பங்குச் சந்தையில் பாஜக ஆடிய ‘சதுரங்க வேட்டை’

-இளஞ்செழியன்

”பாஜக மாபெரும் வெற்றி பெறும். அதையடுத்து பங்கு சந்தை தாறுமாறாக உயரவுள்ளது. ஆகவே, வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்” என மோடியும், அமித்ஷாவும் அறிவித்த இரண்டே நாளில் சுமார் 30 லட்சம் கோடிகளை பங்கு சந்தையில் மக்கள் இழந்ததன் பின்னணியில் நடந்தது என்ன? ஆதாயம் அடைந்தவர்கள் யார்..?

பங்கு சந்தை ஜூன் 3 ந்தேதி செயற்கையாக ஒரு ஏற்றம் கண்டது. தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4 அன்று மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது! இதனால் பல சிறு முதலீட்டாளர்கள் பணம் இழந்தது  குறித்து ராகுல்காந்தி தான் ஊடகங்களில் அம்பலப்படுத்தினார். மேலும், ”இது குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும்” என்றும் கூறியுள்ளார். அப்படி என்ன பங்கு சந்தையில் நடந்தது என்பதை பார்ப்போம்.

பொதுவாக பங்கு சந்தையானது தனிப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை கொண்டு ஏறும்-இறங்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் இந்த நிறுவனங்களை முறைப்படி மதிப்பீடு செய்து தான் தங்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள்.  இது தவிர்த்து அரசின் கொள்கை முடிவுகள், வரி விதிப்பு, சில நிறுவனங்களுக்கு கொடுக்கும் சலுகைகள் ஆகிய காரணங்களாலும் பங்கு சந்தை ஏறி-இறங்கும் இது இரண்டாவது முறையாகும்.

மூன்றாவதாக  வெளிநாடுகளில் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகள்,  நாடுகளுக்கு இடையிலான போர், அன்னிய செலவாணி ஏற்றத்தாழ்வு, ஏற்றுமதி-இறக்குமதி பிரச்சனைகள்..  போன்ற பல காரணங்களும் பங்கு சந்தையில் எதிரொலிக்கும்.

மேலே குறிப்பிட்ட மூன்று வழிமுறைகள் எப்போதும் வழமையாக நடைபெற கூடியவையே.  அனைத்து நாடுகளின் பங்கு சந்தையும் இந்த மூன்று வழிமுறைகளின் படியே இயங்கும்.

ஆனால், இவை தவிர, நான்காவது ஒரு முறை உண்டு. இது செயற்கையாக ஏற்றி-இறக்கச் செய்வது. இதை தனி நபர்கள் செய்வது உண்டு. அல்லது ஏதேனும் சிறு குழு செய்வது உண்டு. 1990 காலகட்டத்தில் ஹர்ஷத் மேத்தா இப்படி பங்குச் சந்தையை செயற்கையாக தனக்கு ஏற்றார் போல்ஆட்டிப் படைத்தார். 2008 ஆம் சத்தியம் நிறுவனத்தின் நிறுவனர் இராமலிங்க ராஜு சத்தியம் இது போல ‘கேம்’ ஆடினார்!

இன்னும் சிலர் வெளிப்படையாகவே இந்த நிறுவன பங்கு  சிறந்தது உடனே வாங்குங்கள் அடுத்த வாரம் ஏறிவிடும் என்று சொல்லி பலரை வாங்க வைத்து, அந்த பங்கு விலை ஏறச் செய்து, அப்படி  அந்த பங்கு ஏறியவுடன் முதல் ஆளாக தன்னிடம் உள்ள அந்த  பங்கை விற்பனை செய்து விடுவார். உடனே அந்த பங்கு இறங்கிவிடும். மற்றவர்கள் பணம் இழந்து விடுவார்கள். இது போல் செயற்கையாக பங்கு சந்தை ஏற்றி-இறக்குவது சட்டப்படி குற்றம்.  இதில் அதிகம் பாதிக்கப்படுவது சிறு முதலீட்டாளர்கள். இந்த வீழ்ச்சி சிறு முதலீட்டாளர்களை வாழ் நாள் முழுமையும்  பாதிப்படைய செய்யும். பங்கு சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான SEBI இப்படியானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தாலும், இன்னும் இது போல நடைபெறுவது தொடர்கிறது.

இப்போது ராகுல் காந்தி செய்தியாளரை சந்தித்து என்ன பேசினார் என்பதை பார்ப்போம்.

ராகுல் காந்தி பேசியதன் சாராம்சம் நான்காவதாக நாம்  குறிப்பிட்ட வழியில் பங்குச் சந்தையை செயற்கையாக ஜூன் 3 மற்றும் ஜூன் 4 இரண்டு நாளில் ஏற்றி இறக்கி உள்ளனர் என்பதே!

