வன்னியர்களுக்கே அந்நியமாகிய பாமக..!

-பவா சமத்துவன்

எனது ஊர் ஏகனாபுரம் – 5

பசுமை வயல் வெளிகள் பறி போகவும், ஏரிகளும், குளங்களும் தரைமட்டமாகப் போகவுமான துயரத்தில் தவித்துக் கொண்டுள்ளனர் கிராம மக்கள்! வன்னியர் கட்சியான பாமக, அன்னியர் கட்சியான பாஜகவின் அடிமையானது! பாமகவின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் சாட்சியாக சமகால வரலாற்று சம்பவங்களே சாட்சி சொல்கின்றன;

இந்தியா எங்கும் தேர்தல் திருவிழா. தமிழகத்திலும் களை கட்டி இருக்கிறது கரை வேட்டிகளின் வான வேடிக்கைகள்..!

மதுரமங்கலத்தில் இருந்து ஏகனாபுரம் செல்லும் சாலையில் பாஜகவில் அங்கம் வகிக்கும் பாமக – தாமக உள்ளிட்ட கட்சிகளின் பிரச்சாரம் நடக்கிறது.

இருசக்கர வாகனங்களில் விதவிதமாய் கொடிகள் கட்டியபடி 20 – 30 பேர் ஆளில்லா சாலையில் பிரச்சாரம் செய்தபடியே சென்று கொண்டிருக்கிறார்கள் .

நண்பகல் வெயில் நேரத்தில் இந்த பகுதியே நெருப்புக் கோலமாக இருக்கிறது.

மதுரமங்கலத்தை கடந்து கண்ணன் தாங்கல் பாலத்திற்கு முன்பாக கம்பன் கால்வாய் கரை ஓரத்தில் தனித்து இருக்கும் ஒரு மரத்தடியில் படுத்திருக்கும் ஆட்டு மந்தையை பார்த்தபடியே சிறு  கம்புடன் நின்று கொண்டிருக்கிறார், ஒரு எழுவது வயது பெரியவர்.

அவர் இடுப்பில் கோவணம் அளவிற்கு ஒரு அரையாடை இருக்கிறது.

கடந்து செல்லும் கட்சிகளின் தேர்தல் கோஷங்கள் நம் காதைக் கிழிக்கிறது.

மாற்றம், முன்னேற்றம், வளர்ச்சி, வல்லரசு என ஏதேதோ வார்த்தைகள் கேட்கிறது.

ஆனால், ஆடு மேய்க்கும் இந்த பெரியவரை இது எதுவுமே ஈர்க்கவில்லை. திரும்பி கூட பார்க்கவில்லை. வழுக்கடைந்த தனது அரை ஆடையை சற்று ஏற்றியபடி தரையில் உட்காருகிறார்.

அவரது தந்தையும் அவரது தந்தைக்கு முன்னால் பாட்டனும் இதே கோலத்தில் தான் இந்த இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

காணாமல் போகவுள்ள வயலூர் ஏரி!

பாலத்தைக் கடந்த ஏகனாபுரம் செல்லும் திசையில் வருகிறது காவல் துறையின் கண்காணிப்பு மையம். இது தேர்தல் காலம் என்பதினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு நிலவிய கெடுபிடிகள் சற்றே குறைந்திருக்கிறது.

இந்த எல்லையை தாண்ட முயன்ற விவசாயிகள் தலைவர் பி.ஆர் பாண்டியனை பலமுறையும், பூவுலகின் நண்பர்களை  சில முறையும் கைது செய்திருக்கிறது காவல்துறை.

ஏகனாபுரத்தை அடைந்து விட்டோம் காஞ்சி செல்லும் தார் சாலையில் இருந்து விலகி உள்பக்கம் இருக்கும் செம்மண் சாலையில் சென்றால், முதலில் எதிர்படுகிறார் பன்னீர்செல்வம்.

இவருக்கு சொந்தமாக  கொஞ்சம் விவசாய நிலங்கள் இருக்கிறது.  ஒரு கந்தாயம் மட்டுமே விளையும் தனது சொந்த விவசாய வேலை போக, ஆண்டின் பல நாட்களில் பல ஊர்களுக்கும், பல வேலைகளுக்காகச் செல்கிறார்.

