ஏன் மறுக்கப்படுகிறது கிராம நீதிமன்றங்கள்?

சாவித்திரி கண்ணன்

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் சுமார் 75,000 பேருக்கு ஒரு நீதிபதி என்பது தான் நிலைமை! ஆகையால் மலை போல ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் வழக்குகள் தேங்கியுள்ளன! குறிப்பாக நமது கிராப்புற மக்களின் சுமார் மூன்று கோடி 14 லட்சம் வழக்குகள் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன….!   நிலத் தகராறுகள் தொடங்கி கணவன்,மனைவி பிரச்சினை, உறவுகளுக்குள்ளான மோதல்,வாய்ச் சண்டைஉள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு கூட தலைமுறைகளைக் கடந்து கிராமத்து எளியமனிதர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு அலையோ,அலையென்று அலைந்து கஷ்டப்படுகிறார்கள்!

இதற்கு முடிவுகட்டவும்,கிராம மக்களுக்குஅவர்கள் வாழும் இடங்களிலேயே நீதி எளிய முறையில் வழங்கவும் கொண்டு வரப்பட்டது தான் ‘கிராம நீதியாலயா- 2008  என்ற சட்டமாகும்!

கிராமப்புறமக்களுக்கு   எளிதாகவும்விரைவாகவும் நீதி கிடைக்க வழிவகை செய்வதேசட்ட கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த சட்டத்தின் நோக்கமாக சொல்லப்பட்டு 2008 அண்டு இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது! எனினும், காந்தியின் பிறந்த நாளான அக்டோபர்  2, 2009 அன்று தான் நடைமுறைக்கு வந்தது. ஐக்கியநாடுகள் வளர்ச்சி முகமை    (UNDP) இதற்காக 2009  ஆண்டு முதல்  2017  ஆண்டு வரை 44 கோடியே 60 லட்சம் நிதி உதவியும் தந்துள்ளது. ஆனால், இந்தஅத்தியாவசியமான சட்டம் இது வரை இந்தியாவில் சரியாக நடைமுறைபடுத்தப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது

இதன்படிகிராமங்களில்முதல்கட்டமாக 5,000  நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும்,அதற்காக ரூபாய்  1,400  கோடிரூபாய் ஒதுக்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டது.ஆனால்,இன்றுவரை சுமார் 200 கிராமநீதிமன்றங்களேஅமைக்கப்பட்டுள்ளன.

நமதுகிராமங்கள் முழு சுயாட்சி பெற்றஅமைப்புகளாக,தற்சார்புடன் செயல்பட வேண்டும் என்பது நமது தேசத் தந்தை காந்தியின் லட்சியக்கனவாகும்.முந்தையகாலத்தில் எல்லாம் கிராமவழக்குகள் அந்தந்த கிராம எல்லைக்குள்ளேயே சம்மந்தப்பட்ட ஊர் பெரியவர்களின் தலைமையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில் நல்ல அணுகுமுறையும் இருந்தது.சாதியப்பாகுபாடுடன் கூடிய கொடுர அணுகுமுறைகளும் இருந்தன. ஆகவே,கிராமங்களில் வழங்கப்பட்டு வந்த மரத்தடிநீதிமன்றத்தீர்ப்புகள் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அனைவருக்கும் பொதுவான இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது.ஆனால்,இதனால்,கிராம மக்களுக்கு நீதி என்பது சுலபத்தில் பெறமுடியாதஎட்டாக்கனியாகவேதொடருகிறது.

கிராம நீதிமன்றங்களின் சிறப்பம்சங்கள்!