மே 19,2024 அன்று பிரதமர் நரேந்திரமோடி “பங்குச் சந்தை பெரும் வேகத்தில் உயர்கிறது. ஜூன் 4ஆம் தேதி பங்குச் சந்தை சாதனைகளை முறியடிக்கும்’’ என்று கூறினார். ‘’ஜூன் 4-ம் தேதி பங்குச் சந்தை உயரும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்யுங்கள்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இதேபோன்ற அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளியிட்டார்.

அதாவது, ”ஜூன் 4 ஆம் தேதிக்குள் வாங்கினால், பாஜக வெற்றி பெற்றதன் பிறகு  பங்குகள் உயர்ந்து விடும் அதனால், வாங்குங்க” என்பதே இதன் உட் பொருளாகும். இப்படி முதலீடு செய்து விடுபவர்கள் நிச்சயம் வேறு கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால், பாஜகவின் வெற்றிக்கு பின்னால் நமக்கு இவ்வளவு லாபம் பங்கு சந்தையில் கிடைக்க உள்ளது. எனவே, நாம் கண்டிப்பாக பாஜகவிற்கு வாக்களிப்போம் என லட்சக்கணக்கான சிறுமுதலீட்டாளர்களை தங்கள் கட்சியின் வாக்காளர்களாக ஆக்கும் உள் நோக்கம் இதில் இருக்கிறது என்பதே கவனத்திற்கு உரியதாகும்.

பங்கு சந்தை தொடர்பான எந்த ஆய்வுமின்றி, இது போன்ற உறுதியான நம்பிக்கைகளை சாதாரண முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்துவது என்பது, ‘லாப ஆசையை ஏற்படுத்தி, பல லட்சம் பங்கு சந்தை சிறு முதலீட்டாளர்களின் ஓட்டுகளை குறுக்குவழியில் அறுவடை செய்ய வேண்டும்’ என்ற உள் நோக்கமேயாகும்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலீடு செய்த நிறுவனங்களும், தொகையும்! ( தேர்தல் வேட்பாளர் பத்திரத்தில் குறிப்பிட்டவை)

ஜூன் 1 அன்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் ‘பாஜக  மிக அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும்…’என மிகைப்படுத்திக் கூறின. மேலும் சில கருத்து கணிப்புகள் 401 இடங்கள் வரை பாஜக வெற்றி பெறும் என்று போலியாக செயல்பட்டன. இதுவும் மக்களை தவறாக திசை திருப்பும் நோக்கம் கொண்டதே ஆகும்.

அமித்ஷா, மோடி, சொன்னவை, கோடி மீடியாக்களின் கருத்து கணிப்புகள் ஆகியவற்றைக் கொண்டு ஜூன் 3 அன்று பங்குசந்தை NSE 733 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது.  இதற்கு மிக முக்கிய காரணம் ஜுன்-1 ல் வெளிவந்த கருத்து கணிப்புகள். ஜுன்-3  அன்று பங்குச் சந்தை உயர்கிறதே என்று இன்னும் பல லட்சம் சிறு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்கு சந்தையில் கொட்டோ கொட்டெனக் கொட்டினார்கள்.

மறு நாள் ஜூன் 4 ந்தேதி தேர்தல் முடிவு வெளிவர தொடங்கியது. ஆளும் பாஜக அறுதி பெரும்பான்மையாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று தெரிய வருகிறது. இதனால் பங்கு சந்தை மிகப் பெரிய சரிவை சந்திக்க தொடங்கியது. கிட்டத்தட்ட NSE 1379  புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. இதனால் பல லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மிக அதிகம் பாதிப்புக்கு உள்ளானது சிறு முதலீட்டாளர்களான சாதாரண பொதுமக்களே ஆகும்.

ராகுல் காந்தியின்  கேள்வி –

# பிரதமர், உள்துறை மந்திரி இரண்டு பேரும் பங்குகள் வாங்குங்க உயர்ந்துவிடும் என்ற ஆலோசனையை  5 கோடி பங்கு சந்தை  முதலீட்டு குடும்பங்களுக்கு ஏன் சொன்னார்கள்?  இது அவர்களுடைய வேலையா?

# இரண்டு நபர்களும் கொடுத்த பேட்டி ஒரே மீடியாவுக்கு! அதுவும் ஏற்கனவே அந்த மீடியா செயற்கையாக பங்கு சந்தை உயர்த்திய விஷயத்தில் SEBI  கண்காணிப்பில், விசாரணையில்  உள்ள மீடியாவாகும்.