இதே ஊரில் வாழ்ந்து மறைந்த அவரது பெற்றோருக்கு கடைசி மகனாக பிறந்தவர் பன்னீர்செல்வம். அம்மா அப்பா இருக்கும் வரை ஓட்டை விழுந்த ஒரு கூரை வீடு தான் அவர்களுக்கு சொந்தமாக இருந்தது. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து விட்டன.

தனது குழந்தைகளாவது வசதியாக வாழவேண்டும் என ஒரு ஏழை தகப்பனாய் கனவு கண்டார். சொந்த நிலத்தில் இருந்து வந்த சொற்ப வருமானம், மூட்டையும் கல்லும் தூக்கி கூலி வேலைகளுக்கு சென்று திரட்டிய சம்பாத்தியம், மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் சேர்த்து பக்காவாக ஒரு வீட்டை கட்டி முடித்தார் பன்னீர்செல்வம். அவரிடம் பேசிய போது,

“சார் ..! எங்க தாத்தா தனவேலன் நாயக்கர் இந்தப் பகுதியிலேயே திமுகவில் பெரும் புள்ளி. பெரியார் – ல இருந்து கலைஞர் வரைக்கும் அவர் பெயரை சொல்லி கூப்பிடுவாங்க. அவர் போகாத பொதுக்கூட்டம் இல்ல. பாக்காத மாநாடு இல்ல. கடைசி வரைக்கும் திமுகவே உயிரென வாழ்ந்தவரு .தாத்தா திமுக வா இருந்ததுனால எங்க அம்மா அப்பாவும் திமுக தான்.  ஆனா-

ஆனா நான் பள்ளிக் கூடம் படிக்கிறப்போ பாமகவை பார்த்து வளர்ந்தவன்.

போராட்டம் – ஆர்ப்பாட்டம் – சாலை மறியல்னு அந்த காலகட்டம் ஒரே பரபரப்பாக இருக்கும். அட.. நம்ம ஜாதிக்காக ஒரு கட்சி இருக்கே.. அப்படின்னு பல பேரை மாதிரி நானும் பாமக ஆதரவாளராயிட்டேன் .

பல பேரை பலி கொடுத்து, வன்னியருக்கு இட ஒதுக்கீட்டை  வாங்கி கொடுத்த கட்சி. நமக்கு எப்போதும் நல்லது பண்ணுன்ற நம்பிக்கை இருந்துச்சு. என்னை மாதிரி பல ஊரிலும் பல இளைஞர்கள் பாமக மேல பற்றுதலா ஏன் வெறியோடு இருந்தாங்கண்ணு சொல்லலாம் .

ஆனால் – அப்போ நாங்க பார்த்த கட்சி, இப்போ வேறயா இருக்கு.

இந்த மாவட்டத்தில பத்து ஊரு இருபது ஊருன்னு  வன்னிய ஜனங்கள் இருக்கிற பகுதி தவியா தவிக்குது. ஏன் ..என்ன ஆச்சுன்னு கட்சியிலிருந்து யாரும் கேட்கவில்லை. என்ன நடக்குதுன்னு யாரும் வந்து பாக்கல.

இப்படி ஒரு துரோகம் பண்ணுவாங்க நான் நினைச்சு கூட பாக்கல சார்..!

பரந்தூர் ஏர்போர்ட் விஷயத்துல பாமக நெனச்சா இந்த திட்டத்தை அடியோடு தடுத்து நிறுத்த முடியும்.

ஆனால்  -பெயரளவு எதிர்ப்பு சொல்லிட்டு காணாம போயிடாறாங்க.. இது என்ன நியாயம்? மக்களை ஏமாத்துறது பெரிய அயோக்கியத்தனம் இல்லையா..?

இங்க இருக்கிற பல்லாயிரம் மக்களுக்கு அய்யா ராமதாஸ் தான் நம்பிக்கையா இருந்தார். எல்லாம் சுக்கு நூறா நொறுங்கிப் போச்சு .

