பெரியாரோடு மோதிய பெருந்தமிழ் போராளி கி.ஆ.பெ.விசுவநாதம்!

வெற்றிச் செல்வி

தமிழும், தமிழரும் ஏற்றம் பெறவே தன் வாழ்வை முற்றமுழுக்க அர்ப்பணித்து வாழ்ந்தவர் பெருந்தமிழ் போராளி, ’தமிழ் தாத்தா’ என்றழைக்கப்பட்ட கி.ஆ.பெ விசுவநாதம்!

“நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதை விட என் புதைகுழியே அதிகமாக தமிழை வளர்க்கும்.” என்றதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்கே தன்னை விதையாக்கியவர்  கி.ஆ.பெ.விசுவநாதம்!

தமிழறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், முற்போக்குச் சிந்தனையாளர்,  அரசியல்வாதி, பத்திரிகையாளர்,தமிழ்ப் போராளி, ஏற்றுமதி வணிகர் எனப் பன்முகம் கொண்டவர் கி.ஆ.பெ.விசுவநாதம்! சித்த மருத்துவத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பால் – சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த வகையில் – சித்தமருத்துவ சிகாமணி என்றும் அழைக்கப்பட்டவர்!

கல்விக்கூடம் கண்டறியா மாமேதை!

ஐந்து வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதி கற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய தமிழறிஞர்கள்  நட்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.

தனது தந்தையையே நல்லாசிரியராகக் கொண்டு தந்தையிடமே தொழில் முறையும், கணக்கும் கற்றுக் கொண்டார்.

எந்தப் பள்ளிக் கூடத்திலும் சேர்ந்து படிக்காத இவரை, இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆட்சிக்குழு உறுப்பினராக ஏற்றுக்கொண்டதோடு, “டாக்டர்’ பட்டமும் வழங்கிச் சிறப்பித்தன…!

கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் மறைமலையடிகள் மூலம் தமிழ்ப்பற்றை  பெரு நெருப்பாக்கிக் கொண்டார்! கொண்டார். வாலையானந்த சுவாமிகள் மூலம் சைவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார்! ஆயினும் சைவத்தின் பெயராலான சாதி ஏற்றத்தாழ்வுகளை ஏற்க மறுத்தார் கி.ஆ. பெ.வி.

தாழ்த்தப்பட்ட மக்கள் திருவாச கம் படிப்பதற்கும், சிவ தீட்சைப் பெறுவதற்கும் கி.ஆ.பெ.வி. சைவராகிய வாலையானந்த சுவாமிகளிடம் அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது. அதனால் தன் கழுத்தில் அணிந்திருந்த உத்திராட்ச மாலையை  என்று கழற்றி வீசி எறிந்தார்!

தன்னுடைய 18வது வயதில்  நீதி கட்சியில் இணைந்தார். நீதிக் கட்சியில் பொதுச் செயலாளராக அங்கம் வகித்து, அந்த நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தீண்டாமை ஒழிப்புச் சட்டம், தமிழ் அறிந்தவர்களும் மருத்துவர்களாகலாம் என்ற அரசாணை போன்றவை கி.ஆ.பெ.வியின் பெருமுயற்சியால் என்பது நினைவுகூரத்தக்கது.

பெரியாரோடு இணைந்து செயல்பட்ட காலம்!

1923 ல் காங்கிரசில் இருந்த பெரியார் ஈ.வே.ரா அவர்களை நீதி கட்சிக்கு அழைத்து வந்தவர். பெரியாரோடு இணைந்து சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த (1925) கி.ஆ.பெ.வி அதன் செயலாளராகப் பொறுப்பேற்று, குடியரசு பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராகவும் செயல்பட்டவர். ஜாதி மத வேற்றுமைகளையும், மூடநம்பிக்கைகளையும் சாடினார். பல நூறு கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.

1927 ல் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்ட தமிழர்களை திருவானைக்காவல் ,மாயவரம் போன்ற கோயில்களுக்கு அழைத்துச் சென்று ஆலய நுழைவு போரட்டம் மேற் கொண்டார். தீண்டாதாரை கோயிலுக்குள் அனுமதிக்கக்கோரி ஏராளமான போராட்டங்களை நடத்தினார்! தம் இறுதி நாள்வரை சுமார் ஐயாயிரம் சீர்திருத்தத் தமிழ்த் திருமணங்களை நடத்தி இருக்கிறார்.

1929 ல்  இராச கோபாலசாரியும், சேட் சம்னாலால் பாசுவும் செய்த இந்தி பிரசாரத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும், முழுவீச்சில் எடுத்துச் சென்றதில் முதன்மையானவர் கி.ஆ.பெ.விசுவநாதம்!

