மோடி மஸ்தானும், ராக்கேஷ் அஸ்தானும்! –கிரிமினல்களின் ராஜ்ஜியம்!

- ச.அருணாசலம்

சில நாட்களாக பாஜக அரசையும், மோடியையும்..முதுகெலும்பு இல்லாத கோழைகள், துணிவற்றவர்கள், நன்றி கெட்டவர்கள் , வாக்கு தவறியவர்கள்..என திட்டித் தீர்த்தது ஒரு கோஷ்டி! அந்த கோஷ்டியின் தலைவர் ராக்கேஷ் அஸ்தானா! ஆறு கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். அவரது திட்டம் வீண் போகவில்லை. இப்போது அப்படி திட்டிய அதே கோஷ்டி மோடியை அப்படி வா மகனே, வழிக்கு! மகிழ்ச்சி! என புகழ்கிறது!

பணி ஓய்வு பெற சில நாட்களே இருந்த நிலையில் , மேலும் ஒரு வருடம் பணி நீட்டிப்பும் டெல்லி போலீஸ் கமிஷனர் பதவியும் கொடுத்தால் யாருக்குத்தான் இனிக்காது? ராக்கேஷ் அஸ்தானாவும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்  ஜூலை 28ல் டெல்லி காவலர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு டில்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ராகேஷ் அஸ்தானா நியமனம் சட்ட விரோதமானது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது.ஆகவே, அவரது நியமனத்தை உடனடியாக திரும்ப பெற்று கொள்ள வேண்டும் எனக்கூறி டில்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சமூக ஊடகங்கள் எங்கும், ”ஒரு பிரபல கிரிமினல் குற்றவாளிக்கு மீண்டும், மீண்டும் பதவிகளா..?” என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நியமனத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஹெச்.எல்.சர்மா என்பவர் இந்த நியமனம் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த நீதிபதிபிரகாஷ்சிங் தீர்ப்புக்கு எதிரானது என அவர் தன் மனுவில் கூறியுள்ளார்.

இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, தன்னைத் திட்டிய கோஷ்டியின் தலைமைக்கு அடி பணிந்து பிரதமர் செயல்படக் காரணம் என்ன..?

1984ம்  வருட ஐ பி எஸ் அதிகாரியான அஸ்தானா குஜராத்தை சேர்ந்தவர்! திருவாளர் மோடி அவர்களின் மிக நெருங்கிய கூட்டாளி. அத்வானி ஒருமுறை குஜராத் சென்ற பொழுது அவருக்கு செக்யூரிட்டியாக சென்ற அஸ்தானா அத்வானிக்கு நெருக்கமாகிறார் .  வல்லபாய் பட்டேலின் பயங்கர பக்தனாகவும்,  1997ல் பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை  சிறையிலடைக்க பெரிதும் காரணமாயிருந்தவர் அஸ்தானா என்பதாலாலும் அத்வானிக்கு அஸ்தானாவை மிகவும் பிடித்துப் போயிற்று!

அத்வானிதான் அஸ்தானாவை மோடிக்கு அறிமுகம் செய்து, ”நமக்காக எதையும் செய்வார் பயன்படுத்திக் கொள்” என்கிறார்.

2002 பிப்ரவரி 27ந்தேதி , கோத்ராவில் நடந்த சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் இந்துக்களுக்கெதிரான மிகப்பெரும் சதி என்று  சங்பரிவாரும் மோடியும் சித்தரித்த நேரத்தில் முதன்முதலில் குஜராத் போலீஸ் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில் சதிசெயல் பற்றி எந்த குறிப்பும் இல்லை.ஆனாலும், 50க்கும் மேற்பட்ட முஸ்லீம்வகுப்பை  சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் , வழக்கும் தொடுக்கப்பட்டது. விசாரிப்பதற்கான சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அஸ்தானா தலைமையில் மே மாதம் 27, 2002ல் நியமிக்கிறார்.  ‘கோத்ராவில் நடந்த சபர்மதி ரயிலெறிப்பு சதிச்செயல்தான்’ என அஸ்தானா தலைமையிலான  எஸ் ஐ டி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது.

அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் பெரும் வெற்றியை ஈட்டிய மோடி தன்னை இந்துக்களின் பாதுகாவலனாகவும், எதிர்ப்புகளை அடித்து நொறுக்கும் வீராதி வீரனாவும் சித்தரித்து வலம் வந்த வேளையில் அந்த பிம்பத்தை சிதறடிக்கும் விதமாக 2009 ல் அகமதாபாத்தில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. 22 தொடர் குண்டு வெடிப்புகளில் 56 பேர் பலியாயினர்.

