தமிழகத்தை சீர்குலைப்பதில் தன் பங்கை நிருபிக்க உதகையில் துணை வேந்தர்களுக்கான மாநாட்டை தன்னிச்சையாக ஆளுநர் ரவி நடத்திக் கொண்டிருக்க, தமிழக சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறையில் ஆளுநரின் அதிகாரத்தை முதலமைச்சருக்கு மாற்றும் சட்ட முன்வடிவு அதிரடியாக நிறைவேற்றப்பட்டது!கவர்னருக்கு எதிரான திமுக அரசின் முன்னெடுப்பு தொடருமா?
‘புதிய உலகை கட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு’ என்ற தலைப்பில், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் மாநாட்டை ஊட்டியில் நடத்திக் கொண்டுள்ளார்! மாநில அரசை மீறி மத்திய அரசின் கல்விக் கொள்கையை, தமிழக உயர் கல்வித் துறையில் புகுத்தும் நோக்கத்தில் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் ஆகியோரை அழைத்து நடத்துகிறார். இதில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார் பங்கேற்கும் இந்த மா நாட்டில் தனியார் காப்பரேட் நிறுவனமான ஸோஹோவின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்புவும் முக்கியஸ்தராக கலந்துள்ளார். மாநாடு நடைபெற்று வருகிறது.
இதே நேரம் தலைநகர் சென்னையில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. இன்று காலை அமர்வில் அரசு பல்கலை கழக துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் சென்னை பல்கலைக் கழகம் உள்பட 13 பல்கலைக் கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து அரசுக்கு மாற்றப்படுகிறது.
இது குறித்து விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், ”கடந்த நான்காண்டுகளாக பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஆளுநர் அறிவிப்பார் என்ற மரபு மீறப்பட்டு, அது தனக்கு மட்டுமேயான உரிமை போல கவர்னர் செயல்படுவதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எந்த உரிமையும் இல்லாத நிலை தோன்றியுள்ளது. இது உயர்கல்வித் துறையில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்படக் கூடிய மூவரில் ஒருவரை அரசு தான் நியமிக்கிறது. ஆகவே, இந்த மாநிலங்களில் உள்ளது போல, குறிப்பாக, பிரதமருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளது போல, தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு அரசின்கீழ் உள்ள பல்கலைக்கழகச் சட்டங்களில் உரிய திருத்தம் செய்து, பல்கலைக்கழகத் துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன்வடிவினை இங்கே மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தரை நியமிக்கிறது என்பதால் இந்தச் சட்ட முன்வடிவை இங்கிருந்து வெளிநடப்பு செய்திருக்கக்கூடிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதே போல், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம் என்ற “பூஞ்சி ஆணைய” பரிந்துரையை ஏற்கலாம் என 2017-ல் அ.தி.மு.க. ஆட்சியிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பாஜகவினருக்கும், அதிமுகவிற்கும் இந்த சட்ட முன்வடிவை ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இருக்க முடியாது” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதன் மூலம் கவர்னர் விவகாரத்தில், ”மேலும், மேலும் அடங்கிப் போகத் தயாரில்லை” என ஒரு வழியாக திமுக அரசு சமிக்சை காட்டியுள்ளது.
எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழக துணைவேந்தர் விவகாரத்தில் தேர்வுக் குழுவினர் 37 பேரை பரிசீலித்து அதில் மூவரை தேர்வு செய்து கவர்னருக்கு தந்தனர். ஆனால், கவர்னர் அதில் இருந்து ஒருவரை தேர்வு செய்யாமல் காலம் கடத்தினார். இதனால் நான்கு மாதங்கள் பல்கலைக்கு துணைவேந்தர் இல்லாத தேக்க நிலை உருவானது. பிறகு, ”ஏற்கனவே இருந்த சுதா சேஷய்யனையே மீண்டும் ஓராண்டுக்கு நீடிக்க உத்திரவிடுறேன்’’ என கவர்னர் அறிவித்தார். இது போல கவர்னர் தன்னிச்சையாக துணைவேந்தர் விவகாரத்தில் செயல்பட்ட போதும் அமைதி காத்து வந்தது திமுக அரசு!
ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக தமிழக பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாட்டை மாநில அரசோடு கலந்து பேசாமல் உயர்கல்வித் துறை அமைச்சரை புறக்கணித்து கவர்னர் ஏற்பாடு செய்தார். இதற்கு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன், கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் கொதித்து எழுந்து அறிக்கை தந்தனர்! மக்களிடையேயும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ‘ஆகவே, இன்னும் கவர்னரை எதிர்காமல் மெளனம் சாதிப்பது ஆட்சி மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கிவிடும்’ என்ற நிலைமையில் திமுக அரசு துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளது!
இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இந்த சட்ட முன்வடிவை கவர்னர் அங்கீகாரம் கேட்டு அனுப்பும் பட்சத்தில் கண்டிப்பாக அங்கீகரிக்க மாட்டார். அப்போது, ‘திமுக அரசு, கவர்னரைக் கெஞ்சிக் கொண்டிருக்குமா? அல்லது மேற்கு வங்கத்தில் மம்தா அரசு, கவர்னரை கேட்காமல் தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிப்பதை பின்பற்றுமா?’ எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதே சமயம், இது போன்ற ஒரு சட்ட முன் வடிவை ஜெயலலிதாவும் கொண்டு வர விருப்பப்பட்டு அதற்கான முன்னெடுப்புகளை செய்தார்! சென்னாரெட்டி கவர்னராக இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா இந்த முடிவை எடுத்தார். பிறகு, இந்த முடிவை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார், அடுத்தடுத்த பதவி காலங்களில்!
அப்படி தங்கள் தலைவி ஜெயலலிதா கொண்டுவர முயன்ற ஒன்றைத்தான் இன்று அதிமுக சட்ட சபையில் ஏற்க மறுத்து எதிர்த்து வெளியேறி உள்ளது. ”கவர்னரின் அதிகாரத்தை பறிப்பதா?” என ஒ.பி.எஸ் பொங்குகிறார். அதிமுக அரசின் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் எடுத்த எடுப்பிலேயே எதிர்த்தார்!
Also read
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் அன்றைய தமிழக கவர்னர் தன்னிச்சையாக கர்நாடகாவில் இருந்து சூரப்பாவை துணைவேந்தராக நியமித்தார். அந்த சூரப்பாவோ மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு அதிமுக அரசை மிகவும் அவமதித்தார். இந்த அனுபவங்கள் இருந்தும் அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக இதை எதிர்த்து பாஜகவிற்கு துணைபோவது அவர்கள் அடிமைத் தளையில் இருந்து விடுபட முடியாமல் இருக்கிறார்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.
#பல்கலைக்கழகம்:
“பல்கலைக்கழகத் தலைவரை தேர்தல்மூலம் உறுப்புக்
கல்லூரி முதல்வரிடை தேர்ந்தெடு “