குற்றவாளிகளை காப்பாற்ற ஆட்சி செய்யும் ஸ்டாலின்?

-சாவித்திரி கண்ணன்

காளிகாம்மாள் கோவில் காம அர்ச்சகர் கார்த்திக்கை காப்பாற்ற முயன்றும், முடியாமல் கைது செய்துள்ளனர். தருமபுர ஆதினத்தின் பாலியல் ஜல்சா வீடியோக்களை கைப்பற்றி, காப்பாற்றியதும் ஸ்டாலினே! கோவில்களையும், கல்வி நிறுவனங்களையும் மட்டுமாவது பாலியல் படுபாதகத்தில் இருந்து காப்பாற்றுமா திமுக அரசு?

சட்டம், ஒழுங்கு அமல்படுத்தலில் தமிழகம் எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது என்பதற்கு சமீபகாலச் சம்பவங்களே உதாரணம்.

முக்கியமாக எந்தெந்த இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். கவலையில்லை என நம்புகிறோமோ, அங்கெல்லாம் தான் அதிகபட்ச ஆபத்தை நம் பெண்கள் சந்திக்க வேண்டியுள்ள சூழலில் இன்று தமிழகம் உள்ளது. கோவில்கள், கல்வி நிறுவனங்கள்.. போன்றவற்றில் தற்போது பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. இது போன்ற புனிதமான இடங்களைக் கூட நம்ப முடியாத அவல நிலையை உருவாக்கும் நபர்கள் சுலபத்தில் அம்பலப்படுவதில்லை. அம்பலப்பட்டாலும், தண்டிப்கப்படுவது எளிதில்லை என்பது தான் மிகவும் கவலையளிக்கிறது.

சென்னை பாரிமுனையில் உள்ள புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் முனுசாமி கார்த்திக் என்பவர் அக் கோயிலுக்கு வந்து வழிபட்ட பெண் ஒருவரை சீரழித்த விவகாரம் இன்றைய அரசால் கையாளப்படும் விதம், இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளது.

நகரின் நடு நாயகமாக விளங்கும் புகழ்பெற்ற கோவிலின் அர்ச்சகர் கோவிலுக்கு வந்த தொலைக்காட்சி தொகுப்பாயினி நந்தினியை மிகக் கொடூரமாக சீரழித்துள்ளார். நந்தினி காவல் துறைக்கு தந்த நான்கு பக்க புகார் கடிதத்தை வாசிக்கும் யாருக்குமே அதிர்ச்சியும், கோபமும் ஏற்படும். ஏற்கனவே, திருமணமாகிவிட்ட அர்ச்சகர், தாய், தந்தையை இழந்து நிற்கும் ஒரு பெண்ணின் ஆதரவற்ற நிலைமையை நன்கு புரிந்து கொண்டு, தானும் அந்தப் பெண்ணை சீரழித்ததோடு, கோவிலுக்கு வரும் வி.ஐ.பிக்களுக்கும் விருந்து வைக்க நிர்பந்தம் செய்ததை என்னென்பது?

ஒரு கோவிலுக்கு அர்ச்சகராக இருக்கும் ஒருவர் இது போன்ற காரியங்களை செய்யத் துணிந்ததற்கு பின்னணியில் வேறு சில பெண்களும், அக் கோவிலின் தலைமை அர்ச்சகரான காளிதாஸ் என்பவரும் இருந்துள்ளனர் என்பது இன்னும் பேரதிர்ச்சியாக உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் நந்தினி மே மாதம் ஐந்தாம் தேதி புகார் கொடுத்த வகையில், உடனடியாக குற்றவாளியை தூக்காமல் தாமதப்படுத்தியதும், குற்றவாளியை இருபது நாட்களுக்கும் மேலாக கொடைக்கானலில் பதுங்க அனுமதித்ததும் ஏன்? எனத் தெரியவில்லை. இதற்கிடையே கார்த்திக்கின் படுபாதக செயல்கள் அனைத்துக்கும் மெளன சாட்சியாக இருந்த தலைமை அர்ச்சகர் காளிதாஸை இது வரை எந்த விசாரணைக்கும் உட்படுத்தாததும், அவர் சர்வ சுதந்திரமாக தினமும் கோவிலுக்கு வந்து வழக்கம் போல அர்ச்சனை செய்வதும் பொது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளதால் கோவிலிலும் பெரிய அளவு கூட்டம் இல்லாமல் வெறிச் சோடிய நிலைமை ஏற்ப்பட்டுள்ளது.

