தி இந்து பத்திரிகை இந்துத்துவா பத்திரிகையாகிறதா…?

- ஆ. கோபண்ணா

பொதுவாக பத்திரிகை ஆசிரியர்கள் அதிகார மையங்களிடமிருந்து சற்று விலகி இருந்தால் தான் வாசகர்களுக்கு சமரசமற்ற வகையில் செய்திகளைத் தர இயலும்! ஆனால்,சமீபத்தில் இந்து குழுமத்தின் ஆசிரியரான மாலினி பார்த்தசாரதி பிரதமர் மோடியை வலிந்து சந்தித்துள்ளார். இதன் மூலம் தன் சார்பு நிலையை அவர் பகிரங்கபடுத்துகிறாரோ.. என எண்ணத் தோன்றுகிறது!

மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் ஏவப்பட்டுள்ளன.  கொரோனா தொற்றினால் பாதிப்பு, இறப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியிட்டதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  எல்லாவற்றுக்கும் மேலாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி தரவே அச்சப்படும் பிரதமராக மோடி உள்ளார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தின் குரலாக ஒலிக்க 1889 இல் இந்து ஆங்கில நாளேடு தொடங்கப்பட்டது. இன்று 11 மாநிலங்களில் 21 நகரங்களில் வெளியிடப்பட்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் எத்தனையோ நாளேடுகள் வெளிவருகின்றன. இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையும் அலாதியானது!  இத்தகைய நம்பகத்தன்மைமிக்க இந்து நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி  சந்தித்து,  அதன் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், தங்களது உரையாடல் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும், தற்போதைய மக்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், “தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் பெற்ற மரபு பறிக்கப்படுவதாகக்” குறிப்பிட்டிருக்கிறார். இதையொட்டி, டிவிட்டர் பயனர் ஒருவரது கேள்விக்குப் பதில் அளித்த என்.ராம், “இந்த விவகாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதன் மூலம் தி இந்து குழுமத்தின் மரபு மற்றும் நற்பெயரை மாலினி பார்த்தசாரதி பறிக்கிறார் என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 142 ஆண்டுகளில் தி இந்து ஆங்கில ஏட்டின் கடின உழைப்பில் கிடைத்த நற்பெயர் மற்றும் மரபு பறிபோவதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதற்குப் பதில் கூறிய மாலினி பார்த்தசாரதி, “என்.ராம் நினைப்பதைப் போல் 142 ஆண்டு கால தி இந்து நாளேட்டின் பெருமை அழிந்துவிடாது. உண்மையை எழுதியதால் தான் 142 ஆண்டுகள் கடினமாக உழைத்துப் பெற்ற நற்பெயர் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரபட்சமான அல்லது அரசியல்  சார்பு நிலையால் கட்டமைக்கப்படவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால்,  என். ராம்  மீது கடுமையான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.

மேலும், மாலினி பார்த்தசாரதி தமது பதிலில், “என்.ராம் தலைமையில் தி இந்து இயங்கியபோது உண்மையிலேயே மோசமான நிலைமைக்கு சென்ற பாரம்பரியத்தையும், நற்பெயரையும் மீட்டெடுக்க நான் முயன்று வருகிறேன்” என்ற அவதூறான கருத்தைக் கூறியிருக்கிறார். இதனால் லட்சக்கணக்கான தி இந்து வாசகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பத்திரிகை உரிமையாளார்களே ஆசிரியராக இருக்கும் மரபை உடைக்க வேண்டும் என்று தான் என்.ராம் அவர்கள் சித்தார்த் வரதராஜனை ஆசிரியராக்கினார். ஆனால், அவரை விலக வைத்து மாலினி ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு தி இந்துவின் ஆசிரியராக பொறுப்பு ஏற்றார். ஆனால்,அவரது செயல்பாடுகள் பரவலான அதிருப்தியை பெற்றதில் பதவி விலகினார். மாலினியின் செயல்பாடுகள் காராணமாகத் தான் ஏற்கனவே சித்தார்த் வரதராஜன்,  பிரவீன்சாமி, பி.சாய்நாத்… உள்ளிட்ட சிறந்த ஆசிரியர்கள் எல்லாம் இந்துவில் இருந்து விலக நேர்ந்தது என்பது நினைவு கூறத்தக்கது.

