கிலி ஏற்படுத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

-சாவித்திரி கண்ணன்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயமுறுத்துகிறது! தொலைதூரப் பயணங்கள் என்பவை எளியோருக்கு எட்டாக்கனியாகி விடுமோ என அதிர்ச்சி ஏற்படுகிறது! உலகத் தரத்தில் படாடோபத்தைக் காட்டி நிற்கும் பேருந்து நிலையம், உள்ளூர் மக்களை பெரிதும் சிரமப் படுத்துகிறது! அடிப்படை திட்டமிடல் கூட இல்லை..!

சென்னை அநியாயத்திற்கு விரிந்து பரந்து, பிதுங்கி வழிகிறது! ஐம்பது ஆண்டுகளில் ”ஐயோ கொடுமையே..” என்ற அளவுக்கு நெரிசல்கள்! தென் இந்தியாவில் சென்னை அளவுக்கு விரிந்தும், வீங்கியும் போய் கொண்டே உள்ள  மாநகரம் வேறில்லை. நகர விரிவாக்கம் என்பது எப்படி நரக விரிவாக்கமாக மாறி நிற்கிறது என்பதற்கு சென்னைக்கு வெளியில் வெகு தூரத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையமே சாட்சி!

1990 உலகமயமாக்கல், தாராளமயத்திற்கு பிறகு சென்னையை சுற்றியிருந்த விவசாய நிலங்களெல்லாம்  விழுங்கப்பட்டுக் கொண்டே சென்றது ஒரு காலம். இன்று தாம்பரத்தைக் கடந்தும் விவசாய நிலங்கள் பேய்த்தனமாக விழுங்கப்பட்டு வருகின்றன! அரசியல் செல்வாக்குள்ள ரியல் எஸ்டேட் தரகர்கள் செய்யும் அத்துமீறல்களே.. இன்றைக்கு சென்னைக்கு வெளியே தாம்பரத்தையும் கடந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைய உருவாக்கத்திற்கு அடிகோலியுள்ளது.

2001 வரை சென்னையில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கான பேருந்து நிலையம் முன்பு பிராட்வேயில் வெறும் ஒன்றரை ஏக்கரில் தான் செயல்பட்டது  என்பதை நாம் மறக்கக் கூடாது!. இது தவிர, எழும்பூரில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அப்போது நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஜீன்  1999 ஆண்டு சென்னைக்கு வெளியே  கோயம் பேட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அது நவம்பர்  2002 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

கோயம்பேட்டில் மொத்தம் ஆறுநடை மேடைகளுடன் ஒரே நேரத்தில் 270 பேருந்துகள் நிற்கும்படி பெரிய பேருந்து நிலையம் உருவானதை அன்றைய சென்னைவாசிகள் விழிகள் விரிய பார்த்தனர்! ஆனால்,காலப் போக்கில் சுமார் 500 பேருந்துகள் நிற்கும் நிலை உருவாகி, பிறகு அது ஆயிரம், இரண்டாயிரம் என்பதையும் கடந்து சென்றது இருபதாண்டுகளில்!

இந்தச் சூழல் ஆந்திராவில் இல்லை, வெகு காலமாக ஹைதராபத்தில் மகாத்மா காந்தி பேருந்து நிலையம் செயல்பாட்டில் இருந்து கொண்டுள்ளது. செகந்திராபாத்தில் ஜூப்ளி பேருந்து நிலையம் தான் இன்னும் புழக்கத்தில் உள்ளது. பெங்களூரின் மையத்தில் இயங்கும் மெஜஸ்டிக் பேருந்து நிலையம்  தொடங்கப்பட்டதில் இருந்து தொடர்கிறது.

பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னைக்கு வெளியில் வண்டலூர் பக்கத்தில் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் நவீன முறையில் உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக, புறநகர்  பேருந்து நிலையம் கிட்டதட்ட  ஆறாண்டுகளாகத் பேசப்பட்டு வந்தது! எனினும், மிக நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டு, தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது! திட்டமிடலுக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட போதும், கிளாம்பாக்கத்திற்கு சென்னையின் பல பகுதிகளில் இருந்து நேரடியாக பயணிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்காமல் விட்டுவிட்டனர் என்றால், எவ்வளவு அலட்சிய மனோபாவத்தில் சி.எம்.டி.ஏ செயல்படுகிறது என்பதற்கு இதுவே அத்தாட்சி! இங்கே ஒரு தேனீர் விலை 30 ரூபாய் என்பது இங்கு நடந்து கொண்டிருக்கும் படுமோசமான கரப்ஷனுக்கான குறியீடாகும்!

2019 பிப்ரவரியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்திற்கு தன் அப்பாவின் பெயரை  சூட்டிவிட்டார்.