”பாதிக்கப்பட்ட பெண் விசாரணையை சி.பி.சி.ஐடிக்கு மாற்ற வேண்டும்” என உயர் நீதிமன்றத்தை அணுகிய பிறகு தான், காவல்துறை விழித்துக் கொண்டு குற்றவாளியை 22 நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் வைத்து கைது செய்துள்ளனர்.

இதற்கு முன்பே இந்தக் கோவிலில் மார்வாடி சமூகத்து பெண் ஒருவரை மேற்படி பிராமண அர்ச்சகர் கூட்டம் பாலியல் தொல்லை தந்து பணம் பறித்துள்ளதாக அப் பகுதி மக்கள் கூறுகிறார்கள்!

காளிகாம்மாள் கோவில் என்பது ஒரு தனியார் கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலபுலங்கள், கடை மற்றும் வணிக நிறுவனங்களின் வாடகை என சில ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த கோவிலை நிர்வகிக்கிறார்கள்! இந்த சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை முழுமையாக கோவில் கணக்கில் கொண்டு சேர்க்க முடியாதபடிக்கு பல வில்லங்கங்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த பிராமண சமூகத்து அர்ச்சகர்கள் செய்யும் அட்டூழியங்களை அவர்களாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த பிராமண அர்ச்சகர்களுக்கு இந்து இயக்கங்கள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பலமாக உள்ளது. இதனால், இவர்கள் அசைக்க முடியாத சக்தியாக உள்ளனர்.

இதற்கிடையே இந்த கோவிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அத் துறையின் அமைச்சர் சேகர்பாபு மேற்கொள்வதாகத் தெரிய வருகிறது. இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது சரியான அணுகுமுறையாகத் தெரிகிறது. ஆனால், இது நியாயமான முறையில் நடக்கும் பட்சத்தில் ஆதரிக்கலாம். ஆனால், இந்த சொத்துக்களில் உள்ள வில்லங்களைப் பயன்படுத்தி ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் சொந்த ஆதாயம் அடையும் உள் நோக்கமும் இதில் புதைந்துள்ளதை மறுதலிக்க முடியவில்லை.

எல்லா வகையிலும் தெய்வத்தின் பெயரால், அனைத்து தரப்பும் ஆதாயக் கண்ணோட்டத்துடன் தான் ஒவ்வொரு நகர்வையும் செய்கிறார்கள்!

சில மாதங்களுக்கு முன்பு தருமபுர ஆதீனகர்த்தர் மாசிலாமணி ஆபாச வீடியோ, ஆடியோ விவகாரத்தில் சிக்கிக் கொண்டார்! உள்ளூர் பாஜகவினர் அவரை மிரட்டி பணம் பறிக்கத் துடித்த நிலையில், திமுக அரசு தலையிட்டு அவரது பாலியல் லீலைகளை மூடி மறைத்து, அவரை காப்பாற்றியது சர்ச்சையானது நினைவிருக்கலாம்.

தற்போதைய தருமபுர ஆதினத்தை பொறுத்த வரை அவருக்கு சொந்த ஊரில் எந்த மதிப்பும் இல்லை. அந்த அளவுக்கு அவர் பெயர் கெட்டுப் போயுள்ளது.

இந்த ஆதீனம் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு எட்டு லட்சம், பத்து லட்சம் லஞ்சம் கேட்குமளவுக்கு சீரழிந்துள்ளது. ‘அரசு புறம் போக்கு நிலம் 14,000 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபம் கட்டிய  வழக்கும் உள்ளது. மடத்தில் படிக்கும் ஒரு சிறுவனை வலியுறுத்தி ஒர் பாலின சேர்க்கைக்கு ஆதினம் நிர்பந்தித்த வகையில் ஏற்கனவே அம்பலப்பட்டவர் தான் இந்த ஆதீனம்!

ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் பெண்களை மடத்தின் சமையல் வேலையை செய்யும்படி நிர்பந்தித்து, அதில் அழகான பெண்களை தன் இச்சைக்கு நிர்பந்தித்து உள்ளார். ஆதினகர்த்தரின் உதவியாளராக இருந்த செந்தில் மடாதிபதியின் பாலியல் லீலைகளை வீடியோவாக எடுத்து  பாஜக பிரமுகர்களுக்கு தந்ததை வைத்தே ஆதினம் மிரட்டப்பட்டுள்ளார்.

