பாரத தேசம் என்றால், பார்ப்பன தேசமோ..?

-சாவித்திரி கண்ணன்

”சாதியால் தான் நாடு பின்னடைந்துவிட்டது…, சாதியே கிடையாது..” என பாஜக தலைவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்! ஆனால், அக் கட்சிக்குள்ளும், ஆட்சி நிர்வாக கட்டமைப்பிலும் பார்ப்பனர்களின் முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது! பார்ப்பனர்கள் ஏன் பாஜகவை கொண்டாடுகிறார்கள்..? எனப் பார்ப்போம்;  

நமது பிரதமர் மோடியோ, ”நாட்டில் இரண்டே சாதிகள் தான் உள்ளனர். ஒன்று ஏழைகள் மற்றொன்று நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்க பங்களிப்பவர்கள்” என்கிறார்! அதாவது இரண்டாவது தரப்பினர் வசதியானவர்கள் என்பதை தவிர்த்து நாட்டை வறுமையில் இருந்து மீட்க பங்களிப்பவர்கள் என்பதன் மூலம் ஏழைகளை நாட்டிற்கு பங்களிக்காதவர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார்! உண்மையில் தங்கள் உழைப்பின் மூலம் நாட்டின் அனைத்து நிர்மானத் தளங்களையும் அவர்களே கட்டி எழுப்பி அதிகம் பங்களித்த போதிலும், ஏழ்மையில் வைக்கப்பட்டுள்ளனர்!

இப்படி எல்லாம் பேசும் பிரதமர் தான், ”நான் மிகவும் பிற்பட்ட சமூகத்தில் இருந்து பிரதமராகி உள்ளேன்” என்றும் சொல்லி உள்ளார். ”தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்வாக்கான சாதி பின்புலத்தில் இருந்து வந்துள்ளார்” என்றும் கூறியுள்ளார்.

CSDS என்ற அமைப்பின் நாடு தழுவிய சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, நாட்டின் மொத்த பிராமணர்களில் 82 சதவிகிதத்தினர் பாஜகவிற்கு தான் வாக்களிக்கின்றனர்! ஏன் பிராமணர்களில் பெரும்பான்மையினர் பாஜகவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இது எப்படி சாத்தியமாயிற்று என்பதைத் தான் இங்கு பார்க்க உள்ளோம்.

மோடியின் சாதி என்பது மோத் –கான்சி சமூகமாகும். இது 1994 வரை உயர்சாதி பட்டியலில் தான் இருந்தது! இதனால் தான் ராகுல்காந்தி கூட, ”மோடி ஒ.பி.சி என்பது ஒரு பித்தலாட்டம்” எனச் சொல்லி உள்ளார்.

2014 ஆம் ஆண்டு பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி சொன்னதை நினைவுபடுத்துகிறேன். ”எனக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தின்படி நான் நரேந்திர மோடியை ஒரு பிராமணர் என்கிறேன். ஏனெனில், நான் அவரிடம் பிராமணர்களின் குணாம்சங்களை பார்க்கிறேன்” என சொன்னார்.

அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ் அந்தணர்களால் அடையாளம் காணப்பட்டு, பிராமண சமூகத்தால் முன்னிறுத்தி, சோ, குருமூர்த்தி, எல்.சந்தோஷ் போன்ற பிராமண அறிவி ஜீவிகளின் பிரச்சாரத்தால் வளர்த்து ஆளாக்கப்பட்டு, இன்று ‘தன்னுடைய ஆட்சியே பிராமணர்களுக்கானது எனச் சொல்லாமல், செயலில் சாதித்து வருகிறார் மோடி’ என்பது தான் சமூக ஆய்வாளர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

“சாதி கிடையாது. சாதி பாகுபாடு என்பதெல்லாம் இல்லவே இல்லை…”என்பதை அடித்துப் பேசுபவர்களை நன்றாக கவனித்து பார்த்தோமானால், அவர்கள் அனைவருமே உயர்சாதிக்காரர்களாக மட்டுமின்றி, அதன் மூலம் அளப்பரிய வாய்ப்புகளை பெற்று உயர்ந்தவர்களாக உள்ளனர் என்பது ஒரு யதார்த்தம். உண்மையிலேயே இவர்கள் சாதியைக் கடந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் நாம் தலை வணங்கலாம்.

ஆனால், இப்படி பொய் வேஷம் போடுவதால் தான் பாஜகவிற்குள்ளேயே பார்ப்பன எதிர்ப்பு தற்போது அங்குமிங்குமாக மேலெழுந்து வருகிறது.

