வெளித் தோற்றத்திற்கு நாத்திகவாதி! ஆனால், உள்ளத்தில் உறைவதோ வைஷ்ணவ பார்ப்பனீயம்!அவர் சொந்தமாக எடுத்த படங்களில் எப்படியெப்படி எல்லாம் இஸ்லாமிய வெறுப்பையும், இந்து வைஷ்ணவப் பற்றையும் வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பதையும், அமரன் படத்திற்கான எதிர்ப்பையும் அலசுகிறது இந்தக் கட்டுரை;
திருட்டு கேசட் விற்பனை பிரச்சினை பெரிதாக வெடித்த அந்த காலகட்டத்தில் திருட்டு வீடியோ கேசட்டுகள் விவகாரத்தில் அரசுக்கு என்னவிதமான கோரிக்கை வைப்பது என்பது குறித்து தென் இந்திய பிலிம் சேம்பரில் தயாரிப்பாளர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் என்ற வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் இடம் பெற்ற கமலஹாசன் பேசிய பேச்சு அன்றைக்கு ஒரு சில ஊடகங்களில் பேசுபடு பொருளானது. சுமார் 20 வருடங்களை கடந்த நிலையிலும் அன்றைக்கு கமல் பேசிய அந்தப் பேச்சு, இன்னும் பலர் மனத் திரையில் இருக்கக் கூடும்.
கமல் பேசியதாவது; சென்னை பர்மா பஜாரில் உள்ள முஸ்லீம்களின் கடைகளில் தான் திருட்டு வீடியோ அதிகமாக விற்பனையாகிறது. இந்த திருட்டு வீடியோ மூலம் அவர்கள் பல கோடிகளை சம்பாத்தித்து அதை இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என நாம் அரசுக்கு எச்சரிக்கை தர வேண்டும்’’ என்றார்.
அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முஸ்லீம் படத் தயாரிப்பாளர் ஒருவர், ‘’நீங்க பர்மா பஜாரில் அதிகமாக திருட்டு வீடியோக்கள் விற்பனையாகின்றன எனச் சொல்வதை நான் மறுக்கவில்லை. அதில் கிடைக்கும் பணத்தை முஸ்லீம்கள் தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? இல்லையெனில், இது போன்ற அவதூறுகளைப் பேசுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். இருக்கிற பிரச்சினை போதாது என்று புதுப் பிரச்சினையை உருவாக்காதீர்கள்’’ என்றார். இந்தக் கருத்தை எல்லோரும் ஏற்று கமலஹாசனை கண்டிக்கவே அவர் பிறகு அமைதியாகிவிட்டார்.
இந்த சம்பவமானது கமலஹாசனுக்கு எப்படி இயல்பிலேயே ஒரு இஸ்லாமிய வெறுப்பு மனதின் அடியாளத்தில் புதைந்துள்ளது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.
கமலஹாசன் திரைபிம்பங்களில் ஒரு கதாநாயகன். ஆனால், நிஜத்திலோ உத்தமனாகத் தோற்றம் தரும் வில்லன். ஒரு ‘எத்திஸ்ட்’ என்ற பிம்பத்தை தனக்கு கட்டமைத்துக் கொண்டு, யதார்த்தத்தில் உயர்சாதி ஆதிக்க மனோபாவத்துடன் இயங்கும் நபர். இன்று வரை அவர் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டவரல்ல. பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலையோ, அதற்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவையோ ஒரு சொல் கூட கடுமையாக பேசியதில்லை. இதோ தஏபோது கமலஹாசனின் தயாரிப்பில் வெளிவர உள்ள ‘அமரன்’ படத்தை எதிர்த்து தமிழகம் முழுமையும் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கமலஹாசனே கதை, திரைக் கதை எழுதி நடித்த படம் தான் உத்தமவில்லன். அதாவது அந்தப் படத்தில் கமல் உத்தமனாகச் சிறிது வெளிப்பட்டாலும், தான் உண்மையில் வில்லனே எனச் சொல்லி இருப்பார். அவரது நிஜ வாழ்க்கையிலும் அவர் அவ்வாறானவரே என அவரோடு பழகிய பலரும் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும், நாம் அதற்குள் விரிவாகச் செல்ல இந்த கட்டுரை இடம் தரவில்லை. கமல் தான் தயாரித்த சில படங்களில் தன் இஸ்லாமிய விரோதப் பார்வையை எப்படி அப்பட்டமாக வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பதையே நாம் இங்கு பார்க்க உள்ளோம்.
