ஊடகவியலாளர்களை ஒடுக்கப் பார்கிறதா திமுக அரசு?

-சாவித்திரி கண்ணன்

‘அடி, உதை, தாக்கு! அடிபட்டவன் மேலேயே காவல்துறையை ஏவி எப்.ஐ.ஆர் போடு..’- இது தான் இன்றைய திமுக ஆட்சியின் ஸ்டைலா..? எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காது! முதல்வர் ஊடகங்களை சந்திக்க மாட்டார்! ‘ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுது..’ எனச் சொல்பவர்களை மட்டுமே பிடிக்கும் என்றால் எப்படி..?

‘பிரபல ஊடகங்களும், தற்போதைய திமுக அரசும் மிக இணக்கமாக இருக்கிறார்கள்’ என்பது உண்மையா..? என்றால், ‘இணக்கமாக இருக்கிறாங்க தான் ஆனால், இல்லை..’ என்ற ஒரு குழப்பமான பதிலே வரும்!

உண்மை என்னவென்றால்.., திமுக ஆட்சியில் ஊடக முதலாளிகள் அரசு விளம்பரங்களை கொள்ளை, கொள்ளையாகப் பெற்று கொழுக்கிறார்கள்! முக்கிய ஊடக முதலாளிகளுக்கு அரசு கமிட்டிகளில் பொறுப்பு! மதிப்பு, மரியாதை! ஊடக முதலாளிகளும் பதிலுக்கு தங்கள் விசுவாசத்தை ஆட்சியாளர்கள் கோணத்தில் செய்திகள் தருவதும், அரசின் குற்றம், குறைகள் அமைச்சர்கள், அதிகாரிகளின் முறைகேடுகளை கண்டும், காணாமல் மெளனம் சாதித்தும் கடக்கிறார்கள்!

அதே சமயம் களத்தில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கும், திமுக அரசுக்கும் முட்டல், மோதல், பிரச்சினைகள்! பொதுவாக அதிமுக ஆட்சியை விட ஊடகவியாலாளர்கள் சற்று சுதந்திரமாக இயங்க முடிந்த ஆட்சியாகத் தான் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி இருந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் தான் ஏகப்பட்ட கெடுபிடிகளைச் செய்வார்கள்!

கருணாநிதியைப் போல முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதில்லை. கேள்விகளை எதிர்கொள்வதில்லை. இப்படி எதற்குமே பொறுப்போடு பதில் சொல்லாமல் கடந்து விடுவது அவருக்கு மிகவும் செளகரியமாக உள்ளது!

கருணாநிதி நாளிதழ்களை மட்டுமல்ல, வார பத்திரிகைகளையும் கூடத் தவறாமல் வாசிப்பார். தன் ஆட்சி குறித்த மக்களின் அதிருப்தி குரல்களை அதன் மூலமாக அறிய வரும் போது அவரே சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களை போனில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் கேட்டு நிவர்த்தி செய்வார்.

ஸ்டாலினுக்கு பத்திரிக்கை வாசிக்கும் பழக்கமே அனேகமாக கிடையாது. யாராவது குறிப்பெடுத்து அவருக்கு சொன்னால் உண்டு. ஒரு வகையில் ஸ்டாலின் ஜெயலலிதா பாணியையும், மோடி பாணியையும் அப்படியே காப்பி அடிக்கிறார் எனலாம்.

சமீபத்தில் திமுகவின் நிர்வாகிகளில் ஒருவரான ஜாபர் சாதிக் என்பவர் போதை பொருள்களை கடத்திய விவகாரத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார். அதைத் தொடர்ந்து ‘அவர் கட்சியின் அனைத்து மட்டத்தில் இருந்தும் விலக்கப்பட்டதாக’ பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிக்கிறார். அத்துடன், ‘தங்கள் கடமை முடிந்தது’ என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ‘பத்திரிகைகளும் அப்படியே நினைக்க வேண்டும்’ என முதல்வர் நினைப்பது தான் இங்கு பிரச்சினையாகிறது! ‘பத்திரிகைகள் அனைத்தும் தன் கண் அசைவுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் கூட்டணிக் கட்சிகள் போல இருக்க வேண்டும்’ என ஸ்டாலின் விரும்புவது பல நேரங்களில் நடந்தாலும், சில நேரங்களில் நடப்பதில்லை.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் , கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜாபர் சாதிக்.

பல கேள்விகள் மக்கள் மனங்களில் தொற்றி நிற்கிறது…! பல ஆயிரங்கோடிகளில் போதை மருந்து கடத்தியதாக தேடப்படுபவர் மிகச் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதியுடன் தோன்றினார். அவர் மனைவி தயாரிக்கும் படத்தின் தயாரிப்பாளராக அறியப்பட்டார்! திமுகவின் முக்கிய நிர்வாகிகளோடு நெருக்கமாக வலம் வந்தார். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்! இதன் தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் நெருக்கமாக இருந்துள்ளார்.

