பூ.. இவ்வளவு தானா..குருமூர்த்தி…! எதற்குமே லாயக்கற்றவரோ…!

சாவித்திரி கண்ணன்

ஐயோ பாவம்! ஆனாலும் துக்ளக்கிற்கு இப்படியொரு அவலம் நேர்ந்திருக்க வேண்டியதில்லை!

துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியராகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டு, வலம் வரும் குருமூர்த்தியின் இயலாமைகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிட்டன…!

தமிழகத்தில் சோவின் வெற்றிடத்தை நிரப்ப, குருமூர்த்தி செய்யும் பிரயத்தனங்கள் கோமாளித்தனத்தின் உச்சமாகும்! சோவைப் பொறுத்தவரை அவர் தமிழக பாஜகவின் நம்பத்தகுந்த சகாவாகத் தன்னை வைத்திருந்தார்! ஆனால், குருமூர்த்தியோ தன் பக்குவமற்ற உளறல் பேச்சுக்களால் தமிழக பாஜகவிற்கு அனுகூல சத்துருவாக மாறி நிற்கிறார் என்பது தான் துக்ளக்கின் சமீபத்திய ஆண்டுவிழாவில் அவரது பேச்சுகளில் தெரிய வந்துள்ளது.

நீதிபதிகளைக் குறித்த அவதூறுகள், திராவிட இயக்கங்கள் பற்றிய வன்மங்கள், காங்கிரஸ் பற்றிய அவதூறுகள் கம்யூனிஸ்டுகளைப் பற்றிய மோசமான மதிப்பீடுகள்…, அதிமுக கூட்டணி தயவு தேவை என்ற நிலையிலும் படு அசிங்கமாக அக் கட்சியைக் குறித்த விமர்சனங்கள்..சசிகலாவை சாக்கடைத் தண்ணீருக்கு ஒப்பிட்ட திமிர்த்தனம்…என சொல்லிக் கொண்டே போகலாம்!

”ஹெச்.ராஜாவைக் காட்டிலும் நீதிமன்றத்தை அதுவும் உச்ச நீதிமன்றத்தை ஒருவர் அவதூறாக பேசமுடியுமா…?’’ என கேட்டிருந்தால், ”இதோ நான் இருக்கிறேன்’’ என்று தன் துக்ளக் ஆண்டுவிழா பேச்சின் மூலம் நிருபித்துள்ளார்!

ஏன் மத்தியில் ஆட்சியில் இருந்தும், ஊழல் அரசியல்வாதிகள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை…? – ஒரு வாசகர் கேள்வி இது!

அந்த கேள்வியானது அதிமுக ஊழலில் திளைக்கும் கட்சி என்று குருமூர்த்தி சொல்லி வருவதன் அடிப்படையிலும், அதிமுக அமைச்சர்கள் சிலர் வீடுகளில் ரெய்டு நடத்தியும் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அடிப்படையிலும் எழுப்பப்பட்டதே! ஆனால், அதற்கு குருமூர்த்தி, தயாநிதிமாறன் தொலைதொடர்புத்துறை மந்திரியாக இருந்த போது தன்னுடைய வீட்டு மாடியில் 500 தொலைபேசியை முறைகேடாகப் பயன்படுத்தி மாதம் 50 கோடி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினார்! ஆனால் அவர் மீது நான் வழக்கு தொடுத்தேன்! ஆனால், அவரை தண்டிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு, அதற்கு குற்றவாளிகளுக்கு கருணை காட்டும் நீதிபதிகளே காரணம் என சொன்னதோடு நீதிபதிகள் அரசியல்வாதிகள் காலைப்பிடித்து அந்த பதவிகளுக்கு வந்துவிடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்! இந்த நாட்டில் போலீஸ், சி.பி.ஐ, நீதிமன்றங்கள்..ஆகிய தடைகளைக் கடந்து தான் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியுள்ளது. (அதாவது ஆட்சியில் இருப்பவர்களுக்கே போலீஸ், சி.பி.ஐ, நீதிமன்றம் ஆகியவை உதவியல்ல தடைகளா!ம்! அப்ப ஆட்சி செய்யத் தெரியலை என்று ராஜீனாமா செய்துவிட்டுப் போகலாமே..)

கடந்த ஏழு ஆண்டுகளாக பாஜக காலகட்டத்தில் இப்படித்தான் பலர் நீதிபதியானார்கள் என சொல்ல வருகிறாரா… தெரியவில்லை. ஆனால், நீதிபதிகள் நியமனம் என்பது நமது நாட்டில் கொலிஜியம் முறையில் தலைமை நீதிபதிகள் குழுவால் தான் நடக்கிறது!

# திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் தான்! ஒன்று குடும்ப ஊழல், மற்றொன்று கூட்டு ஊழல்! இரண்டுக்கும் வித்தியாசமில்லை! தமிழ் நாட்டு வளர்ச்சிக்கு இரு கழகங்களும் முட்டுகட்டை! இவை நலிந்து போகவும், தேசிய கட்சிகள் வளரவும் நேரம் வந்துவிட்டது. காங்கிரஸிற்கு வாய்ப்பில்லை. ஆகவே, பாஜக மூன்றாண்டுகளில் பெரிய சக்தியாக வளரும்!