ஹே ராம் என்ற படம் தேசப் பிரிவினையின் போது நடந்த இந்து முஸ்லிம் கலவரத்தை வைத்து கமல்ஹாசன் எடுத்த படமாகும். அதன் முதல் காட்சியிலேயே முஸ்லிம்கள் ஒரு இந்துப் பெண்ணை வன்புணர்வு செய்வதாக சித்தரித்திருப்பார். இந்து பயங்கரவாதத்தை விடவும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை சற்று தூக்கலாக படம் முழுக்க சித்தரித்தார்! இந்தப் படத்தில் தன்னை ஒரு வைஷ்ணவ பார்ப்பனராக வெளிப்படுத்தி இருப்பார் கமல்!
காந்தி சுடப்பட்டு இறந்த போது, ”அவரை கொன்றது முஸ்லீம் தான்” என்று, இந்து வெறியர்கள் ஒரு பொய் செய்தியைப் பரப்பி நாடு முழுவதும் கலவரம் ஏற்படுத்தி ஒரு மாபெரும் இஸ்லாமியப் படுகொலையை அரங்கேற்றத் முயன்றதை தடுக்கும் வண்ணம், அன்றைய பிரதமர் நேரு, ”காந்தியை கொன்றது முஸ்லீம் இல்லை.. ஒரு இந்து தான்” என்று அறிவித்தது என்பது வரலாறு.
இந்தக் காட்சியை ஒரு இந்துத்துவா பார்வையில் கமல் காட்சிப்படுத்தி இருப்பார். காந்தி படுகொலையைத் தொடர்ந்து முக்கிய தலைவர்கள், ஒரு அறைக்குள், ”காந்தியைக் கொன்றது முஸ்லீம் இல்லை இந்து தான் எனச் சொல்ல வேண்டும்” எனப் பேசுவதைக் கேட்கும் சாகேத் ராம், ” காந்தியின் மரணத்தில் கூட மத சாயம் பூசப்படுகிறதே” என்று அறைக்கு வெளியில் இருந்து மனமுடைந்து அழுவதைப் போல காட்டுவார். அதாவது, ‘காந்தியைக் கொன்றது இந்து’ என்ற உண்மையை வெளிப்படுத்தி, இந்து வெறியர்களின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதை ஒரு மதச் சாய நடவடிக்கையாக – இந்துக்களை இழிவுபடுத்தும் நடவடிக்கையாக – கமல் உணர்த்துவார். இந்தக் காட்சி ஒன்றே போதுமானது கமலஹாசனைப் புரிந்து கொள்ள!
விஸ்வரூபம் படத்தில் உலகம் முழுமையிலும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என சித்தரித்தார். ஆப்கானிஸ்தானையும் தமிழக முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி, ‘இஸ்லாமியர்கள் வன்முறையாளர்கள்’ என்று நுட்பமாக காட்சிப்படுத்தினார்!
இந்த படத்தில் வரும் தீவிரவாதிகள் தலைவர் முல்லாஉமர் என்பவர் கோவையிலும், மதுரையிலும் வசித்ததாக காட்சிப்படுத்தப்பட்டதும், இஸ்லாமியக் குழந்தைகளை தீவிரவாதிகள் ஆக்குவதுபோல காட்சிப்படுத்தப்பட்டதும், சிலர் கழுத்தறுத்து கொல்லப்படும் போது முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரான் காட்சிப் படுத்தப்படுவதுமாக நுட்பமாக இஸ்லாமிய வன்மத்தை வெளிப்படுத்தி எடுத்திருந்தார்.