இளம் தலைமுறையை போதைக்கு ஆட்படுத்தும் இவ்வளவு பெரிய குற்றத்தில் சம்பந்தப்பட்டவர் விஷயத்தில் ஆட்சியாளர்கள் கவனக் குறைவாக இருந்தார்களா? எப்படி இவ்வளவு இடம் கொடுத்தார்கள்? என்ன நடந்தது? இந்த கேள்விகள் எதற்கும் பதில் இல்லை!

அதற்கான பதிலைக் கேட்டால் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவார்கள் என்றால் எப்படி?

இந்த வகையில் திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவின் ஆட்கள் பாலிமார் தொலைகாட்சி கேமராமேனை தாக்கிய விவகாரத்தில் காவல்துறையும், கவர்மெண்டும் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்

சம்பவ இடத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பாலிமார் செய்தியாளர் கதிரவனிடம் பேசிய போது, ”சகாரா கூரியர்ஸ்’ என்ற நிறுவனத்தில் மத்திய போதை தடுப்பு அதிகாரிகள் சோதனையும், விசாரணையும் நடத்தியதை அறிந்து நானும், கேமராமேன் செந்திலும் சென்றோம். செந்திலை சாலையிலேயே நிறுத்திவிட்டு, நான் மட்டுமே அந்த நிறுவனத்திற்கு சென்று விளக்கம் கேட்டேன். உடனே, அவர்கள் பதற்றத்துடன் ”அதையெல்லாம் கீழே கேளுங்கள்” என்றனர். ”கிழே யாரிடம் கேட்க வேண்டும்” என்றதும், சிற்றரசு சாரிடம் கேளுங்க என்றனர். அப்போது தான் சகாரா நிறுவனத்தை நடத்துவதே சிற்றரசு தான் எனத் தெரிய வந்தது!

திமுக சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு

இதற்குள் சத்தம் வரவே வெளியே வந்து பார்த்தால் செந்தில் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார். ”சாலையில் இருந்து பொது பார்வைக்கு தெரியும் ஒரு கட்டிடத்தைப் படம் எடுக்க யார் அனுமதியும் தேவையில்லை. நிறுவனத்திற்குள் நுழைந்து கேமரா எடுக்கத் தானே அனுமதி வேண்டும். எங்க ரிப்போர்ட்டர் உள்ளே தான் இருக்கிறார்” என அவர் சொல்லியதை பொருட்படுத்தாமல், அங்கிருந்த வேலை செய்யும் அம்மையார் பச்சையம்மாள் என்பவர் அசிங்க, அசிங்காமாகத் திட்டி முரட்டுத்தனமாக கேமராவை பிடுங்கியுள்ளார். மற்றும் சிலர் ஓடி வந்து செந்திலைத் தாக்கி கேமராவை பறித்து அவரை அறைக்குள் அடைத்து விட்டனர்!

தாக்கப்பட்ட கேமராமேன் செந்தில்

நான் ஒரு வழியாக சிற்றரசுவை போனில் தொடர்பு கொண்டு பேசியதும், கேமராவில் படம் எடுத்ததை அழித்துவிட்டு அனுப்பினர். பிறகு செந்திலும், நானும் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சென்று புகார் தந்த நொடியே தகவல் அவர்களுக்கு போனது. அவர்களிடம் எங்களுக்கு எதிரான புகாரை கேட்டு வாங்கிக் கொண்டனர் காவல்துறையினர்..;; என்றார்.

செந்தில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க பத்திரிகையாளர்களின் அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றால், இரண்டு நாட்கள் தொடர்ந்து நழுவுகிறார். பத்திரிகையாளர்கள் சிலர் கமிஷனர் அலுவலத்திலேயே இரவு இரண்டு மணி வரை காத்திருந்த பிறகு தான், இனியும் தவிர்க்க முடியாது என அடுத்த நாள் சந்தித்தார்!