கர்நாடகாவில் தார்வார்ட் தொகுதியை, ”பார்ப்பனரான பிரகலாத் ஜோசிக்கு தரக் கூடாது” என கொந்தளித்துள்ளனர் பாஜகவில் இருக்கும் லிங்காயத்து சமூகத்தினர்! இந்த சமூகத்தின் ஆன்மீக மடத்து சாமியார்கள் இந்த பிராமண அமைச்சரை கடுமையாக எதிர்க்கிறார்கள்! காரணம், ”பிற சமூகத்தார்களை கடுகளவும் மதிக்காமல் அவர் அடக்கி ஆள்கிறார். எடியூரப்பா முதல்வராக இருந்த போது அவரையே கட்டுப்படுத்தினா” எனச் சொல்கிறார்கள்!

பிராமணரான பிரகலாத் ஜோஸியை எதிர்க்கும் கர்நாடகா லிங்காயத்து சமூக தலைவர்கள்!

உத்திரபிரதேசத்தின் சுவாமி பிரசாத் மெளரியா வைக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சி ரகம்; பாஜகவானது இந்து மதத்தை, பிராமண மதமாக்கப் பார்க்கிறது. இதன் மூலம் இந்து மதத்தில் உள்ள 90 சதவிகித இந்துக்களை – அதாவது பெரும்பான்மை மக்களை – இழிவுபடுத்துகிறது…” என்கிறார்!

நமது நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நமது நாட்டை பெருமளவில் பிராமணப் பிரதமர்களும், முதல்வர்களுமே ஆட்சி செய்து வந்தனர் என்பதே வரலாறு! அந்த வரலாற்றை மாற்ற முன்முயற்சி எடுத்தவரும் மொரார்ஜி தேசாய் என்ற பிராமணப் பிரதமர் தான். மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தும் பேச்சை அவர் எடுத்தவுடன், அன்றைய ஜனதாவுக்குள் இருந்த ஜனசங்கம் அவரை பதவி இறக்கம் செய்தது. அதன் பிறகு 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் வி.பி.சிங் அவர்கள் தான் அந்த புரட்சியை செய்தார். இதன் மூலம் சாதி வெறிப் பார்ப்பனர்கள் அவரது எதிர்காலத்தை சூனியமாக்க முடிந்ததே அன்றி, அவர் ஏற்படுத்திய விளைவுகளை அவர்களால் தடுக்க முடியவில்லை.

இந்திய அரசியல் களத்தையே மாற்றி அமைத்த விபி.சிங்!

மண்டல் கமிஷன் தான் உ.பியின் கடைசி முதல்வர் என நாராயண்தத் திவாரியோடு (1989) பிராமண முதல்வர்களுக்கு முற்று புள்ளி வைத்தது.

உ.பி மட்டுமல்ல, மத்திய பிரதேசத்தில் சியாம் சரண் சுக்லா,

பீகாரில் ஜெகன்நாத் மிஸ்ரா 1990),

ராஜஸ்தானில் ஹரிதேவ் ஜோஸி (1990)

என பார்ப்பன முதல்வர்களுக்கு முடிவுரை எழுதியது.

அதன் பிறகு தான் முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், மாயாவதி, நிதிஸ்குமார், தேவகவுடா, தேவிலால், சிவ்ராஜ் சிங் செளகான், அசோக் கெலாட் போன்ற பார்ப்பனரல்லாத தலைவர்கள் அந்த மாநிலங்களில் மேலெழுந்து வந்தார்கள்! பாஜகவே உ.பி. முதல்வராக பார்ப்பனரல்லாத கல்யாண்சிங்கை பதவியேற்கச் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

கட்சியையையும், ஆட்சியையும் பாஜக எதற்காக நடத்தி வருகிறதோ.., அந்த நோக்கத்தை தற்போது வெளிப்படையாக செயல்படுத்த தொடங்கிவிட்டது. பாஜக என்ற கட்சியிலும், அதன் ஆட்சியிலும் பார்ப்பனர் – பனியாக்களின் ஆதிக்கத்தின் யதார்த்தமான கட்டமைப்பை சுட்டிக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

சக்தி வாய்ந்த பார்ப்பன அமைச்சர்கள்.. நிர்மலா, நிதின்கட்கரி, ஜெய்சங்கர்

பாஜகவின் ஆட்சியில் பிராமணர்கள்;

மோடியின் முதல் அமைச்சரவையில் சுஸ்மா சுவராஜ், நிதின்கட்காரி உள்ளிட்ட 9 பிராமணர்கள் இருந்ததனர். இரண்டாவது அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலருமென இது வரை 21 பிராமணர்கள் மத்திய அமைச்சர் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

தற்போது பல மாநிலங்களிலும் பிராமணர்களை முதல்வர் அல்லது துணை முதல்வர் என நியமித்துக் கொண்டுள்ளது பாஜக;

பாஜகவின் பிராமண முதல்வர்கள் மனோகர்லால் காட்டியா, பஜன்லால் சர்மா, ஹிமந்த் பிஸ்வா, மனோகர் பாரிக்கர்.