# அவரவர் வாழும் பகுதியிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டு,நீதி வழங்கப்படும்.

# வக்கீல்வைக்கவேண்டும்என்ற கட்டாயமில்லை.

# வழக்கில்தொடர்புள்ளவர்கள்நேரடியாக ஆஜராகி பேசலாம்.

# குற்ற வழக்கு,சிவில் வழக்கு இரண்டுமே விசாரிக்கப்படும்.

# அவரவர் தாய் மொழியிலேயேவழக்குகள் நடக்கும்.

# வக்கீல் செலவுமில்லை,கோர்ட்ஸ்டாம்ப் செலவுமில்லை.

# வழக்கு முடியும் வரை வாய்தா இடைவெளியின்றி வழக்கு நடக்கும்.

# ஆறுமாதத்திற்குள் நீதி வழங்கப்பட்டு விடும்.

# ஒரே ஒரு முறை தான் மேல்முறையீடு செய்ய முடியும்.

குறைவான நிதி ஒதுக்கீடு

ஒருகிராம நீதிமன்றத்திற்கான கட்டமைப்பு செலவாக மத்திய அரசு அன்றைய தினம் ஒதுக்கிய நிதி மொத்தம் 18  லட்சமாகும்.அதில் 10  லட்சம் நீதிமன்றக் கட்டிடத்திற்கானது.5  லட்சம் வாகனத்திற்கானது.  3 லட்சம் டேபிள்,சேர் உள்ளிட்டசெலவுகளுக்கானது. இந்த நிதி நடைமுறையில் கிராம நீதிமன்றம் உருவாக்க கொஞ்சம் கூடசாத்தியமற்றது.

ஒரு நீதிபதி,ஒரு தலைமை கிளார்க்மற்றும் ஒரு ஊழியர் ஆகியோரைக் கொண்ட சிறிய கோர்ட்டாக இது செயல்படும் .

இவர்களுக்கான சம்பளங்களை மாநில அரசுகள் தரவேண்டும்.நீதிபதிக்கு முதல்வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கப்படும் சம்பளம் தர வேண்டும் என்றெல்லாம் வரையறுக்கப்பட்டது!ஆனால்,இதற்கான முன்னெடுப்புகளோ, நிதி ஒதுக்கீடுகளோ இன்று வரை நடக்கவில்லை!

  எந்த மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன?

இந்தியாவில் இது வரை இந்த சட்டத்தை பதினோரு மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்தியுள்ளதாகச் சொல்லப்பட்டாலும் அங்கெல்லாம் கூட இவை வலுவாக செயல்படாமல் உள்ள்ன என்பது மிகவும் அநீதியாகும்! மத்தியபிரதேசம்,மகாராஷ்டிரா,கர்நாடகா,கேரளா,ஒரிசா,ஜார்கண்ட்,பஞ்சாப்,ஹரியானா,உத்திரபிரதேசம்ஜார்கண்ட்,ராஜஸ்தான்,கோவா ஆகிய பதினோரு மாநிலங்களில்அமலாகியுள்ளதாக காகித கணக்கு தான் அரசு காட்டுகிறதேயன்றி, உண்மையான வகையில் இது அமலாகவில்லை! மற்ற மாநிலங்கள் தமிழகத்தையும் சேர்த்து அத்தனையும் கடுகளவு ஆர்வம் கூட காட்டவில்லை என்பது தான் கவலைக்குரியது.அமல்படுத்திய மாநிலங்களிலும்கேரளா,ராஜஸ்தான்,மத்தியப்பிரதேசம்…. ஆகியவை சற்றே பரவாயில்லை என்று சொல்லலாம்!

வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் பல இடங்களில்இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதை எதிர்த்து அவர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு கூட சில இடங்களில் நடத்தியுள்ளனர். காரணம்,இந்த நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் இல்லாமல் மக்கள் தாங்களே வாதாடலாம் என்பதேயாகும்.இதனால்,தங்கள் வருவாய் பாதிக்கப்படுவதுடன் தங்கள் சமூக அந்தஸ்த்தும் குறைந்துவிடும் என வழக்கறிஞர்களில் சிலர் கருவதாக தெரிகிறது!

நீதிபதிகள் ஞ்சம்!

தற்போதுஇந்தியஉயர்நீதிமன்றங்களின் நீதிபதி பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் நிரப்பப்படாத நிலைஉள்ளது. மாவட்டநீதிமன்றங்களுக்கோ சுமார் 5,500 நீதிபதிகள்பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன.மத்திய அரசும்,மாநில அரசும் தற்போது நீதித்துறைக்குபோதுமான நிதியை ஒதுக்குவதில்லை. இன்றும்கூட சிலகோர்ட்டுகளில் அடிப்படை கட்டமைப்புகள்,தேவைகள் கூட சரியாக இல்லை.இதனால்தான் இந்தியஉயர்நீதிமன்றங்களில் 44 லட்சம்வழக்குகள்தேங்கியுள்ளன.விரைவாக நீதிகிடைக்க ஏற்படுத்தப்பட்ட விரைவு நீதிமன்றங்களிலேயே கூட பல லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன.