இந்த உண்மைக்கு புறம்பான கதைக்கும், காட்சிக்கும் எதிராக தமிழகத்தில் 23 இஸ்லாமிய இயக்கங்கள் களம் கண்டன! தங்களைத் தவறாகச் சித்தரிப்பதை எதிர்த்து முஸ்லிம்கள் இங்கு சமரசமின்றி போராடினார்கள். இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இஸ்லாமியர்களிடம் பேசி கமலஹாசன் ஒரு முடிவுக்கு வர நிர்பந்தம் தந்தார். உடனே கமலஹாசன், ‘’நான் நாட்டை விட்டே ஓடப் போகிறேன்’’ என்ற அளவுக்கு தன்னுடைய இஸ்லாமிய எதிர்ப்பை ஏதோ தனக்கான பிறபுரிமையைப் போல கருதி இது ‘கலாச்சார பயங்கரவாதம்’ என ஆத்திரப்பட்டார் என்பதெல்லாம் எளிதில் மறந்துவிடக் கூடியதல்ல.
‘தசாவதாரம்’ படத்தில் தன்னை ஆச்சார வைணவ பிராமணனாக வெளிப்படுத்திக் கொண்ட கமல், அதில் தலித் விரோத காட்சிகளையும் வைத்திருப்பார். உலக இஸ்லாமியர்களை விரோதியாக பாவிக்கும் அமெரிக்காவின் விசுவாசியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வண்ணம் இஸ்லாமிய தேசங்களை சந்தேகக் கண்ணொட்டத்துடன் பார்த்த – ஈராக்கை அழித்த அமெரிக்க அதிபர் புஷ்சை, – தசாவதாரத்தில் உலக தலைவராகச் சித்தரித்து இருப்பார் கமல் கலிஃபுல்லா கான் என்ற இஸ்லாமிய கதாப்பாத்திரம் முக்கியத்துவம் இல்லாமல் காட்டப்பட்டு இருக்கும். அதே சமயம் தன்னை விஷ்ணு பக்தனாக காட்டிக் கொள்ளும் ரங்கராஜ நம்பி கதாபாத்திரத்திற்கு அதி முக்கியத்துவம் தந்திருப்பார் கமல்.
அத்துடன் தன்னுடைய உண்மையான தாய் தந்தையின் பெயர்களையே ரங்கராஜ நம்பி பாடும் பாடலில் வைத்து பாடி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்வார். அதாவது, இந்தப் படத்தின் கதாபாத்திரத்துடன் தன்னை இணைத்து அடையாளப்படுத்தும் விதமாக, கவிஞர் வாலியை பாடல் எழுத வைத்து பதிவு செய்திருப்பார் கமல்! ஆக, தன்னுடைய பாரம்பரியமான வைணவ பின்புலத்திலான இந்துத்துவ பிணைப்பை அவரே வெளிப்படுத்திக் கொண்டதே இப் பாடலாகும்!
”இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்”
இது மட்டுமின்றி, சைவ- வைணவ மோதலை மிகைப்படுத்தி, வைணவத்தை உயர்த்தி பிடிக்கும் வண்ணம் பெருமாள் சிலையோடு ரங்கராஜ நம்பியும் சேர்த்துக் கட்டி கடலுக்குள் இறக்கப்பட்டதாக வரலாற்றில் இல்லாத ஒன்றை வலிந்து காட்டி இருப்பார்.