கஷ்டப்பட்டு கட்டிய பிம்பம் விழுந்து நொறுங்குவதை விரும்பாத மோடி குண்டுவெடிப்பு வழக்கை, அப்பொழுது பரோடா காவல் ஆணையராக இருந்த அஸ்தானாவிடம் ஒப்படைக்கிறார் . அஸ்தானாவும் அவருடன் பரோடா உதவி ஆணயராக இருந்த அபாய்சூடாசுமா என்ற அதிகாரியும் (சொராபுதீன் என்கவுன்டர்-கொலை- வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி) மேலும் சில அதிகாரிகளும் இணைந்து “ரகசிய விசாரணை”  நடத்தி 22 நாட்களில் வழக்கை “முடிவுக்கு” கொண்டுவந்தனர் .

இவ்வாறு மோடியின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்கும் அஸ்தானா மேலும் அவருக்கு நெருக்கமாகிறார்.

சதி வழக்குகளையும், பயங்கரவாத செயல்களையும் ரகசியமாக விசாரித்து உடனடியாக  தீர்த்தால்தான் தான் பலம்பொருந்திய முதல்வன் என்று மோடியால் பறை சாற்றிக்கொள்ள முடியும் என்பதை ராக்கேஷ் அஸ்தானா நன்கு அறிந்திருந்தார். இதனால் பெறும் “பெருமை ” இருவரையும் சாரும் அல்லவா?

‘நாணமும் வெட்கமும் நாய்களுக்கு வேண்டும் ‘ நமக்கல்ல , என்ற நினைப்பில் அரசியல்  சட்டத்தை மறந்து , ஆட்சிப்பணியில் நேர்மையை மறந்து அரசியல்வாதிக்கு சாமரம் வீசி காரியம் சாதிப்பதில் கைதேர்ந்த அஸ்தானாவை,  மோடி டெல்லிக்கும் (2014க்குப்பின்) வரவழைத்துக் கொண்டார்.

அஸ்தானாவுடன் சேர்த்து ஏ. கே. ஷர்மாவும் டெல்லிக்கு மோடியால் வரவழைக்கப்பட்டனர். இந்த ஏ. கே. ஷர்மா தான் ஸ்னூப் கேட் என்று கூறப்பட்ட குஜராத் இளம்பட்டதாரி பெண்ணை அமீத் ஷா உத்தரவின் பேரில் வேவு பார்த்த வழக்கில் சம்பந்தப்பட்ட புலன் விசாரணையின் இயக்குனர்!  தன் பலவீனங்களுக்கும், அ நீதிகளுக்கும் உதவும் இந்த இருவருக்கும் சி பி ஐ தனி அதிகாரிகளாக (  Special Director) பதவி வாய்ப்பு தந்தார் மோடி.

இப்படியாக சி.பி.ஐயிலும் தனக்கான ஆட்களை மோடி ஏற்பாடு செய்து கொண்டார்!

ஆனால், அஸ்தானாவை பற்றி அறிந்தவர்கள் இதையெல்லாம் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்..?

அஸ்தானாவின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அஸ்தானாவின் பெயர் ‘2011 டைரி’யில் – பண மோசடி மற்றும் ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸடர்லிங் பயோடெக் கம்பெனி மீதான ரெய்டில் கைப்பற்றப்பட்ட – டைரி யில் இருப்பதால்,3.8 கோடி ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்ட அஸ்தானா சி பி ஐ ன் தனி அதிகாரியாக நியமிக்க தகுதியற்றவர்’’ என்று Common Cause  என்ற தொண்டு நிறுவனம் பொது நலன் வழக்கு தொடுத்தது.

தேர்வுக்குழுவில் அஸ்தானா பெயரை இணைத்ததை ஆட்சேபித்து அன்றைய சி.பி.ஐ தலைமை இயக்குனர் அலோக் வர்மாவும் ஆட்சேபனை எழுப்பினார். ஆனால், அவரது ஆட்சேபனைகளை புறந்தள்ளி மோடி அமீத்ஷா கூட்டணி அஸ்தானாவை நியமித்தது.

ஆனால், பின்னாளில் இதை எதிர்த்து சி பி ஐயால் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால் அன்றைய உச்ச நீதி மன்றம் ஏனோ வழக்கை தள்ளுபடி செய்தது.

