தேர்தலுக்கு முன்பு இன்னும் எத்தனை அதிரடிகளோ?

-ச.அருணாசலம்

ஒரு வழியாக தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்திற்கு தந்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையர் அருண்கோயல் ராஜினாமா, சி.ஏ.ஏ அமலாக்கம்..என ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விவகாரங்களை எப்படி புரிந்து கொள்வது எனப் பார்ப்போம்;

மோடி அரசின் தேர்தல்பத்திர திட்டம் சட்டத்திற்கு புறம்பானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை , இந்த பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களும், பெற்ற கட்சிகளின் விவரங்களையும் மார்ச் -6 ந் தேதி கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், அதை சமர்ப்பிக்காமல் அதற்கு நான்கு மாத அவகாசம் வேண்டுமென கேட்டது.

ஸ்டேட் வங்கிக்கு அழுத்தம் கொடுத்து இத்தகைய முட்டாள்தனமான பதிலை உச்சநீதிமன்றத்திடம் கொடுக்க வைத்தது யாரென்று இந்திய மக்கள் அறிவர். நீதிமன்ற அவமதிப்பு என்ற பழிக்கு ஆளாவதோடு நாட்டு மக்களின் நன்மதிப்பு பெற்ற வங்கி என்ற இடத்திலிருந்து வீழ்ச்சி அடைவோம் என்ற உணர்வின்றி தற்கொலைக்கு ஒப்பான முடிவை வங்கி தானாக எடுத்திருக்க முடியாது. உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை, இதையொட்டிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கோடு மார்ச் 11 ந்தேதி விசாரிக்க இருக்கையில் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல் திடீரென்று பதவியை துறந்தார். அதை உ டனடியாக குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதும் இப்படி இரவோடு இரவாக நடந்த மர்மம் நிறைந்த நடவடிக்கை தான். முதல் நாள் விருப்ப ஓய்வு பெற்று அடுத்த நாளே – அதாவது 12 மணி நேரத்திற்குள் மோடி அமைச்சரவை கூடி “விவாதித்து தேர்வு “ செய்து , அதை குடியரசு தலைவரும் உடனடியாக ஒப்புதல் கொடுத்து – தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் இந்த அருண் கோயல் என்ற பஞ்சாப் கேடர் அதிகாரி .

ராஜினாமா செய்த அருண்கோயல்

மோடியின், அதாவது இந்திய அரசின் தலைமை அமைச்சரின் ஆசியால் ஆணையராக ஆகியவர் இப்படி அவசர அவசரமாக விலகுவது ஏன்? தேர்தல் பத்திர முறைகேடுகள் உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் பொழுது, மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்க ஓரிரு நாட்களே இருக்கும் இந்த சமயத்தில் ‘இவர் ‘ ராஜினாமா செய்வது ஏன் என அனைவரும் மண்டையை பிய்த்துக் கொண்டு அலைகின்றனர். அருண் கோயலும் அதற்கான காரணங்களை கூறவில்லை. முந்திரி கொட்டைகளான மோடி பக்தர்களும் ட்விட்டரிலோ அல்லது மற்ற சமூக ஊடகங்களிலோ இதுபற்றி வாய் திறக்காமல் கப்சிப்பென்று இருப்பது வினோதமாக உள்ளது.

மர்மம் நிறைந்த இந்த நகர்வுகள் தேர்தல் காலத்தில் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. தலைமை தேர்தல் ஆணையராக வர வேண்டியவர், 2027 வரை பதவி காலம் இருக்கும் ஒரு அதிகாரி ஏன் இப்படி திடீரென ராஜினாமா செய்ய வேண்டும்?

யார் கொடுத்த அழுத்தம்?

இப்படி பதவிக் காலம் முடியுமுன்னரே பதவி விலகியவர் இவர் மட்டுமன்று, இவருக்கு முன்னர் அசோக் லவாசா என்ற தேர்தல் ஆணையரும் திடுதிப்பென்று பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளிநாட்டு வேலைக்கே சென்றுவிட்டார். 2019 தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக குற்றஞ்சாட்டியவர், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியர் இந்த அதிகாரி.

மோடியின் தில்லுமுல்லுகளால் வெளியேறிய அசோக் லவாசா.