உண்மையில், இரண்டாம் குலோத்துங்க சோழன் தில்லை சிதம்பரம் கோவிலில் இருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலையை மட்டும் தான் கடலில் தூக்கி போட்டார். ஆனால், ஒரு சைவ மன்னனை மிக வக்கிரமாக சித்தரிக்கும் வண்ணம் உயிருள்ள மனிதனை சிலையோடு கட்டி கடலில் இறக்குவதாகக் காட்டியது கமலின் வன்மமாகும்.
உன்னைப் போல ஒருவன் படத்திலோ, ‘இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள். மனித குலத்திற்கே விரோதிகள்’ என அழுத்தமாக காட்டி இருப்பார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி கதாநாயகனான கமல் குண்டு வைத்து அழிப்பதே கதை. அந்த நால்வரில் மூவர் முஸ்லீம்கள். ஒரே ஒரு தீவிரவாதியாக கட்டப்படும் இந்து, ஒரு அப்பாவியாம். அவருக்கு எதுவுமே தெரியாத சூழலில். ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவராக காட்டி இருப்பார். ஆனால், மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப் போர்’ என்பதாக சதாசர்வ காலமும் மனித அழித் தொழிப்பை குறித்தே பேசுபவர்களாம்!
குஜராத்தில் மதவெறி தழைத் தோங்கி இஸ்லாமியர்கள் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்ட சில ஆண்டுகளில் இது போல இஸ்லாமியர்கள் மேன்மேலும் பாதிக்கும் வண்ணம் படம் எடுக்க எப்படித்தான் கமலஹாசனுக்கு மனம் வந்ததோ..! படத்தின் இறுதியில் ஒலிக்கும் ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்ற சமஸ்கிருத பாடல் கமலஹாசனின் இந்துத்துவ சார்பான உண்மை முகத்தை அப்பட்டமாக காட்டிவிட்டது.
கமலஹாசனின் இஸ்லாமிய விரோத போக்கை தோலுரிக்கும் விதத்தில் உத்தமவில்லன் என்ற தனி ஆய்வு புத்தகமே எழுதியுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரன். அதில் அவர், ”இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இரு பிரச்சினைகளில் கமல்ஹாஸன் தேர்ந்து கொண்ட கதாநாயகவில்லன் பாத்திரங்கள் என்பது அவரது அமெரிக்க சார்பையும், இஸ்லாமிய விரோதthதையும் ஒருங்கே வெளிப்படுத்துகின்றன’’ எனக் கூறும் யமுனா ராஜேந்திரன் ”ஹே ராம், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் மற்றும் விஸ்வரூபம் திரைப்படங்களில் இடம் பெறுபவை வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல…, நிஜ வாழ்விலும் கமலஹாஸன் கதாநாயக வில்லன் தான். கமல்ஹாசனே இந்த விளையாட்டைத் தேர்ந்து கொண்டிருப்பதால், அவரால் இந்தக் கதாநாயகன் வில்லன் விளையாட்டில் இருந்து வெளிவர முடியாது” என அறுதியிட்டு கூறினார்!
அது தான் தற்போதைய அவரது தயாரிப்பில் வெளியாக இருக்கும் ‘அமரன்’ படத்திலும் வெளிப்பட்டு உள்ளது. ஒரு அரசியல் கட்சியின் தலைவரான நிலையிலும் கூட, கமலஹாசனின் மன நிலையில் இஸ்லாமிய வெறுப்பு மறைந்து, பக்குவம் உருவாகவில்லை என்பதே ‘அமரன்’ படத்தில் நாம் அறியக் கூடிய செய்தியாகும். மேஜர் முகுந்த் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஒரு நிமிடம் 35 வினாடிகள் ஓடக் கூடிய டீசரிலேயே இஸ்லாமியர்களை ஆபத்தானவர்களாகக் காட்டி, இந்துத்துவா அரசியல் ஆர்வலர்களை படம் பார்க்க தூண்டியுள்ளார்.