ஏற்கெனவே ரபேல் விவகாரத்தில், ”முறைகேடு நடக்கவில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கவேண்டும்’’ என்றும், ”ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நேர்மை மறுக்க முடியாததும், கேள்விக்கு அப்பாற்பட்டதும் ஆகும்’’ என்றும் மாலினி பார்த்தசாரதி குறிப்பிட்டதை  மறந்திட இயலாது. ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இன்றைக்கு பிரான்ஸ் அரசாங்கமே விசாரணையை தொடங்கியிருக்கிறது. பிரதமர் மோடியை சந்தித்த மாலினி பார்த்தசாரதி வெளியிட்ட கருத்துக்கள் மூலம் ‘பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது’. தற்போதைய தி இந்துவில் அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகமாக இடம் பெறுகிறது மட்டுமல்ல, அரசின் தவறுகள் மறைக்கப்படுகின்றன. நன்றாக வந்து கொண்டிருந்த இந்துவின் தமிழ் நாளிதழான இந்து தமிழ் திசை தற்போது பாஜக ஆதரவு நாளேடாகவே மாறிவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. பல்லாண்டுகால என்னைப் போன்ற இந்து வாசகர்கள் இந்த வீழ்ச்சியை வேதனையுடன் பார்க்கிறோம்.

பொதுவாகவே மாலினி பார்த்தசாரதி அதிகார மையங்களோடு நெருக்கம் பாராட்டுபவர். 2013 ல் இதே மோடியை அவர், ”ஒரு விபரமும் தெரியாதவர், இங்கிலீஸ் தெரியாதவர்’”என எடுத்தெறிந்து விமர்சித்தார் என்பது ஞாபகத்திற்கு வருகிறது! பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அந்த சந்திப்பின் மூலம் 142 ஆண்டு காலமாக கட்டிக்காக்கப்பட்டு இந்தியாவின் கருத்தியலுக்காகவும், ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிற இந்து குழுமத்தின் அடிப்படை கொள்கைகளை அடகு வைத்துவிடக் கூடாது. இந்த சந்திப்பையொட்டி, பிரதமர் மோடியின் வகுப்புவாத கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தி இந்து பின்பற்றுகிற மதச்சார்பற்ற கொள்கைகளிலிருந்து மாலினி பார்த்தசாரதி தடம் மாறுவாரேயானால், கடுமையான விளைவுகளை  சந்திக்க நேரிடும்.

உலகத்திலேயே பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்ட 188 நாடுகளின் வரிசையில் 142 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள்  ஏவப்பட்டுள்ளன.  கொரோனா தொற்றினால் பாதிப்பு, இறப்பு,தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியிட்டதற்காக வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அடக்குமுறையால் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன் உட்பட 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் இந்த ஆட்சியாளர்களால்! இவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை சோதனைகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 65 பதிப்புகளை நடத்தி வருகிற டைனிக் பாஸ்கர் குழுமம் வருமான வரி சோதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் என்கிற நாளேடுகளை இந்த குழுமம் நடத்துகிறது. மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா தொற்று, இறப்பு  மூடி மறைக்கப்படுவது குறித்தும், தடுப்பூசி தட்டுப்பாடு பற்றியும் ஆதாரப்பூர்வமாக இந்த குழுமத்தின் பதிப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. அதேபோல கொரோனா தொற்றில் இறந்தவர்களின் சடலங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்படுவதாகவும் டைனிக் பாஸ்கர் குழுமம் செய்தி வெளியிட்டது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆட்சியாளர்கள் அந்த குழுமத்தின் மீது வருமான வரித்துறையை ஏவி குரல்வளையை நெறிக்க முயற்சி செய்தனர்.  பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிடுகிற பிரதமர் மோடியுடன்,  இந்து குழும ஆசிரியர் கொள்கை சமரசம் செய்து கொள்வது நல்லதல்ல!

தி இந்து குழுமம் என்பது பங்குதாரர்களுக்கு மட்டுமே முழு உரிமை கொண்டதல்ல. இதை மக்களின் சொத்தாகவே கருதவேண்டும்.  இந்து குழுமத்திலிருந்து வெளிவருகிற நாளேடுகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் நாடு மற்றும் உலகம் முழுவதும் விரிந்து பரவியிருக்கிறார்கள். எனவே, இந்து குழுமத்தின் கொள்கை வழிப்பாதையை ஒரு தனிப்பட்ட மாலினி பார்த்தசாரதியால் மடைமாற்றிவிட முடியாது. அப்படி மடைமாற்ற அவர் முனைந்தால் இந்து குழுமத்தில் இருக்கிற கருத்துச் சுதந்திர காவலர்களும், அதில் பணியாற்றுகிற ஆயிரக்கணக்கான ஆசிரியர் பிரிவைச் சேர்ந்தவர்களும், ஊழியர்களுமே கூட ஏற்கமாட்டார்கள்! லட்சக்கணக்கான வாசகர்களையும் தி இந்து இழக்க நேரலாம்!

இந்துவின் கொள்கை வழிப் பாதையை நிர்ணயிப்பதில் திரு. என்.ராம் சிறப்பான பங்களித்தார்! அதற்கு ஒரு கொள்கை முகத்தை வழங்கினார்! அது தடம் மாறி பயணிப்பது ஏற்புடையதல்ல!

கட்டுரையாளர்; ஆ. கோபண்ணா

எழுத்தாளர், பத்திரிகையாளர், காங்கிரஸ் தலைவர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time