என் அப்பன் பாட்டன் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு வீட்டை எப்படியோ கட்டி முடிச்சேன். கஷ்டப்பட்டு கட்டுன இந்த வீட்ல ஒரு நாளும் நான் நிம்மதியா குழந்தை குட்டியோட தூங்க முடியல.

பன்னீர் செல்வத்தின் வீடு

எந்த நேரத்துல புல்டோசரோட வந்து இடிப்பாங்கன்னு கவலையாகவும் பயமாகவும் இருக்கு.

என்ன வாழ்க்கை சார் இது..?

வார்த்தைகள் வராமல் தடுமாறும் பன்னீர்செல்வம் கடைசியில் விம்மி அழும் நிலைக்கு வருகிறார். தோளில் இருக்கும் துண்டால் தனது வாயை பொத்திக் கொள்ளும் அவருக்கு நம்மால் ஆறுதல் ஏதும் சொல்ல முடியவில்லை.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பேரினச் சமூகங்களாய் இருப்பது வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் தான். தமிழகத்தின் ஆதி தொல்குடிகளில் முக்கிய இடத்தை பெறுவது வன்னியர்கள் தான்.

இராமாயணம் எழுதி புகழ் பெற்ற மாபெரும் கவிஞன் கம்பன் வன்னிய சமூகம் குறித்து வன்னிய புராணம் எழுதியுள்ளார். அந்த அளவிற்கு தமிழகத்தின் பழமையான சமூகங்களில் இது ஒன்று.

1987 இல் எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தனி இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய பாமகவின் போராட்டம் தமிழகம் தாண்டி இந்தியா முழுக்க பேசப்பட்டது.

அச்சாலை மறியல் போராட்டத்தில் 21 வன்னியர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியானார்கள் .

இரண்டு வாரத்திற்கும் மேலாக நீடித்த இப் போராட்டத்தின் போது, வட தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெளி உலக தொடர்பு இன்றி தனித்தனித்  தீவுகளாக இருந்ததை இன்றைக்கும் பல பேர்  பேசிக் கொள்வார்கள்.

 

மாநில சுய ஆட்சி பற்றி இதற்கு முன்பே திமுக பேசியிருந்தாலும் 1992 இல் பாமக நடத்திய, ” தமிழர் வாழ்வுரிமை மாநாடு” இந்திய அளவில் பல அதிர்வலைகளை எழுப்பியது.

தன்னுரிமை,வாழ்வுரிமை,  தன்னாட்சி

போன்ற சொற்றொடர்கள் எல்லாம் அப்போது அதிகமாக பேசு பொருளாயின.

“அப்ப நான் கோடம்பாக்கம் பவர்ஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தேன்பா ..! அப்படி ஒரு மாநாட்டை அதுக்கு முன்னாடி நான் பாக்கல.. விருகம்பாக்கத்தில் பகல் ரெண்டு மணிக்கு ஆரம்பிச்ச பேரணி அடுத்த நாள் காலையில அஞ்சு மணி வரைக்கும் மெரினா கடற்கரையில் இருக்கிற சீரணி அரங்கத்தை நோக்கி வந்துகிட்டே இருந்தது.

கூட்டத்துக்கு வந்திருந்த தலைவர்கள் எல்லாம் குறிப்பா, வட இந்தியாவில் இருந்து வந்திருந்தவங்க  இப்படி ஒரு மாநாடான்னு திகைச்சி போய்ட்டாங்க. அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்த கட்சி தான் பாமக ..!”

என அடிக்கடி கூறுவார்  பரந்தூர் புதிய விமான நிலைய திட்ட எதிர்ப்புக் குழுவில் இருந்த ஏகனாபுரம் திருவேங்கடம்.

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது என இரண்டு திராவிட கட்சிகளுக்கும் தெரியும் .

அதனால்,  அதிமுக அதிகம் பேசாமல் மௌனம் காக்கிறது‌. எதிர்க் கட்சியாக இருக்கும் போது இத்திட்டத்தை எதிர்த்த திமுக, இப்போது ஆளுங்கட்சியான பிறகு தனது அனைத்து சக்திகளையும்  ஒன்று திரட்டி  திட்டத்தை செயல்படுத்த முனைகிறது.

