கட்டணக் கொள்ளையில் அரசு உதவிபெறும் கல்லூரிகள்!

-பேராசிரியர் கி கதிரவன்

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக அமல்படுத்தப்படும் ஒற்றைச் சாளர முறையை ஏன் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடைமுறைப்படுத்த முடியவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணங்களைக் கட்டிலும் பல மடங்கு கட்டணங்களை வசூலிக்கும் கலை அறிவியல் கல்லூரிகள் கண்டு கொள்ளப்படாதது ஏன்..?

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மொத்தமுள்ள  333 கல்லூரிகளில் 171 அரசு கல்லூரிகளும் 162 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

இளங்கலை பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது அரசு கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெறுவதில்லை, இதன் காரணமாக பெரும்பாலான எளிய கிராமப்புற மாணவர்களுக்கு அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை.

கல்வித்துறை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே  வெளியிட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகுதான் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பள்ளி கல்வித் துறையிடமிருந்து பெற்று  கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தோதாக உயர் கல்வித்துறை 15 நாட்கள் அவகாசம் கொடுக்கின்றது. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு  ஒரு மாதங்கள் முன்பாகவே மாணவர் சேர்க்கையை ஆரம்பித்து விடுகின்றன.

இதன் காரணமாக பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு தான் தங்களால் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இயலும் என்ற சூழலில் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இயலாமல் போய்விடுகிறது.

இவர்கள் பொதுத்தேர்வு மதிப்பெண் வந்த பிறகு அரசு உதவி பெறும் கல்லூரிகளை அணுகும் பொழுது அங்கு  விண்ணப்பிப்பதற்கான கால வரம்பு முடிவடைந்து விடுகின்றது. இதனால் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மறுக்கப்படுகின்றன.

கடந்த வருடம் பல்வேறு ஆசிரியர் இயக்கங்கள் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்களிடம் முறையிட்டதன் பிறகு கல்லூரி கல்வி இணை இயக்குநர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை முதல்வர்களை அழைத்துப் பேசி இரு தரப்பிலும் ஒரே நேரத்தில் மாணவர் சேர்க்கையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டார். ஆயினும் பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டதாக தெரிகின்றது.

தற்பொழுது அரசு கல்லூரிகளுக்கு இணைய வழி மூலமாக மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு கல்லூரியும் நேர்காணல் வைத்து மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விண்ணப்பங்களை வழங்கி அதன் மூலமாக மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் கல்லூரிகளை ஒருங்கிணைத்து ஒற்றைச் சாளர முறையில் இன்று வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆனால், அதே உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநரகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை ஏன் நடத்துவதில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசுக் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிட கல்லூரி முதல்வர்கள் மிக முக்கிய பங்கு வைக்கின்றனர். அதாவது ஒவ்வொரு கல்லூரியும் இரண்டு மூன்று கட்டங்களாக மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன, முதல் பட்டியல் வெளியிட்ட பின் அதில் இடம் கிடைக்காத  அல்லது காலியான இடங்களை வைத்து இரண்டாவது பட்டியல் பின்பு மூன்றாவது பட்டியல் என பட்டியல் வெளியிட்ட பின்னர் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

கலைக் கல்லூரிகள் தங்களுடைய வகுப்புகளை ஆரம்பித்த பிறகு ஒரு மாதம் கழித்து  பொறியியல் கல்லூரிக்கான ஒற்றைச் சாளர முறை நடைபெறுகிறது. அப்பொழுது கலைக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு மாறுதல் வாங்கி செல்கின்றனர். அப்பொழுது காலியாகின்ற இடங்களை அந்தந்த அரசு கல்லூரி முதல்வர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதன் மூலம் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. முறைகேடுகளைக் களைவதற்கு ஒற்றைச் சாளர முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய  கல்லூரி கல்வி இயக்குநரகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

பொறியியல் கல்லூரியில் பொறியியல் பாடப்பிரிவுகளில் ஒற்றைச் சாரள முறையில் கிட்டத்தட்ட ஐந்து கட்டங்களாக மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றன. இதன் காரணமாக எவ்வித முறைகேடும் நடைபெறாமல் மதிப்பெண் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது.