எல்லா எதிர்ப்புகளையும் கடந்து, தன் எஜமானார்களால் பதவி பெற்ற அஸ்தானா சும்மா இருப்பாரா..? சி பி ஐ தலைமையகத்தில் கால் பதித்த அஸ்தானா தன் கைவரிசையை காட்ட ஆரம்பித்தார்

தலைமை இயக்குநர் பணி நிமித்தம் வெளியில் சென்ற வேளையில், கீழதிகாரிகள் மற்றும் அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டு குளறுபடிகள் செய்தார்! அதாவது நேர்மையான அதிகாரிகளை தூக்கியடித்து, தனக்கு தோதான ஆட்களுக்கு வாய்ப்பு தரும் வண்ணம் காய் நகர்த்தினார்.

இதைக் கண்டு அதிர்ந்த  தலைமை இயக்குனர் கண்டித்தார். அதனால்,  ”வேலை செய்யவிடாமல் தடுத்தது வழக்குகளுக்கு இடையூறு செய்தது, குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டது..” என தலைமை இயக்குனர் அலோக் வர்மா மீதே புகார் மனு தயாரித்து யூனியன் கேபினட் செக்கரட்டரி, ஒன்றிய அரசு அமைச்சரவை செயலாளர், சி வி சி  Central vigilance Commissioner , மற்றும் நேஷனல் செக்யூரிட்டி அட்வைசர் ஆகியவற்றிற்கு அனுப்பினார் .

உண்மையில் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் பொருத்தமானவர் அஸ்தானா தான்! இத்தகைய கருங்காலி தனத்தை கண்டு வெகுண்ட நேர்மையாளரான அலோக் வர்மாவும் அஸ்தானா மீது சி வி சி யிடம் புகார் அளித்தார்.

”அகஸ்டா வெஸ்டலான்ட் வழக்கு, விஜய் மல்லையா -கிங் பிஷர்- மோசடி வழக்கு, ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரான வீர்பத்ர சிங் வழக்கு, லல்லு பிரசாத் யாதவ் மீதான புதிதாக புனையப்பட்ட ரயில்வே இடவிற்பனை ஊழல் வழக்கு ஆகியவையற்றை நான்தான் விசாரணை செய்வேன் என்று முரண்டு பிடித்தார் அஸ்தானா” என்று அலோக் வர்மா குற்றம் சாட்டுகிறார்.

அப்படி அவர் முரண்டு பிடித்ததன் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அஸ்தானா மீது 3.8கோடி லஞ்சம் பெற்ற ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு வழக்கு போக, ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மொயின் குரேஷியிடம்  5 கோடி கையூட்டு பெற்ற புகாரையடுத்து மேலும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. இது தவிர நான்கு புகார்கள் விசாரணை நிலையில் உள்ளது. இத்தனை புகார்களையுடைய அஸ்தானாவுக்கு மேலிடத்தின் செல்வாக்கு இருந்தது. அதனால் அஸ்தானா மீதான புகார்களை பொருட்படுத்தாமல் சி வி சி நேர்மையாளரான அலோக்வர்மாவையே குற்றவாளி போல பாவித்து விசாரித்தது! இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் அலோக் வர்மா.

உச்ச நீதிமன்றம் இருவரின் புகார்களையும் தீர விசாரிக்குமாறு உத்தரவிட்டது, துர்அதிர்ஷடமே! விசாரணையின்போது, அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது பொய்வழக்குகள் பதிவுசெய்ய பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் அஸ்தானாவை தூண்டுகிறார் என அலோக் வர்மா அறிக்கை கொடுத்தார் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டும். ஆனால் நீதிமன்றத்தில் ஏனோ இது கவனம் பெறவில்லை.

இந்த சூழல்களுக்கு எல்லாம் பின்புலமாக இருந்த மோடி ,தன்னை யோக்கியவானாக காட்டிக்கொள்ள தலைமை இயக்குனர் வர்மா,  தனி இயக்குனர் அஸ்தானா இருவரையும் இரவோடிரவாக பணி நீக்கம் செய்தார்.

அதாவது அலோக் வர்மாவை சி பி ஐ இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்குவதை இந்த சூழலைப் பயன்படுத்தி சாதித்துக் கொண்டார் மோடி.

பாஜகவை சேர்ந்த சுப்பிரமணிசாமியே கூட , சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவின் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ராக்கேஷ் அஸ்தானா ஊழல் அதிகாரி என்பது ஊரறிந்த விஷயம் எனக் கூறினார்.