மறைமலை அடிகள்,நாவலர் சோமசுந்திர பாரதியார்,திரு.வி.கல்யாண சுந்திரனார்,சர்.பிட்டி தியாகராசர்,டாக்டர் நடேசன்,பொப்ளி அரசர்,பனகல் அரசர்,சர்.பி.டி இராசன்,சந்திர பாண்டிய நாடார்,சர்.ஏ.இராமசாமி முதலியார் ஆகியோர் இவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட  நண்பர்கள் ஆவர்.

1936 ல் திருச்சி கலைகழக தலைவராக பொறுப்பேற்று தொடர்ந்து 20 ஆண்டுகள் தலைவராக செயலாற்றினார்.அப்போது தான் என்.எஸ் கிருட்டினன் அவர்களுக்கு ‘நகைச்சுவை மன்னன்’ பட்டமும்  ,எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ பட்டமும்,எம்.எம் .தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டமும் கி.ஆ.பெ வி.அவர்களால் கொடுக்கப்பட்டன.

1937 ல் சென்னை மாநில தமிழர் மாநாடு என்ற பெயரில் மிகப் பெரும் இந்தி எதிர்ப்பு மாநாட்டை கி.ஆ.பெ .வி நடத்தினார்.480 நாட்கள் பயணம் செய்து 617 கூட்டங்கள் தொடர்ந்து பேசினார். நடுவில் தன் மகன் இராசரத்தினம் இறப்பிற்கு ஒருநாள் கலந்து கொண்டு சென்று விட்டார் என்பது வரலாறு.

சுப்பிரமணிய பிள்ளை திறப்புரை செய்த இந்த மாநாட்டில் தான் தமிழ் மாகாணம் தனி மாகாணமாக வேண்டும் என்றும்,இந்தி எதிர்ப்பை கண்டித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

அதில் ,

“தமிழருடைய கல்வி பார்பனரால் ஒழிக்கப்பட்டது !

தமிழருடைய அறிவு புராணங்களால் மழுங்கடிக்கப்பட்டது!

தமிழருடைய பொருள் புரோகிதத்தால் பிடுங்கப்பட்டது!

தமிழருடைய கட்சி உபாயத்தால் ஒடுக்கப்பட்டது!

தமிழருடைய பதவி வஞ்சனையால் பறிக்கப்பட்டது!”

என்று முழக்கங்கள் எழுப்பினார்கள்.

1938 ல் இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. அதற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்றார்.கி.ஆ.பெ.வி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களின் தலைமையில் தமிழ் நாடு முழுதும் கயல்,புலி,வில் அடங்கிய மூவேந்தர் கொடி தமிழர் கொடியாக ஏற்றப்பட்டது.

1938, 1940 இருமுறை கி்.ஆ.பெ.விசுவநாதம் நீதி கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்தார் .பெரியார் ஈ.வே.ரா அவர்கள் சிறை சென்ற போது விடுதலை பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்று, இந்தி எதிர்ப்பை நாடெங்கும் கொண்டு சேர்த்தார்.

16 வது நீதி கட்சி மாநாட்டின் போது,  நீதிக் கட்சியை ‘திராவிடர் கழகம்’ என்று பெரியாரும், அண்ணாவும் பெயர் மாற்றம் செய்ய விரும்பியபோது, அதனை எதிர்த்து “தமிழர் கழகம்” எனும் பெயரில் தனி இயக்கம் கண்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆவார்.

தமிழகத்தில் பெரியாரும், கி.ஆ.பெ.விசுவநாதமும் இணைந்து செயல்பட்ட காலம் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர்களின் சுயமரியாதைக்கும் ஒரு பொற்காலமாகும்!

பெரியாரோடு மோதல்

கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் அண்ணல் தங்கோ, சவுந்திர பாண்டியனார் அவர்களுடன் இணைந்து நாவலர் சோமசுந்துர பாரதியார் அவர்களின் தலைமையில் “தமிழர் கழகம்” தோற்றுவித்தார்.இதை பெரியார் கடுமையாக எதிர்த்து கடும் சொற்களால் தாக்கினார்!

அதற்கு பதில் கூறி, கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதியதாவது;

”தமிழ், தமிழர், தமிழரசு, தமிழ் நாடு, என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும், அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ் நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திரா, மலையாள, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே கூறி வரும் போது தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக் கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்க வில்லை.