அதன் விளைவாக வருமான வரித்துறை அவரது மனைவி மீது “ரெய்டு” என்ற பெயரில் பாய்ந்தது. மிரட்டப்பட்டார், சமிக்ஞையை புரிந்து கொண்ட நேர்மையான அதிகாரியான லவாசா , ‘வேண்டாம் வம்பு ‘ என்று பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆசிய வங்கி தலைவர் பதவிக்கு போய்விட்டார்.

எத்தகைய காரணங்களினால் அருண் கோயலை பதவி விலக மோடி வற்புறுத்தினார் என்று சரமாரியான – அர்த்தமுள்ள – கேள்விகளை முன்னாள் ஒன்றியத் தலைமைச் செயலாளர் (Cabinet Secretary) இ.ஏ எஸ் சர்மா எழுப்பியுள்ளார்.

# மோடியின் செல்லப் பிள்ளையான அருண் கோயல் ஏன் இப்பொழுது பதவி விலக வேண்டும்..?

# தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் நமது ஜி பல வழிகளில் தலையீடு செய்வதை அருண் கோயல் விரும்பவில்லையா?

# மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் திறமையில் அருண் கோயல் சந்தேகம் கொண்டாரா?

# உச்சநீதிமன்றம் கேட்ட விவரங்களை மோடியின் அழுத்தத்தால் ஸ்டேட் வங்கி கொடுக்க மறுப்பதை விரும்பவில்லையா?

# சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கட்ட பத்திரங்கள் மூலம் பெற்ற மீதி உள்ள பணத்தை முடக்கி வைக்க அருண் கோயல் விரும்பினாரா?

# பி இ எல், இ சி ஐ எல் மற்றும் எஸ் பி ஐ ( B E L, E C I L, S B I) போன்ற நிறுவன போர்டு (Board)களில் நியமிக்கப்பட்டுள்ள பா ஜ க நிர்வாகிகளை தேர்தலின் புனிதம் கருதி ராஜினாமா செய்ய வற்புறுத்தினாரா

# மோடியின் செயல்பாடுகளில் ஏதேனும் குறையைத் தெரிவித்தாரா ?

இந்தக் கேள்விகள் எதற்குமே பதில் தெரியாத நிலையில் தான் நாடும், மக்களும் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், குடியரசு தலைவர் முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மேற்கூறிய கேள்விகளுக்கான விடை நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் அதற்கான ஒரு சுதந்திரமான, நேர்மையான விசாரணைக்கு குடியரசு தலைவர் ஆணையிட வேண்டும் என்றும் சர்மா கோரியுள்ளார்.

இப்பொழுது மூன்று தேர்தல் ஆணையர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒருதேர்தல் ஆணையர் தான் உள்ளார். ஏற்கனவே மற்றொரு தேர்தல் ஆணையராக இருந்த அனூப் பாண்டே வின் பதவிக்காலம் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டதால், இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டியுள்ளது. இதற்காகத் தான் அருண் கோயல் பதவியில் இருந்து மோடியால் விரட்டப்பட்டாரா..? என்ற கேள்வி எழுகிறது.

இங்கு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறை முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்க தேர்தல் ஆணையர்கள் நடுநிலையாளர்களாக , ஆட்சியிலுள்ளோரின் கைப்பாவையாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.

அவர்களை தேர்வு செய்ய சி வி சி ( Central Vigilance Commission) மற்றும் சி ஐ சி ( Central Information Commission) ஆகிய அமைப்புகளுக்கு ஏற்படுத்திய நியாயமான முறையான ஆளும்கட்சி மற்றும் அரசு சார்பில் பிரதமரும், எதிர்கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவரும், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியும் அடங்கிய ஒரு குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதே முறையானதாக இருக்க முடியும்.

ஆனால், மோடி அரசு இதை மறுத்து, உச்ச்நீதி மன்ற தீர்ப்பையும் புறந்தள்ளி மூன்று நபர் கொண்ட குழுவில் பிரதமரும், அவரால் நியமிக்கப்படுகிற ஒரு அமைச்சரும், எதிர்கட்சி /பெரிய கட்சி தலைவரும் இருப்பார்கள் என சில மாதங்களுக்கு முன் சட்டமியற்றியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இக்குழுவில் இடமில்லை என்ற சட்டத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், என்ன காரணத்தினாலோ உச்ச நீதி மன்றம் இச் சட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. அதன் பலனை இன்று நாடு அனுபவிக்கப் போகிறது.

‘தள்ளி வைக்கப்பட்ட நீதி, தவிர்க்கப்பட்ட நீதி’ என்ற மெய்ப்பாட்டை நாடு ஏற்கனவே தேர்தல் பத்திர வழக்கில் அனுபவித்துள்ளதை மறக்க முடியுமா?