ராஜஸ்தானில் பஜன்லால் சர்மா பிராமண முதல்வர்

அஸ்ஸாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு பிராமண முதல்வர்

ஹரியாணாவில் சென்ற மாதம் 12 ஆம் தேதி வரை ஒன்பதரை ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் மனோகர்லால் காட்டியா ஒரு பிராமணர்!

கோவாவில் பிராமணரான மனோகர்லால் பாரிக்கர் இரண்டு முறை முதல்வராக்கப்பட்டார்.( தற்போது உயிருடன் இல்லை)

திரிபுராவில் 2018 முதல் 2022 வரை முதல்வராக இருந்த பிப்லப் குமார்தேவ் ஒரு பிராமணர்.

தற்போது மத்திய பிரதேசத்தின் துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா பிராமணர்!

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் தேவேந்திர பட் நாயக் ஒரு பிராமணர்! இதற்கு முன்பு முதல்வராகவும் வாய்ப்பு பெற்றார்.

உத்திரபிரதேசத்தில் பிராமணரான பிரதேஷ் பதக் துணை முதல்வர்.

சட்டிஸ்கரில் பிராமணரான விஜய் சர்மா துணை முதல்வர்.

இது தவிர பாஜகாவால் ஆளுநர்களாக்கப்பட்ட பிராமணர்களின் பட்டியல் தனி!

முதல்வராகவோ, துணை முதல்வராகவோ வாய்ப்பில்லாத பீகார் போன்ற மாநிலத்தில் மங்கல் பாண்டே, நிதின் மிஸ்ரா (முன்னாள் முதல்வர் ஜெகன் நாத் மிஸ்ரா மகன்) போன்ற பிராமணர்கள் அதிகாரமிக்க அமைச்சர்களாக உள்ளனர்.

ஒரு சிலர் கேட்கலாம். ஏன் திறமையாளர்களை பயன்படுத்துவதில் என்ன தவறு..? மேற்படியாக சொல்லப்பட்டவர்களில் எவருமே திறமைசாலிகள் என்பதாகவோ, நல்லாட்சி தந்ததாகவோ பாராட்டு பெறவில்லை. ராஜஸ்தான் முதல்வராக தற்போது நியமிகப்பட்டுள்ள பஜன்லால் சர்மா தற்போது தான் முதல் முறை ராஜஸ்தானின் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். தேர்தலுக்கு முன்பு கூடிய பிராமண மஹா சபா இவருக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என கட்டளையிட்டதால் வழங்கப்பட்டுள்ளதாம். ஆக, அனுபவமோ, திறமையோ அவர் முதல்வர் வாய்ப்பு பெற்றதற்கு காரணமில்லை என்பது வெளிப்படையான உண்மையாகும்.

பாரதிய ஜனதா கட்சியில் பார்ப்பனர் ஆதிக்கம்

பாஜகவின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி. நட்டா ஒரு பிராமணர்!

ஆட்சித் தலைவர் மோடியும், கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவும்!

இதே போல இந்த மாநிலத்தின் கட்சித் தலைவர் சி.பிஜோஸியும் ஒரு பிராமணரே! பல மாநிலங்களில் பிராமணர்களே பாஜகவின் மாநிலத் தலைவர்களாகவும் உள்ளனர். தற்போது இந்திந்த மாநிலங்களில் பிராமணத் தலைவர்கள் இல்லையே எனச் சிலர் சொல்லலாம். அந்த மாநிலங்களில் முன்பு இருந்திருக்கலாம். தற்போது தற்காலிகமாக பின்னிருந்து ஆட்டுவிக்கக் கூடியவர்களாக பிராமணர்கள் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திலே முன்பு இல.கணேசன் என்ற பிராமணர் தலைவராக இருந்தார். தற்போது கே.டி.ராகவன், ஹெச்.ராஜா, கேசவ விநாயகம்.. போன்றவர்களே அண்ணமலையை பின்னிருந்து இயக்கி வருகிறார்கள்!

பார்ப்பனரான கே.டி.ராகவன் காலில் விழும் அண்ணாமலை

பாஜகவின் கட்சிக் கட்டமைப்பில் எந்தெந்த சாதிக்கு எவ்வளவு பேர் என தி பிரிண்ட் இதழ் 2018 ஆம் ஆண்டு ஒரு புள்ளிவிரம் தந்தது! அதில் தற்போது பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை என்பதால் அதில் ஒரு சிலவற்றை இங்கே தருகிறேன்.