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையான குற்றவாளியான அஸ்தானாவை டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் எவியேஷன் செக்யூரிட்டி என்ற பொறுப்புக்கு நியமித்தது மோடி, அமித்ஷா கோஷ்டி!  இது போதாது என்று கூடுதல் பொறுப்பாக தேசிய போதைப்பொருள் தடுப்பு மையத்தின் தலைமை பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

இந்த பொறுப்பை வைத்துக்கொண்டுதான் அவர் பீகாரைச்சேர்ந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மோடியின் கண் அசைவுகளுக்கு ஏற்ப செயல்பட்டார். இதில் என்னவெல்லாம் மோடியின் எதிரிகளை பழி வாங்க சாதகமாக அவர் செயல்பட்டார் என எழுதிச் சென்றால் பக்கங்கள் அதிகரிக்கும்! இன்னும் எத்தனை நாட்கள் இவர்கள் வில்லனும் வேட்டை நாயும் போல சட்டத்தை வளைத்து, வேண்டாதவர்களை சிறையிட்டு தங்களதிகாரத்தை கொண்டு செல்வார்களோ..?

பிறகு எல்லை பாதுகாப்பு படையின் B S F  தலைவரானார் அஸ்தானா!.அவசரம் அவசரமாக அவர்மீது இருந்த வழக்குகள் காணாமல் போயின. எப்படி இது சாத்தியம் என்கிறீர்களா?

அஸ்தானா மீதான வழக்குகள் விசாரிக்கப்படவேயில்லை!  நேர்மையானவர் என  நீதிமன்றத்தில் நிருபிக்கவும் இல்லை. அவரை குற்றமற்றவர் என்று எந்த நீதிமன்றமும் தீர்ப்பு கூறவுமில்லை.

ஆனால், பல குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு மீண்டும், மீண்டும் பெரிய பதவிகள் வழங்கப்படுகின்றன! பத்திரிகைகள், நீதிமன்ற ஆட்சேபனைகள், எதிர்கட்சிகள் அனைத்தும் புறம் தள்ளப்படுகின்றன!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட நாடறிந்த ஒரு கிரிமினலுக்கு மோடியும்,அமித்ஷாவும் தொடர்ந்து முக்கிய பதவிகளியை தருவதன் மூலம் தங்கள் அரசியல் எதிரிகளை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அழிக்கப் பார்க்கிறார்கள்! என குற்றம் சாட்டியுள்ளார்.

  வசதியும் காப்பாற்ற ஆளுமிருந்தால்……, வழக்கு தொடுத்த சி பி ஐ நிறுவனமே காரணம் ஏதும் கூறாமலே வழக்கிலிருந்து குற்றவாளியை விடுவித்துவிடும். சில நேரங்களில் நீதிமன்றங்களும் இதை பெரிதுபடுத்தாமல் முகத்தை திருப்பிக் கொள்கின்றன! அதிகாரத்தால் அனைத்தையும் சாதிக்க முடியும்.

இந்தச் சூழல்களில் தான் அஸ்தானா மீது ஏற்கனவே போடப்பட்ட வழக்கும், குற்றப் பத்திரிக்கையும் மோடி அரசால் கிடப்பில் போடப்பட்டது. அஸ்தானாவும், அவரது சகாக்களும் எல்லா வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர். இதை டெல்லி உயர் நீதிமன்றம் கூட கண்டித்தது.

இதன் பிறகு சில மாதங்கள் முன்பாக சி பி ஐ தலைமை இயக்குநர் பதவிக்கு மோடி அரசால் சிபாரிசு செய்யப்படுகிறார் அஸ்தானா! ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த முன்னெடுப்பை ஆட்சேபித்தார்! அந்த ஆட்சேபனையால் அஸ்தானாவின் அந்த கனவு கலைந்தது. மோடியின் தந்திரம் தவிடுபொடியானது.  சூடுபட்ட பூனையாக மோடி அடுத்த வாய்ப்பிற்கு காத்திருந்தார்.

அதற்குள் பொறுமை இழந்த அஸ்தானா  தன் ஆதரவாளர்கள் மூலம் ”கோழைகள் ”என்று ட்விட்டரில் மோடியை வசைபாடி பதிவிட்டார். பின்னர் அந்த பதிவுகளை ஏனோ நீக்கி விட்டனர் . அதனால்தான் மோடி,  தான் முதுகெலும்பில்லாதவனில்லை என்று , அஸ்தானாவிற்கு பதவி நீட்டிப்பு கொடுத்து ,டெல்லி தலைமை காவல் ஆணையர் பதவியும் கொடுத்து நிரூபித்து இருக்கிறார் போலும்!

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ‘ என்ற உண்மை மோடிக்கு புரியாமல் போனது ஆச்சரியந்தான்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time