்டுள்ளார் அமலாக்கத் துறையிடம்!

மூலவர்களிடம் விசாரிக்காமல் அமலாக்கத் துறை சுற்றி வளைப்பது சந்தேகமாக உள்ளது. அமைச்சர் துரைமுருகன் மத்திய ஆட்சியாளர்களுடன் நல்ல புரிதலில் இருக்கிறார்! செந்தில் பாலாஜியை கைது செய்தது போல துரைமுருகனை கைது செய்யாமல் மத்திய ஆட்சியாளர்கள் பிரச்சினையை திசை திருப்புவதை நோக்கினால், ஏதோ சமரசம் திமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது என்றனர்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time