சமீபத்தில் தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கொண்டு கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை பெரும் விளம்பரத்துடன் திறந்து வைத்தது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் திட்டத்தில் ஏறக்குறைய ரூ. 500 கோடி அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் சென்னை மாநகரின் அய்ந்தாவது கூடுதல் நீர்த்தேக்கமல்ல – கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு செல்லும் வழியில் இடைப்பட்ட நீர்த்தேக்கமாக திருப்பி விடும் வேலையை மட்டுமே செய்கிறது. இதில் தமிழ்நாடு அரசு பெருமைப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை.
தெளிவான பொறியியல் நோக்கமின்றி குருட்டாம் போக்கில் மக்களின் வரிப்பணத்தைப் பயனற்ற திட்டங்களில் செலவிடுவதை தவிர்த்திருக்கலாம்.
இந்த நீர்த்தேக்கத்திற்காக ஏறக்குறைய ரூ.500 கோடி தண்டச் செலவு செய்த அய்.ஏ.எஸ் அதிகாரிகளையும், பொறியாளர்களையும் எந்த வகையில் திருத்துவது?
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு முறையாக செய்யப்பட வேண்டிய ஆய்வுகளோ, ஆலோசனைகளோ மேற்கொள்ளப்படவில்லை!
# அரசு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக அத்துறை சார்ந்த இணைய தளங்களில் குறைந்தது 3 மாதங்களுக்குத் தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும்
# அரசே திறமையும் துறையறிவும் உடைய வல்லுநர்களிடம் இருந்து (குறைந்தது 3 பேர்) அத்திட்டங்கட்கு கருத்துரைகள் பெறப்பட்டு, அவை அரசால் ஆராயப்படவேண்டும்
# இதைத்தவிர நாட்டு நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட துறை சார்ந்த வல்லுநர்களிடம் (அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றோர் உட்பட) இருந்து பெறப்படும் கருத்துரைகளையும் முழுமையாகக் கருதியே அரசு திட்டங்கள் இறுதி செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் தண்டச் செலவுகள் தடுக்கப்படும். ஊதிப்பெரிதாக்குதலும் நடக்காது.
# அரசுத் திட்டங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களும் திட்டம் ஆரம்பிக்கும் முன்பே இணைய தளத்தில் வெளியிட்டுத் தகுதியும் சமுதாய அக்கறையுமுடைய – பொறியாளர் வல்லுநர்களிடமிருந்து கருத்துரைகள் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை.
சென்னை மாநகரக் குடிநீர்த் தேவை எவ்வளவு?
- சென்னை மாநகரத்தின்; குடிநீர்த் தேவை பற்றிய சில புள்ளி விவரங்கள்
- குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்கள்
பூண்டி நீர்த்தேக்கம் – 3.231 டிஎம்சி
சோழவரம் நீர்த்தேக்கம் – 1.081 டிஎம்சி
செங்குன்றம் (புழல்) நீர்த்தேக்கம் – 3.300 டிஎம்சி
செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் – 3.645 டிஎம்சி
மொத்தக் கொள்ளளவு – 11.257 டிஎம்சி
2020 ல் சென்னையின் குடிநீர் தேவை – 15.66 டிஎம்சி
பற்றாக்குறை கொள்ளளவு – 4.743 டிஎம்சி
திட்ட விவரங்கள் தெரிவிப்பவை எவை:
இதனுடைய அடிப்படையில் 2000-2010 ஆண்டுகளில் சென்னைக் குடிநீர் மற்றும் நகராட்சித் துறையிலிருந்த சில அய்.ஏ.எஸ் அதிகாரிகள் சென்னையின் குடிநீர்த் தேவைக் கொள்ளளவினை 16 டிஎம்சிக்கு உயர்த்த வேண்டும். அதற்காகச் சென்னை மாநகரைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கூடுதலாக புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கிக் கட்டமைக்க வேண்டும் என்று எல்லா ஆய்வுக் கூட்டங்களிலும், கூட்டுக் கலந்துரையாடல்களிலும் தன்னிச்சையாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதனடிப்படையில்தான் திருவள்ளுர் மாவட்ட கண்ணன்கோட்டை தேர்வாய்க் கண்டிகை என்ற இரண்டு ஏரிகளை ஒன்றாக இணைத்து ஒரு புதிய கூடுதல் நீர் தேக்கத்தை – 0.50டிஎம்சி 10 0.50டிஎம்சி (இருமுறை நிரப்புதல் அடிப்படையில்) எனும் கொள்ளளவில் நிரப்புவது எனத் திட்டம் தீட்டி 2013ஆம் ஆண்டில் ரூ. 330 கோடி திட்ட மதிப்பீட்டில் வேலைகளைத் தொடங்கினர்.
இத்திட்டத்தின்படி – தமிழ்நாட்டு எல்லையில் பூண்டி கால்வாயின் ‘0’ புள்ளியிலிருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்குக் குடிநீர் வழங்கும் கண்டலேறு பூண்டி கால்வாயில் (கே.பி. கால்வாய்) ஒரு கிளைக் கால்வாயை – (வினாடிக்கு 1000 கன அடி எடுத்துச் செல்லத்தக்க கொள்ளளவு கொண்ட திறந்தவெளி மண்கால்வாயை) – 7.90 கி.மீ தொலைவுக்கு வெட்டி கண்ணன்கோட்டை – தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கத்தை ஆண்டிற்கு இருமுறை நிரப்புதல் அடிப்படையில் நிரப்புவது.
இதற்காக 1495 ஏக்கர் தனியார் நிலத்தைத் ரூ.160 கோடி தொகை கொடுத்து கையகப்படுத்த வேண்டி இருந்தது. இத்தகைய தனியார் நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் – நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலம் கையகப்படுத்துவதற்காக ரூ.160 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கால நீட்டிப்பினால் இத்திட்டச் செலவு ரூ.330 கோடியிலிருந்து ரூ.380 கோடியாக அதிகரித்துள்ளது. இதையே முன் வார்த்த உறுதிபெறு காங்கிரீட் குழாய்கள் மூலமாக சாலையோரங்களில் எடுத்துச் சென்றிருந்தால் ரூ.175.87 கோடி செலவில் இரண்டு ஆண்டுகளில் தனியார் நிலம் கையகப்படுத்தலின்றி விரைவாக நிறைவேற்றி இருக்கலாம். மேலும் குடிநீரைத் திறந்த கால்வாயின் வழியாக எடுத்துச் சொல்லும்போது நீர் ஆவியாதல், மண் உறிஞ்சுதல் இவற்றால் இழப்பு ஏற்படுவதோடு குடிநீர் மாசடையவும் செய்கிறது. மேலும் இதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டியும் நேர்கிறது.
இத்திட்டத்தின் இன்னுமொரு பகுதியாக 1035.16மீ உயரமுள்ள கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் தேக்கிய தண்ணீரை 17.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளூர்ச் சாலைகளின் ஓரமாக 900 மிமீ விட்டமுடைய குழாய்களின் மூலமாக 3850 மீ இடத்தில் 1043.10மீ உயரமுடைய கே.பி கால்வாயில் இறைவைகளினால் நீரேற்றி மீண்டும் கொண்டுவந்து விடுவது. அதன் பின்னர் இந்தத் தண்ணீர் கே.பி கால்வாயில் மீதமுள்ள 21.425 கி.மீ தூரம் ஓடி பூண்டி நீர்த்தேக்கத்தில் சேர்ப்பது. இதற்காகச் சென்னைக் குடிநீர் ரூ.102.50 கோடியைச் செலவழித்துள்ளது. இந்தச் செலவையும் சேர்த்து இந்தத் திட்டத்தின் மொத்தத் திட்ட செலவு ரூ.482.50 கோடியாக உயர்ந்துள்ளது. இதைப் பற்றி செய்தி ஊடகங்கள் செய்தி ஏதும் தரவில்லை. ஏனென்று தெரியவில்லை.
குறிப்பான குறைபாடுகள்:
எதற்காக கே.பி கால்வாயிலிருந்து L.S+2200 இடத்திலிருந்து 7.90 கிமீ தூரத்திற்குத் திறந்தவெளி கால்வாய் வெட்டி – கே.பி கால்வாய்த் தண்ணீரைத் திருப்பி கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு எடுத்துச் சென்றபின் மீண்டும் நீரேற்றும் குழாய்கள் வழியாக (சாலை ஓரங்களின் வழியே) 17.50 கிலோமீட்டர் தூரமுள்ள கே.பி கால்வாயிலேயே LS+3850 மீட்டரில் விடவேண்டிய அவசியமென்ன? இப்பொழுது உள்ள கே.பி கால்வாய் 0 புள்ளியிலிருந்து 25.275 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் – இந்த கிருஷ்ணா நதி தண்ணீரை எடுத்துச் செல்லத்தக்க வகையிலிருக்கும்போது எதற்காக இப்படி ஒரு கிளைக் கால்வாய் நீர்த்தேக்கம் – மறுபடியும் கே.பி கால்வாயிலேயே செய்து எதற்காக விடப்படுகிறது? இதனால் கண்ணன்கோட்டை – தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கம் கூடுதல் நீர்த்தேக்கமாக இல்லாமல் இடையிட்ட நீர்த்தேக்கமாகவே அமைந்திருக்கிறது.
இது கூடுதல் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கமாகவும் செயல்படவில்லை. அதற்குப் பதிலாக பூண்டி நீர்த்தேக்கத்திலே தண்ணீரை ஆண்டுக்கு இருமுறை நிரப்பினால் எந்தச் செலவுமின்றி 3.23 டிஎம்சி தண்ணீரைக் கூடுதலாகச் சேமித்து வைக்க முடியும்.
ஆண்டுதோறும் ஆந்திர அரசு கே.பி கால்வாய் மூலமாக நமக்கு ஒப்பந்தப்படி 12 டிஎம்சி தண்ணீரை ஆறு மாதங்களுக்கு மேலாக தர வேண்டும். இந்த முழுத் தண்ணீரையும் பூண்டியில் ஆண்டுதோறும் சேமித்து சோழவரம் செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களின் மூலமாக (இருமுறை நிரப்பல் மூலமாக) எவ்விதக் கூடுதல் செலவும் இன்றி (ரூ.482.50 கோடி தண்டச் செலவின்றி வேறென்ன?) நம்முடைய 4 நீர்த்தேக்கங்களில் 22.50டிஎம்சி (இருமுறை நிரப்பினால்) நமக்கு கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கும் வசதி இப்பொழுதே இருக்கிறது.
எனவே புதியதாகக் கட்டமைக்கப்பட்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தால் சென்னைக் குடிநீருக்கு எந்தப் புதிய கூடுதல் பயனுமில்லை.
மேலும் உண்மையில் கூடுதல் கொள்ளளவு வேண்டி (நீரை தேக்கி வைக்கும் வசதி) சேர்த்து வைத்திட, பூண்டி நீர்த்தேக்கத்தைச் சராசரியாக ஒரு மீட்டர் ஆழப்படுத்தினாலே 1.15 டிஎம்சி தண்ணீரைக் கூடுதலாகச் சேர்த்து வைக்கலாம்.
அதுவும் ஆறே மாதங்களில் ரூ.163.15 கோடியில் இதை எளிதாகச் செய்திருக்க முடியும். தற்போது ஏழு ஆண்டுகளை வீண்டித்துள்ளனர். இந்தச் சமயத்தில் கே.பி கால்வாய் (0 புள்ளி முதல் பூண்டி நீர்த்தேக்கம் வரை 25.275 கி.மீ தூரம்) பலவாண்டுகளாகச் சரியாகப் பராமரிக்கப்படாமல் பலவிடங்களில் சேதமடைந்துள்ளது. இந்த 25.275 கி.மீ தூரத்தை முழுவதும் செய்தால் (ரூ.35.70கோடி செலவில்) கிருஷ்ணா நீர் முழுமையும் விரைவாக பூண்டி நீர்த்தேக்கத்தில் சேர்க்க முடியும். பூண்டி கால்வாய் பழுது செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
பூண்டி கால்வாயை நீர்வளஆதார அமைப்பு பொதுப்பணித்துறை மேம்படுத்திட இரண்டுகட்ட திட்டங்களைத் தயாரித்து நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்துள்ளனர்
முதல் கட்டம் 2015 – பூண்டி கால்வாய் 13 கிமீ முதல் 25.275 கிமீ வரை – ரூ.19.88கோடி
இரண்டாம் கட்டம் டிசம்பர் 2020 – 3900 மீ முதல் 8500 மீ வரை (4250மீ தூரம்) – ரூ.24.00 கோடி!
இதற்கு மாற்றாக 25.275 கி.மீ முழு தூரத்தையும் செய்தாலே ரூ.35.70 கோடி மட்டுமே செலவாகும் போது எதற்காகப் பகுதி பகுதியாக கூடுதலாகச் செலவு செய்து பழுது நீக்கல் வேலை செய்ய வேண்டும்.? இதுவும் தவறான அணுகுமுறை.
சென்னை குடிநீருக்கு கூடுதல் நீர் தேக்கங்கள் தேவையில்லை .
மேற்கூறிய தகவல்களிலிருந்து கண்ணன்கோட்டை தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கத் திட்டம் எவ்வித மறுஆய்வும் தணிக்கையுமின்றி, பாசன வல்லுனர்களின் கருத்துரை ஏதும் கேட்கப்படாமல் சென்னை குடிநீர் வாரிய பொறுப்பில் உள்ள அய்.ஏ.எஸ் அதிகாரிகள் சொன்னபடி குருட்டாம்போக்கில், ரூ.482.50 கோடி மக்கள் வரிப்பணம் தண்டச்செலவாக செய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது.
இதே நீர்மேலாளர்கள் 2030ஆம் ஆண்டுகளில் தேவைப்படும் குடிநீர்த் தேவை 20 டிஎம்சியாக இருக்கும். இப்போது இருக்கும் நான்கு நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 11.257 டிஎம்சி மட்டுமே. எனவே மீதி 8.75 டிஎம்சி கொள்ளளவுடைய புதிய நீர்த்தேக்கங்கள் விரைந்து உருவாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கொள்கை முடிவு தீர்மானம் மிகச் சரியானதன்று தேவையற்றது.
தற்போது சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் அளவு ஆண்டுக்கு 2.10 டிஎம்சி சென்னைப் புறநகரில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து பெறும் நீர் 0.50 டிஎம்சி
வீராணம் ஏரி – நெய்வேலியில் இருந்து பெறும் நீர் – 1 டி.எம்.சி
மேலும் இன்னொரு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்2.10 டிஎம்சி கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இவை போக சென்னை குடிநீருக்கு ஓராண்டுக்கு தேவைப்படுவது 9.96 டிஎம்சி மட்டுமே. இதை இன்றுள்ள நான்கு நீர்த்தேக்கங்களிலேயே (11.257டிஎம்சி) தேக்கி வைக்கமுடியும்.
இந்தக் கூடுதல் நீரை பூண்டி சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் வருடத்திற்கு இருமுறை நிரப்புதல் நவம்பர் 2020 இறுதியிலும் கூட இவற்றில் நீர் இருப்பு மொத்தம் 9.00 டிஎம்சி மட்டுமே. (இவை ஆண்டு முழுவதும் 5 டி.எம்.சி அளவு கூட பெரும்பாலும் நிரம்புவதில்லை) என்ற அணுகுமுறையைக் கடைபிடித்தால் …. ஆண்டுக்கு கூடுதலாக 11.257 டிஎம்சி நீரைத் தேக்கி வைத்து பயன்படுத்த முடியும். எனவே 2030 ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகரகத்திற்கு தேவைப்படும் (மதிப்பிடும் அளவு) 20.00டிஎம்சி தண்ணீரை மேலே குறிப்பிட்ட நான்கு ஏரிகளிலேயே சேமிக்க முடியும். எனவே கூடுதலாகப் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கவேண்டிய தேவை ஏற்படாது. மக்கள் வரி பணத்தை வீணடிக்கவும் தேவையில்லை என்பது தெளிவாகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் (2015 தவிர) இந்த நான்கு நீர்த்தேக்கங்களில் ஒரே சமயத்தில் முழுக் கொள்ளளவுக்கும் நீர் நிறைந்திருந்தது என்பதற்குரிய புள்ளிவிவரங்கள் ஏதுமில்லை. 2015 டிசம்பர்- ஜனவரியில் மற்றும் 2020 நவம்பர் இவற்றின் நீர் இருப்பு 80 % தான் 9.00 டிஎம்சி மட்டுமே. (செய்தி தாள்கள் பார்க்க)
அரசு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே
முன் தணிக்கை செய்யப்பட வேண்டும்
தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் பல நீர்வளத் திட்டங்கள் உலக வங்கி ஆசிய வளர்ச்சி வங்கி பன்னாட்டு நிதி நிறுவனம் இவற்றில் ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்டுக் கூடுதல் நிதி மதிப்பீடு செய்யப்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் நிதிக்கொள்ளை நிறையவே நடப்பதாக நேர்மையும், திறமையும் உடைய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். பொதுப்பணித் துறை ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களில் இந்த ஊதிப் பெரிதாக்குதல் வேலை நடந்து வருகிறது. இதில் பொது மக்களின் வரிப்பணம் வீண் அடிக்கப்படுவதோடு திட்டங்களின் முழுப் பயன்களும் திட்டமிட்டபடி சமுதாயத்திற்குக் கிடைப்பது இல்லை. அரசு வகுக்கும் பல திட்டங்களிலும் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன. செயல்படுத்திய பின்பு எதிர்பார்க்கும் பயன்களும் கிடைக்கவில்லை என்பதை ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Also read
இதைப் போலவே நடந்து நிறைவுபெற்ற வளர்ச்சித் திட்டங்கள் – துறை சார்ந்த வல்லுநர்கள் குழுவால் முழுமையாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும். இத்தகைய முன்னேற்ற அறிவியல் நடவடிக்கைகளால் திட்ட மதிப்பீட்டு தொகை குறையும். செயற்திட்டக் குறைபாடுகள் அகற்றப்படவும் வாய்ப்புகள் ஏற்படும். மக்கள் நல அரசு இவற்றைக் கவனமுடன் கருதிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் .
எனவே இக் கட்டுரையில் தெரிவித்தவாறு தமிழக அரசின் தலையாய பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அரசுச் செயலாளர் முதல் இணைச் செயலாளர், துணைச் செயலாளர் போன்ற பதவிகளிலும் முதலமைச்சர் நிதியமைச்சரின் நேரடி செயலாளர் பதவியும் அந்தந்த துறைகளில் திறமையும் அனுபவமுடைய தொழில்நுட்ப மேலாண்மையாளர்களை நியமித்து இத்தகைய தவறுகளையும் தண்டச் செலவுகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இனிவரும் காலங்களிலாவது இத்தகைய தவறுகள் நடக்காமல் அரசு விழிப்புடன் செயற்படும் என்று நம்புவோமாக!
-பொறிஞர்,முனைவர்.அ.வீரப்பன் நீர் மேலாண்மை அறிஞர், முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் தமிழ் நாடு அரசு பொதுப் பணித்துறை. ‘கைக்குளே கட்டுமான தொழில்’ உள்ளிட்ட 12 நூல்களின் ஆசிரியர். மழை நீர் சஏமிப்பு தொழில் நுட்பம் உள்ளிட்ட 35 கையேடுகளை கொண்டு வந்துள்ளார்.
தமிழ் நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளார். முல்லை பெரியாறு, காவிரி பாதுகாப்பு, ஏரி,குளங்களை பாதுகாத்தல்,மீத்தேன் எதிர்ப்பு…என பலவற்றில் தெளிவான விளக்கம் தரும் வகையில் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்.
அலுவலக தொடர்பு எண்; 7200079289
İseme derleme araması için 320⭐ porno filmi
listeniyor.✓ En iyi iseme derleme sikiş videoları trxtube ile,
kaliteli sikiş videoları.
Way cool! Some very valid points! I appreciate you penning this article and also the
rest of the site is very good.