‘’ கமலஹாசன் தயாரிப்பில் வெளியாக உள்ள அமரன் படத்தின் வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பவையாக உள்ளன. ஆகவே, இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும்’’ என்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தமிழகம் தழுவிய முறையில் ஆங்காங்கே போரட்டங்களை நடத்தி வருவது கவனத்திற்கு உரியது.
ஆக, தேர்தல் நேரம் என்று கூட பாராமல், இப்படிப்பட்ட ஒரு இஸ்லாமிய விரோத படத்தை கொண்டு வரத் துணிந்துள்ளார் என்றால், கமலஹாசன் இஸ்லாமிய எதிர்ப்பில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டோடு இருக்கிறார் என்று தான் பொருள். எனவே, ‘மதச் சார்பற்ற கூட்டணிக்கு கமலஹாசன் முற்றிலும் பொருத்தமற்றவர்’ என்பதை நாம் இங்கு சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை!
”இன்றைய இந்தியாவில் தற்போதுவிஸ்வரூபம் எடுத்து வரக் கூடிய இந்துவ அரசியல் காரணமாக ஒரு பாதுகாப்பற்ற மனநிலையில் உழலும் இஸ்லாமியர்களை அரவணைக்க விரும்பாவிட்டாலும், பரவாயில்லை. கமலஹாசன் மேன்மேலும் காயப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம்” என்பதே இஸ்லாமியர்களின் வேண்டுகோளாக உள்ளது! ஆனால், இயல்பிலேயே ‘இஸ்லாமிய வெறுப்பில் ஊறித் திளைத்துப் போன கமலஹாசன் மாறுவார்’ என்பதற்கு யாரும் உத்திரவாதம் அளிக்க முடியாது.
ஆகவே, ஒரு ‘எத்திஸ்டு’ என்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் கமலஹாசனின் அதி மோசமான இஸ்லாமிய விரோத போக்கை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து விலகி நிற்க வேண்டியது, மதச் சார்பற்ற அரசியல் கட்சிகளின் கடமை என்பதை உணர்த்தவே நாம் மேற்படி விஷயங்களை கவனப்படுத்தினோம். இத்தனை யதார்த்தங்களையும் புறம் தள்ளி, கமலஹாசனுக்கு திமுக கூட்டணியில் இடம் தந்தால், அந்த கூட்டணிக்கு சிறுபான்மை ஓட்டுகள் கிடைக்காமல் சிதறவே வாய்ப்புள்ளது.
Also read
கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் தற்போது ஒரு இஸ்லாமியர் கூட உயர் பொறுப்புகளில் இல்லை. கமலஹாசனை முற்போக்காளராக நம்பி, ஆரம்பத்தில் மக்கள் நீதி மையத்தில் இணைந்த கமீலா நாசர் அவர்களும் வெகு சீக்கிரத்திலேயே மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியேறிவிட்டார் என்பது கவனத்திற்கு உரியதாகும்.
கமலஹாசன் கட்சி தொடங்கிய ஆரம்ப கால கட்டங்களில் வெளிப்படுத்திய அதி தீவிரமான திராவிட எதிர்ப்பு மற்றும் துவேஷப் பேச்சுக்கள் இன்றும் இணையங்களில் உலவிக் கொண்டுள்ளன. அவற்றை கேட்டு கொந்தளித்து போயுள்ள லட்சோப லட்சம் உண்மையான திராவிட உணர்வாளர்களில் யார் ஒருவரும் கமலஹாசனுக்கு ஓட்டும் போட மாட்டார்கள், தேர்தல் வேலையும் செய்ய மாட்டார்கள். ஒருவேளை திமுக தொண்டர்களின் உணர்வுகளை புறம் தள்ளி, திமுக தலைமை கமலஹாசனுக்கு சீ ட்டு கொடுத்தால், அதன் விளைவுகளை தேர்தல் முடிவுகள் துல்லியமாக வெளிப்படுத்திவிடும் என்பதை மட்டும் தற்போதைக்கு சொல்லி வைக்கிறோம்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply