பொருந்தா உணவுகளும், அவற்றை உண்ணும் தவறான முறைகளுமே நோய்களுக்கு காரணமாகின்றன. இதய நோயும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் வருகிறது! தவறான உணவுகள் ஒரு சிலரை ஒன்றும் செய்வதில்லை என்பதற்காக அவற்றை நியாயப்படுத்தி விட முடியாது. சரி… நாம் விஷயத்துக்கு வருவோம்.
இதய பலவீனம், இதய செயலிழப்பு, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு, இதய சுருக்கம் என்றெல்லாம் பல்வேறுவிதமான பிரச்சினைகளை சொல்லக் கேட்டிருப்போம். முதலில் இப்படிப்பட்டவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். அது உண்ணும் உணவில் தொடங்கி அவர்கள் செய்யும் வேலை, அவர்கள் வசிக்கும் இடம் என பலவற்றை கண்காணிக்க வேண்டும்.
அடிப்படையில் ஒரு சில விஷயங்களை கவனிக்க வேண்டும். இதய நோயாளிகள் செயின் ஸ்மோக்கிங் எனப்படும் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவரா என்று பார்க்க வேண்டும். அப்படியிருந்தால் அந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டியது அவசியம். புகைப்பழக்கத்தால் மாரடைப்பு, நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு மற்றும் பல்வேறுவிதமான பாதிப்புகள் வரும். எனவே பீடி, சிகரெட் மற்றும் வேறு சில புகைப்பழக்கங்களையும் கட்டாயம் கைவிட வேண்டும்.
அடுத்ததாக ஆல்கஹால் கேடு விளைவிக்கும் என்றாலும், அவ்வப்போது ரெட் ஒயின் சாப்பிடுவது மாரடைப்பை தடுக்கும் என்று சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மாரடைப்பை தடுக்கும் என்பதற்காக அதை அளவுக்கு அதிகமாக அருந்தினால் நிச்சயம் எதிர் விளைவே ஏற்படும். ஆல்கஹால் மாரடைப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தொடர்ந்து ஆல்கஹால் அருந்தினால் ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு ஏற்படும்!
உணவு என்று எடுத்துக்கொண்டால் இன்றைக்கெல்லாம் காலை உணவாக எண்ணெயில் பொரித்தெடுத்த பூரி மற்றும் சப்பாத்தி, பரோட்டா, பிரிஞ்சி போன்றவற்றை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வாய்க்கு ருசியாக இருக்கும் இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் மட்டுமல்ல வேறு பல நோய்களும் அணிவகுக்கும். இன்றைக்கு எண்ணெயில் நீண்டநேரம் பொரித்தெடுத்த, வறுத்த உணவுகளை உண்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதுவும் இரவு நேரங்களில் இத்தகைய உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் நிச்சயம் இதயம் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புள்ளது.
இன்றைக்கு சைனீஸ் உணவுகளில் அஜினமோட்டோ, சோயா சாஸ் போன்ற இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன. எனவே, சைனீஸ் உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் இது விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதுதவிர சீஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் அதிகரித்துவிட்டதால், வெளி உணவுகள் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால், இவற்றை அதிகமாக சாப்பிட்டால் அதிலுள்ள கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்ந்து ரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும். அதேபோல் நெய் நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். ஆனால்,டால்டாவை முற்றாகத் தவிர்க்க வேண்டும்!
நம் மண்ணில் விளையும் விளைபொருள்களான எள், நிலக்கடலை, தேங்காய் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய், கடலைஎண்ணெய், தேங்காய் எண்ணெயை பயன்படுத்திய வரை பிரச்சினையில்லை. சூரியகாந்தி எண்ணெய், பாமாயில்,டால்டா உள்ளிட்ட எண்ணெய்களை என்றைக்கு பயன்படுத்தத் தொடங்கினோமோ அன்றுமுதல் பல்வேறு நோய்களுக்கு அடிமைப் பட்டுவிட்டோம். சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய்கள் ஈரல் வழியாக உள்ளே சென்று கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். பூரி, சப்பாத்தி,பரோட்டா,பீட்சா மட்டுமன்றி தோசை, வடை, பஜ்ஜி, சிப்ஸ், பிரியாணி, பிரிஞ்சி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் அவற்றிலுள்ள எண்ணெய்கள் நம் உடலுக்குள் சென்று ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகள் இதயத்தை பாதிக்கும்!
பாரம்பரிய அரிசிகளான மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, தங்கச்சம்பா போன்ற அரிசிகளில் செய்த இட்லி, ஆப்பம், இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை, களி, கூழ் போன்ற ஆவியில் வெந்த உணவுகளை சாப்பிட்டவரைக்கும் நோய் பாதிப்புகள் அதிகமில்லை. அவற்றை விட்டு விலகியதால்தான் சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மை பதம் பார்க்கின்றன. மேலும், இன்றைக்கு அசைவம் இல்லாமல் பலருக்கு மதிய உணவுகள் ருசிப்பதில்லை.