பாஜகவின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் 50 பேரில் 17 பேர் பிராமணர்கள்! மற்ற உயர்சாதியினர் 21. இவை தவிர மற்ற 12 தாம், 75

சதவிகித மக்களை பிரதிபலிக்கும் சாதிகளுக்கு தரப்பட்டுள்ளன!

தேசிய எக்ஸ்கியூடிவ்கள் 97 பேரில் 29 பிராமணர்களுக்கும், 37 மற்ற உயர் சாதியினருக்கும் தரப்பட்டுள்ளன!

அதே சமயம் பெரிய எண்ணிக்கை கொண்ட சாதிகளுக்கும் சில பிரதிநிதித்துவம் அங்குமிங்குமாக வழங்கப்பட்டு முடிந்தவரை அதிருப்திகள் அதிகம் தலை தூக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்! சாதித் தலைவர்களின் ஆசை, அபிலாஷைகளை துல்லியமாகக் கணித்து சதுரங்க வேட்டையாடி வருகின்றனர்.

உத்திர பிரதேசத்தில் முதல்வர் யோகியை ஆட்டுவிக்கும் பார்ப்பன அதிகார மையங்கள்!

 

இதற்கு தமிழ் நாட்டில் வன்னியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாமக என்றால், உ.பி போன்ற மாநிலங்களில் குர்மிக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் அப்னாதளம் போனறவற்றை சொல்லலாம். இவர்கள் தாம் சாதிகளே கிடையாது என்றும் சொல்வார்கள். ஹரியானா முதல்வராக பிராமணரான மனோகர்லால் காட்டியா பதவி ஏற்ற போது சொன்னார். ”ஹரியாணாவில் சாதியே கிடையாது. இது ஒவ்வொருவருக்குமான அரசு” என்றார்! அவருடைய ஆட்சியில் தலித்துகளும், இஸ்லாமியர்களும் வரலாறு காணாத கொடுந்துன்பத்திற்கு ஆளானதை சமீபத்திய வரலாறு சொல்கிறது.

சமீப காலமாகத் தான் ‘இந்து மதத்தையே சனாதன மதம்’ என பாஜகவினர் சொல்லத் துணிந்துள்ளனர். இதன் பொருள் ‘இந்து ராஜ்ஜியம் என்பது பிராமண ராஜ்ஜியம்’ என்பதாகும். இது தவிர ”நாட்டின் கோவில் சொத்துக்களை அரசிடம் இருந்து தனியார் கைகளுக்கு தர வேண்டும்” எனவும் வலியுறுத்தி வருகின்றனர். சனாதனப் பார்வை கொண்ட கல்வித் திட்டத்தையே தேசிய கல்விக் கொள்கையாக உருவாக்கித் திணித்து வருகிறார்கள்! ஒவ்வொரு தளத்திலும் பிராமணர்கள் உக்கிரமாக வேலை செய்து வருகின்றனர். பிராமணர்கள் மேலாதிக்கம் மிக வேகமாக மேலெழுந்து வருகிறது!

உலகம் தழுவிய அளவில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி இந்தியாவில் மீண்டும் பார்ப்பன ராஜ்ஜியத்தை புனருத்தாரணம் செய்ய கூட்டம் மாநாடு நடத்துகிறார்கள்!

அந்தணர்களை ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரப் படுத்துவது,

நாட்டில் உள்ள மற்ற சமூகங்களை அவர்களின் கீழ் படிப்படியாக எடுத்து வருவது..,

அதற்கேற்றச் சமூக சூழல்களை கட்டமைப்பது…,

அம்பானி, அதானி போன்ற பனியாக்களை தனிப் பெரும் பொருளாதார சக்தியாக வளர்ப்பது..,

பெருந்திரளான மக்களை உரிமைகளற்ற அடிமைகளாக வைத்திருப்பது..

என்ற தொலைநோக்கு திட்டத்திற்கு ஏற்ப பாஜக காய் நகர்த்தி வருகிறது!

சகலருக்கும் பிரதிநிதித்துவம் தரும் சமத்துவ சமுதாயமே உண்மையான மக்களாட்சிக்கு இலக்கணமாக இருக்க முடியும். பார்ப்பனர்களிலும் சில முற்போக்காளர்கள் இந்த கருத்து நிலையை ஆதரிப்பவர்களாகவே உள்ளனர். ஆயினும், அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக உள்ளனர். உழைப்பு, திறமை, நேர்மை, சக மனிதர்களிடம் அக்கறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, சாதிகளை கடந்த – பொது நலனை குறிக்கோளாகக் கொண்ட – அனைத்து சமூகத்தினரும் கைகோர்த்தால் மட்டுமே தற்போதைய சூழலை மாற்ற முடியும்.

சாவித்திரி கண்ணன்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time