கலை அறிவியல் கல்லூரிகளில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.  ஏனென்றால், ஒவ்வொரு அரசு உதவி பெறும் கல்லூரியும் தங்களின் நட்சத்திர அந்தஸ்திற்கு ஏற்றவாறு தங்களுடைய கல்வி கட்டணத்தை அரசின் விதிமுறைகளை மீறி இஷ்டத்திற்கு பெற்று வருகின்றனர். பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது ஒவ்வொரு கல்லூரிக்குமான கல்வி கட்டணம் தெளிவாக கலந்தாய்வு இணையதளத்தில் பதிவிட வேண்டியது வரும் என்பதால், இதை தவிர்க்கின்றன.

அந்தந்த கல்லூரிக்கான கல்வி கட்டணத்தைப் பொறியியல் கலந்தாய்வின் போது இணையதளம் மூலமாகவே செலுத்திப் பின்பு நேரடியாக அந்த கல்லூரிக்கு சென்று இணைகின்றனர். இந்த நடைமுறைகளின் படி அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தினால்  அதிகப்படியான கல்வி கட்டணத்தை மாணவர்களிடமிருந்து பெற முடியாது என்பதால்  ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாத காரணத்தினால் பெரும்பாலான மாணவர்களுக்கு தங்களின் மதிப்பெணகளுக்கு ஏற்றவாறு கல்லூரிகளை தேர்வு செய்ய இயலவில்லை.  கிராமபுற மட்டும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கலை அறிவியல் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது ஒரே நேரத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு நேர்காணல் அழைப்பு வருகின்றது. இதனால் தங்களால் சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்க இயலவில்லை.

ஒரே நேரத்தில் இரு கல்லூரிகளில் இருந்தும் அழைப்பு வரும் போது இவர்களால் பங்கேற்க இயலாததால் வேறு வழி இல்லாமல் அதிகப்படியான கல்வி கட்டணத்தை கொடுத்து தனியார் கல்லூரியில் சேருகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.

இது போன்ற குளறுபடிகளுக்கும், தகுதியான மாணவர்களுக்கு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போவதற்கும் அரசின் கொள்கை முடிவுகளே காரணம் எனலாம்.

பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகள் தற்பொழுது வரை  அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கிட்டத்தட்ட ஐந்து முதல் பத்து மடங்கு கல்வி கட்டணத்தை அதாவது 10,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை  வசூலித்து வருகின்றன.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பல்வேறு சமூக நல இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

அதேபோன்று தனியார் கல்லூரிகளும் தங்களின் நட்சத்திர அந்தஸ்து அல்லது சந்தை மதிப்புக்கு ஏற்ப கல்வி கட்டணத்தை நிர்ணயித்து மாணவர்களிடமிருந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். அரசு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தினால்தாங்கள் கொள்ளை அடிக்கும் லாபத்தில் நஷ்டம் ஏற்படுவதாக எண்ணி இந்த ஒற்றை சாளர முறையைத் தடுத்து வருகின்றன.

கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தேர்ச்சியடைந்த மாணவர்கள் கிட்டத்தட்ட 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள். அரசு கல்லூரிகளில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இடங்கள்தான் இளங்கலை பட்ட படிப்பிற்கு உண்டு. மீதமுள்ள ஐந்து லட்சம் மாணவ மாணவியர்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகளையும், தனியார் கல்லூரிகளையும் நோக்கி சென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் போது நியாயமான கட்டணமும், நேர்மையான மாணவர் சேர்க்கையும் நடைபெற வேண்டும் என்பதே நம் வேண்டுகோளாகும்.

-பேராசிரியர் கி கதிரவன்

ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு (TANFUFA)

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time