புழுங்கல் அரிசியில் உணவு சமைத்து கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர், வத்தலுடன் கூடிய உணவகங்களுக்குப் பதில் பிரியாணி, குஸ்கா, பிரிஞ்சி, பரோட்டா மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளையே அதிகம் பார்க்கமுடிகிறது. பசி அடங்கினால் போதுமென்று, கிடைத்த உணவைக் கொண்டு வயிற்றை நிரப்புகின்றனர். ஆனால், தவறாமல் தினமும் அவற்றை உண்பதால் ஏற்படும் நலக்குறைவுகளே அதிகம். மேலும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் உணவுகளும் கூட இதயத்துக்கு நல்லதல்ல! நின்று கொண்டே சாப்பிடுவதும்,அவசர,அவசரமாக உணவை விழுங்குவதும் இதயத்திற்கு நல்லதல்ல!
அடுத்ததாக நாம் பின்பற்றி வந்த சில நல்ல பழக்க வழக்கங்களை சுட்டிக்காட்டி அது தவறு என்று மருத்துவர்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்ல வைத்தன. மக்களும் அதை உண்மை என்று நம்பிவிட்டார்கள். அந்த வகையில் தேங்காய் சாப்பிடுவதும், தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதும் இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டன. ஆனால், உண்மையில் தேங்காய் மிகக்குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்தினைக் கொண்டது. மேலும், தேங்காயில் உள்ள பாலிபீனால்கள் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் எந்தக் கெடுதலும் ஏற்படாது. இதே போன்று தேங்காய் எண்ணெயும்கூட நல்லது தான்.
நாம் இங்கே சொல்லப்பட்டவை மிகக் குறைவுதான். அன்றாட உணவில் ஒவ்வொருவரும் சேர்த்துக்கொள்ளும் உணவுகளை பட்டியலிட்டால் அவற்றில் எவையெவை இதயத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதை புரிந்துகொண்டு நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இறைச்சி உணவுகளை உண்போர் எந்தக்காரணம் கொண்டும் இரவில் சாப்பிடாமல் பகலில் மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து குழம்பாக வைத்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
இதய பாதிப்பு இருப்பவர்களும், மற்றவர்களும்கூட காலையில் இஞ்சிச்சாறு அருந்துவது நல்லது. மாலையில் சுக்கு வெந்நீர் அருந்தலாம். மதிய உணவில் இஞ்சித் துவையல் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை தினமும் என்று இல்லாமல் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல தினமும் இஞ்சி சாப்பிடுவதும் நல்லதல்ல. நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதும்கூட இதயத்துக்கு நல்லது. செம்பருத்தி பூக்களுடன் இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து நீர் விட்டு வடிகட்டி இனிப்பு சேர்த்து அருந்துவது இதயத்துக்கு நலம் பயக்கும். காலையில் கண் விழித்ததும் செம்பருத்திப்பூக்களை பறித்து பச்சையாக சாப்பிட்டு வருவதும் இதய நோயிலிருந்து நம்மைக் காக்கும். மதிய உணவில் பூண்டுக் குழம்பு, இரவில் பூண்டுப்பால் அருந்துவதும்கூட இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதுடன் பிரச்சினைகளைக் குறைக்கவும் செய்யும்.
பூண்டுப்பால் என்றால் என்ன? அதை எப்படிச் செய்வது என்று சிலர் கேட்கலாம். 10 பூண்டுப் பற்களை எடுத்து நன்றாக தோல் உரித்து அவற்றை 50 மில்லி பால் அதே அளவு நீருடன் சேர்த்து வேக வைக்க வேண்டும். பூண்டு நன்றாக வெந்ததும் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு கீழே இறக்கி பனங்கல்கண்டு சேர்த்துக் கடைந்தால் பூண்டுப்பால் தயார். மிக எளிமையான இந்த பூண்டுப்பால் பலருக்கும் நல்ல பலனைத் தந்துள்ளது, இதயத்திற்கு நல்லது என்பதால் எல்லோரும் முயற்சிக்கலாம்.
Also read
இதுதவிர இதய பாதிப்பு உள்ளவர்களாக இருந்தால், ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதன் தோலை மட்டும் எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி அதனுடன் அதே அளவு தோல் நீக்கிய இஞ்சியை பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்குமளவு நீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி வெதுவெதுப்பான சூட்டில் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக இதய ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்களும் வேறு இதய பாதிப்புகள் உள்ளவர்களும் இதை முயற்சிக்கலாம்.
எலுமிச்சைச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துப் பொடியாக்கிச் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உமிழ்நீருடன் கலந்து மெதுவாக சாப்பிடுவது நல்லது. பகல் வேளைகளில் மாதுளையை ஜூஸாக்கியோ, பழமாகவோ சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது. மாதுளையின் ஓட்டின் உள்ளே இருக்கும் வெள்ளையான மெல்லிய தோலையும் சேர்த்துச் சாப்பிடுவதே நல்லது. வெண் தாமரைப்பூவை கசாயமாக்கிக் குடிப்பதும் நல்லது. இதுபோன்று இன்னும் பல எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி இதய நோயாளிகளும் நலமுடன் இருக்கலாம்.
கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்
மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.
வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.
Leave a Reply