யோகாவை அரசியல் ஆயுதமாக்கும் சனாதனச் சதிகள்!

- மருத்துவர் விஜய் விக்கிரமன்

தமிழரின் யோக முறையும் வடக்கத்திய யோகாவும் ஒன்றல்ல! வேள்விச் சடங்குகளைக் கொண்ட சனாதன மரபோ, நமது பாரம்பரிய திருமூலர் யோகாவை சமஸ்கிருத சாயலுக்கு உல்டா செய்து பதஞ்சலி யோகாவாக உரிமை கொண்டாடுகிறது. ஆன்மீகத்திலும்,யோகாவிலும் கூட அரசியல் புகுத்தப்படும் அவலம்!

ஆன்மீகத்தையும், யோகாவையும் சந்தைக்கான சரக்காக மாற்றிய கையோடு சமூகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணமாக சனாதன யோகா முன்வைக்கப்படுகிறது.

சமூக நலனுக்காக இல்லாமல், சந்தைக்கான தேவையாக கல்வி  வடிவமைக்கப்பட்டுள்ள சூழல் கொண்ட பின்புலத்தில் தற்போது யோகா எப்படி  சனாதன யோகாவாக மாற்றி அமைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கத்திய பதஞ்சலி யோகா என்பது என்ன?

பதஞ்சலி முனிவரை யோகக் கலையை முதலில் தோற்றுவித்தவர் என்றும், அவரே யோகக் கலையின் தந்தை என்றும் சனாதானவாதிகள் கூறி வருகின்றனர்.  அதற்கு ஆதாரமாக 195  சமஸ்கிருத வரிகள்  மட்டுமே உள்ள  நூலை முன்வைக்கின்றனர் . அதனைத் தவிர வேறு  யோகாசனத்தை குறிக்கும் நூல்கள் அவர்களிடம் இல்லை.

யோகக் கலையின் மூலம் ரிக் வேதத்தில் உள்ளது என்றும், அதன் தொடர்ச்சி பல உபநிடதங்களில் உள்ளது என்றும்  கூறுகின்றனர்(?) வேள்வி சடங்குகளை முதன்மையாகக் கொண்டு இயங்கும் சனாதான  மரபு, நம்முடைய மனமும், உடலும் ஒன்றிணையும் ‘யோகா’விற்கு எவ்வாறு உரிமை கோர முடியும்? புராதான கதைகளையே  ஆதாரமாக  முன்வைக்கும் இவர்கள் பதஞ்சலி முனிவரை ஒரு மனிதராக கூட ஏற்பதில்லை! அவர் பாம்பின் உடல் வடிவம் கொண்டவராக சித்தரிக்கின்றனர்.

வேதகாலத்தில் ரிஷிகள் அனைவரும் ஒன்றுகூடி மகாவிஷ்ணுவிடம்[ தன்வந்திரி பகவான்]  ஆயுர்வேத மருத்துவ முறை மனித உயிர்களை காக்க போதுமானதாக இல்லை எனக் கூறி அதற்கு ஒரு தீர்வு கேட்டனராம்!

மகாவிஷ்ணு, தான் படுத்திருக்கும் ஐந்து தலை  பாம்பிடம் தீர்வை  பெற்றுக் கொள்ளுமாறு கூறினாராம்!  அந்த ஐந்து தலை பாம்பு ” பதஞ்சலி”யாக உருவெடுத்து,  நோய்கள்  வராமல் காத்துக் கொள்ள யோக சூத்திரத்தை வழங்கியதாம்! இது தான் சனாதனிகள் நமக்கு காட்டும் யோகத்தின் மூலமாகும்!

தமிழ் சித்தர்   மெய்யியல் [ தெற்கத்திய ஓகம் ]

“திருமூலர் “இயற்றிய சைவ சித்தாந்தத்தின் முதல் நூலான” திருமந்திரமே “ஓகக் “கலையை பற்றி மிகத் தெளிவாகவும், விரிவாகவும்  விளக்கும் நூலாகும். இதில்  9  தந்திரங்கள் வாயிலாக 3,100  பாடல்களின் மூலம்  விளக்கப்பட்டுள்ளது.  இதில் மூன்றாம் தந்திரம் முழுவதும்  21 தலைப்புகளில்  அட்டாங்க யோகத்தை  விவரிக்கிறது.  ஏழாம் தந்திரத்தில்  ஆறு ஆதாரங்களை விவரிக்கிறது.

ஆசனங்கள் மொத்தம் 126  என்றும், அதில் சுகாசனம் 8  என்றும் கூறப்பட்டுள்ளது .8 ஆசனங்களின் பெயர்களை நேரடியாகவே பதிவு செய்கிறது அவை   பத்மாசனம் , பத்திராசனம், கோமுகாசனம் ,  கேசரி ஆசனம் , சோத்திரம் ஆசனம் ,  வீராசனம்,   சுகாதானம் ,  சுவத்திகம்  என்பனவாகும்! இந்த அளவுக்கு எந்த ஆதாரமும் வடக்கத்திய நூல்களில் இல்லை.

திருமூலரே முதலில் “அட்டாங்க “யோகத்தின் மூலம் இருக்கை நிலை[ ஆசனம்],  மூச்சுப்பயிற்சி, தியானம்,   நல்லொழுக்கம், புலனடக்கம்,  உயிர்ப்படக்கம் ஆகியவற்றைப் பற்றி மிகத் தெளிவாக கூறுகின்றார். திரு மந்திரத்திற்கு முன்பே சங்க கால நூல்களில்  யோகத்தைப் பற்றிய குறிப்புகள், திருக்குறள்  முதல் பல   சித்தர் நூல்களில் தியானம், துறவு, வீடுபேறு போன்ற குறிப்புகள் உள்ளன.

18 சித்தர்களும், பதஞ்சலியும்!

சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகின்ற 18 சித்தர்கள் வரிசையில் ஒரு பதஞ்சலி சித்தர் வருகிறார்! ஆனால், அவர் வடக்கத்தியர்கள் சொல்லும் பதஞ்சலி அல்ல!

தமிழ்ச் சித்தர்  பதஞ்சலியின் குரு,  நந்தி தேவர் சித்தராவார்!  பதஞ்சலியின்   ஜீவசமாதி  ஆன இடமாக ராமேஸ்வரம் குறிக்கப்படுகிறது.

அசீவக- சமண-  பௌத்த – யோகாசனம்!

அசீவக, சமண, பௌத்தத்தில்  அதிக அளவில் அகம் சார்ந்த தத்துவ விசாரணைகள், துறவு, வீடுபேறு  போன்றவற்றை பற்றிய குறிப்புகள் உள்ளன.   அவை “மருத்துவம்,” உணவு,” கல்வி” ஆகிய மூன்று கொடைகளை மக்களுக்கு  வழங்கின.

தமிழ்நாட்டின் போதி தர்மர் சீனம் சென்று மருத்துவம், தியானம், தற்காப்பு கலை, வாழ்வியல் தத்துவங்கள் ஆகியவற்றை பரப்பினார் . இவரே’ “ஜென் “தத்துவ மரபை தோற்றுவித்தவர்.

மேலும் பல வடக்கத்திய  பாலி மொழியில் உள்ள பௌத்த நூல்கள்  யோகத்தைப் பற்றி  விரிவாக எடுத்துரைக்கின்றன.

தமிழ் நாட்டில் பல இடங்களில் கிளைபரப்பி உள்ள “விபாசனா “ போன்ற பயிற்சிப்  கூடங்கள்  மரபான பௌத்த  தியான யோக கலையை  பயிற்று விக்கின்றன.

தாந்திரிக யோகம்!

இந்திய தொல்குடிகளின் மரபில் தாந்திரீக யோக சடங்குகள் பெருமளவில் உள்ளன!

ஆண் பெண் சக்தி நிலைகள் ஒரு புள்ளியில்  ஒன்றிணைதல், சிவம் சக்தி, லிங்க வழிபாடு[ ஆவுடை + லிங்கம்], காமாக்னி கோவில்,  வடக்கத்திய யோனி வழிபாடு, போன்றவற்றில் தாந்த்ரீக யோக மரபின் தொடர்புகள் உள்ளதை அறியலாம்.

பாபாஜியும்- கிரியா யோகாவும்

பாபாஜி{  ரஜினியின் பாபா படத்தில்  காண்பிக்கப்படுபவர்}  இவரின் இயற்பெயர் நாகராஜ் , சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை இவரின் பூர்வீகம் .

திருமூலரின் அட்டாங்க யோகம், போகரின் யோக சாதனங்கள் ஆகியவற்றை கற்று,  இமயம் சென்று அங்கு பலருக்கு போதிக்கிறார்.

இவர் மூலமே திருமந்திரத்தின் அட்டாங்க யோகம் வடக்கே பரவுகின்றது.  பாபாஜியின் வழித்தோன்றல்கள் இன்றளவும் தங்களை  தென்னிந்திய 18 சித்தர்களின்  மரபில் வந்தவர்கள் ஆகவே கூறிக் கொள்கின்றனர். பிற்காலத்தில் பாபாஜியின்  சீடர்கள் மூலம் அமெரிக்கா போன்ற  வெளிநாடுகளில் ஆசிரமம் அமைத்து,  அட்டாங்க யோகம்{ கிரியா யோகம்}பரப்பப்பட்டது .

தமிழ்நாட்டில் சித்தர் மரபு;

பண்டைய தமிழகத்தில்  செல்வாக்குப் பெற்றிருந்த ஆசீவகம், தமிழ் சமணம், தமிழ் பௌத்தம்.  தாந்திரீக மரபுகள் குறிப்பிடத்தக்கவையாகும்!

அவற்றின் தத்துவங்கள் ஒன்றோடு ஒன்று    உதிர்ந்தும், திரிந்தும், சேர்ந்தும்  பின் அவை  மருத்துவம் ,ரசவாதம்,  காலக் கணிதம் [ஜோதிடம்,} வர்ம  தற்காப்பு முறைகள், தியான ஓகக் கலைகள்  போன்றவற்றின்  ஊடாக தங்களை காத்துக் கொண்டன.

அதன் வழி வந்தவர்கள் அந்தக் கலைகளை சமூக வேறுபாடு இன்றி, ஆண் பெண் பாகுபாடு இன்றி அனைவருக்கும் வழங்கி அவற்றை மக்கள் கலையாக வளர்த்து அதன் மூலமாக  மக்களுக்கு சேவை செய்து தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர்.                                                                                           இவர்கள் வைதீக அதிகார நிறுவனங்களுக்கு  எதிராகவும், சமூக முரண்பாடுகளுக்கும், மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் குரல் எழுப்பும்  ஓர் “கலகக்கார” கூட்டமாகவே அன்று முதல் இன்று வரை உள்ளனர். இவர்களே “சித்தர்கள் “என்று மக்களால் அழைக்கப்பட்டனர் . அவர்களின்  தத்துவங்கள் சித்தர்  பாடல்கள்  மூலம் மக்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது.

‘ திருமூலர்’ சைவ சித்தாந்த மரபின் மிக முக்கியமானவர்.

யோகமும்-  சனாதான யோக அரசியலும்!

அட்டாங்க யோகம்[ க்ரியா யோகா] , தியானம்  போன்றவற்றால்  ஈர்க்கப்பட்ட ஐரோப்பிய அமெரிக்க ஆர்வலர்கள்  அதனைத் தேடி இந்தியாவுக்கு பெருமளவில் வரத் தொடங்கினர்.

இவர்களை வாரி அணைத்துக் கொண்ட வடக்கத்திய சனாதன கும்பல்,  வேதமே யோகத்தின் மூலம் என்றும், மந்திரச் சடங்குகள் தியானத்தின்  வேர் என்றும்  கதை விட்டனர்.

நவீன சந்தைக்கான யோகாவை B K S  ஐயங்கார் என்பவர் வடிவமைத்தார்! 1966  இல் இவர் வெளியிட்ட யோக புத்தகத்தில் 200 க்கும் மேற்பட்ட ஆசனங்களை படங்களாக வெளியிட்டார்.  இவை அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டவை!  ஆனால், அவற்றின் பெயர்கள் மட்டும் தெளிவாக சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டன!

இவை அனைத்தும் மரபான தத்துவ புரிதலுடன் கூடிய யோக மரபிலிருந்து மாறுபட்டு,  வெறுமனே உடலை வளைக்கும் உடற்பயிற்சி  வித்தை ஆகவே இருந்தன!   வெளிநாட்டினருக்கு  என்று எளிமைப்படுத்தப்பட்ட  இந்த யோக உடற்பயிற்சி   அங்கு பிரபலமானது .

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டினர்  விரும்பி வாங்கக் கூடிய ஒரு பண்டமாக யோகமும், தியானமும் மாற்றப்பட்டது.  பெரிய அளவு “டாலர்”   புழங்கக்கூடிய ஆன்மீக சந்தையானது.  அதனை தொடர்ந்து பல கார்ப்பரேட் யோகா மடங்கள், யோக குருஜிகள் தோன்றினர். இன்றைய யோகக் கலையின் உலக சந்தை மதிப்பு   80 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

இந்துத்துவா சக்திகளின் கையில் இன்று யோகா!

தற்போது யோகா கார்ப்பரேட் குருக்கள்/  இந்துத்துவா  சனாதன சக்திகள் ஆகியவை ஒன்றிணைந்து தங்களுக்கான மிகப்பெரிய மேடையாக யோகாவை மாற்றி அமைத்துள்ளன.  அதன்மீது  நின்று இருவரும் தங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.  ஆயுஷ் துறையின் யோகா படிப்பின் இணையதள  முகப்பே இதற்கு சாட்சி.  நவீன யோக  மருத்துவ கல்வி இவர்களாலேயே உருவாக்கப்பட்டது.

ஒன்றிய புதிய பள்ளி கல்விக் கொள்கையில் சனாதன யோகா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சனாதன யோகா வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது! எம்பிபிஎஸ்  மருத்துவ படிப்பில் சனாதன யோகாவும்,  சமஸ்கிருத உறுதிமொழியும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. யோகாவை தனி மருத்துவ படிப்பாக  உருவாக்கி, ஆயுஸ் துறையில் சேர்க்கப்பட்டது,

யோகா மருத்துவப் படிப்பிற்கு மட்டும்   நீட் தேர்வு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்  சேர்க்கை  எளிதாக்கப்பட்டு நீட் தேர்வு எழுதாமலேயே மருத்துவாராகும் சலுகை தரப்பட்டுள்ளது!

யோகா கல்லூரி துவங்குவதற்கு  ஒன்றிய அரசு சிறப்பு  சலுகைகள் வழங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 18க்கும் மேற்பட்ட  தனியார் யோகா கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், சித்த மருத்துவ கல்லூரிகளுக்கோ, பல்கலை கழகத்திற்கோ தான் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

கார்ப்பரேட்  குருஜி களின்   யோகா வியாபாரத்திற்காக  ஐநா சபையின் உலக சுகாதார  நிறுவனத்திற்கு பல நூறு கோடிகள் செலவு செய்து,  உலக யோகா தினம் அங்கீகாரம்   பெறப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியும், யோகா கரிசனமும்!

கடந்த அதிமுக  அரசானது, தனது ஒன்றிய விசுவாசத்தை காட்டுவதற்காக செங்கல்பட்டில் 80 ஏக்கர் நிலத்தில் 100 கோடியில்   International   yoga   research   Institute   டை   நிறுவினர். ஆனால், பழனியில் இடம் ஒதுக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் சித்த மருத்துவ கல்லூரி தொடங்கியபாடில்லை!

பாஜக ஆளும் மாநிலங்கள் கூட  ” சனாதான” யோகாவை வளர்ப்பதற்கு  பெரும் நிதியை ஒதுக்கி,  இந்த அளவு முனைப்பு காட்டவில்லை.  இச்செயலின் மூலம் அப்போதைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பி பாஜக அரசிடம் நன்மதிப்பைப் பெற்றார்.

சனாதன யோகாவா? தமிழர்   ஓக முறையா?