# திமுக குடும்ப கட்சி, குருகி அழியப் போகும் கட்சி..! திமுகவை தோற்கடிப்பது தான் நமது கடமை! சசிகலாவை அதிமுக சேர்த்துக் கொள்ள வேண்டும். வீடு தீப்பற்றிக் கொள்கிறது.. கங்கை ஜலத்திற்காக காத்திருக்க முடியாது. சாக்கடைத் தண்ணீர் எடுத்துவீசி அனைத்தால் கூடத் தவறில்லை. இது சசிகலா ஆதரவுக்கும் பொருந்தும். ( பாஜகவிற்கு அதிமுக தயவு வேண்டுமாம், சசிகலாவை அதிமுகவிற்குள் சேர்க்க வேண்டுமாம்,ஆனால், இவர் ஊழல் கட்சி, சாக்கடை என்றும் திட்டுவாராம்!)

# காங்கிரஸ் கட்சியை அழிக்க ராகுல் ஒருவரே போதுமானது..!

# ‘நாட்டுக்கு நல்லது நடந்துவிடக் கூடாதே’ என்ற கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாகும்!

இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகலா தொடர்பாக கூடுதல் விளக்கமளித்திருக்கும் குருமூர்த்தி, “இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென தனது வாசகர்களிடம் சொல்ல துக்ளக் முடிவெடுத்து விட்டது. அப்படி முடிவெடுத்த பிறகு நாங்கள் சாக்கடை என கருதுபவர்கள் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்குள் வந்தால், அந்தக் கூட்டணியை ஆதரிக்க மாட்டோம் எனச் சொல்ல முடியாது. அமமுகவை நான் இன்னும், ‘மன்னார்குடி மாஃபியா’ என்றே கருதுகிறேன். அவர்கள் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணியின் அங்கமானால்கூட, இவர்களை ‘மாஃபியா’ என்றே கருதுகிறேன். துக்ளக்கைப் பொறுத்தவரை மன்னார்குடி குடும்பத்தை மாஃபியா என்றே கருதுகிறோம். அ.தி.மு.கவை அவர்கள் தி.மு.கவைப் போல குடும்பக் கட்சியாக மாற்றிவிடுவார்கள்’’ என எழுதியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள சுப்பிரமணியன்சுவாமி, “குருமூர்த்திக்கு முன்பே நான்தான் சசிகலாவை ஆதரித்தவன். நேற்றுவரை ரஜினிகாந்தை ஆதரித்தார் அவர். அது குழப்பத்தில் முடிந்துவிட்டது. ரஜினிகாந்த் விளையாட்டைப் புரிந்து கொண்டுவிட்டார். அரசியல் ஒட்டுண்ணியான குருஜி, வேறு இடத்தில் ரத்தத்தை எதிர்நோக்குகிறார்” என்று கூறியிருக்கிறார். ஆக,சொந்த கட்சியான பாஜகவிற்குள்ளேயே குருமூர்த்திக்கு என்ன மதிப்பு என்பதை சுப்பிரமணியசாமியே போட்டு உடைத்துவிட்டார்! அத்துடன் சசிகலாவின் ஒட்டுண்ணியே தான் என்றும் சாமி வெளிப்படுத்திக் கொண்டார்! இவர் சகவாசமே வேண்டாம் என்று அமித்ஷா ஒதுங்கிவிட்டார் போல! வேறு வழியில்லாமல் வந்திருப்பார் போல ஜே.பி. நட்டா!

”ரஜினிகாந்த் குறித்து அப்புறம் பேசுகிறேன்” என்று முதலில் சொல்லிவிட்டு, பிறகு பேசாமல் தவிர்க்க முயன்றார். வாசகர்கள் மீண்டும் ஞாபகபடுத்தியவுடன் சமாளித்து பேசினார். ரஜினியிடம் தன் பாச்சா பலிக்கவில்லை என்பது வெளிப்பட்டுவிடுமோ என அஞ்சியதாகத் தெரிகிறது….!

குருமூர்த்திக்கு பத்திரிகை ஆசிரியராக இருக்கவும் ஆசை! அரசியல் தரகராக இருக்கவும் ஆசை! பாஜகவின் அதிகார மையங்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொள்ளவும் ஆசை! இப்படி மல்டி பெர்ஸானாலிட்டியாக தன்னை காட்டிக் கொள்ள முயன்று எதற்கும் இந்த ஆள் பொருத்தமில்லையே…!’’ என்று நினைக்க வைத்துவிட்டார்!

# பத்திரிகை ஆசிரியர் என்றால், வெளிப்படும் வார்த்தைகளில் கண்ணியம் மிக அவசியம்!

# அரசியல் தரகரென்றால் சகல தரப்பிலும் நல்லுறைவை பேண வேண்டும்! ஈகோ கூடாது.

# அதிகாரமையமாக விளங்க நினைப்பவர் ஒரு போதும் லூஸ் டாக்கில் ஈடுபடமட்டார்!

ஆக, இந்த மூன்றுக்குமே தான் பொருத்தமில்லாதவர் என அவரே தன்னை மேடை போட்டு வெளிப்படுத்திக் கொண்ட நிகழ்வாக துக்ளக் ஆண்டு விழா அமைந்துவிட்டது!

குருமூர்த்தி துக்ளக்கில் படு அபத்தமாக எழுதி வருவதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் அவரது அறியாமையும், உளறல்களும் துக்ளக் வாசகர் தளத்தோடு முடிந்து போயிருக்கும் என்று தோன்றுகிறது! தேவையில்லாமல் பொதுத் தளத்தில் தன் அதிகார பிம்பத்தை கட்டி அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு ’’பூ.. இவ்வளவு தானா..குருமூர்த்தி…’’ என்ற பெயர் தான் அவருக்கு மிஞ்சுகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time