மக்கள் நலனை விட, திமுகவிற்கு மற்ற நலன்கள் தான் முக்கியம் என்பது லாட்டரி அதிபர் மார்ட்டின் அளித்த 500 கோடி தேர்தல் பத்திரம் மூலம் உங்களுக்கு தெரிய வரும்.

இத் திட்டம் பற்றிய மக்கள் கருத்தை அறிய முதன்முதலாக “மக்கள் அதிகாரம் “அமைப்பு காஞ்சிபுரம் திருபெரும்புதூர்  மாவட்டங்களில்  கள ஆய்வு மேற்கொண்டது.

காலம் தாழ்ந்து போராட்ட களத்திற்கு வந்த பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் அவர்கள் , காஞ்சிபுரத்தில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இதில் கலந்துகொண்டு பேசிய விமான நிலைய எதிர்ப்பு  போராட்டக் குழுவின் செயலாளர்  ஏகனாபுரம் சுப்ரமணியன், “இதோ எங்கள் சின்ன ஐயா வந்துவிட்டார் . எங்கள் சேனைத் தளபதி வந்துவிட்டார். இனி, இந்திய ராணுவமே வந்தாலும் இங்கு எதுவும் செய்ய முடியாது. எங்கள் சின்ன ஐயா இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியே தீருவார்..! இது உறுதி  இதுவே சத்தியம்  என வீராவேஷமாக கோஷமிட்டர்.

ஆனால், கருத்து கேட்டு கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய டாக்டர் அன்புமணி ராமதாஸ்  “பரந்தூர்  பசுமை விமான நிலையம் பற்றி மக்கள் கருத்தை அறிய கள ஆய்வுக்  குழு அமைக்கப்படும். அது கள ஆய்வு செய்து எங்களிடம் அளிக்கும் அறிக்கையை  அரசிடம் சமர்ப்பிப்பேன்.” என்று கூறி கூட்டத்தை முடித்தார். அத்தோடு இன்று வரை இதில் கப்சிப் தான்!

பாமகவின் ஆரம்ப காலத்தில் அதன் ஆதரவாளராகவும் அக் கட்சியின் செயல்பாட்டாளராகவும் இருந்த கடலூர் இராஜதுரையிடம் வினவினோம்.

“…வட மாவட்ட வன்னிய மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய பாமக, டாக்டர் அன்புமணி ராமதாஸின் வருகைக்கு பிறகு வழிமாறி போனது.

அந்தக் கட்சியே கார்ப்ரேட்டுகளின் ஏஜென்டாக உருமாற்றம் பெற்று விட்டது.

சேலம் எட்டு வழி சாலை திட்டம்,

நெய்வேலி சுரங்க விரிவாக்க திட்டம்,

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம்

என மத்திய, மாநில அரசுகளால் முன்னெடுக்கப்படும் திட்டங்களால் பல்லாயிரம் வன்னியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். ஆயினும், இது பற்றி வலுவான போராட்டத்தை எதுவும் பாமக முன்னெடுக்கவில்லை.

மக்களின் எதிர்ப்பு இருப்பதனால் பெயரளவுக்கு ஒரு போராட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு,  பிறகு காணாமல் போய் விடுவார்கள். வட மாவட்ட வன்னிய மக்களின் செங்குருதியாலும், உயிர்த் தியாகத்தாலும் வளர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி செய்து வரும், இந்த துரோகத்தை வரலாறு என்றைக்குமே மன்னிக்காது..!”

கடலூர் ராஜதுரை கூறியது கடும் சொற்களாக நமக்கு தெரிந்தாலும் பாமகவின் நிகழ்கால வரலாறு மிக கசப்பானதாக தான் இருக்கிறது. கட்சியையே குடும்பமாக பாவித்த ராமதாஸ், பிறகு குடும்பமே கட்சி என சுருங்கி போனார்!

2024 மக்களவைத் தேர்தலுக்காக மார்ச் 22 இல் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர்  அரசாங்கம் என்பவர் இடம் பெற்றிருந்தார் .