உச்சநீதி மன்றத்து கொலீஜியத்தின் பரிந்துரைகளை ஏற்காமல் கிடப்பில் போடுவதும், தனக்கு கொள்கையளவில் அனுசரணையாக உள்ளவர்களை நீதிபதிகளாக உடனே நியமிப்பதும் மோடி அரசின் வழக்கமாக இருக்கிறது

உச்ச நீதி மன்ற உத்தரவுக்கெதிராக சட்டம் இயற்றி தனது ஆளுமையை மீண்டும் நிலைநாட்டுவதும் மோடி அரசின் நடைமுறையாக உள்ளது

தனக்கு ஒத்துவராத அதிகாரிகளை இரவோடிரவாக விரட்டி அடிப்பதும், தனது ஏவல்களை செய்பவர்களுக்கு சன்மானமாக பதவி உயர்வுகளும், பணிக்கால நீட்டிப்பும் செய்வது மோடி அரசின் வழக்கமாக உள்ளது.

இதையெல்லாம் மறந்துவிட்டு அருண் கோயல் விவகாரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. என்ன என்ன சட்ட சந்து பொந்துகள் உள்ளதோ அவற்றை உபயோகித்து, எப்படி எப்படி சட்டத்தை வளைக்க முடியுமோ அப்படி வளைத்து அரசியல் ஆதாயம் தேடுவதில் மோடிக்கு நிகர் இந்தியாவில் யாருமில்லை.

உச்சநீதி மன்றம் நேற்று காலை ஸ்டேட் வங்கியை கடுமையாகச் சாடி தரவுகளை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்ற செய்தி காட்டுத்தீயாக வந்த பொழுது , மோடி அரசு மெள்ளப் பதுங்கி மாலையில் குடியுரிமை சட்ட விதிகளை நடைமுறைக்கு கொண்டுவருகிறோம் என உத்தரவிட்டுள்ளது. நான்கு வருடங்கள் எட்டு மாதங்கள் தூங்கிவிட்டு இன்று உச்சநீதி மன்ற குட்டிற்குப் பிறகு, தேர்தல்களுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் சர்ச்சைக்கிடமான சட்டங்களை அமுலுக்கு கொண்டு வருவதன் நோக்கம் என்ன ? மக்களை பதற்றத்திலும், கொந்தளிப்பிலுமே எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன நோக்கம் இவர்களுக்கு?

மொத்தத்தில் தேர்தலை நியாயமாக நடத்த பாஜக அரசுக்கு விருப்பமில்லை என்பது தெரிகிறது.

எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆனபின் ஏன் உச்ச நீதி மன்றம் முக்காடு போட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்?

இந்த நிலையில் இன்று (மார்ச் 13) தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 11 வரை, அதாவது அந்த 10 நாட்களில் மட்டும் 3,346 தேர்தல் பத்திரங்கள் விற்பனைச் செய்யப்பட்டதாகவும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 13,109 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு தேர்தல் பத்திரங்களையும் வாங்கிய தேதி, வாங்கியவர்களின் பெயர்கள் மற்றும் வாங்கிய பத்திரங்களின் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.

மேற்படி அந்த தகவலை விபரமாக, முழுமையாக உச்ச நீதிமன்றம் மக்கள் மன்றத்திடம் வைக்க வேண்டும்.

மோடி அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் , இந்தியாவின் எதிர்காலத்தை நினைவில் நிறுத்தி , ஜனநாயகத்தின் உயிர்மூச்சை காப்பாற்ற நேர்மையான , நியாயமான தேர்தல்களை உறுதி செய்ய வேண்டிய கடமை உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது.

எனவே, உச்சநீதிமன்றம தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி இரண்டு பாரட்சமற்ற தேர்தல் ஆணையர்களை தானே தேர்வு செய்து , வாக்களிக்கும் முறையில் யாரும் சந்தேகிக்க வழியில்லாத வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் .

தேர்தல் பத்திரங்கள் மூலம் குவிக்கப்பட்ட பணத்தை முடக்கி விட்டு கட்சிகள் சமநிலையில் தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற உச்சநீதி மன்றம் வழி வகுக்கட்டும்.

பொது நலன், ஜனநாயகம் சார்ந்த இந்த எதிர்பார்ப்புகள் நடைமுறை சாத்தியமானதே!

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time