அவ்விதமாய் இருந்தாலும் கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம் தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானது தானா என்பதையும் சிந்திக்க வேண்டும்’’

கி.ஆ.பெ.விசுவநாதம் “தமிழர் நாடு” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி தானே இதழ் ஆசிரியராக செயல்பட்டார். 1948 ல் தமிழர் நாடு பத்திரிக்கை நிறுத்தப்பட்ட போது தன் சொந்த செலவில் 1700 சந்தா தாரர்களுக்கும் அவர்களின் மீதி தொகையை அனுப்பி வைத்தார்.இது வாக்குசுத்தம், நேர்மை தவறாமல் வாழ்ந்து காட்டியவர் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்!

‘’திராவிட கழகத்திலிருந்து ஏன் விலகினீர்கள்’’  என்று கேட்ட போது,” நான் திராவிட கழகத்தில் இருக்கவும்  இல்லை ,விலகவும் இல்லை . அவர்கள் தான் ‘தமிழ் வாழ்க’  என்ற முழக்கத்திலிருந்தும், ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்ற நிலைபாட்டிலிருந்தும் ,தமிழ் கொடி தூக்குவதிலிருந்தும் விலகி விட்டார்கள்” என பதில் சொன்னார்.

தமிழ்ப் போராளி;

பார்ப்பனர்களால் தமிழிசைக்கு பெரும் ஆபத்து வந்த போது  தமிழிசை இயக்கத்திற்கு பொது செயலாளராக இருந்து , இராசா.சர்.அண்ணாமலை செட்டியார் அவர்களின் உதவியுடன் பெரும் விழிப்புணர்வை தமிழ் நாட்டில்  ஏற்படுத்தினார். இவர்களின் தீர்மான  அறிக்கையை பல லட்சம் பிரதி எடுத்து நாடு முழுதும் பரப்புரை செய்தார்கள்.

1959 ல் “ஆகாச வாணி” என்று அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி , சிறை சென்று “வானொலி நிலையமாக” அழைக்கபடுவதற்கு பெரும் பங்கு வகித்தார்.

கவிஞர் கண்ணதாசனால்,

” அறுபதை பிடிக்க வந்த அண்ணலே, தமிழர் வாழ்க்கை

அறுபதை தடுக்க உங்கள் அறுபது வயதும் தந்தீர் “”

என 60 ம் பிறநத நாள் வாழ்த்துப்பா பாடினார்.

ஜனவரி 26 ல் 1965 ம் வருடம்  மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாட்டை தலைமை ஏற்று நடத்தினார்.அதில் 27 பேர் இன்னுயிர் ஈத்தனர்.அந்த போராளிகளுக்காக ஒவ்வொரு மாதமும் 26 ம் தேதி உண்ணா நோன்பு ,பேசா நோன்பை ஏற்றார். அதை தன் இறுதி காலம்வரை  கடைப் பிடித்தார்.

கி.ஆ.பெ.விசுவநாதம் நூல்கள்;

கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய நூல்கள் மொத்தம் 36. அதில் 23 நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2007-08-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு தமிழக அரசு சார்பில் 2000-ம் ஆண்டு முதல் ‘கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.

கி.ஆ.பெ.விசுவநாதத்தின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள்: வள்ளுவர் (1945), வானொலியிலே (1947), ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950), அறிவுக்கு உணவு (1953), தமிழ் மருந்துகள் (1953), வள்ளுவரும் குறளும் (1953), எண்ணக் குவியல் (1954), தமிழ்ச்செல்வம் (1955), திருக்குறள் புதைபொருள் – பாகம் 1 (1956), திருக்குறள் கட்டுரைகள் (1958), நான்மணிகள் (1960), ஆறு செல்வங்கள் (1964), தமிழின் சிறப்பு (1969), நல்வாழ்வுக்கு வழி (1972), திருக்குறள் புதைபொருள் – பாகம் 2 (1974), நபிகள் நாயகம் (1974), மணமக்களுக்கு (1978), வள்ளலாரும் அருட்பாவும் (1980), எனது நண்பர்கள் (1984), அறிவுக்கதைகள் (1984), திருக்குறளில் செயல்திறன் (1984), மாணவர்களுக்கு (1988), எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994).

அன்னாரின் அயராத தமிழ் பணியும்,சித்த மருத்துவ பணியும் 1994 ல்  அவரின் கடைசி மேடை பேச்சு வரை தொடர்ந்தது. கடைசி மேடை பேச்சிலும் ‘’தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்,ஆட்சிமொழியாக வேண்டும்’’ என்றே பேசினார்.  தமிழுக்காகவும் ,தமிழர் நலனுக்காகவும்  பாடுபடுவோருக்கு என்றும் அவர் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறார்!

 கி.ஆ.பெ .வி நினைவு நாள் இன்று.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time