# கருத்து கணிப்புகள் வெளியிட்ட மீடியாகளுக்கும், பாஜகவுக்கும் உள்ள தொடர்புகள் என்ன?

இவை குறித்து மிக விரிவான நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும். பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோர்  பங்குகள் வாங்குகள் என்று சொன்னது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இது மிகப் பெரிய மோசடி ஆகும்.

இதை மோடியும், அமித்ஷாவும் நேரடியாக பங்கு சந்தை முதலீட்டாளர்களை நோக்கி  சொன்ன ஆலோசனையாகவே இதை பார்க்கிறேன். அதே போல் போலியான கருத்து கணிப்புகளும் பங்குகள் உயர்வதற்கு காரணமாக இருந்து உள்ளன. பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோர் பங்குகளை வாங்குங்கள் என்று  பேசுவதை முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன். இது அவர்களுடைய வேலை இல்லை. இவை தான் ராகுல் காந்தி முன் வைத்த செய்தியாகும்.

 

இதில் யாருக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்.

பங்கு சந்தையில் மிக முக்கியமான பிரிவினர் சிறு முதலீட்டாளர்களே! அதாவது, பெரும் எண்ணிக்கையிலான சாதாரண மக்கள். சில ஆயிரங்கள், ஒரு சில லட்சங்கள் கொண்டு பங்கு சந்தையில் இயங்குபவர்கள்.

ராகுல் காந்தி பேசி இருப்பதுசிறு முதலீட்டாளர்களான வெகுஜன மக்கள் நலன் குறித்தே ஆகும். மீடியாவில் கிடைக்கும் தகவல்களை கொண்டே அவர்கள் பங்குகள் வாங்குகிறார்கள். பிரபலமானவர்கள் சொன்னால், உடனே சிறு முதலீட்டாளர்கள் அந்த பங்கை வாங்கி விடுவார்கள். அதே போல் வாங்கிய பங்கின் விலை இறங்கிவிட்டால், பாதிப்பு அடைவதும் சிறு முதலீட்டாளர்களே!

அதனால் தான்,” பங்குகள் வாங்குங்கள் என்று SEBI யில்  பதிவு செய்யாத யாரும் சொல்லாதீர்கள் அது மிகப் பெரிய பாதிப்பை சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும்” என்று SEBI அறிவுறுத்துகிறது.

அதனால் தான் பிரதமர், உள்துறை மந்திரி போன்ற மிக உயர்ந்த பதவிகளில் இருப்போர் ‘’பங்குகள் உயரக் கூடும் வாங்குங்க’’ என்று சொன்ன உடன், இந்த சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். இதில் பலர் சில ஆயிரம், சில லட்சம் எனக் கடன் வாங்கியும் கூட பங்குகளை வாங்கி இருப்பார்கள் என்பதே யதார்த்தம். காரணம், சில நாட்களில் வாங்கிய பங்குகள் ஏறிவிடும் உடனே விற்று லாபம் எடுத்து கொண்டு கடன் தொகையை கொடுத்து விடலாம் என்ற கணக்கு தான்!

ஆனால், நடந்தது வேறாகும்! சொன்னபடி பங்கு சந்தை ஏறவில்லை என்பது மட்டுமல்ல, பெரிய அளவில் இறங்கி விட்டது. இதனால் பல லட்சம் கோடிகளை இழந்து உள்ளனர், சிறு முதலீட்டாளர்கள். நிச்சயம், இது அவர்களுக்கு மீண்டும் எழுவதற்கு பெரும் சிரமத்தை தரும்.  வெளி உலகத்திற்கு இவர்கள் குரல் கேட்காது. வாங்கிய கடனின் வட்டி ஏறும், அடுத்து இவர்கள் கவனம் கடன் கட்டுவதில் சென்றுவிடும். மீண்டும் இவர்கள் சகஜ நிலைக்கு திரும்ப சில காலம் பிடிக்கும். சில பேர் மீள முடியாத நிலைக்கும் சென்று இருக்கலாம்.

ஏறக்குறைய 30 லட்சம் கோடிகள் இழப்பை யார் சரி செய்வது? சிறு முதலீட்டாளர்கள் நலனை, இழப்பை யார் சரி கட்டுவது?  SEBI இதில் என்ன நடவடிக்கை எடுக்கும்? இந்த இழப்பிற்கு பின்னணியில் லாபம் பார்த்த நிறுவனங்களும், அதன் உரிமையாளர்களும் யார்? யார்? என யாவும் அம்பலப்பட்டால் தான் இன்னும் உண்மைகள் வெளி வரும். உயர்ந்த பதவிகளில் உள்ள இந்த ”உத்தமர்களை” தண்டிக்கத் தான் முடியுமா..?

கட்டுரையாளர்; இளஞ்செழியன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time