மருத்துவர் அய்யாவை நேரில் பார்த்து நன்றி சொல்லி, அவரிடம் ஆசியும் பெற வேண்டும் என்று ஆசையோடு தனது ஆதரவாளர்களுடன் தைலாபுரத்திற்கு  காரில் வந்து கொண்டிருந்த அரசாங்கத்திற்கு இடி போல ஒரு செய்தி வந்திறங்கியது .

தர்மபுரி வேட்பாளர் மாற்றப்பட்டார். ‘சின்ன அய்யாவின் துணைவியார் சௌமியா அன்புமணி வேட்பாளராக’ அறிவிக்கப்பட்டார்.

மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி அதன் தலைவரான போது, மக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார் .

”நான் எந்த காலத்திலும் தேர்தலில் நிற்க மாட்டேன். நான் மட்டும் அல்ல, எனது செருப்பு கூட சட்டசபை பக்கமோ பாராளுமன்றம் பக்கமோ போகாது. அது மட்டுமல்ல – எனது மகன், மருமகள், பேரக் குழந்தைகள்  என  எனது வாரிசுகள் எவருமே தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் . எக்காலத்திலும், எந்த பதவியையும் அவர்கள் பெறமாட்டார்கள்” என உறுதி அளித்தார்.

கட்சி துவங்கிய 35 ஆண்டுகளில் எவ்வளவு தலைகீழ் மாற்றம்!

கொடுத்த வாக்குறுதியை மீறி, பதவியும் அதிகாரமும் பெற்ற தனது மகனுக்குப் பிறகு  மருமகளை அரசியலில் களம் இறக்கி அதிகாரத்தைப் பெற நினைக்கிறார், அய்யா ராமதாஸ்.

எந்த மக்களை தனது கட்சியின் ஆணி வேர்களாக பாமக கருதியதோ, அம் மக்களுக்கு எதிராக, கார்ப்பரேட் ஏஜென்ட்களின் குரலாக இன்று பேசுகிறார்  சொளமியா அன்புமணி ராமதாஸ்.

“இங்கு சில பேர் தர்மபுரி சிப்காட் தொழில் திட்டத்தை எதிர்த்துப்  பேசுகிறார்கள் .போராட்டம் செய்கிறார்கள் . இது தவறு. தொழில்கள் வந்தால் தான் நாடு வளர்ச்சி பெறும். நாமும் வளர்ச்சி பெறுவோம்’’ என்கிறார். பசுமை தாயகத்தை நடத்துபவர் பேசக் கூடிய பேச்சா இது?

தர்மபுரி மாவட்டத்தில் நிறைய நீர் பாசன திட்டங்கள் இன்னும் கோரிக்கை வடிவிலேயே இருக்கிறது சொந்த நிலம் இருந்தும், நீர் வளம் இல்லாததால் வேறு மாவட்டங்கள், வேறு மாநிலங்களில் வேலைக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள், இந்த மாவட்டத்தின் வேளாண் பெருங்குடி மக்கள். இதில் இது வரை கடுகளவாவது அக்கறை காட்டி இருக்குமா இந்தக் குடும்பம்?

தர்மபுரி தொகுதியில் தெருக்கள் தோறும் பிரச்சாரம் செய்கிறார்கள்  சௌமியா அன்புமணி ராமதாஸின் மகள்கள். இதுவரை பாமக நடத்திய பேரணியிலோ, ஆர்ப்பாட்டத்திலோ போராட்டத்திலோ இவர்களை யாரும் பார்த்ததில்லை. பதவியை அதிகாரத்தையும் பெற்றே தீர வேண்டும் என்கிற போது மட்டும் மூன்று மகள்களும் தெருவுக்குள் இறங்கி வருகிறார்கள்.

சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா! – ராமதாஸ் பேத்திகளின் பெயர்களே இவை!

தமிழே பயிற்று மொழி!

தமிழே வணிக மொழி!

தமிழே நீதிமன்ற மொழி..!

என்பதற்காக தமிழ் இயக்கம் கண்டவர் மருத்துவர் ஐயா ராமதாஸ்.

இந்த மாற்றம், ஏமாற்றமாக உள்ளதே!

தொடரும்….

கட்டுரையாளர்; பவா சமத்துவன்

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time