 

தாக்கியவர்கள் மீது வழக்கு போடாமல் தாக்கப்பட்டவர் மீது பெண்ணை மானபங்கப்படுத்தியதாக எப்.ஐ.ஆர் எப்படி போடுவீர்கள்? ஆளும் தரப்பு நிர்பந்தித்தால் உங்களை போன்றவர்கள் இது ஆட்சிக்கு தான் கெட்ட பெயர் என எடுத்துச் சொல்லாமல் அதிகார அழுத்தங்களுக்கு வளைந்து கொடுத்தால் இங்கு யாருக்கு தான் பாதுகாப்பு..? போன்ற சரமாறி கேள்விகளை எதிர் கொண்ட பிறகு தான் சென்னை கமிஷனர் தன்னிலை உணர்ந்து, எப்.ஐ.ஆரை கைவிட்டார். ஆயினும், தாக்கியவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவேயில்லை… என்பது கவனத்திற்கு உரியது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் வாரா வாரம் சென்னை போலீஸ் கமிஷனர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து சட்டம், ஒழுங்கு தொடர்பாக பேட்டி தருவார்கள். நிருபர்களும் களத்தில் நடந்து கொண்டிருக்கும் பல விவகாரங்களை காவல்துறைக்கு கவனப்படுத்துவார்கள்! ஆனால், தற்போது அதுவும் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது! இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கங்கள் அதிகரிப்பது போன்ற பல விவகாரங்களுக்கு காவல்துறையிடம் இருந்து பதில் கிடைப்பது இல்லை. இந்த சூழலில் காவல்துறையின் பல மட்டங்களில் குற்றவாளிகளோடு கைகோர்த்து ஆன வரை பணம் சம்பாதிக்கும் எண்ணங்கள் மேலோங்கிவிட்டன!

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

திமுக அரசு பதவி ஏற்றது தொடங்கி அனைத்து மட்டத்திலுமே இருந்த இயல்பு நிலை மாறி, இறுக்கமும், பூடகத் தன்மையும் மேலோங்கி உள்ளது என்பது கண்கூடாகத் தெரிகிறது!

முதலமைச்சர், பிரதமர் உள்ளிட்டோரின் பொது நிகழ்ச்சிகளை பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுப்பது காலம்காலமாக உள்ளதாகும். அப்படி படம் எடுக்கும் போது தான் சுவையான சம்பவங்களை, தலைவர்களின் பல்வேறு உணர்ச்சி முகபாவங்களை படம் எடுப்பது சாத்தியமாகும். ஆனால், தற்போதைய ஆட்சியின் தமிழக செய்தி துறையோ பத்திரிகை புகைப்பட நிபுணர்களை சம்பவ இடத்திற்கே அனுமதிக்காமல், ”நாங்களே புகைபடங்கள் தருகிறோம்” என அரங்கிற்கு வெளியே உட்கார வைக்கின்றனர். அல்லது அரை கி.மீ தொலைவில் ஒரு இடத்தில் நின்று படம் எடுக்கச் சொல்கின்றனர்!

சமீபத்திய நிகழ்வொன்றில் தடுமாறி நடந்த ஸ்டாலினை கைதாங்கலாக பிடித்த மோடி!- போட்டோ; சங்கர் ( டைம்ஸ் ஆப் இந்தியா)

இவ்வளவு கெடுபிடிகள் நாளும் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் காஷ்மீரில் கூடக் கிடையாது! இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் கிடையாது. நடப்பது என்ன ராணுவ ஆட்சியா?

DPIR என்பது ஆட்சிக்கும், மீடியாக்களுக்கும் பாலமாக இருந்த காலம் மாறி,  இருவருக்கும் இடையில் குறுக்கே தடை ஏற்படுத்தும் நந்தியாக இருக்கும் சூழலை இந்த ஆட்சியில் தான் காண முடிகிறது..!

எல்லா ஆட்சிகளிலுமே ஆங்காங்கே சில முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் நடக்கவே செய்யும். மீடியாக்களை தூர வைப்பதின் மூலமும், கேள்விகளுக்கு உட்படாமல் தவிர்ப்பதன் மூலமும், கமுக்கமாக கடக்க நினைப்பதாலும் அவை மேன்மேலும் வளர்வதற்கான சூழலே அதிகரிக்கும்.

ஊடகத்தின் உயர்மட்டங்களில் உள்ள சில பத்திரிகையாளர்களை கைக்குள் போட்டுக் கொண்டும், ஐ.டி.விங் உருவாக்கி அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் சிலருக்கு ஊதியம் கொடுத்து சமூக ஊடகங்களில் பரப்புரை செய்ய வைத்தும், மூத்த பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களை பல கமிட்டிகளில் போட்டும், சில நிகழ்ச்சிகளில் கவுரவப்படுத்தியும் தொடர்ந்து தங்களை புகழ வைத்து மாயத் தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மை மிக வலிமையானது..! அதைக் கொன்றிடலொண்ணாது! குறைத்திடலொண்ணாது!

உண்மைகள் எதுவோ அதை துணிவோடு எதிர் கொண்டால் பத்திரிகையாளர்கள் பகையாகத் தெரியமாட்டார்கள்!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time