தொடக்கக் கல்வியை முடக்கப் பார்க்கிறதா அரசு?

-சு.உமா மகேஸ்வரி

சுமார் 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள் இடை நிலை ஆசிரியர்கள்!  இப்போதும் அவர்கள் போராட்டம் இருட்டடிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆரம்ப கல்வி என்பது அடிப்படையானது! ஆனால், அந்த ஆரம்ப பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் தமிழக அரசு படு அவல நிலையில் வைத்துள்ளதால் தான் இந்தப் போராட்டங்கள்;

தற்போது பதினைந்து நாட்களாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.‌ தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது. அவர்களது  கற்றல் இழப்புகளை எப்படி ஈடு செய்ய போகிறோம்? தமிழ்நாட்டின் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவிர்க்க இயலாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட  இடைநிலை ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தால் படும் துன்பம் சொல்லி மாளாது. இன்று 15 ஆவது நாளாக  வாழ்வாதாரப் பிரச்சனைக்காக வாட்டத்துடன் போராடிக் கொண்டுள்ளனர். ஆனால், இவர்களைக் குறித்து கிஞ்சித்தும் கவனமின்றி, மௌனம் காக்கிறது தமிழ்நாடு அரசு.

இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள் 12ஆம் வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி  எனப்படும் DTEd இரண்டு ஆண்டுகள் படித்து பட்டயச் சான்று பெறுகின்றனர். இதற்குப் பிறகு  ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி கடும் போட்டிகளுக்கிடையே கட்ஆப்ஃ  மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியராகின்றனர். இப்படி பல கட்ட வடிகட்டுதலுக்குப் பிறகு ஆசிரியரானவர்களே இவர்கள்!

2006 ஆம் ஆண்டில் இருந்து 1-5 வகுப்புகளுக்கானவர்களாக மட்டுமே இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி 78% தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர்! காரணம், அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளே சரியின்றி, பல பள்ளிகள் பாழுங் கட்டிடத்தில் செயல்படுகின்றன! தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக் குறையால் தமிழக கல்விச் சூழல் மிகவும் கதிகலங்கி கிடக்கின்றது!

# 3,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர்கள் பள்ளிகளாக உள்ளன!

# 25,000 க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடு நிலை பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களே உள்ளனர்.

அந்த அளவுக்கு ஆசிரியர் பற்றாக்குறையால் அவதியுறும் அரசு பள்ளிகளை நம்பி எப்படி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பார்கள்..?

இருபதாண்டுகளுக்கு முன்பு வரை பல நூறு மாணவர்கள், ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்த பள்ளிகள் இதனால் எண்ணிக்கை குறைந்து வருகின்றன! இதையே சாக்காக சொல்லி அரசு பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் மூடுவிழா நடத்துகின்றனர்.

இந்த நிலையில் வேலையில் இருக்கும் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்காகவது நியாயமான சம்பளம் தரக் கூடாதா..?


இந்தியாவில் பல மாநிலங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய அளவீடு 8,560+,2800=11,360 என்று நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 5,200+2,800=8,000 என நிர்ணயம் செய்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு அடுத்த நாள் அதாவது 2009 இல் ஜூன் 1ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5,200 அடிப்படை சம்பளமாக குறைவாக வழங்கப்படுகிறது. இந்த வகையில் இருபதாயிரம் ஆசிரியர்கள் குறைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் சிக்கிக் கொண்டனர்.

பக்கத்தில் உள்ள உள்ள பாண்டிச்சேரியில் இதே கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 8,560+2,800=11,360 வழங்கப்படுகிறது.

டெல்லி , குஜராத், ஹரியானா, மத்தியப்பிரதேசம் , மிசோரம், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், கர்நாடகா, பீகார், கோவா உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் ரூ 11,360 தான்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ரூ 8,000 அடிப்படை ஊதியம் எனக் கணக்கிட்டதால், ஒரு நாள் இடைவெளியில் ஆசிரியப் பணிக்கு வந்தவர்களுக்கு இடையில் சுமார் ரூ 20,000 ஊதிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளி – அதாவது சம வேலைக்கு சமமற்ற ஊதிய வித்தியாசம் – கடும் மன உளைச்சலைத் தருகிறது.

2022 டிசம்பரில் நடந்த போராட்டம்

நியாயமான ஊதியத்திற்காக பல வருடங்களாக இடை நிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அரசாங்கம் வழங்கும் ஊதியம் என்பது சமமான வேலைக்கு சம ஊதியம்  என்பதை உறுதிபடுத்துவதாக இருக்க வேண்டும் என நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

இந்த குறைக்கப்பட்ட ஊதிய நிர்ணயம் கலைஞர்  தலைமையிலான திமுக அரசில் நடந்துள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுமார் 15 ஆண்டுகளாக இந்த சிக்கலுக்கு தீர்வு காணாமல் இடை நிலை ஆசிரியர்கள் மன உளைச்சலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியின் போது 2018 இல் அன்றைய எதிர்க் கட்சித் தலைவரான  ஸ்டாலின் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து , தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை தீர்த்து வைக்கிறோம் என்று கூறினார். இதை 2021 திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் (எண்; 311) குறிப்பிட்டு சமவேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார்! எனில், கொடுத்த வாக்குறுதி பொய்யா?