இந்த வகையில் ஆதினத்தை மிரட்டிய புகாரில் தமிழக போலீசார் உடனே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வினோத்,விக்னேஷ், குடியரசு, ஸ்ரீனிவாஸ், பாஜக முக்கிய புள்ளியான அகோரம், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளினர்.

பலான ஆதினத்தை காப்பாற்ற பாஜகவை விஞ்சிய திமுக அரசு!

ஆக, தருமபுர ஆதினம் விவகாரத்தில் ஆதினத்தின் பாலியல் குற்றங்களை அடுத்து அவர் தண்டிக்கப்பட்டிருந்தால், காளிகாம்மாள் கோவில் அர்ச்சகர்களுக்கு அச்சம் உருவாகி இருக்கும். அவர் காப்பாற்றப்பட்டதால், அவரைக் காப்பாற்றிய அரசு நம்மையும் காப்பாற்றாதா என்ன? எனத் துணிந்து விட்டனர்.

இது போன்ற பாலியல் புகார்கள் பல கோவில்களில் வெளியே தெரியாமல் தொடர்ந்து கொண்டுள்ளது! கோவில்களுக்கு வரும் வி.வி.ஐ.பிக்களுக்கு முதல் மரியாதை செய்தும், அரசு அதிகாரிகள் ஆதரவுடனும் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் தப்பித்து வருகின்றனர்.

இதே லிங்கி செட்டி தெருவில் உள்ள தர்மராஜா கோவில் முத்துகுமார் குருக்கள்,

பவழக்காரத் தெரு காளாத்தீஸ்வரர் கோவில் சுரேஷ்குமார் குருக்கள்,

இதே மண்ணடி பவழக்காரத் தெரு கிருஷ்ணர் கோவில் ராஜா ரங்கராஜன் என்ற ராஜா பட்டர்

ஆகியோர் மீதும் பல பாலியல் புகார்கள் உள்ளன…! இவை எல்லாம் என்று வெடிக்கப் போகிறதோ.. தெரியவில்லை. அதற்குள்ளாக அரசு தரப்பில் விழித்துக் கொண்டு, ஒரு நல்ல ஆன்மீகச் சான்றோர் கமிட்டி  அமைத்து இது போன்ற புகார்கள் தருவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி, விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை களை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

அப்படி இல்லாவிடில், இதையெல்லாம் தெய்வம் பார்த்துக் கொண்டிருக்கிறதா? அப்படி வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பின் அது என்ன தெய்வம்? என்ற விரக்தி பக்தர்களுக்கு உருவாகி வலுப் பெற்றுவிடும்.

பல ஆயிரம் நாத்திகர்கள் பேசினால் கூட உருவாகாத கடவுள் மறுப்பை, இது போன்ற கேடு கெட்ட அர்ச்சகர்களும், போலி ஆன்மீகவாதிகளும் மக்களிடையே உருவாக்கி விடுகின்றனர்.

கள்ளக் குறிச்சி ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியை பாலியல் பலாத்காரம் செய்த பாவிகளை மிகப் பாதுகாப்பாக சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி வருகிறது திமுக அரசு என்ற கோபம் ஏற்கனவே தமிழக மக்கள் மனங்களில் கொந்தளித்துக் கொண்டுள்ளது. பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரையும் தண்டிக்க தைரியமில்லாமல், கோழைத்தனமாக பின்வாங்கி விட்டது இந்த அரசு. இதனால், மற்ற சில பள்ளிகளிலும் இந்த பாலியல் அநீதிகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன.

வேங்கை வயல் கிராமத்தில் தலித் மக்களின் குடி தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த அந்த மகா பாவியை இன்னும் கடும் பிரயத்தனத்துடன் காப்பாற்றி வருவதும், இதே திமுக அரசு தான்! இந்த ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என ஸ்டாலின் பெருமைப்பட்டுக் கொள்வது, திராவிட சித்தாந்தத்திற்கு அவர் செய்யும் பேரவமானம். குற்றவாளிகளைக் காப்பாற்றவென்றே அவதாரம் எடுத்து வந்து முதலமைச்சர் ஆகியுள்ளாரா ஸ்டாலின்..? என கேட்கத் துடிக்கிறார்கள் மக்கள்!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time