உட்புற ஆடம்பரத் தோற்றம். நன்றி; இந்து தமிழ் திசை

2013 ஆண்டு வண்டலூர் அருகே அல்லது கூடுவாஞ்சேரியில் புதிய  பேருந்து நிலையத்திற்கான முயற்சிகள் எடுத்த நிலையில், அங்குள்ள விவசாய நிலங்களைப் பயன்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கம் தேர்வானது. இங்கும் விவசாயிகள் நிலம் பறிபோவதை எதிர்த்து நீண்ட நெடிய போராட்டம் நடத்தி ஓய்ந்துவிட்டனர். இங்கு 44.5 ஏக்கரில் ரூபாய் 394 கோடி செலவில் சுமார் ஒன்றரை லட்சம் பயணிகள் வந்து போகக் கூடிய வகையில், நவீன பேருந்து நிலையத்திற்கு  2019 பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால்,அது தற்போது 88 ஏக்கராக விரிவாகி செலவும் கூடிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இங்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறிப்பாக விழுப்புரம், திருச்சி வழியாக மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கான பேருந்துகள் வந்து செல்லும்படி திட்டமிட்டுள்ளனர். ”சென்னையின் பல பகுதிகளில் இருந்து இங்கே வந்து போகக் கூடியவரையில் மாநகர் பேருந்து நிறுத்தமும் இங்கிருந்து செயல்பட ஏற்பாடு செய்யப்பட்ட பிறகே இதை திறக்க போகிறோம்” என நான்காண்டுகளாக கதை அளந்தது தான் கண்ட பலன்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை அலையவிடுகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தில் இறங்கினால் சம்பந்தப்பட்ட பேருந்து நிற்கும் இடத்தை தேடி நடப்பதற்கே அரைமணி நேரம் செலவாகும் நிலையே உள்ளது. அதே போல இங்கே இறங்கி சென்னைக்குள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்வதற்கும் நிறைய நேரம் பிடிக்கும். குறைந்தது ஒரு மணி நேரத்தில் இருந்து, இரண்டு மணி நேரப் பயணம் தேவைப்படும். இதன் பராமரிப்பை தனியாரிடம் விட உள்ளனராம்! இங்கே செயல்படும் மருத்துவ உதவி மையத்தையும் தனியாரிடம் தந்துவிட்டனர். இது மிகப் பெரிய தவறு. இங்கு அரசு மருத்துவமனை கண்டிப்பாக வேண்டும். ஏனெனில், நாளொன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் மேலானவர்கள் வந்து செல்லும் இடத்தில் அவசர மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அரசு திட்டமிட்டு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் தனியாரிடம் தள்ளிவிட்டு, தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்ள ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது.

இந்த கிளாம்பாக்கத்தின் பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ரயில்வே  ஸ்டேசனையும் கொண்டு வரும் திட்டம்  வருங்காலத்தில் தான் செயல்படுத்தப்படுமாம்!

முன்னதாக கோயம்பேடு நெரிசலைத் தவிர்க்க, வட சென்னை புறநகர்ப் பகுதியான மாதவரத்தில் காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், புட்டபர்த்தி, விசாக பட்டிணம், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கான பேருந்து நிலையம் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 95 செலவில் கட்டப்பட்டு, எழில்மிகு தோற்றத்துடன் அக்டோபர்  2018 ஆம்  ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் ஒரே நேரத்தில் 200 பேருந்துகள் நிற்கும் வசதியுடன், அடித்தளம், தரைதளம், மேல்தளம் என மூன்று அ டுக்குகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு  நாளொன்றுக்கு 15,000 க்கும் மேற்பட்ட  பயணிகள் வருகின்றனர்.

இதேபோல கூத்தம்பாக்கம் அருகே சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் மற்றொரு பேருந்து நிலையமும் 20  ஏக்கரில் ரூபாய்  150 கோடி செலவில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கான  பேருந்துகளுக்காக உருவாக்கப்படவுள்ளது. இங்கிருந்து பெங்களூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவைபோன்ற ஊர்களுக்கான பேருந்துகள் புறப்படும். அதையும் மிகவும் காலந்தாழ்த்தி வருகின்றனர்.

விவசாய நிலப்பரப்புகளை விழுங்கி விவசாயிகளின் எதிர்ப்புகளை புறந்தள்ளி, ஆக்கிரமித்துத் தான் இந்த பேருந்து நிலையத்தை உருவாக்கி உள்ளனர்! எனவே, வருங்காலத்தில் போக்குவரத்து வசதிகள் கூடுமானவரை தவிர்க்கக் கூடியதான  சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இல்லை என்றால், எவ்வளவு பெரிய பேருந்து நிலையமும் காலப் போக்கில் போதாமையாகத் தான் ஆகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time