2022 டிசம்பர் மாதம் போராட்டம் நடத்திய போது மூன்று நபர் குழு  அமைத்து ஆய்வு செய்து அரசு தீர்வு காணும் எனச் சொல்லப்பட்டது. 2023 அக்டோபரில் போராட்டம் நடத்திய போது இன்னும் மூன்றே மாதத்தில் அனைத்துக்கும் விடிவு என்றனர்!

2023 அக்டோபரில் நடந்த போராட்டம்

இன்று வரை இந்த மூன்று நபர் குழு வின் அறிக்கை என்னவென்று தெரியவில்லை!

இதனால், இடை நிலை ஆசிரியர்கள் 2023 அக்டோபரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது  காவல் துறையினரால் ஆசிரியர்கள் துரத்தப்பட்ட தும் பெண் ஆசிரியர்கள் அடைந்த  துன்பங்களும் ஊடகங்களில் தொடர்ந்து வெளி வந்தன.

மூன்று மாதங்களில் இவர்களின் பிரச்சனை தீர  வழி செய்து விடுவதாகக் கூறி போராட்டத்தை நிறுத்தியது அரசு. ஆனால், நான்கு மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ‘எங்களுக்கு நியாயம் வேண்டும்’ என்று  மீண்டும்  போராட்டத்தைக் கையில் எடுத்தோம் என்கின்றனர், SSTA பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள்.

இவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எல்லா மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பும் மாவட்ட அளவில் முற்றுகைப் போராட்டம் தொடர்கிறது. இந்த இடை நிலை ஆசிரியர் போராட்டம் ஏனோ ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் ஆசிரியர்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் துன்புறுகின்றனர். அவர்களின் குடும்பமும் அல்லல்படுகிறது. குழந்தைகள், குடும்பம் இவற்றை விட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த ஆசிரியர்கள் விஷயத்தில் ஏனோ அரசு மனம் இரங்க மறுக்கிறது!

இவர்களுக்கு பிறகான இரண்டு போராட்டங்கள் நடந்தன. ரெவின்யூ துறையின் ஊதிய ப் பிரச்சனையும், சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஊதியப் பிரச்சினையும் உடனடியாக அரசு கவனம் பெற்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை அன்றாடம் சிறைபிடித்து திருப்பி அனுப்புகின்றனர்.

சங்கப் பொறுப்பாளர் ராபர்ட்டிடம் பேசும் போது, ”பதினைந்து நாட்கள் ஆகியும், கல்வி அமைச்சர் அவர்கள் எங்களை சந்தித்து பேசக் கூட வாய்ப்பு தரவில்லை” என்கிறார்.

பத்தாயிரம் ஆசிரியர்கள் பள்ளி செல்லாததால் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் இழப்பு எத்தகைய பின் விளைவுகளைக் கொடுக்கும்? இது குரலற்றவர்களின் குழந்தைகள் என்பதால் தானோ இந்த அலட்சியம் காட்டுகிறது அரசு? தனியார் பள்ளிகளில் பதினைந்து நாட்கள் ஆசிரியர்கள் வரவில்லை என்றால், பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவார்களா?

இது நமது தலையாய பிரச்சனை. ஆசிரியர்கள் மனநிறைவோடு இருந்தால் தானே கற்றல் கற்பித்தல்  இயல்பாக, மகிழ்ச்சியாக நடக்கும்.

ஆசிரியர் சங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. எல்லா சங்கங்களும் தனித்தனியாக பிரிந்து கிடக்கின்றன. இந்த அரசு என்றில்லை, எந்த அரசாங்கம் என்றாலும், பிரித்தாளும் சூழ்ச்சியைத் தான் கையாள்கிறார்கள். இதை ஆசிரியர் சமுதாயத்தினர் உணர வேண்டும்.

இது போன்ற  முக்கியமான பிரச்சனைகள் இயல்பாக உருவாகுவதில்லை.  இவற்றின் வேர் கல்விக் கொள்கைகளுடன் தொடர்புடையவை. பொதுக் கல்வியை நலிவடையச் செய்யும் அஸ்திரங்களே இவை ஒவ்வொன்றும்! இந்த கல்வி அரசியலைப் புரிந்து கொண்டு செயல்படுவது ஆசிரியர்களின் கடமை.

ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தே கவனம் கொண்டிருக்கிறார்களே அன்றி போராடும் ஆசிரியர்களை பொருட்படுத்த மறுக்கிறார்கள்! வருங்காலத் தலைமுறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆரம்ப கல்வி என்பது நாட்டின் அஸ்திவாரம் போன்றதாகும்! அந்த அஸ்திவாரத்தை பலமாக்குங்கள் என்பதெ வேண்டுகோள்!

குரலற்றவர்களின் குழந்தைகள் கல்வி பெறாமல் இருப்பதை கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு முதல்வரின் பார்வைக்கு உடனடியாக இதை எடுத்துச் சென்று, உரிய  நியாயம் வழங்க வேண்டும் என்று அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

கட்டுரையாளர்; சு.உமா மகேஸ்வரி

கல்வி செயற்பாட்டாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time