அண்மையில் வடலூர் ராமலிங்க சுவாமிகள்  மடத்தின் அருகே ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள்  சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட  அவர்களின்”சாகா” பயிற்சிகள் செய்தனர். அவ்வூர் மக்களால் இது  வள்ளலார் பூமி இங்கு உங்கள் மதவாத பயிற்சிகள் தேவையில்லை என்று சொல்லி அவர்களை விரட்டினர்.  மறுநாள்  பாஜக உறுப்பினர்கள் அதே  இடத்தில் யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் செய்தனர்.

பலர் உடல் நலத்திற்கு யோகாசனத்தை பொதுவெளியில்  மைதானங்களில் செய்யும்போது, இவர்கள் அதை மக்களை ஈர்க்கும் கருவியாக மாற்றி  ஆள் சேர்க்கின்றனர்! பல இடங்களில் கலவரத்தை தூண்டும் விதமாக யோகாசனத்தை தெருவிற்கு இழுத்து வருகின்றனர்.

விநாயகர் கோயில்கள் இருக்கும்போது,  விநாயகரை தெருவிற்கு இழுத்து வந்து அதன்மூலம் கலவரத்தை ஏற்படுத்துவதைப் போல இவர்கள் முயற்சிக்கிறார்கள்.

தற்போது வடக்கே ராம நவமி, ஹனுமான் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி மூலம் கலவரத்தை ஏற்படுத்துவது போல எதிர்காலத்தில் சனாதன “யோகாவை ” ஒரு கருவியாக்கி பிரச்சனை ஏற்படுத்துவர்.

தீர்வு என்ன?

இதனை  நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.  இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து  தேசிய இனங்களும்  தங்களுக்கென்று சுயமான தத்துவார்த்த  மெய்யியல் கோட்பாடுகள்  இல்லாததால்  “வேத மரபுகளில்” சரண் அடைகின்றன. அவ்வாறில்லாமல் தமிழகத்திற்கு என்று தனித்துவமான “மெய்யியல் சித்தர் மரபு “உள்ளதால், அவற்றின் துணைகொண்டு இவற்றை நாம் எதிர்க்க வேண்டும்.

#  நம் மண்ணிற்கும்,மரபிற்குமான பின்னணியில்  தனியான யோக மரபை நாம்  பின்பற்ற வேண்டும்.

# மனம், உடல் ஆரோக்கியத்தை பேணும் விதமாக அதனை நம் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

#  சித்தர் மெய்யியல் ,வடலூர் வள்ளலார் வழியில் ஜீவகாருண்ய தியான முறையையும்,  உலக சமாதானத்தையும், வையகத்தையும் போற்றும் ” வேதாந்திரி மகரிஷி” வழங்கி அனைவராலும்       ஏற்றுக் கொள்ளப்பட்ட எளிய முறை உடற்பயிற்சி போல் அது அமைய வேண்டும்.

#  உலக யோகா தினத்தில்  நம் திருமூலர், சித்தர் யோக மரபை முன்னெடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும்

# செங்கல்பட்டில் உள்ள  International yoga Research Centre  ரை  International Tamil yogam research Centre என்று   நிறுவி, தமிழர்  ஓக  கலை  ஆய்வு  நிறுவனமாக அது செயல்பட வேண்டும்.

#  முழுக்க தமிழக அரசு நிதியில் செயல்படுகிறது என்பதால், தமிழ் யோக மரபை நிறுவிய  திருமூலரின்   பெயரை  வைக்க வேண்டும்.

#  எதிர்காலத்தில் வடக்கத்திய “சனாதன யோகா குருக்களின் “ஆய்வு நிறுவனமாக அது மாறாமல் தடுக்க வேண்டும்

யோகா — சனாதன சக்திகளால் இந்துத்துவா ” காவி சாயம் ” ஏற்றப்பட்டு பிரச்சனையை  உருவாக்கும்  கருவியாக மாற்றப்பட்டு வருகிறது!  அதனிடம்    எச்சரிக்கையாக   இருக்க வேண்டும். சனாதன யோகாவிற்கு மாற்று  தமிழர் மெய்யியல்  ஓகம் மட்டுமே!

கட்டுரையாளர்; விஜய் விக்கிரமன்

சித்த மருத்துவர், சித்த ஆய்வாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time