அயோத்தியா மண்டபம் – அரசின் தோல்விக்கு என்ன காரணம்?

- சாவித்திரி கண்ணன்

அதிர்ச்சியாகத் தான் உள்ளது! அறநிலையத் துறை கையகப்படுத்தியதற்கு 100%  நியாயம் இருந்த போதிலும், அரசின் அலட்சியம் காரணமாக அயோத்தியா மண்டபம் மீண்டும் தனியார் வசமே போனது. ஸ்டாலின் செய்யும் சரணாகதி அரசியலுக்கான அச்சாரமும், ஆதாரமும் இது தான்!

மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படும் அயோத்தியா மண்டபம் ஆன்மீக பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டு சொசைட்டி ஆக்டில் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அங்கே திருக்கோயிலைப் போல ஸ்ரீராமர், சீதை, அனுமார் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள், பூஜை, புனஸ்காரங்கள், உண்டியல் நிதி மற்றும் தனிப்பட்ட பிரம்மாண்ட நிதி வசூல் நடத்தப்பட்டன! எதற்கும் முறையான கணக்கு வழக்கு இல்லை. நிதி முறைகேடுகள் கொடி கட்டிப் பறந்தன! அந்த அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த ரமணி இந்த தவறுகளை சுட்டிக் காட்டிய போதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டனர்.

இது ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு போகப்பட்டது. தீர விசாரித்ததில் தவறுகள் நடந்திருப்பதை உறுதி செய்து கொண்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா இந்த இடத்திற்கான தாய் மூலப் பத்திரம் கூட இவர்களிடம் இல்லை. ஆனால், கோடிக் கோடியாய் பணம் சுருட்டி மிஸ்யூஸ் செய்கிறார்கள். ஆகவே, அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர டிசம்பர் 30 2013 ல் ஆணையிட்டார்.

இதை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் பெங்களூர் கோர்ட் தீர்ப்பில் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்ததால், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. 2016 ல் பொறுப்புக்கு வந்த போதும் உடல் நலமின்றி இருந்தார். ஆகவே, பதில் மனு ஸ்டாராங்காக அரசு தரப்பில் தரப்படவில்லை. இதற்கிடையில், ஜெயலலிதாவின் மரணம் சம்பவித்தது. அதன் பிறகு வந்த ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்சும் இதில் அக்கறை காட்டவில்லை. 2021 மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகாவது இந்த வழக்கில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து இருக்கலாம். அவ்வாறு சரியான ஆவணங்களை சமர்பிக்க தோதாக பெரியவர் ரமணி, தானே முன் வந்து அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் அரசுக்கு தந்தார். அதாவது, திமுக அரசின் முயற்சி இல்லாமலே அயோத்தியா மண்டபத்தை அறநிலையத் துறை எடுத்துக் கொள்வதற்கான நியாயங்கள், அங்கு நடந்த அத்துமீறல்கள் அனைத்தும் தரப்பட்டன!

ஆனால், என்ன காரணத்தாலோ அரசு அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்கிடையே தனி நீதிபதி இந்த வழக்கில் உள்ள நியாயங்களை சீர்தூக்கி பார்த்து அறநிலையத் துறை எடுத்தது செல்லும் என தீர்ப்பு தந்தார். அந்த தீர்ப்பு வெளியாகி சுமார் ஒரு மாதம் வரையிலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காட்டியது! ஆனால், இது கோர்ட் தீர்ப்பை அவமதித்ததாகிவிடும் என்பதால், அறநிலையத் துறை அயோத்தியா மண்டபத்தை பொறுப்பு எடுக்க முன் வந்தது.

உண்மையில் நாம் செய்த கள ஆய்வில் அந்த அயோத்தியா மண்டப நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 900 பேரில் வெறும் இருபது பேர் தான் இதை எதிர்த்து ரோட்டுக்கு வந்து போராடினர். பெரும்பாலான பிராமணர்கள் அறநிலையத் துறை எடுத்து ஒரு ஒழுங்கிற்கு வரட்டுமே என அமைதி காத்தனர்! ஆனால், தவறானவர்களுக்கு ஆதரவாக பாஜக பிரமுகர்கள் உமா ஆனந்த் உள்ளிட்ட சிலர் தான் அதகளம் பண்ணி அரசியல் செய்தனர்!

சட்ட சபையில், ”அயோத்தியா மண்டபத்தை அறநிலையத் துறை கையகப்படுத்தியது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான அரசின் போக்கு” என வானதி சீனிவாசன் ஒரு தவறான கருத்தை சொன்னார். அவருக்கு தெளிவான பதில் தரும் நோக்கத்தில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேச முற்பட்ட போது, சேகர் பாபுவை முழுமையாக பேசவிடாமல் முதல்வர் ஸ்டாலின் அவரை அமைதிபடுத்தி விட்டு, ”மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் பற்றி பாஜக உறுப்பினர் பேசலாமே” என்றார்.

இது சம்பந்தமான வழக்கில் கூட கோர்டில், ”ஸ்ரீராம் சமாஜின் எந்த நடவடிக்கையிலும் அரசு தலையிடாது. வழக்கம் போல அவர்கள் செயல்பட்டுக் கொள்ள அரசு உறுதி அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் மனுதாரர் தரப்பில், ”முறைகேடு செய்ததற்கான முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் அயோத்தியா மண்டபம் அறநிலையத் துறையால் எடுத்துக் கொள்ளப்பட்டதாக” தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீராம் சமாஜ் இந்த வழக்கில் மேல் முறையீடுக்கு சென்றதில் அரசு தரப்பில் நீதிமன்றத்திற்கு அறநிலையத் துறை எடுக்க நேர்ந்ததற்கான தகுந்த ஆவணங்களை சரியாக தாக்கல் செய்யாத காரணத்தால் அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ஸ்ரீராம் சமாஜிடமே ஒப்படைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘செல்வாக்கு மிக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பகை எதற்கு? அவர்களுக்கு அனுசரணையாக போய்விடலாம்’ என அரசு நடந்து கொள்வது இந்த வழக்கில் நன்றாகவே வெளிப்பட்டு உள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time