கிராம நீதிமன்றங்களுக்கான போராட்டங்கள்

விரைவு நீதிக்கான சமூக அமைப்புகளின் சங்கம் பிரவீன் பட்டேல்தலைமையில் இயங்குகிறது.இவர் சர்தார் வல்லபாய் பட்டேலின் வாரிசு வழி வந்தவர். நமது மத்திய அரசு வல்லபாய் பட்டேலுக்கு உலகின் மிக பிரம்மாண்ட சிலை வைத்துவிட்டதோடு திருப்திபட்டுக் கொண்டது. இந்த பிரவீன் பட்டேல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம நீதிமன்றங்கள் அமைக்கவேண்டும்என்று  சுமார் 150 சமூகஅமைப்புகளை ஒருங்கிணைத்து போராடி வருகிறார்! மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறார்.இதற்காகவிரைவு நீதிக்கான சமூக அமைப்புகளின் கூட்டமைப்புஎன்ற ஒன்றையும்உருவாக்கிபிரசாந்த்பூஷனை வைத்துஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தெல்லாம் போராடிப் பார்த்துவிட்டார்! இதையடுத்துஉச்சநீதிமன்றமும் மத்திய, மாநில அரசுகளுக்குநோட்டிஸ் அனுப்பி பதில் கேட்டும் பெரிய மாற்றம் நிக்ழந்துவிடவில்லை என்பது தான் வேதனை! இதில் என்ன கொடுமை என்றால்,  இதே போல வர்த்தகநீதிமன்றச் சட்டம் அமைப்பதற்கான அறிவிக்கை டிசம்பர்31,2015 ஆண் டுதான் வெளியிடப்பட்டது.ஆனால்,அந்த சட்டத்தை முன்தேதியிட்டுஅக்டோபர்  2015 முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்து, உடனடியாக நடைமுறைப்படுத்தியும்விட்டனர்!

இந்ததேசிய அமைப்பின்கிளை தமிழ்நாடு விரைவு நீதிக்கான சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  எஸ்.ரமேஷ்,சென்னை தியாகராய நகரில் உள்ளார். இவர் இந்த சட்ட அமலாக்கத்திற்காக பல மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து முழுமூச்சுடன் இயங்கி வருகிறார்! இதற்காக தொடர் பிரச்சாரங்கள், நடை பயண்பரப்புரை எல்லாம் கூட தமிழகத்தில் பல்வேறு இயக்கங்களால் நடத்தப்பட்டு வருகின்றன!

நடைமுறை சவால்கள்

உலகில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நீதிதுறைக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கும் நாடு இந்தியா! தற்போது கூட மாவட்ட நீதிமன்றங்கள், உயர் நீதி மன்றங்கள்,உச்ச நீதிமன்றங்கள் ஆகியவ்ற்றின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அவல நிலை உள்ளது! ஆகவே இதற்கு நிதியை ஒதுக்குவதில் அரசுக்கு ஒரு உறுதிப்பாடு இல்லையென்றால் பிரச்சினை தான்.இவை அமலான மாநிலங்களில் இது தான் நிலைமை!

கிராமங்களில் சாதி ஆதிக்க சக்திகள்,அரசியல் செல்வாக்குள்ளவர்கள் நீதித்துறையில் அதிக தலையீடு செய்ய வாய்ப்புள்ளது. ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் நீதிபதி பணியிடங்களை கைப்பற்ற முயல்வார்கள்! இந்த அமைப்பை ஊழல்மயமாக்கும் முயற்சிகளும் கூட நடக்கலாம்!  இந்த சமூக அமைப்பில்,எளிய மக்களுக்கு எதற்கும் அடிபணியாமல் பாரபட்சமற்ற நீதியை பெற்றுத் தரக்கூடிய நேர்மையான நீதிபதிகளைக் கண்டடைவது ஒரு முக்கியமான சவால் என்பது சந்தேகமில்லை.  ஆனால்,அந்த சவால் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டியதும் கூட!

 

 

 

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time